ஐரா @ விமர்சனம்

கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் சார்பில் கோட்டபாடி ஜே ராஜேஷ் தயாரிக்க, இரட்டை வேடம் நயன்தாரா, கலையரசன், யோகி பாபு, குலப்புள்ளி லீலா , ஜே பி , மீரா கிருஷ்ணன் நடிப்பில் பிரியங்கா ரவீந்திரனின் கதை திரைக்கதையில் சர்ஜுன் கே எம் வசனம் எழுதி இயக்கி இருக்கும் படம் ஐரா.

இந்திரனின்  வெள்ளை யானையான ஐராவதத்தின் சுருக்கமே இந்த ஐரா என்கிறார் இயக்குனர் . சரி ஐரா ஜோரா ? இல்லை டார் டாரா? பேசலாம் .

 தனக்கு பொருத்தம் இல்லாத நபரை திருமணம் செய்து கொள்ள அப்பா அம்மா (ஜேபி – மீரா கிருஷ்ணன்)  இருவரும்  வற்புறுத்த , கோவித்துக் கொண்டு , பொள்ளாச்சியில் உள்ள கண் தெரியாத – அம்மா வழிப்  பாட்டி ( லீலா) வீட்டுக்கு போகும் ஊடகவியலாளாரான யமுனா ( நயன்தாரா) அங்கே ஒரு பாட்டி வழி உறவினரான ஒரு நபருடன் ( யோகிபாபு) வாக்கிங் ஜாக்கிங் போகிறார் . முக்கியமாக ஒரு பேயினால் மிரட்டப்படுகிறார் . 

இன்னொரு பக்கம் தன் மனைவியை லாரி ஏற்றிக் கொன்ற ஒருவனை ( அம்புலி கோகுல்) ஜாமீனில் போலீஸ் விட , கொந்தளிக்கிறான் அமுதன்  ( கலையரசன்).

அந்த டிரைவர், போலீஸ் அதிகாரி ஒருவர், இரண்டு லோக்கல் ரவுடிகள் மாடியில் இருந்து விழுந்து மரணத்தில் சிதறுகிறார்கள் . 
இந்த மரணத்துக்கு எல்லாம் செத்துப் போன தன் மனைவி என்று கருதும் அமுதன் மேற்கொண்டு சாகும் வாய்ப்புள்ளவர்களை காப்பாற்ற முயல்கிறான் .

 பவானி  யமுனாவையும் கொல்ல  முயல்வது தெரிகிறது . எனவே யமுனாவுக்கு உதவுகிறான் அமுதன்.

 சாமியார் முன்பு அமரும் பவானியின் ஆவி யமுனாவிடம்  தான் கொல்வதன் மற்றும் கொல்ல முயல்வதன் காரணம் சொல்கிறது .

மூன்றாவதாக வேண்டாத பெண் பிள்ளையாக அதுவும் கன்னங்கருப்பாக பிறந்து , அன்றே அப்பா மின்னல் தாக்கி இறந்ததால் துக்கிரிப் பெண்ணாக கருதப்பட்டு அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்களால் மேலும் தூற்றப்பட்டு வாழும் பவானிக்கு ( நயன்தாரா 2) வரும் காதலே வாழ்வின் ஒரே சந்தோசம் . பல்வேறு தடைகளுக்கு இடையில் காதலனை கரம்பிடிக்க கிளம்ப சிலரின் நடத்தையால் பவானி விபத்தில் சிக்கி மரணம் அடைகிறாள் . 

தன் காதல் வாழ்வை தடுத்த அவர்களை பவானி கொல்கிறாள். அதில் யமுனா செய்த தப்பு என்ன ? அப்புறம் நடந்தது என்ன ? என்பதே இந்த ஐரா. 

இயக்குனர் சர்ஜுனுக்கு படமாக்கல் நன்றாக கை வருகிறது . 

நயன்தாரா படம். தோப்புக்குள் இரவில் சுற்றிலும் பேய்களை பார்த்து மயங்கி கண்கள் சொருக யமுனா விழும் காட்சியிலும் , பல தடைகளுக்குப் பிறகு காதலன் வீட்டுக்கு போகும் தாழ்வு மனப்பான்மை உள்ள பவானி பார்க்கும்  ஒடுங்கிப் பார்க்கும் காட்சியிலும் நடிப்பில் அசத்தி இருக்கிறார் நயன்தாரா .

கலையரசன் இயல்பாக செய்து இருக்கிறார் . யோகிபாபு காமெடி என்று நினைத்துப் பேசுவதில் சிரிப்பே வரவில்லை .

 ஒளிப்பதிவில் இன்னும் நேர்த்தி வேண்டும் . சுந்தர மூர்த்தியின் இசை அபாரமாகவும் பாரமாகவும் மாறி மாறி ஒலிக்கிறது.

 “நீ லிப்டில் ஏற்றிக் கொண்டு போகாத காரணத்தால்தான் அடுத்தடுத்து பல சம்பவங்கள் நடந்தன . அதனால் நான் குடிகார லாரியில் அடிபட்டு செத்தேன். அதனால் உன்னையும் விடமாட்டேன் ” என்பது எல்லாம் என்னம்மா நியாயம் ? 

அப்படிப் பார்த்தால் கல்யாணம் செய்து கொள்ளப் போகும் பெண்ணை  நேரில் வந்து அழைத்துச் செல்லாமல்  கிளம்பி வரச் சொன்ன காதலனையே கூட பவானி கொல்லணும்.

 அவ்வளவு ஏன் ? மற்ற வேலைகளை சீக்கிரம் முடிக்காமல் அலங்காரத்தை இன்னும் கொஞ்சம் குறைவான நேரத்தில் முடிக்காமல் தாமதம் செய்து அதனால் லிப்டுக்கு லேட்டாக வந்த குற்றத்துக்காக பவானி தன்னையே தானே பழி வாங்கிக் கொ’ல்ல’ணும்?

அர்த்தமில்லாத காரணங்கள் . அதனால் பலம் இழக்கிறது படம் . 
யமுனாவிடம் “நீ மீடியாவில் இருக்க, குறைஞ்சது நாலஞ்சு பேரை பாத்திருப்ப .. ” என்று ஒரு கதாபாத்திரம் சொல்வது போல ஒரு வசனம் .

பதிலுக்கு யமுனா “உனக்கு ஆதின்னு பேரு வச்சதுக்கு பதிலா…. ” என்கிறாள் . 

ராதாரவி உடைத்தால் பொன்குடம் ; நயன்தாரா உடைத்தால் மண் குடம் ?

 மொத்தத்தில் ஐரா.. நயன்தாரா இருந்தாலும்  சரக்கு இல்லாததால்  பயன்தரா !

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *