96 @ விமர்சனம்

மெட்ராஸ் இன்டர்நேஷனல் சார்பில் நந்தகோபால் தயாரிக்க, 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பில் லலித்குமார் வெளியிட,
 
விஜய் சேதுபதி, திரிஷா, தேவதர்ஷினி, ஜனகராஜ், பகவதி பெருமாள் நடிப்பில், சி. பிரேம் குமார் தனது முதல் படமாக எழுதி இயக்கி இருக்கும் படம் 96.
 
படம் 100ஆ ? இல்லை 0வா ? பார்க்கலாம் . 
 
வனவிலங்கு புகைப் படக் கலைஞரும் , புகைப்படக் கலை ஆசிரியருமான ராம் என்கிற ராமச் சந்திரன் (விஜய் சேதுபதி) ,
 
தனது பயண வழியில் சொந்த ஊரான தஞ்சாவூருக்குப் போகிறான் . 
தான் படித்த பள்ளியை பார்க்கிறான் . அங்கே தொடர்ந்து வேலை செய்யும் வாட்ச் மேனை (ஜனகராஜ் ) சந்திக்கிறான்.
 
பழைய நினைவுகளின் உணர்வுகள் மேலிட, எல்லா நண்பர்களையும் சந்திக்க திட்ட மிட்டு மறு ஒன்றிணைப்புக்கு ஏற்பாடு செய்கிறான் . 
 
அவனது பழைய காதலி ஜானு என்கிற ஜானகிதேவியும் (திரிஷா) சிங்கப்பூரில் இருந்து வருகிறாள் . 
 
கல்யாணம் ஆகி புரிதல் உள்ள கணவனும் ஒரு குழந்தையும் கொண்டவள் அவள். வந்த இடத்தில் இருவருக்கும் பழைய ஈர்ப்பு ஏற்படுகிறது . கண்ணீர் .. நெகிழ்வு !
 
இருவரும் ஒருவரை ஒருவர் இழந்ததற்குப் பின்னால் உள்ள உண்மைகளை , ஒருவருக்கு ஒருவர் ஏங்கிய விதங்களை சொல்லிக் கொள்கின்றனர் . 
இருவரும் எல்லை மீறி விடுவார்களோ என்று எண்ணும் நண்பர்கள் அவர்களை பிரித்து அனுப்ப முயல,  அதையும் மீறி அவர்களுக்கு ஓர் இரவு நேரம் அமைகிறது . 
 
நடந்தது என்ன  என்பதே இந்த 96 படம் 
 
— என்று சொல்லி முடிக்க , சாதாரண படம் இல்லை இது . கவிதைப் பூர்வமான உணர்வுகளின் காவிய சங்கமம் . 
 
ஒரு தங்க ஆட்டோகிராப் !
 
நாயகன் போட்டோகிராபர் என்பதை விளக்க. அற்புதமான இயற்கைக் காட்சிகளை கண்ணுக்குள் நிறைக்கும் வேளையில், 
 
‘நன்றி;-  இயற்கை’ என்று ஒரு டைட்டில் போடுகிறாரே இயக்குனர், அங்கேயே புரிந்து விட்டது இது சாதாரண படம் இல்லை என்று . பொதுவாக என்னதான் நல்ல திரைக்கதை அமைந்தாலும் சரியான ஒரு கதை இருந்தால்தான் மக்கள் மனம் கவரும் என்பது ஒரு பொதுவான விதி . 
 
ஆனால் , பழைய காதல்,  புதிய சந்திப்பு , பள்ளி நினைவுகள் என்று பார்த்த விசயங்களே என்றாலும் மிக மிக அட்டகாசமான , உணர்வுப் பூர்வமான , கனமான , ரசனை மிக்க ,
 
நெகிழ்வான திரைக்கதையால் படம் பார்க்கும் அனைவரின் மனங்களையும் கொள்ளை அடித்து விடுகிறார் பிரேம் குமார் . அந்த வகையில் இந்தப் படம் ஒரு மைல்கல் படம் !
 
ஒரு காட்சி … காட்சியில் இருந்து வசனம், வசனத்தில் இருந்து ஒரு காட்சி என்று அட்டகாசமான  திரைக்கதை. 
 
”டைரக்ட் ஃபிளைட் கிடைக்கல. கனெக்டிங் ஃபிளைட்ல திருச்சி போய்தான் போகணும்” என்ற வசனம் கூட சும்மா கடமைக்கு வர வில்லை .
கடைசியில் அதில் இருந்து ஒரு  ஆசுவாசப்படுத்தும் காட்சி கிடைக்கிறது . 
 
போகிற போக்கில் அமையும் ஒரு நிகழ்வு படத்தை கனமான கண்ணீர்க் கவிதையாக படத்தை  முடித்து வைக்கிறது . 
 
ஜானகியின் பெயர்க் காரணம் ஒரு கவிதை என்றால் அதற்கேற்ப இளையராஜா இசையில் ஜானகி பாடிய பாடல்களை, 
 
படத்தில் பயன்படுத்தி இருக்கும் விதம் ரசனையின் காதுகளில் தேன் பாய்ச்சுகிறது . 
 
திரைக்கதைதான் இப்படி என்றால் அட்டகாசமான பிரேம்கள், கேமரா நகர்வுகள், டைமிங், நடிக நடிகையரிடம், 
 
 வேலை வாங்கிய விதம் என்று படமாக்கலிலும் மயக்கிக் கட்டிப் போட்டு இருக்கிறார் பிரேம் குமார் . 
சண்முக சுந்தரத்தின்  ஒளிப்பதிவு , கோவிந்த் வசந்தாவின் இசை இரண்டும் இயக்கத்தோடு கலந்து பின்னிப் பிணைந்து பிரிக்க முடியாமல் கிடக்கின்றன .
 
கோவிந்தராஜின் படத்தொகுப்பு,  எடுக்கப்பட்டிருக்கும் காட்சிகளை தொகுத்து அளித்து இருக்கும் விதமே ஒரு கவிதைச் சங்கிலி போல் இருக்கிறது  . 
 
தான் எது செய்தாலும் பொதுவான ரசிகர்களுக்கு பிடிக்கும் என்ற வகையில் விஜய் சேதுபதி தன் இமேஜை கட்டமைத்துக் கொண்டு விட்டார் என்பது வேறு விஷயம் . 
ஆனால் அதையும் மீறி இந்தப் படத்தில் விஸ்வரூபம் எடுத்து உள்ளார் விஜய் சேதுபதி , கூச்ச சுபாவம் ,நேர்மை ,
 
கடினத்தன்மை , எதையும் தாங்கும் இதயம்  உள்ள ராமச்சந்திரன் கேரக்டரை உணர்ந்து உயிர்த்து நடித்துள்ளார் விஜய் சேதுபதி . 
அந்த உடம்பும் சைசும் முகம் மூடி வெட்கப் படுவதை ரசிக்க வைக்கிறாரே…. அற்புதம் .
 
எனினும் இந்தப் படம் திரிஷாவின் மேஜிக் என்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும் 
 
ராமச்சந்திரன் வந்து இருக்கிறான் என்பதை அறிந்த நொடியில்  உயிர் உருக்கும் மூச்சும் அந்த எக்ஸ்பிரஷனும்.. இன்னும் கண்ணுக்குள்ளேயே நிற்கிறது .ஹெய்ல் திரிஷா !!
 
படம் முழுக்கவே அற்புத நடிப்பால் கண்களையும் ரசனையையும் விரிய வைக்கிறார் திரிஷா . 
சிறுவயது ராம் மற்றும் ஜானகியாக நடித்துள்ள ஆதித்யா பாஸ்கர் மற்றும் கவுரி கிருஷ்ணா இருவரும், 
 
படத்தின் இன்னொரு நாயகன் நாயகியாக கதாபாத்திரம் மற்றும் நடிப்பால் ஜொலிக்கிறார்கள் .  (கவுரி பேச்சில் மட்டும் மலையாள வாசனை !)
 
தேவதர்ஷினி, ஆறுபாலா, பகவதி பெருமாள், ஜனகராஜ் உள்ளிட்ட நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளனர் . 
 
இருபது ஆண்டுகளுக்கு முன்பு இருந்த பள்ளிக் கல்வியில் ஒரே வகுப்பறையில் நட்பு , சகோதர பாசம் , காதல் என பல உறவுகள் மலர்ந்ததை  காட்சிப் படுத்திய விதம் ரம்மியம் . 
 
படத்தின்  கடைசி ஒரு மணி நேரத்தை விஜய் சேதுபதி , திரிஷா என்று இரண்டே கதாபாத்திரங்களை மட்டும் வைத்துக் கொண்டு
(ஒரே காட்சி மட்டும் விதி விலக்கு. ஆனால் அதுவும் அழகான விதி மீறல் !)  கொஞ்சமும் சுவாரஸ்யம் குறையாமல் ,  கனமும் , கண்ணீரும் , கவிதையும்  நெகிழ்வுமாய் 
 
எதுவரை முடியுமோ அதுவரை நுணுகிப் போகும் திறமையோடு கொண்டு போயிருக்கும்  அழகை அற்புதத்தை , என்ன சொல்லிப் பாராட்ட !
 
கல்லூரிக் காலத்தில் ஜானகியால் செய்ய முடியாத விசயத்தை,  செய்தது போல இன்றைய ஜானகி சொல்ல ,
 
அது அன்றைய ஜானகி மற்றும் ராமின் உருவத் தோற்றத்தில் காட்சியாக விரியும் விதம்  உலகத்தரம் . டைட்டானிக் படத்தின் கிளைமாக்சுக்கு இணையான காட்சி 
 
ஒரு விமர்சனத்தின் மூலம் உணர வைக்க முடிகிற படம் அல்ல.. 
 
பார்த்தாலும் கூட பார்ப்போரின் ரசனையின் அளவுக்கு ஏற்ப விஸ்வரூபம் எடுக்கும் அனுபவம் இந்த படம் . 
 
திரையரங்கை விட்டு வெளி வந்த பிறகும் கூடவே வந்து கொண்டிருகிறது படம் 
 
மொத்தத்தில் 96.. 100/100 
மகுடம் சூடும் கலைஞர்கள் 
——————————————–
பிரேம் குமார்,   திரிஷா, விஜய் சேதுபதி , சண்முக சுந்தரம், கோவிந்த் வசந்தா, கோவிந்தராஜ் 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *