அப்பா @ விமர்சனம்

IMG_9847

நாடோடிகள்  நிறுவனம் மற்றும் எட்செட்ரா எண்டர்டெயின்மென்ட் சார்பில் சமுத்திரக் கனி மற்றும்  மதியழகன் இருவரும் தயாரிக்க, 

சமுத்திரக்கனி , தம்பி ராமையா, வினோதினி, பிரீத்தி, நமோ நாராயணன்,  திலீபன் மற்றும்  காக்கா முட்டை விக்னேஷ், ராகவ், நசத், கேபிரியல்லா ,  யுவ  லக்ஷ்மி,  ஆகியோர் நடிக்க , 
 
சமுத்திரக்கனி எழுதி இயக்கி இருக்கும் படம் அப்பா . 
சமுதாயத்தின் மீது நம்பிக்கையும் அன்பும் வைத்து அதற்கேற்றபடியும் , தனிப்பட்ட வாழ்க்கையும் சிறப்பாக இருக்கும்படியும் வாழ  ஆசைப்படுபவ்ர்  தயாளன் (சமுத்திரக்கனி)  
உயர்ந்த முறையில்  தனது அடுத்த தலைமுறையை உருவாக்கி வளர்க்க ஆசைப்படுகிறார்  தயாளன் 
‘மனைவிக்கு நடப்பது சுகப்பிரசவமாக இருக்க வேண்டும் , பிறக்கும் பிள்ளை அதன் குழந்தைப் பருவத்துக்கான எந்த சந்தோஷத்தையும் இழக்கக் கூடாது ;
 IMG_6912
மனப்பாடம் செய்து ஒப்பிக்காமல் புரிந்து படிக்கும் வாய்ப்பைத் தருகிற பள்ளியில் படிக்க வேண்டும் ; பள்ளிப் படிப்புக்கு அப்பாற்பட்டும் கலை மற்றும் விளையாட்டுத் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் ;
 சமுதாயத்தை தன்னம்பிக்கையோடு  எதிர்கொள்ள வேண்டும் . பிரச்னைகளை  தானாக சமாளிக்கும் ஆற்றல் பெற வேண்டும் –என்பவையே அவரது லட்சியங்கள் . 
ஆனால் அவரது மனைவி மலர் (பிரீத்தி) முற்றிலும் தலைகீழ் . 
 வலிக்கு பயந்து சிசேரியன் பிரசவம்,  இரண்டரை வயதிலேயே ஆங்கிலப்பள்ளி, மனப்பாடம் செய்து ஒப்பித்து முதல் மார்க் வாங்கும் மாணவனாக தன் பிள்ளை வர  வேண்டும் ‘ 
இதை வைத்து நாலு பேருக்கும் முன்னால் நாம் கவுரவமாக நடந்து கொள்ள வேண்டும்.. இவையே அவளது பிடிவாதங்கள் 
பக்கத்து வீட்டில் வசிக்கும் சிங்கப் பெருமாளை  (தம்பி ராமையா)  ஒப்பிடும்போது ,  மலர் எல்லாம் சாதாரணம் .
appa-9
சிங்க பெருமாளின் மனைவி  ராணி (வினோதினி) கர்ப்பம் ஆன உடனேயே …
‘பிறக்கும் குழந்தை தமிழ் நாட்டின் பெரிய பள்ளியில் படித்து பத்தாம் வகுப்பு  பனிரெண்டாம் வகுப்பில் மாநிலத்தில் முதலிடம் பிடித்து, இந்தியாவின் பிரபல கல்லூரியில் மருத்துவம் படித்து , 
அமெரிக்காவில் மருத்துவ மேல் படிப்பு படித்து, வாஷிங்டனில்  மருத்துவமனை கட்டி வாழவேண்டும்’ – என்று முப்பததைந்தாண்டுத் திட்டம் போடுகிறார் அவர் . . மனைவி ராணியோ புருஷனுக்கு அடங்கிய மனைவி .
இன்னொரு மனிதர் (நமோ நாராயணன்)  எங்கே போனாலும் இருக்கிற இடம் தெரியாமல் இருந்து வாழ்த்து விட்டுப் போவதே நல்லது என்ற எண்ணம் உள்ளவர் . அவரது மனைவி ஒரு வாயில்லாப் பூச்சி .
மலர் — தயாளன்  தம்பதிக்கு ஓர்  ஆண்  குழந்தை பிறக்க,  அடம் பிடித்து , ரகளை செய்து , தன்னையே சித்திரவதை செய்து  கொண்டாவது தான்  நினைதததை சாதிக்க மலர் விரும்ப, 
பிரச்னை வெடித்து மலர் தன் அப்பா வீட்டுக்குப் போய் விடுகிறாள் . 
appa-7
அவர்களுக்குப் பிறக்கும் குழந்தை வெற்றீஸ்வரனை (காக்கா முட்டை விக்னேஷ்), தானே  தனி  மனிதனாக வளர்க்கும் தயாளன் , அரசுப்  பள்ளியில் படிக்க வைத்து,
தனித் திறமைகளை வளர்த்து நீச்சல் வீரனாக்கி, சமுதாயத்தை  எதிர்கொள்ளும் சுய தன்மையை தந்து  உருவாக்குகிறார் 
சக மாணவி சபீரா பானுவை (கேபிரியல்லா ) எதிர்பாலினமாக பார்க்காமல் நல்ல தோழியாக பார்க்கக் கற்றுத் தருகிறார் 
சிங்க பெருமாள் தனக்கு பிறந்த மகன் சக்கரவர்த்தியை (ராகவ்), ” படி… படி..”  என்று புத்தகமும் கையுமாக வாழ வைக்கிறார் 
இதற்கிடையில் சக மாணவி நீல நந்தினி  (யுவ லக்ஷ்மி) மீது ராகவுக்கு  வரும் எதிர்பாலின  உணர்வை, சிங்க பெருமாள்  பெரிதுபடுத்தி கலாட்டா செய்து ,
appa-6
நீல நந்தினியின் குடும்பத்தையே அசிங்கப்படுத்துகிறார். பத்தாவது வகுப்பில் ராகவ் மாநில அளவில் முதலிடம் பெறுகிறான் . 
பனிரெண்டாம் வகுப்பில் அவன் மீண்டும்  முதலிடம் பெறுவதற்காக, , மிக கடுமையான சட்ட திட்டங்களோடு 24 மணி நேரமும் புத்தகப் படிப்பிலேயே மாணவனைத் திணிக்கும்  ஒரு உறைவிடப் பள்ளியில் அவனை சேர்க்கிறார் . 
இருக்கிற இடம் தெரியாமல் வாழும் மனிதருக்கு பிறந்த மகன்  மயில்வாகனம்  (நசத்) .
,உடல் வளர்ச்சிக் குறைபாடு காரணமாக ,  சொந்த சகோதரி, பள்ளி ஆசிரியர்   மற்றும்   சகமாணவர்களால் புறக்கணிக்கப்பட்டு…… இருக்கிற இடம் தெரியாத சூழலுக்குள் போகிறான்  மயில்வாகனம் 
மனைவி இல்லாத நிலையிலும்  தயாளன்  ஒரு  நல்ல அப்பாவாக வாழ்ந்து,  தன்  மகன் வெற்றீஸ்வரனை,  கின்னஸ் சாதனை படைக்கும் நீச்சல் வீரனாக உருவாக்கும்  அதே நேரம் …
 மற்ற மாணவர்களுக்கும் , உணர்வால்  ஓர் அப்பாவாக  மாறி , அவர்களின்  முன்னேற்றத்துக்கும் உதவுகிறார் . 
Work_12_02
மயில்வாகனத்துக்கு  இருக்கும் கவிதை எழுதும் ஆற்றலை  வெளிக் கொண்டு வந்து , அவன் கவிதைகளை புத்தகமாகப் போட்டு ,
பல பெரிய கவிஞர்களின் பாராட்டுக்கும் ஆளாக்குகிறார் . அவனை தன்னம்பிக்கையுள்ள நபராக மாற்றுகிறார் 
நீல நந்தினிக்குள் இருக்கும் மீடியா ஆர்வத்துக்கு ஆதரவு கொடுத்து , அவளை தொலைக்காட்சித் துறைக்குள் செலுத்துகிறார் .
இப்படி பலருக்கும் உதவும் அவரால் ,சக்கரவர்த்திக்கு மட்டும் உதவ முடியவில்லை . .காரணம் அவனை பெற்ற அப்பா சிங்க பெருமாளின் கண்மூடித்தமான நடவடிக்கைகள் . .
அதனால் மேற்சொன்ன அப்பாக்கள் மற்றும் பிள்ளைகளுக்கு  என்ன நடந்தது என்பதே இந்த அப்பா . 
சபாஷ் சமுத்திரக் கனி ! தேவையான சமயத்தில் தேவையான வகையில் தேவையான ஒரு படம் 
IMG_7737_B
கல்வி , தொழில் , வாழ்க்கை குறித்த ஒரு தெளிவு இருந்த நமது மண்ணில் , வெள்ளைக்காரன் வந்த போது, ஆங்கிலம்  கற்றுக் கொண்டு அவன் பேசுவதை புரிந்து கொண்டு ,
அவன்  சொல்வதை செய்வதே கல்வி என்று மாறியது . 
அப்போது கூட  நிலைமை அவ்வளவு மோசமாகவில்லை . ஆனால் கல்வி,  வியாபாரம் என்று ஆனபிறகு , மனப்பாடம் செய்து மதிப்பெண்ணுக்கு வாந்தி எடுக்கும் அஜீரண நோயாளிகளாக மாணவர்கள் மாறினர்.  . 
அதன்  விளைவாக எது வாழ்வு என்று புரியாத — மதிப்பெண் எடுப்பதைத தவிர எதையுமே தெரிந்து கொள்ளாத– நூற்றுக்கு ரெண்டு மார்க் குறைந்தால்  குற்றவாளியாக நிறுத்தப்படுகிற–
பெயில் ஆனால் தற்கொலை செய்து கொள்கிற – ஒரு மாணவ மற்றும் இளைஞர் சமுதாயம்  உருவாகி இருப்பதையும்,
appa 1
அதனால் தன்னம்பிக்கை இல்லாத – பொது நலம் பாராத சக மனிதனை நேசிக்காத  ஒரு சமூகம் உருவாகி இருப்பதையும் , 
இதில் வியாபார நோக்கக் கல்வி நிறுவனங்கள் , மடமை  மற்றும்  பேராசை  , நிறைந்த பெற்றோரின் பங்கு ஆகியவற்றையும் அதிர அதிரச்  சொல்கிறார் சமுத்திரக் கனி . 
“இந்த உலகத்தில் நல்ல வார்த்தை சொல்லவும் நம்பிக்கை கொடுக்கவும்தான் யாருமே இல்லை” என்ற துளி வசனத்தில் இருந்து, படம் முழுக்க …
 எடுத்துக் கொண்ட  ஒவ்வொரு விசயத்தையும் தெளிவான வார்த்தைகளால் வசன வாள்களால்  வீசி விளக்குகிறார் கனி .
தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு கொடுக்கப்படும் புராஜக்ட்  ஒர்க்கை  மாணவனே செய்து கொண்டு  போகும்போது,
IMG_4525
அந்த சுய முயற்சியை ஊக்குவிக்காமல் செய்நேர்த்தியின் பெயரால் ஆசிரியர்களே குறை சொல்வதும் , 
கடையில் வாங்கிக் கொண்டு போய் மாணவன் கொடுப்பதை , அது அவன் செய்தது இல்லை என்பது தெரிந்தும் வெரிகுட் போடும் கோமாளித்தனத்தையும்  கண்டிக்கும் காட்சி ஒரு தனி ‘சாட்டை ‘
சக மாணவியோடு இயல்பாக பேசி  எப்படி நல்ல தோழியாக பார்க்க வேண்டும் என்பதை சொல்லி
“அது நடக்காத போதுதான் மனசுல சேரும் அழுக்கு அதிகமாகி வன்மம் வரும். அவ முகத்தில ஆசிட் அடிக்கத் தோணும் ” என்று சொல்லும் காட்சியில் கைதட்டலில் தியேட்டர் அதிர்ந்தது; அதிரும் !
அரசுப் பள்ளிக்கு போகும் தன் மகனை நாட்டு சேவலாக பார்க்கும் தயாளன் , தனியார் பள்ளி  மாணவர்களை பிராய்லர் கோழிக்கு ஒப்பிடுவது நாசுக்கு மற்றும் .. சுக்கு ! 
IMG_2602
அறிஞர் அண்ணா எழுதிய தழும்புகள்  புத்தகத்தை சரியான இடத்தில் பயன்படுத்தி இருப்பது  கிளாஸ் .
வளர்ச்சி மாற்றுத் திறனாளி மயில்வாகனத்தின் கவிதைத் திறனை கண்டு பிடித்தும் வளர்த்தும் .. சாரி சாரி , உயர்த்தும் காட்சிகள் நிஜமாகவே கவிதை !
இரண்டாம் பாதியில் உயரக் குறைவு என்பது எல்லா இடத்திலும் குறை இல்லை . சில இடங்களில் அதுவே பலம் என்று காட்டுவது சமுத்திரக் கனியின் திரைக்கதை  திறமைக்கு உதாரணம் .!  அபாரம் சகோதரா ! 
இப்படி ஒரு ஆக்க பூர்வமான படத்தில் கூடுதல் போனசாக படம்  முழுக்க தெறிக்கும் நகைச்சுவை வசனங்கள் , ஆச்சர்ய சந்தோசம் .
அந்த ஏரியாவை சமுத்திரக்கனியோடு சேர்ந்து மொத்தமாகக் குத்தகை எடுக்கிறார் மயில்வாகனமாக நடித்து இருக்கும் சனத் . 
Image_002
இதில் , ‘பரிசம் போட்டப்ப என்ன சொன்னாங்க .. ” விவகாரமும் அந்த ஆணிடம் வாடி போடி என்று பேசும் தம்பி ராமையா ,
அவனது மனைவியிடம் “டேய்.. தம்பி… இவ  கூட  எப்படிடா குடும்பம் நடத்துற?” என்ற ரீதியில் கலாய்ப்பதும்…
நினைத்து நினைத்து சிரிக்க வைக்கிறது . சூப்பர் ! சூப்பர் !! 
ஆண் பெண் பள்ளி நட்பை மிக நுட்பமாக கையாளும் சமுத்திரக்கனியின் திரைக்கதை , இரண்டாம் பகுதியில் பரபரப்பு, விறுவிறுப்பு, அதிர்ச்சி, நெகிழ்ச்சி எல்லாம் கொடுத்து  விஸ்வரூபம் எடுக்கிறது 
இசைஞானி இளையராஜாவின்  இசையில் பாடல்களுக்கு வேலை குறைவு என்றாலும் பின்னணி இசை காட்சிகளின் உணர்வாக்கத்துக்கு உறுதுணையாக இருக்கிறது . 
IMG_6335
கடைசி கால் மணி நேரம் வசனம் என்பது சில வார்த்தைகளே . மொத்த விசயத்தையும் காட்சிகளோடு சேர்ந்து இசையே பேசி விடுகிறது . 
ரிச்சர்டு எம் நாதனின் ஒளிப்பதிவு காட்சியின் தன்மைக்கு ஏற்ப ‘ரிச்’ !
 ஒரு நம்பிக்கையூட்டும் அப்பாவை நடிப்பில் கொண்டு வருகிறார் சமுத்திரக்கனி . தம்பி ராமையா வழக்கம் போலவே நடிப்பில் பின்னிப் பெடல் எடுக்கிறார் .
வசன வெளிப்பாடு , முக பாவனை வெளிப்பாடு  இரண்டும் பிரம்மாதம் . நடிப்பு  ராட்சஷன்! 
மனசாட்சி உள்ள டாக்டராக கவுரவத் தோற்றத்தில் எம் .சசிகுமார். (நண்பேன்டா !)
கணவனை சரி செய்ய  முடியாத மனைவியாக வினோதினி  பாந்தமான நடிப்பு . .பிரீத்தியின் கேரக்டர் , நடிப்பு இரண்டும் எரிச்சலூட்டினாலும் படத்துக்கு அதுதானே தேவை 
DSC_6988
குழந்தைகள் எல்லோருமே மிக சிறப்பாக நடித்துள்ளனர் . எனினும் சனத் ஒரு படி மேல்.!  குறிப்பாக அப்படியே (மேலேயே) பார்க்காத , கொஞ்சம் இப்படியும் (கீழயும் ) பாரு . 
விக்னேஷ் இன்னும் பெரிய கக்கா  முட்டையாவே இருக்கிறான் . மாறணும். 
கவிஞன் மயில்வாகனததை பிரபல கவிஞர்கள் பாராட்டுவதை முழுக்க பாசிட்டிவ் ஆகவே கொண்டு போயிருக்கலாம் . அப்போது கூட அவன் , தனது உருவத்தை நினைத்து வருத்தப்படும் வசனம் சேம் சைடு கோல். 
அது என்ன ?  முக்கியக்  கதாபாத்திரங்கள் எல்லாம் , ஆண் பிள்ளைகளின் அப்பாக்களாகவே இருக்கிறார்கள்?
 படத்தின் முக்கிய பெண் குழந்தை கதாபாத்திரங்களின்  அப்பா ஓன்று  செட் புராப்பர்ட்டியாக இருக்கிறார் .அல்லது செத்தே  போயிருக்கிறார்?
பெண் குழந்தையை வளர்க்க , ஒரு தந்தை செய்யும் முயற்சிகளையும் ஒரு முக்கிய திரைக்கதைப் பாதையாக  வைத்து இருக்கலாம் . 
DSC_6068
அதே போல தனியார் பள்ளிகளின் குறைகளை மிக நியாயமாக– அவசியமாக — கண்டிக்கும் அதே நேரம்,
 வெற்றியை உருவாக்கிய அரசுப் பள்ளிக்கு . அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் கருத்தாக்கத்துக்கு இந்தப் படம் கொஞ்சம் பங்களிப்பு செய்து இருந்தால் படம் இன்னும் மேலும் கூட  ஒரு  படி உயர்ந்து இருக்கும் . 
ஆனாலும்  என்ன… 
கல்வி , தனி வாழ்வு, பொது வாழ்வு, இப்படி எல்லாவற்றிலும் பிள்ளைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்பதற்கு அற்புதமான விளக்க உரையாக வந்திருக்கிறது அப்பா . 
பெற்றோர் , பிள்ளைகள் சேர்ந்து இந்தப் படத்தைப் பார்த்து விட்டு , வீட்டுக்கு வந்து இந்தப் படத்தைப் பற்றி ஒன்றாக உட்கார்ந்து பேசினால் 
அதுவே அந்த குடும்பத்துக்கு பல நன்மைகளை துவங்கி வைக்கும் நாளாக இருக்கும் .
சொந்தப்படம் எடுக்கும் சூழலில் தனக்குள்ள செல்வாக்கை வைத்து,
IMG_5683_02
மீண்டும் சிங்காரி நாத்தனாவை கூப்பிட்டு சிங்கிள் டீயை ஆத்தி,  கோடு போட்ட கிளாசில் ஊற்றி   கல்லா கட்ட நினைக்காமல் 
சிங்கப் பாலை  தங்கக் கிண்ணத்தில் தருவது போன்ற ஒரு  படத்தை,  சமூக அக்கறைக் கனியாக கொடுத்துள்ளார் சமுத்திரக்கனி 
மொத்தத்தில் அப்பா  … தகப்பன்சாமி .
மகுடம் சூடும் கலைஞர்கள் 
———————————————–
சமுத்திரக்கனி , தம்பி ராமையா மற்றும் படத்தில் நடித்துள்ள சிறுவர் சிறுமியர் 
 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *