2.O @ விமர்சனம்

லைக்கா புரடக்ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரிக்க, ரஜினிகாந்த், அக்ஷய் குமார்,  எமி ஜாக்சன் நடிப்பில்,
 
ஷங்கர் இயக்கி இருக்கும் படம் 2.O. படம் பின்னமா முழுமையா ? பார்க்கலாம் . 
 
 நம்மாழ்வாரின் பறவைகளைக் கொண்டாடும் சோகத்தோடு  பாசுரத்தைப் பாடிக் கொண்டே முதியவர் ஒருவர், 
 
செல்போன் டவரில் தூக்குப் போட்டுக் கொண்டு சாகிறார் . 
 
அடுத்த நாள் முதல் சென்னையில்  செல்போனை பயன்படுத்தும் ஒவ்வொருவர் கையிலும்  உள்ள செல்போன்கள் பறந்து போகின்றன .
 
அவை எங்கு போகின்றன என்ன ஆகின்றன என்று கண்டு பிடிக்க முடியவில்லை . 
 
அதைத் தொடர்ந்து,  மலை போல் எழுந்து காட்டாறு போல பாயும் செல்போன்கள் கூட்டம் ஒரு செல்போன் விற்பனை நிலைய உரிமையாளர் ( ஐசரி கணேஷ்)
 
மற்றும் ஒரு நெட் வொர்க் உரிமையாளர் (யாரோ வடக்கத்தி ஆள் ) ,  ஆகியோரை உடலுக்குள் நுழைந்தும் அமுக்கியும் வெடித்துச் சிதற்றியும்  கொல்கின்றன . 
 
பிரச்னை விஞ்ஞானி வசீகரனிடம் (ரஜினிகாந்த்) வருகிறது .  அவரும் அவர் உருவாக்கிய பெண்ரோபோவான நிலாவும் ( எமி) ஒன்று சேர்ந்து ….
 
செல்போன்கள் ஒன்று கூடி ஒரு இயந்திரப் பறவை உருவம் உட்பட பல்வேறு வடிவங்கள் எடுத்து இந்தக் கொலைகளை செய்வதை  கண்டு பிடிக்கின்றனர் 
 
மீண்டும் சிட்டியை (ரஜினிகாந்த்)  கொண்டு வந்தால்தான் இதை கண்டு பிடிக்க முடியும்  என்கிறார் வசீகரன் .
 
ஆனால் எந்திரன் முதல் பாகத்தில் சிட்டியை கெட்டவனாக ஆக்கி , ரெட் சிப் பொருத்தி, 
 
பிறகு  சிட்டியிடமே சிக்கிச் செத்துப் போன சக  விஞ்ஞானியின் மகன் அதை எதிர்க்கிறார்
 
எனவே ராணுவத்தை இறக்க, ராணுவத்தை சிதற அடிக்கிறது எந்திரப் பறவை . 
 
தவிர ஒரு லோக்கல் அமைச்சரும்  ( யாரோ ஒரு மலையாள நடிகர்) . செல்போன்களால் கொல்லப் படுகிறார் . சிட்டிக்கு அனுமதி அளிக்கிறது அரசு 
 
மனித உடலை சுற்றி உள்ள ஆரா என்ற சக்திப் படலம் உயிரோடு  இருக்கும்போது பாசிட்டிவ் ஆகவும், 
 
செத்த பிறகு நெகட்டிவ் ஆகவும் மாறும் என்று விளக்கும் வசீகரன் …
 
பக்ஷிராஜன் ( அக்ஷய் கண்ணா ) என்ற பறவையியல் ஆர்வலரின் உடல் ஆராவின் நெகட்டிவ் சக்தியும், 
 
செல்போன் கதிர்வீச்சால் செத்துப் போன பல பறவைகளின் ஆராவும் ஒன்று சேர்ந்து, 
 
எந்திரப் பறவைக்கு மாபெரும் சக்தி கொடுத்து இருப்பதை,  சிட்டி மற்றும் நிலா ஆகியோரின் உதவியின் மூலம்   கண்டு பிடிக்கிறார் 
 
போட்டோன் பிளஸ் சக்தியை செலுத்து எந்திரப் பறவையிடம் உள்ள  நெகட்டிவ்  சக்தியை கண்டு பிடித்து நீக்க …   
 
பக்ஷி ராஜன் செல்போன்களுக்கு எதிராக இயங்கிய காரணம் விளக்கப்படுகிறது . 
 
செல்போன் நிறுவனங்களிடம் சோரம் போகும் ஆளும் அரசியல் வாதிகள் , அதனால் இந்தியாவில் உள்ள பத்து செல்போன் நெட் ஒர்க் நிறுவனங்கள்
 
(அமெரிக்காவில் நாலு சீனாவுக்கே மூணு தான் என்கிறார்கள் படத்தில் ) , நாடு முழுதும் உள்ள செல்போன் டவர்கள்… 
 
வியாபாரப் போட்டி காரணமாக  செல்போன் நிறுவனங்கள் முறையற்று  அதிக கதிரியகத்தை அனுமதிப்பது ..
 
அதனால் பறவைகள் குறிப்பாக சிட்டுக் குருவிகள்  பைத்தியம் பிடித்து முட்டி மோதி செத்து , அந்த  இனமே அழிவது , 
 
பல்லாயிரம் கிலோ மீட்டர் கடந்து வேடந்தாங்கல் வந்த பறவைகள் செல்போன் கதிர்வீச்சு காரணமாக வழியில் மூளை  பாதிக்கப்பட்டு சாவது..  
 
பறவைகள் குறைந்தால் பூச்சி இனம் அதிகரிக்கும் .. அதனால் பயிர் வளர்ச்சி குறையும் உணவுப் பஞ்சம் வரும் .. மனித இனமும் அழியும் ….
 
— என்பதை எல்லாம் விளக்கி செல்போன் நெட் ஒர்க் எண்ணிக்கை , டவர்கள் எண்ணிக்கை,
 
கதிரியக்க அளவு இவற்றை குறைக்க போராடி  தோற்றுப் போகிறார் 
 
இந்த நிலையில் அவர் வைத்து இருக்கும் பறவைப் பண்ணை அருகே ஒரு செல்போன் நிறுவனம் அதிக கதிரியக்க அளவில் செல்போன் டவர் வைக்க, 
 
எல்லா பறவைகளும் முட்டி மோதி பித்துப் பிடித்து சாகின்றன . பறவைக் குஞ்சுகள் துடிதுடித்து இறந்து போகின்றன . 
 
அதைக் காண முடியாமல் அவர் செல்போன் டவரில் அவர் தூக்குப் போட்டு செத்துப் போனது விளக்கப் படுகிறது . (ஆரம்பக் காட்சி) 
 
அவரது தீய  கூட்டு ஆராவை அடக்கி அவரை  ஆய்வகத்தில் முடக்குகின்றனர்  வசீகரன், சிட்டி , நிலா மூவரும் . 
 
மக்கள் மீண்டும் செல்போன் பேச ,  வசீகரனுக்கு புகழ் வருவது பொறுக்காத அந்த-  சக விஞ்ஞானி மகன் , பக்ஷி ராஜாவின் நெகட்டிவ் ஆரா சக்தியை விடுவிக்கிறார் . 
 
மீண்டும் எந்திரப் பறவை விஸ்வ ரூபம் எடுத்து செல்போன்களை  ஒழிக்கிறது . கொலைகள் தொடர்கின்றன. 
 
மீண்டும் சிட்டியை வைத்து எந்திர பறவையை ஒடுக்கலாம் என்றால் அது வசீகரனின் உடலுக்குள் நுழைகிறது .
 
எனவே சிட்டி எந்திரப் பறவையை தாக்கினால் வசீகரன் செத்துப் போவார் . எனவே சிட்டி தடுமாறி நிற்கிறது 
 
 சிட்டி அமைதியாக, எந்திரப் பறவை அழிவுகளை  தொடர , ரெட் சிப் மீண்டும் எடுக்கப் படுகிறது . ஆரம்பிக்கிறது 2.O. 
 
அப்புறம் என்ன நடந்தது ?
 
ஜெயித்தது நியாயமா ?அநியாயமா ? அதாவாது பக்ஷி ராஜனா ? அல்லது வசீகரன் மற்றும் 2.O  கூட்டமா ?? என்பதே படம். 
 
வாவ் .. படத்தின் துவக்கத்தில் வரும் டைட்டில்கள் !
 
இப்படி ஒரு அட்டகாசமான டைட்டிலை இதுவரை  நம்ம சினிமா கண்டதில்லை . அற்புதம் . 
 
ரஜினி , அக்ஷய் குமார் ஆகியோரை வைத்துக் கொண்டு , இதை ஒரு டைரக்டரின் படமாக உருவாக்கி இருக்கும் ஷங்கருக்கு ஜே !  
 
ஆழ்வார் பாசுரம் அதே பாணியில் ஒரு பாடல் என்று  முன்னைப் பழமையும் இருப்பது சிறப்பு . 
 
கதைக்கு பொருத்தமாக திருக்கழுக்குன்றம் ஊரை பயன்படுத்தி இருக்கிறார்கள் பாருங்கள் ….  திரைக்கதை நேர்த்தியின் உச்சம் அது . 
 
விஞ்ஞானத்துக்கும் ஆன்மீகமும் கடலும் வானமும் போல சந்திக்கும் புள்ளியில்  கதை நகர்வதும் அருமை . 
 
படம் துவங்கி அரை மணி நேரத்திலேயே அக்ஷய் கண்ணா வரும்போது இடைவேளை வந்து விடும் என்பது புரிந்து விடுகிறது 
 
பக்ஷிராஜனின் நெகட்டிவ் ஆராவை பொறாமைக் கார விஞ்ஞானி விடுவிப்பது எதிர்பார்க்கப்பட்ட காட்சியே .
 
ஆனால் பட்சிராஜன் வசீகரனுக்குள் நுழைவதும் அதனால் சிட்டி பட்சிராஜனை தாக்க முடியாமல் போவதும் நல்ல திருப்பம் . 
 
வழக்கம் போல பிரம்மாண்டம் கிராபிக்ஸ் கலக்கல் எல்லாம் இந்தப் படத்திலும் இருக்கிறது  . 
 
ரஜினி வழக்கம் போல . அக்ஷய் குமார் கேஷுவல் . எமி ஒகே . 
 
தமிழக அமைச்சருக்கு மலையாள நடிகரா ? அதுகூட பரவாயில்லை அவர் பேச்சில் தெரியும் ,
 
மலையாள வாடை சகிக்கல . ஷங்கரின் பர்பெக்ஷன் எங்கே போச்சு ?
 
அய்யா ஜெயமோகன்! சிட்டுக் குருவியின் பெருமை சொல்ல தமிழ்நாட்டு சம்பவம் எதுவுமே கிடைக்கலையா ?
 
அதுக்குக் கூட  வட இந்தியாவுக்கு மழை சொல்லும் குருவி என்று (தமிழ் பதிப்பில் கூட ) வடக்குக்குதான் வால் பிடிக்கணுமா? உங்களை எல்லாம் …. 
 
ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா ,கலை இயக்குனர் முத்துராஜ் சிறப்பு . 
 
ஏ ஆர் ரகுமானின் இசை … இன்னும் சிறப்பாக இருந்து இருக்கணும் . முதல் பாகத்தை நினைவு படுத்தும் அந்த தீம் மியூசிக் மட்டும் மீண்டும் ஈர்க்கிறது.
 
செல்போன்கள் பறக்கின்றன என்று சொல்ல அவ்வ்வ்வ்வ்வ்வளவு சம்பவங்களா ? அதில் கால்வாசி போதாதா ?
 
பிரச்னை படத் தொகுப்பிலா ? இல்லை இயக்கத்திலா?
 
ஜெயலலிதா கழுத்தில் கத்தி வைத்து நம்பியார் எம்ஜிஆரை பிளாக் மெயில் செய்வது போல ,
 
சிட்டுக்குருவியை வைத்தே பக்ஷி ராஜனை  பிளாக் மெயில் செய்வது எல்லாம் … சிரிச்சு முடியல. 
 
ஒரு சயின்ஸ்பிக்ஷன் படத்துக்கான காட்சியா அது ? ஒட்டு மொத்த சிட்டுக் குருவி மற்றும் பறவைகள் காப்பாற்றப்பட வேண்டும்.. 
 
அதற்கு இந்த சிட்டுக் குருவிகள் செத்தால் தப்பில்லை என்று போட்டுத்தள்ள மாட்டாரா   பட்சி ராஜன் ?
 
தவிர பறவை இனங்களுக்காகவே பரிதாபப்படும் பட்சி ராஜன் மனிதர்களை எப்படி ஹிட்லர் பாணியில் கும்பல் கும்பலாக கொல்ல முனைவான் ?
 
படத்தில் வரும் ஆயுதத் தாக்குதல்களை விட இந்த  CHARECTOR ASSAASINATION  பெருசா இருக்கே ?
 
நியாயப் படி பார்த்தால் படத்தின் ஹீரோ அக்ஷய் கண்ணா கேரக்டர்தான் . அவர் வில்லனாக்கி, 
 
 அவரை அழிக்கும்  கூட்டத்தை  ஹீரோ ஆக்கி விட்டதற்கு   , காரணம் என்னவாக இருந்தாலும் அராஜகம் !
 
‘சிட்டுக் குருவி சாகுதுதான் . அதுக்கு என்ன பண்றது ? செல்போனை விட்டுட முடியுமா ? ஆமா…லேட்டஸ்ட் மாடல் எப்போ வருது .
 
இன்னும் கொஞ்சம் ரேடியேஷனை அதிகப்படுத்தி BUFFERING ஆகறதை குறைக்க முடியுமா ?’ என்ற உணர்வுக்கே  கடைசியில் படம் பலம் சேர்க்கிறது . 
 
கடைசியா வசீகரன் டயலாக்கில் பூசும் பம்மாத்துப் பசப்புப் பூச்சு எல்லாம்.. ம்ஹும் ! பரிதாபம் 
 
இந்தப் படத்தின்படி  பார்த்தால் இந்தியன் தாத்தா , அந்நியன் , ஒருநாள் முதல்வர் புகழேந்தி எல்லோரும் வில்லன்கள். 
 
தாசில்தார் பாலாசிங் , பிரகாஷ் ராஜ் , ரகுவரன்.. இவர்கள்  எல்லோரும் ஹீரோக்கள் 
 
தவிர சிட்டுக்குருவிகளுக்கான ஆதரவுக் குரல் புள்ளி விவரங்களாக மட்டும் இருக்கிறதே ஒழிய, 
 
அழுத்தமாகவோ மனதில் தைக்கும்படியோ அமையவில்லை. 
 
விளைவு?  சமூக பிரச்னைகளுக்கு எதிராக நியாயம் ஜெயிப்பது போல படம் எடுப்பவர் ஷங்கர் 
 
(அதில் அவ்வப்போது கொஞ்சம் கத்துகுட்டித்தனம் மற்றும் ஆதிக்க  சாதி ஆதரவு தெரிந்தாலும் கூட… )
 
– என்ற இதுவரையிலான தனது  கம்பீரத்தில் இருந்து சரேல் என்று சறுக்கி இருக்கிறார் ஷங்கர் . 
 
ஒரு டெக்னிக்கல் எக்ஸலன்ஸ் படத்தில் அதை விட திரைக்கதை பெட்டராக இருக்க வேண்டும் . இதில் அது இல்லை 
 
எனினும் என்ன … 
 
ஹாலிவுட் என்ன ஹாலிவுட் … நம்ம ஊரிலேயே ஹாலிவுட் படங்கள் எடுக்க முடியும் என்று, 
 
காலரை தூக்கி விட்டுக் கொள்ள முடிகிறது 2.O படத்தைப் பார்க்கும்போது!
 
அப்படி ஒரு மாபெரும் சாதனையை செய்து இருக்கிறார்கள் ஷங்கரும் லைக்கா சுபாஷ்கரனும் !
 
2.O….. விழிகளை விரிய வைக்கும் வியப்பான அனுபவம் .

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *