முன் பின் தெரியாத நபர்களை பொது இடங்களில் பயமுறுத்தி அல்லது இக்கட்டுக்கு ஆளாக்கி . அவர்கள் தன்னிலை இழந்து நிற்கும்போது, மறைத்து வைக்கப்பட்ட கேமராக்களை காட்டும் பிராங்க் ஷோவை ஒரு தொலைக்காட்சிக்காக நடத்தும் காமினி ( அமலாபால்) என்ற பெண்ணுக்கும் நடக்கும் சம்பவங்களே கதை .
பெண்ணுரிமை என்ற பெயரில் தண்ணி தம் அடித்துக் கொண்டு , தான் பெட் கட்டினால் ஜெயிப்பதற்காக யாரையும் என்ன வேண்டுமானாலும் செய்யத் தயங்காத காமினி தன் தொலைக்காட்சி நண்பர்கள் மற்றும் தோழியுடன் தண்ணியடித்து கும்மாளம் அடித்த ஓர் இரவின் முடிவில் உடலில் துளி ஆடை கூடின்றி ஆள் அரவமற்ற கட்டிடத்தில் தனியே இருப்பதை உணர்கிறார் .
யாரையும் உதவிக்கு அழைக்க முடியா சூழல். ஏன் எதற்கு எப்படி இது நடந்தது ? அப்புறம் என்ன ஆச்சு ? என்பதே ஆடை .
பதினெட்டாம் நூற்றாண்டில் திருவாங்கூர் சமஸ்தானத்தில் ‘உயர் சாதிப் பெண்கள் தவிர வேறு யாரும் மேலாடை அணியக் கூடாது . மீறி அணிந்தால் மார்பகத்தின் அளவுக்கு ஏற்ப வரி கட்ட வேண்டும் ‘என்ற கொடிய மார்பக வரி சட்டத்தை எதிர்த்து, தன் மார்பகத்தை அறுத்து எரிந்து உயிர் துறந்த நங்கேலி என்ற பெண்ணின் வரலாற்றை அனிமேஷனில் சொல்லி அப்புறம் காமினி கதைக்கு வருகிறார்கள் .
தொழில் ரீதியாக மட்டுமின்றி தனிப்பட்ட வகையிலும் மற்றவர்களை ஏமாற்றுவதை கூட குற்றம் என்று உணராத காமினியின் கதையை சொல்லிக் கொண்டே வருகிறார்
இயக்குனர் (மேயாத மான் ) ரத்னகுமார்
அமலா பாலை நிர்வாணமாக காட்டியபோதும் அதை வக்கிரமின்றி காட்டிய விதத்துக்கு மட்டும் இயக்குனருக்கும் ஒளிப்பதிவாளர் ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணனுக்கும் பாராட்டுகள். .
மற்றபடி கெட்ட வார்த்தை பேச்சு, விட்டேத்தியான நடத்தை இருந்தால்தான் பெண் சுதந்திரம் என்ற வண்ணம் , லாஜிக் இல்லாத காட்சிகள், இரட்டை அர்த்த வக்கிர வசனங்கள் , என்று படம் போகிறது
கடைசியில் நவீன நங்கேலி வந்து இணைப்பு கொடுக்கிறார் .
‘அன்றைக்கு உடம்பை மறைக்க சுதந்திரம் கேட்டோம் . இன்னிக்கு சுதந்திரம் என்ற பெயரில் உடம்பை திறந்து போட்டுக் கொண்டு அலைகிறோம் ‘என்ற வசனப் புள்ளியில் அந்த இணைப்பு ஏற்படுகிறது .
இதில் கொண்டு வந்து பிராங்க் ஷோவை இணைத்த விதம்தான் படு குழப்பம் .
தண்ணி தம் எல்லாம் பெண் சுதந்திரத்தின் நவீன கூறுகளாகவே இருந்து விட்டுப் போகட்டும் . ஆனால் பிராங்க் ஷோவுக்கும் அப்பாற்பட்டு தன் சுயநலத்துக்காக யாரையும் காயப்படுத்த ஏமாற்ற -பாதிக்க தயங்காத காமினிக்கு ஏற்படும் இக்கட்டு பரிதாபத்தை ஏற்படுத்தவில்லை.திரைக்கதையின் முக்கிய குறைபாடு இதுவே .
அதுவும் நவீன நங்கேலி வந்து செய்யும் வேலையையும் இயக்குனரையும் அந்த பழைய நங்கேலியின் ஆன்மா மன்னிக்கவே மன்னிக்காது .
குற்றவாளியிடம் தண்டனை தருபவன் மன்னிப்பு கேட்பது எல்லாம் எந்த ஊரு நியாயம் என்றே தெரியல.
தண்டித்த விதமும் தப்பு . அதற்காக மன்னிப்பு கேட்பது அதை விட தப்பு . குற்றவாளி பெருந்தன்மையாக மன்னிக்கிறார் , கஷ்ட காலம் !
இப்படியாக தனக்கு தானே குழி வெட்டிக் கொள்கிறது திரைக்கதை
கிடைத்தற்கரிய கேரக்டர் கிடைத்து விட்டது போல நடிப்பில் அமலா பால் காட்டும் ஓவர் உற்சாகம் மகா எரிச்சல் .
பிராங்க் ஷோவை கண்டிக்கும் படத்தில் ராதா ரவி வசனம் பிராங்க் ஷோவை விட கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று .
ஆடை … அம்மணம் !