விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல் @ விமர்சனம்

சரஸ்வதி பிலிம்ஸ் சார்பில் செந்தூரப் பூவு கிருஷ்ணா ரெட்டி  திரைக்கதை  எழுதி தயாரிக்க,  அவரது மகன் நாகா அன்வேஷ் கதாநாயகனாக நடிக்க, ஹேபா பட்டேல் என்பவர் கதாநாயகியாக நடிக்க , 

உடன் சுமன் , சாயாஜி ஷிண்டே , பிரதீப் ராவத், பிதாமகன் மகாதேவன்,  கபீர் சிங், சப்தகிரி நடிப்பில் ,  பாகுபலி படத்தில் அசோசியேட் ஆக பணியாற்றியவரும்  தமிழகத்தைச் சேர்ந்தவருமான பாகுபலி பழனி , 
 
தெலுங்கில் இயக்கிய படத்தின் தமிழ் வடிவமே விண்ணைத் தாண்டி வந்த ஏஞ்சல் . 
 
தடை தாண்டி ரசிகர்களை கவருமா இந்த ஏஞ்சல்? பார்க்கலாம் . 
 
கந்தர்வ லோக இளவரசியான  நக்ஷத்ரா ( ஹேபா பட்டேல்)  , தன் தந்தையான கந்தர்வராஜாவின் (சுமன்)  கோபத்துக்கு ஆளாகி அவர் இட்ட சாபம் காரணமாக
 
பூலோகத்தில்  மானிடப் பெண்ணாக வாழ சபிக்கப்பட்டு  கந்தர்வ லோகத்தில் இருந்து பூலோகத்துக்கு  வீசப் படுகிறாள் . 
 
இந்த நிலையில் தற்போது  இரண்டாகப் பிரிந்து உருவாகும் சீமாந்திராவுக்கு தலை நகராகக் கட்டமைக்கப்படும்  நகரமும், சாதவாகனர்கள் ஆட்சியில் ஆந்திராவின் தலை நகராக விளங்கிய நகருமான அமராவதி  நகரில்,
 
புதிய தலைநகர அலுவலகங்களுக்காகக்  கட்டிடங்களைக் கட்ட குழி தோண்டும் போது ஒரு அழகான ஆளுயர தங்கப் பெண்சிலை ஒன்று கிடைக்கிறது . 
 
தகவல் உடனே சிலை கடத்தல் நபரான ஹரீஷுக்குப் (சாயாஜி ஷிண்டே)  போக ,அவன் அதை சென்னைக்கு அனுப்பி , அங்கிருந்து ஆப்பிரிக்க கடத்தல் கும்பல் ஒன்றுக்கு விற்க திட்டமிடுகிறான் . 

 
வரும் வழியில் வண்டி விபத்தில் சிக்கி பெட்டி திறக்கிறது . இரவில் குடி போதையில் நானி அந்த சிலையை வர்ணிக்க, சிலை பெண்ணாக மாறுகிறது . அதுதான்  சாபம் பெற்று பூமிக்கு வந்த கந்தர்வப்  பெண் நக்ஷத்ரா . (ஹேபா பட்டேல் ) 
 
போதையில் விஷயம் தெரியாத நானியும் கிரியும் சிலையை யாரோ கடத்தி விட்டதாகவும் , இந்தப் பெண் வழி தவறி காட்டுக்குள் வந்தவள் என்றும் நம்புகிறார்கள் . 
 
அவளை தன்னோடு அழைத்து வருகிறார்கள் . நான்தான் அந்த சிலை என்று அவள் கூறியும் அவர்கள் நம்பவில்லை . 
 

சிலை போய்ச் சேராதது அறிந்த கடத்தல்காரன் ஹரீஷ் துரத்தி வர , அவனிடம் சிலை காணவில்லை என்று நண்பர்கள் சொல்ல, நான்தான் சிலை என்று அங்கும் நக்ஷத்ரா  சொல்ல ,  ஹரீஷ் நக்ஷத்ராவை எதுவும் செய்து விடுவான் என்ற பயத்தில் , 

 
அவளை அழைத்துக் கொண்டு தப்பிக்கிறான் நானி . 
 
ஹரீஷ் கும்பல் அவர்களை துரத்த , ஒரு ஊரில் எல்லோரும் நானியையும் நக்ஷத்ராவையும்  சூழ , அந்த நேரம் பார்த்து வரும் ஊர்க் கும்பல் ஒன்று ஹரீஷ் ஆட்களை அடித்து உதைத்து விரட்டி விட்டு , 
 
நக்ஷத்ராவை ‘காணமல் போய் திரும்பக் கிடைத்த பெண்’ என்று கொண்டாடுகிறார்கள் . 
 
நானி விசாரித்தால் அந்த அழகான கிராமத்தில் உள்ள ஒரு பெரிய பணக்காரரின் ( பிதாமகன் மகாதேவன்) ஒரே வாரிசு இவள் என்கிறார்கள் எல்லோரும் . 
 
அந்த ஊரில் உள்ள ஒரு கந்து வட்டிக்காரன் ( பிரதீப் ராவத்) ஏழை விவசாயிகளுக்கு கடன் கொடுத்து வட்டி வளர்த்து கடன் தொகை பெருகிய நிலையில் எல்லாருடைய நிலங்களையும் பிடுங்கிக் கொள்ளப் பார்க்கிறான் . 
அந்த பெண்தான் பணி புரியும் ஐ டி நிறுவன ஊழியர்கள் மத்தியில் பணம் திரட்டி அதை கந்து வட்டிக்காரன் கணக்கில் போடுகிறாள் . அவனிடம் உள்ள பத்திரங்களை வாங்க வரும் வழியில் விபத்தில் இறந்து விடுகிறாள் . இறந்தது ஊர் மக்களுக்கு தெரியாது 
 
அதனால் பணம் கொடுத்தும் விவசாயியின் நிலங்களை மீட்க முடியாத நிலை . 
 
இறந்து மேல்லோகம் வந்த  நந்துவை  (இரட்டை வேடம் ஹேபா பட்டேல்) கந்தர்வ லோக நக்ஷத்ரா சொர்க்க லோகத்தில் பார்த்து இருப்பாள் . 
 
அதை இப்போது நானியிடம் கூறும் நக்ஷத்ரா இந்த ஊர் மக்கள் இப்போது  தன்னை நந்து என்று நம்புவதை சொல்கிறாள் 
ஒரு நிலையில் நானிக்கும் நந்துவாக நடிக்கும் நக்ஷத்ராவுக்கும் திருமணம் செய்து வைக்க நந்துவின் பெற்றோர் ஏற்பாடு செய்கிறார்கள் .
 
வந்திருப்பது நந்து இல்லை என்று அறிந்து கொள்ளும் கந்து வட்டிக்காரன் , விசயத்தை நந்துவின் பெற்றோரிடம் கூறி கல்யாணத்தை நிறுத்து நக்ஷத்ராவை விரட்டி, கடன் பத்திரங்களை தக்க வைத்துக் கொள்ள முயல்கிறான் . 
 
கல்யாணத்தன்று  மீண்டும் ஊருக்குள் வரும் ஹரீஷ் வேறு நானியையும் நக்ஷத்ராவையும் தூக்கிக் கொண்டு போக முயல்கிறான் . 
 
இதற்கிடையில் சாபம் பெற்று பூமிக்குப் போன தன் மகள் நக்ஷத்ரா அங்கு ஒரு மனிதனை திருமணம் செய்து கொள்ள முயல்வதை அறிந்து கொள்ளும் கந்தர்வ லோகத்து ராஜா ,
 
  அவள் மனதை மாற்றும்  கனக மாலை ஒன்றை சக்தி வாய்ந்த கருட தேவன் ( கபீர் சிங்) கையில் கொடுத்து , ” இதை நக்ஷத்ரா கழுத்தில் போட்டால் அவள் பூமி மீது உள்ள பற்றை அறுத்துக் கொண்டு விடுவாள் .
 
வேறு வழியில்லை என்றால் அவனை கொன்றாவது அவளைக் கொண்டு வா ” என்று பூலோகத்துக்கு  கருட தேவனை அனுப்பி வைக்கிறார் . 
இந்த சமயத்தில் கல்யாண  வீட்டில் ஒரு குடிகார பிக்பாக்கெட் நுழைகிறான் . 
 
நடக்கும் களேபரங்கள் என்ன ? நக்ஷத்ரா மானிடப் பெண்ணாகவே இருந்தாளா ? இல்லை கந்தர்வ லோகத்துக்கு கொண்டு போகப் பட்டாளா? நானி – நக்ஷத்ரா காதல் என்ன ஆச்சு ? நிலத்தை இழந்த விவசாயிகளின் நிலை என்ன ?என்பதே இந்த விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல் . 
 
இன்றைய சீமாந்திராவின் தலை நகராக கட்டமைக்கப்படும் அமராவது நகரின் நிஜமான கட்டுமான வேலைகளுக்குள் துவங்கும் அந்த  காட்சியே அபாரம் . 
 
ஒரு கமர்ஷியல் தெலுங்குப் படத்துக்குரிய எல்லா தன்மைகளோடும் படம் பயணிக்கிறது . 
 
தோண்டப்படும் சிலையும் அது பெண்ணாக மாறும் காட்சியில் கலை இயக்கம் , வரைகலை , விஷுவல் எபக்ட்ஸ் எல்லாம் மிக அருமை . அப்படி ஒரு அழகான சிலையை தேர்ந்தெடுத்த ஆர்ட் டைரக்டருக்கு பாராட்டுகள் .  கந்தர்வ மற்றும்  சொர்க்க லோக வரைகலையும் அபாரம் மற்றும் அழகு 
 
ஹேபா பட்டேலும் சிலைக்கு கொஞ்சமும் குறையில்லாமல் அழகாய் இருப்பதுவும் அவரை படத்தின் முதல் பாதியில் இயக்குனர் பயன்படுத்தி இருக்கும் விதமும் கதையை நம்ப வைக்கிறது . 
 
மற்றபடி குட்டை கால் சட்டை போட்டு நாயகி குதிப்பது , சட சட காமெடி ,வளரும்காட்சிகள் எல்லாம் ஜஸ்ட் ஒகே என்ற அளவில்தான் படத்தின்முதல் பாதி கழிகிறது . 
 
ஆனால் இரண்டாம் பாதியில் படம் விஸ்வரூபம்  எடுக்கிறது . சும்மா  சொல்லக் கூடாது அசத்தல் கதை திரைக்கதை வசனம் இயக்கம் . 
 
சொர்க்கத்தில் வந்து சோகமாக நந்து அமர்ந்திருக்க, நக்ஷத்ரா காரணம் கேட்க , ”எனக்கு நான் பொறந்த  என் ஊருதான் சொர்க்கம் . இங்க  அதை விட சிறப்பா ஒண்ணும் இல்ல” என்று நந்து  சொல்லும் காட்சியும் கருத்தும் அபாரம் . 
 
ஐ டி கம்பெனிக் இளைஞர்கள் ” நாம ஏன் விவசாயிக்கு ஹெல்ப் பண்ணனும்?” என்று கேட்க , “உங்க வீட்ல கேட்டுப் பாருங்க. அதிக பட்சம் மூணு தலைமுறைக்கு முன்னாடி உங்க முப்பாட்டன் எல்லாம் விவசாயியாதான் இருந்து இருப்பாங்க “என்று நந்து சொல்ல,
 
அதன் படியே கேட்டு உண்மை உணரும் இளைஞர்கள் இன்றைய விவசாயிகளின் நிலை உணர்ந்து அவர்களில் தங்கள் முன்னோர்களாக எண்ணி நன்கொடை குவிக்கும் காட்சி சிந்தனை படமாக்கல் இரண்டிலும் சிலிர்க்க வைக்கிறது . 
 
நக்ஷத்ராவிடம்  நைச்சியமாக பேசும் கருட தேவன் ” கந்தர்வப் பெண்ணான நீ கேவலம் அற்ப மானிடனையா மணப்பது ?” என்று கேட்க , ” மானிட லோகத்தில் மானிட பிறவியில் பசி , நோய் , துக்கம் , மரணம் எல்லாம் இருக்கலாம் .
 
ஆனால் இங்கேதான் நிஜமான் நட்பு , அன்பு பாசம் , உறவின் அருமை எல்லாம் சிறப்பாக இருக்கிறது . எனவே சொர்க்க லோகம் , கந்தர்வ லோகத்தை விட  மனிதர்கள் வாழும் பூலோகம்  மேல் ” என்று நக்ஷத்ரா கூறும் காட்சி , படம் பார்க்கும் எல்லா ‘மனிதர்’களையும்  மயக்கி விடுகிறது .
 
இப்படி திரைக்கதை ஆசிரியர் செந்தூரப் பூவு கிருஷ்ணா ரெட்டியும் இயக்குனர் பாகுபலி பழனியும் இரண்டாம் பகுதி முழுக்க ரசிகர்களை நெகிழ்ந்து மகிழ்ந்து பிரம்மிக்க வைக்கிறார்கள் . 
 
“நந்து ஊருக்கு வர்றான்னு தெரிஞ்சா , கிராமத்துக் குளத்துல உள்ள மீன் கூட சந்தோஷத்தில் துள்ளும் ” என்பது உட்பட  வசனத்தில் செழிப்பான சிக்சர்களை படம் முழுக்க அடித்து அசத்துகிறார்  வசன கர்த்தா பிரபாகர் .சபாஷ் . 
 
குணசேகரனின்  ஒளிப்பதிவு மிக அற்புதம் .  ஒவ்வொரு லோகத்துக்கும் தனித்தனி குணாதிசயத்தோடு சிறக்கிறது . 
 
பேமஸ் செசிரிலியோவின்  பின்னணி இசை சிறப்பு . பாடல்கள் ஒகே . 
 
நானியும் கடத்தல் வில்லன்களும் மோதும் சண்டைக் காட்சிகளே வியக்க  வைக்க, இறுதியில் கருடதேவனும் நானியும் மோதும் சண்டைக் காட்சி சும்மா அதிரடிக்கிறது . சூப்பர்ப் !  
 
மிக இயல்பாக உற்சாகமான சிறப்பாக , பாரட்டும்படி நடித்துக் கவர்கிறார் நாக அன்வேஷ் . வாழ்த்துகள் தம்பி ( அவரே பேசி இருக்கும் சொந்தக் குரலில்தான் தெலுங்கு வாசனை தூக்கலாக இருக்கிறது ) 
 
புதுசா பூத்த ஹன்சிகா மாதிரி இருக்கிறார் ஹேபா பட்டேல் . நடிப்பும் சிறப்பு . 
 
சப்தகிரி காமெடி , காமெடி ஹீரோயிசம் இரண்டிலும்  சிரிக்க வைக்கிறார் 
 
நடிப்பில் யாருமே பெரிதாக குறை வைக்கவில்லை . 
 
யாருங்க . அந்த குடிகார பிக்பாக்கெட் ? கொஞ்ச நேரமே வந்தாலும் நடிப்பில் அசத்தி விட்டார் . 
 
பழைய அமராவதி நகரம் அழிந்தே முன்னூறு ஆண்டுகள் இருக்கும் . எனில் அங்கே மண்ணில் புதைந்து இருக்கும் சிலை அதற்கும் முந்தையதாக இருக்கும் . எனில் நக்ஷத்ரா சிலையாக அங்கே இருந்தது அதற்கும் முன்னதாக இருக்கும் . எனவே  நக்ஷத்ரா சாபம் பெற்றது அதற்கும் முன்பாக இருக்கும் . 
 
அப்படியானால் அதற்கும் முன்பாகத்தான் நக்ஷத்ரா சொர்க்க லோகத்தில் நந்துவை பார்க்க முடிந்து இருக்கும் . எனவே அதற்கும் முன்பாகவே நந்து சாக வேண்டும் . ஆனால் நந்துவின் பெற்றோர் ஒரு சில வருடங்களாகத்தான் நந்துவை காணோம் என்று தேடுகிறார்கள் . அது எப்படி ?  சுமார் முன்னூறு வருட பூசணிக்காயை மூணு  நாலு வருட சோத்துக்குள் மறைத்தது எப்படி ? என்னதான் ஃபேண்டசி என்றாலும் ஒரு அளவு வேணாமா ?
எனினும் இதுவரை புராணப் படங்கள் பூலோகம் மற்றும் மேலோகம் மீது காட்டிய மதிப்பீடுகளை தலை கீழாக புரட்டிப் போட்டு சமூக அக்கறைப் படமாகவும் இருப்பதால் , இந்தக் குறை பெரிதாகத் தெரியாமல் , 
 
ஜகஜ்ஜோதியாக ஜொலிக்கிறாள் இந்த ஏஞ்சல் . 
 
மொத்தத்தில் விண்ணைத் தாண்டி வந்த ஏஞ்சல் … ரசிப்புக்குரிய தேவதை !
 
மகுடம் சூடும் கலைஞர்கள் 
————————————————-
பாகுபலி பழனி, செந்தூரப் பூவு கிருஷ்ணா ரெட்டி, பிரபாகர், குணா , நானி, 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *