அம்மா கணக்கு @ விமர்சனம்

kanakku 2

உண்டர்பார் பிலிம்ஸ், கலர் எல்லோ புரடக்ஷன்ஸ்  சார்பில் நடிகர் தனுஷ் மற்றும் ஆனந்த் எல் ராய்  இணைந்து தயாரிக்க, 

அமலா பால் , சமுத்திரக் கனி, செல்வி யுவா,  ரேவதி ஆகியோர் நடிக்க ,  அஸ்வினி திவாரி இயக்கி இருக்கும் படம் ‘அம்மா கணக்கு’.  விமர்சனக் கணக்கு  என்ன என்று பார்ப்போம் 

கல்யாணம் ஆகி சில மாதங்களே ஆகியிருந்த நிலையில் கணவன் இறந்து போக,  தனிமரமான கர்ப்பிணிப் பெண்  சாந்தி (அமலா பால்) , தன் பிள்ளைக்காகவே வாழ்வை அர்ப்பணிக்கிறாள்  . 

ஒரு டாக்டர் (ரேவதி) வீடு , ஈர  மாவுக் கடை , மீன் மார்க்கெட் என்று பல்வேறு இடங்களில் தினமும் கஷ்டப்பட்டு  உழைக்கும் சாந்தியின் லட்சியமே ,

kanakku 5

தனது பிள்ளையை  பெரிய டாக்டராகவோ கலெக்டராகவோ ஆக்க வேண்டும் என்பதுதான் 

வளர்ந்து பத்தாவது படிக்கும் அந்த பிள்ளை அபிநயாவுக்கு (யுவஸ்ரீ ) படிப்பில் பெரிய  நாட்டம் இல்லை . கணக்கு வரவே இல்லை .

பத்தாவது முடித்த பின்  அம்மா போல வேலைக்காரியாகப் போய் விட வேண்டும் என்பதுதான் அவளது எண்ணம் .

‘என்னை பெரிய படிப்பு படிக்க வைக்க உன்னிடம் காசு இருக்கா ?”  என்ற கேள்வி,  அந்த மாணவிக்கு ஒரு சாக்கு .

தன் மீது அன்பாக இருக்கும் டாக்டரின் ஆலோசனைப்படி,  பத்தாவது படிக்க மீண்டும் பள்ளியில் சேர்ந்து,  மகள் படிக்கும் வகுப்பிலேயே படித்து,  மகளுக்கு படிப்பு மீது ஆர்வத்தை ஏற்படுத்த முடிவு செய்கிறாள் சாந்தி . 

kanakku 6

டாக்டரின் சிபாரிசு காரணமாக சாந்தியை அபிநயாவின் வகுப்பில் சேர்த்துக் கொள்கிறார் அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியர் (சமுத்திரக்கனி )

காலாண்டுத் தேர்வில் மகளை விட அதிக மதிப்பெண் எடுக்கிறாள் சாந்தி .  

”அரையாண்டுத் தேர்வில் உன்னை விட அதிக மதிப்பெண் எடுத்தால் நீ பள்ளி வருவதையே நிறுத்தி விட வேண்டும்  ‘ என்று மகள் சொல்ல,  அந்த சவாலை ஏற்கிறாள் சாந்தி . 

அபிநயா படித்து அரையாண்டுத் தேர்வில் சாந்தியை விட  மதிப்பெண் எடுக்கிறாள் .  

சாந்தி பள்ளிக்குப் போவதை நிறுத்த , மீண்டும்  படிப்பைப் புறக்கணிக்கும்   அபிநயா , அம்மா போல வேலைக்காரி ஆகும் பழைய முடிவுக்கே  வருகிறாள் . 

kanakku 7

வேறு வழியின்றி மீண்டும் பள்ளிக்குப் படிக்க வருகிறாள் சாந்தி . கொந்தளிக்கும் அபிநயாவுக்கு அம்மாவின் நடத்தை மீதே சந்தேகம் வருகிறது .

அதன் காரணமாக அம்மா கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை திருடிக் கொண்டு போய்,  தோழிகளுடன்  சேர்ந்து ஒரே நாளில்  விலை உயர்ந்த உணவு , ஆடம்பர உடை என்று செலவு  செய்து தீர்க்கிறாள்  அபிநயா 

விஷயம் அறிந்து சாந்தி அதிர, அப்புறம் என்ன நடந்தது என்பதே இந்த அம்மா கணக்கு . 

தமிழில் இயக்கி இருக்கும் இதே  அஸ்வினி திவாரி இயக்கத்தில் இதே  கேவ் மிக் யு ஆரியின் ஒளிப்பதிவில்,  

ஸ்வரா பாஸ்கர், ரியா சுக்லா, ரத்னா பதக், பங்கஜ் திரிபாதி நடித்து  வெளியான , 

 நில் பட்டே  சன்னட்டா ( ஜீரோவை வகுத்தால் ஒண்ணும் இல்லை என்று பொருள் ) என்ற இந்திப் படத்தின், மறு ஆக்கமே இந்தப் படம் 
 
kanakku 9
ஓர் ஏழை  குடும்பத்தின் கல்வியை நோக்கிய போராட்டம் என்ற  விஷயம் பாராட்டுக்குரியது .
 
சாந்திக்கும் அபிநயாவுக்கும் கணக்குப் பாடத்தை சொல்லித் தரும் அந்த  ஏழை  மாணவன் கேரக்டர் அருமை . ஒரு சில இடங்களில் வசனம் பாராட்ட வைக்கிறது 
 
கேவ்மிக் யு ஆரியின் ஒளிப்பதிவில் இரவு நேரக் காட்சிகள்  யதார்த்தத்துக்கு நெருக்கமான இருக்கின்றன . 
 
இளையராஜாவின் இசையில் பாடல்கள் சுமார் ரகம்தான் . எனினும் ஆரம்பக் காட்சிகளில் மிக எளிமையாக பின்னனி இசை கொடுத்து இருக்கும் ராஜா போகப் போக  உணர்வுகளின் ஆழம் வரை தந்திகளை சுண்டுகிறார் .
 
ஒரு அபலை இளம்பெண்ணின் வாழ்க்கையை சொல்லும் திரைக்கதையில் ஆண்களை அயோக்கியர்களாகக் காட்டுவதை ஒரு வாய்ப்பாக  எடுத்துக் கொள்ளாத  நேர்மையைப் பாராட்டவேண்டும்  
 
kanakku 1
இதெல்லாம் ஒகே . ஆனால்  இது மட்டும்  போதுமா? 
 
வேலைக்காரி கேரக்டரில் அமலாபால் ஒட்டவே இல்லை .  வேலைக்காரியாக நடித்தால் கூட அழகாக வெளிப்படவேண்டும் என்பதில் அமலா பால் குறியாக இருந்திருக்கிரரே ஒழிய ,
அவர்  கேரக்டரை உணர்ந்து நடிக்கவே இல்லை . இந்திப் படத்தில் நடித்த ஸ்வரா பாஸ்கர்  சிறப்பாக நடித்து இருப்பார் 
போனால் போகட்டும் என்று  அமலா பாலை நாமாகவே  வேலைக்காரி கேரக்டருக்கு மனசளவில்பொ ருத்திக் கொள்ள முயன்றால் ,
 அதற்குத் தடையாக நந்தி மாதிரி நிற்கிறது (நடிகை ரோகிணி கொடுத்து இருக்கும்?)    பின்னணிக் குரல் .
 
kanakku 4
அந்தக்  குரலில் இருக்கும் ஒரு காஸ்மாபாலிட்டன் தன்மை,  சுத்தமாக சாந்தி கேரக்டருக்கு செட் ஆகவில்லை .
 
அபிநயா கேரக்டரில் நடித்து இருக்கும் யுவஸ்ரீயும், மேடை நாடகத்தில் வேலைக்காரியாக நடிக்கும் கொடீஸ்வர வீட்டுப் பிள்ளை போலவே இருக்கிறார் . அவரது நடிப்பும் அப்படியே இருக்கிறது . 
 
பங்களாவில் பிறந்து பங்களாவிலேயே வாழ்ந்த  ஒருவர் குடிசையைப் பற்றிப் படம் எடுத்தால்  எப்படி இருக்கும்? அப்படி  இருக்கிறது படம் .
 
இதே தனுஷ் தயாரிப்பில் இதே மாதிரியான களத்தில் வந்த காக்கா முட்டை படத்தில் பொங்கிப் பாய்ந்த ஜீவனில் , ஒரு குடததையாவது பிடித்து இந்த  படத்தில் ஊற்றி  இருக்க வேண்டாமா? 
 
பிறந்தது முதல் அப்பாவைப் பார்க்காத —  ஓடி ஓடி உழைக்கும் ஒரு வேலைக்காரியின் மகளான அபிநயாவுக்கு …
kanakku 8
ஒன்று,  ‘ நம்மை மாதிரி கஷ்டபடுவோருக்கு உதவுவதற்காக நன்றாக படித்து முன்னேற வேண்டும்’ என்ற பக்குவமான எண்ணம் இருக்க வேண்டும் . 
 
அல்லது பிறந்தது முதல் தான் அனுபவித்து வரும் வறுமையை  வெல்வதற்காகவாவது படித்து வேலைக்குப் போய் சம்பாதிக்கவேண்டும் என்ற ஆவேசமான சுயநலமாவது இருக்க வேண்டும் . 
 
ஆனால் பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணும் என்பது போல , அம்மா மாதிரி  வேலைக்காரி ஆவதுதான் என் லட்சியம் என்று அபிநயா சொல்வது ஏன் ?
 
தமிழகத்தில் எஸ் எஸ் எல் சி பொதுத் தேர்வு எழுத வேண்டும் என்றால் தேர்வு நடக்கும் அந்த மார்ச் மாதம் ஒன்றாம் தேதி அன்று  வயது 14 வருடம்    6 மாதங்கள் பூர்த்தி ஆகி இருக்கவேண்டும் என்றுதான் இருக்கிறது . 
kanakku 99
எத்தனை வயதுவரை ரெகுலர் கிளாஸ் மூலம் பத்தாம் வகுப்பு படிக்க முடியும் என்பது பற்றி விதி ஏதும் இருப்பதாக (நமக்குத்) தெரியவில்லை . . 
ஆனால்  அதற்காக  குறைந்த பட்சம்  முப்பது வயது ஆகி விட்ட சாந்தியை , தெரிந்த  டாக்டர் சொன்னார் என்பதற்காக , ஓர் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்,  ரெகுலர் வகுப்பில் சேர்த்துக் கொள்வதும்…
அதை நியாயப்படுத்த அந்த தலைமை ஆசிரியர் கேரக்டரை சும்மா பேக்கு மாதிரி காட்டுவதும் , 
சமுத்திரக்கனியும் அதை வித்தியாசமான நடிப்பு முயற்சிக்கான வாய்ப்பாக நம்பி , மிஸ்டர் பீன் பாணியில் நடிப்பதும் …. 
 
மிடியல …! 
kanakku 3
கடைசியில் சில காட்சிகள் கொஞ்சம் ஈர்க்கின்றன என்பதை மறுக்க முடியாது . ஆனால் அது மட்டும் போதுமா ?
 
ஒரு பொரி உருண்டைக்காக பூமி உருண்டையை  சுற்றி வர முடியுமா?
அது மட்டுமா?
 
வகுப்பறையில் அபிநயா  தன் அம்மாவுக்கு ஆதரவாக பேசும் காட்சியிலேயே கதை  முடிந்து விடுகிறது.  . அதன்பிறகு முப்பது நொடிக்குள் படம் முடிந்து இருக்க வேண்டும்  
ஆனால்  அதன் பிறகும்,   அமலா பால் தயிராகும் வரை பேசிக் கொண்டே இருக்கிறார் 
kanaku 9
தமிழுக்கு கொண்டு வர  வேண்டும்  என்று  ஆன பிறகு, நில்பட்டே சன்னாட்டாவை , அள்ளட்டா..? கொள்ளட்டா .. ?அடிமடியில்  கட்டட்டா … ? என்ற ரீதியில்  உருவாக்கி இருக்க வேண்டாமா ?
இப்படியா கிள்ளட்டா….. ? தள்ளட்டா….?  கீழ் வாயில் மெல்லட்டா…? என்ற  ரீதியில்  உருவாக்குவது ? 
 
மொத்தத்தில் அம்மா கணக்கு …. அம்மம்மா   பிணக்கு !
 
 
 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *