அறம் @ விமர்சனம்

கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் சார்பாக கோட்டப் பாடி ஜே ராஜேஷ் தயாரிக்க, 

நயன்தாரா, ராம்ஸ் , சுனு லக்ஷ்மி, ரமேஷ், விக்னேஷ், சிறுமி தன்ஷிகா , வேல ராம மூர்த்தி , ஜீவா ரவி, பழனி பட்டாளம் ஆகியோர் நடிப்பில், 
 
கோபி நைனார் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி இருக்கும் படம் அறம் .  பார்த்து செய்யலாமா  ? பேசுவோம் .
 
மக்களின் அபிமானம் பெற்ற ஒரு கலெக்டர் (நயன்தாரா ), தனது பணியில் அதிகார துஷ்பிரயோகம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, 
 
 விசாரணை அதிகாரி (கிட்டி)  முன்பு அமர்ந்து இருக்கிறார். அவர்களின் உரையாடலுக்கு இடையே ஃபிளாஷ்பேக் வரிசையாக திரைக்கதை விரிகிறது 
 
தென்னிந்தியாவில் உள்ள ராக்கெட் ஏவுதளமான ஸ்ரீஹரிகோட்டாவை ஒட்டிய ஆந்திர எல்லையில் உள்ள கடற்கரையோர தமிழக கிராமம் .
 
எங்கு பார்த்தாலும் தண்ணீர் இருக்கும் . உப்புத் தண்ணீர் . ஆனால் குடிக்க , குளிக்க , துவைக்க ஒருதுளி தண்ணீர் கூட இல்லாத வறண்ட நிலம் .
ஆனால் பாம்புகளுக்குப் பஞ்சம் இல்லாத வறள் புல்வெளிப் பிரதேசம் . நிலத்தடி நீர் ராட்சத இயந்திரங்களால் உறிஞ்சப் படுவதால் கடல் நீர் நிலத்துக்குள் புகுந்து நிலம் பாழாகி , அதனால் ஒரு  குடம் தண்ணீருக்கு  பல கிலோமீட்டர் நடந்தும் ,
இரு சக்கர வாகனத்திலும் போய்க் கொண்டு வர வேண்டிய நிலைமை பல காலமாக உள்ள நிலம் .
 
ஆனாலும் அங்கு வாழும மக்களும் கூட ராக்கெட் விண்ணில் ஏவப்ப்படும் ஒவ்வொரு முறையும் கைதட்டி சாக்லேட் கொடுத்து, 
 
கேக் வெட்டி இந்தியா வல்லரசாக ஆசைப் படுவார்கள் . பின்னே? இல்லன்னா தேச விரோதி அல்லவா ?
 
அங்கே வாழும்  ஒருகுடும்பம் . விளையாட்டில் திறமை இருந்தும் பொருளாதார சூழல் காரணமாக அதை தொடர முடியாமல் பின்னர் கல்யாணம் குடும்பம் என்று செட்டில் ஆகி ,
 
பெயிண்டிங் உள்ளிட்ட வேலைகளைப் பார்த்து குடும்பத்தைக் காக்கும் புலேந்திரன் (ராம்ஸ்) .
 
மனைவி சுமதி  (சுனு லக்ஷ்மி) இரண்டு மகன்கள் , மற்றும் மகள் சிறுமி தன்ஷிகா (தன்ஷிகா) . சுமதிக்கு ஓர் அண்ணன் (விக்னேஷ்) . 
 
ஒரு நிலையில் அந்தப் பகுதி மக்கள் குடிதண்ணீர் கேட்டு சாலை மறியல் செய்கின்றனர் . அந்த வழியில் வரும் கலெக்டர்  மக்களிடம் பேசுகிறார் . 
 
”உங்களுக்கு தண்ணீர் கிடைக்கும் வரை நான் தண்ணீர் குடிக்க மாட்டேன்”  என்று சொல்லும் கலெக்டர் ,  சட்ட விரோதமாக குடிநீரைப் பிடித்து, 
 
பெரும் பணக்கார நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் லாரிகளைச் சிறைபிடித்து ,
 
அந்த தண்ணீரை , போராடும் அந்த கிராம மக்களுக்கு தருகிறார் . 
 
“சட்டவிரோதமான தண்ணீர் லாரிகளை சிறை பிடித்தது சரி . ஆனால் அதை மக்களுக்கு குடிக்கக் கொடுத்தது ஏன் ?
 
அந்த அதிகாரத்தை உங்களுக்கு கொடுத்தது யாரு ?” என்று கலெக்டரை கேட்கிறார்……
 ஆளும் வர்க்கத்தின் அரசு எந்திரத்தின்  நிர்வாகப் பற்சக்கரத்தின் ,
 
கோரமான கூர்மையின் பிரதிநிதியான  விசாரணை அதிகாரி . இதுதான் படம் சொல்லும் முக்கியமான அநியாயமான குணாதிசய முரண் . 
 
ஆனால் முக்கியக் கதை இது இல்லை . 
 
வறண்ட முள்ளுக் காட்டில் சுமதி முள்ளுவெட்டப் போக , சிறுமி தன்ஷிகா அம்மா  கூடவே போகிறாள் . பெரிய பாம்புகள் சரவ சாதரணமாக முள்ளுச் செடியில் லேசாக கீறி ,
 
அலாக்காக சட்டையை உரித்து முட்செடியில் தொங்க விட்டுப் போயிருக்கும் அந்த காட்டில்தான் ஒரு பெரிய விபரீத நிகழ்வு !
 
அந்த பகுதி கவுன்சிலர்  தோண்டிய ஆழ்குழாய்க் கிணறு துளை ஒன்றை , தண்ணீர் வராத நிலையில் அப்படியே திறந்து போட்டு விட்டுப் போயிருக்க ,
 
அதன் உள்ளே விழுந்து உயிருக்குப் போராடுகிறாள் சிறுமி . 
 
விஷயம் அறிந்து கலெக்டர் அங்கே விரைகிறார் . தனது கட்டுப்பாட்டின் கீழே உள்ள அத்தனை அரசு துறைகளையும் முடுக்கி விடுகிறார் . ஆனால் நடப்பது ?
 
பரமாரிப்பு இல்லாத தீயணைப்பு வண்டி வழியிலேயே பழுதடைகிறது . அதற்கு பின்னால் உள்ள ஆம்புலன்ஸ் வண்டி, 
 
சரியான சாலை வசதி இல்லாத காரணத்தால் நகர முடியாமல் நிற்கிறது . 
 
தாசில்தார் , வருவாய்த் துறை அதிகாரி , கிராம நிர்வாக அலுவலர் எல்லோரும் உடனடி உருப்படி செயல் பாட்டுக்கு பயனில்லாதவர்களாக இருக்கிறார்கள். 
 
எம் எல் ஏ வும் (வேல ராம மூர்த்தி) மந்திரியும் ( டி . சிவா) ‘குழந்தை செத்தாலும் பரவாயில்லை .
 
எப்படியாவது பிரச்னை பெரிதாகாமல் பார்த்து கவுன்சிலருக்கு பிரச்னை வராமல்  காப்பாற்றவே முயல்கிறார்கள் .
 
கவுன்சிலரை கைது செய்ய முயலும் கலெக்டரைக்கண்டிக்கிறார்கள் . 
 
ஆழ்குழாய்க் கிணற்றில்  விழுந்த குழந்தையை பாதுகாப்பாகக் காப்பாற்றுவதற்கான எந்த உருப்படியான உபகரணமும் நம்மிடம் இல்லை என்ற உண்மை உறைக்கிறது. 
 
புலேந்திரனும் சுமதியும் நெருப்பில் விழுந்த புழுவாய் பதறி கதறி அலறி சிதறித் துடிக்கிறார்கள். உறவுக் கூட்டம் , நட்புக் கூட்டம் கண்ணீரும் கோபமுமாய் வெடிக்கிறது .
 
மனிதாபிமானத்தையும் அன்பையும் நேசத்தையும் மட்டுமே வளமான செழிப்பான பசுமையான செல்வமாய்க்கொண்டு வறண்ட பூமியில், 
 
வறுமையின் பிடியில் உலர்ந்து சருகாகிக் கொண்டு இருக்கும் உழைக்கும் வர்க்க மனிதக் கூட்டமும்  நெக்குருகி நெடிதுயிர்க்கிறது . 
 
அதற்கென ஒரு கருவியை கண்டு பிடித்த தமிழக இளைஞர் ஒருவரின் கண்டுபிடிப்பை அரசு அலட்சியமாக புறக்கணித்து முடக்கி வைத்திருக்கும் அநியாயமும் தெரிய வருகிறது 
 
ஆதிகாலம் தொட்டே செய்யப் படும் முறையில் குழநதையின் கையில் கயிறு கட்டி — கையே உடைந்தாலும் பரவாயில்லை ;
 
உயிர் காத்தால் போதும் என்று –  மேலே தூக்கும் முறையில் கயிறு உள்ளே இறக்கப் படுகிறது. 
 
அதையும் ஓர் தீயணைப்பு அதிகாரி, விரலில் கயிறு இறுக்கும்படி கட்டித் தூக்க, பாதி தூரம்  மேலே வந்த குழந்தை ,
 
கயிறு உருவி, மீண்டும் கீழே விழுந்து இன்னும் ஆழத்துக்குள் போகிறது .
 
ஆழ்துளைக்குப் பக்கத்தில் பெரிய பள்ளம்  தோண்டி பக்கவாட்டில் துளையிட்டுப் போய் குழந்தையைக் காப்பாற்ற வந்த பேரிடர் மீட்புப் படையின் முயற்சி ,
 
நிலம் விரிசல் அடைந்து பிளப்பதால் பெரும் விபரீதத்தை கொண்டு வருகிறது . 
 
கொஞ்ச நேரத்தில் எல்லோரும் அங்கே இருந்து வெளியே வராவிட்டால் எல்லோருமே மண்ணுக்குள் புதையும் நிலை . 
 
தன்ஷிகாவின் பெற்றோர் நொறுங்கிப் போகின்றனர் . 
 
குழந்தையை மீட்டே தீருவேன் என்று களம் இறங்கிய கலெக்டர் என்ன செய்தார் ? எதனால் இந்த விசாரணை ? அதன் விளைவு என்ன ? என்பதே அறம்.
 
தமிழ் சினிமாவின் மகுடத்தில் தங்க இறகாக வந்துள்ள படம் இது . 
 
மண்ணின் மக்களுக்கான  பிரதிநிதியாக வெளிப்படும் படைப்பாளியே நிஜமான படைப்பாளி .
 
அந்த வகையில் சற்றும் பாசாங்கு இல்லாத நிஜ படைப்பாளியாக ஜொலிக்கிறார் இயக்குனர் கோபி நைனார் 
 
இவர் முன்பு சொன்னபடி , ஏழாம் அறிவு , கத்தி, மெட்ராஸ் போன்ற படங்களின் கதைகள் இவரது கதைகளாக இருக்கலாம்
 
–என்ற நம்பிக்கையை மேலும் அதிகப் படுத்தும் படம் அறம் . 
 
பெரும்பாலான மனிதர்களை பாதிக்கும் குடி நீர்ப் பிரச்னையை ஆரம்பமாக கொண்டு படத்தை ஆரம்பித்து படம் பார்க்கும் ரசிகனை திரைக்குள் இழுக்கிறார் .
 
அதன் பின்னர் பாதிக்கப் படாத பலரும் செய்தியாகவோ அல்லது ஒரு உச்சுக் கொட்டுதலோடோ கடந்து போய் விடுகிற —
 
ஆனால் பக்கத்தில் இருந்து பார்ப்போருக்கு பல்லாண்டு சோகமாகவும் , பாதிப்புக்கு ஆளாவோருக்கு பிறவி கடந்து பின் தொடரும் சோகமாகவும் உள்ள, 
 
ஆழ்குழாய்க் கிணற்றில் குழந்தை விழும் பொதுப் பிரச்னையை ஒவ்வொரு தனி மனிதனின் பிரச்னையாகவும் உணர வைக்கிறார் .
 
இந்த இடத்தில் கோபி நாயனாரின் உத்தித் திறன் ஜொலிக்கிறது .
 
 
அதே நேரம் அந்த விபரீதம் உருவாவதற்கு அரசியல்வாதிகள் காரணமாக இருக்கும் அக்கிரமத்தையும்  அப்படி உருவாகும் பிரச்னையை தீர்த்து வைக்க வக்கில்லாத, 
 
அரசு எந்திரத்தின்  கையாலாகாத்தனத்தையும் கம்பீரமாகச் சொல்வதில் கோபி நைனாரின் படைப்பாண்மை பிரகாசிக்கிறது . 
 

அதை விருப்பு வெறுப்பின்றி நாடு நிலையில் நின்று சொல்லும் இடத்தில் அவரது பெருந்தன்மை பட்டொளி வீசுகிறது .ஆழ்குழாய்க் கிணறு ஆபத்தை சொல்லும் கதையின் களத்தை பொருத்தமாகவும் கருத்தாழ ரீதியாகவும் ராக்கெட் ஏவும் இடத்தில் கொண்டு வைத்தாரே ….

 அங்கே தெரிகிறது அவரது  தேர்ந்த தர்க்க ரீதியான சிந்தனை அறிவு 
 
என்னதான் புலேந்திரன் – சுமதியின் மகன் நீச்சல் திறமை உள்ள பையன் என்றாலும் அவன் குளிப்பதையும் நீந்துவதையும் இவ்வளவு நேரம் காட்ட வேண்டுமா)
 
(சுமதி வேறு மகனின் நீச்சல் திறமை பற்றிப் பேசிக் கொண்டே இருக்கிறாள் ) என்ற கேள்வி ஆரம்பத்தில் எழுகிறது .
 
ஆனால் அந்த நீளத்தின் அவசியத்தை கிளைமாக்சில் கொண்டு வந்து இணைக்கும் போது ஒரு தேர்ந்த பிலிம் மேக்கராகவும் அட்டகாசமாக வெளிப்படுகிறார் .கோபி நைனார் . 
 
                                                                                                                    கோபி நைனார்

போடுகிறோம் அகலமான மொத்தமான சிவப்புக் கம்பளம் . வருக கோபி நைனார் ! தமிழ் சினிமாவுக்கு நீங்கள் அவசியத் தேவை .

 உங்களுக்கு வேலை அதிகம் இருக்கிறது என்று அன்புக் கட்டளையிட்டு  வரவேற்கிறோம் . 
 
விளையாட்டு வீரனாக முடியாத வலி தனக்குள் இருந்தாலும் தன் மகனின் நீச்சல் திறன் தெரிந்தாலும் ஒரு வேளை வாய்ப்புகள் பிசகி, 
 
அவனும் தன்னைப் போல பெயிண்டர் வேலை செய்து கஷ்டப்படக் கூடாது என்பதற்காக ‘ஒழுங்கா படிச்சு வேலைக்குப் போ’கச் சொல்லும் புலேந்திரன் … 
 
முள்ளங்காட்டில் முள் வெட்டும்போது ஏலச் சீட்டு  எடுக்க ஸ்பீக்கர் செல்போனில் போட்டி போடும் தோழியிடம்,
 
தன் தேவையை உரிமையான கோபத்தோடு சொல்லி விட்டுக் கொடுக்கச் சொல்லும் சுமதி .. 
–என்று படம் முழுக்க பச்சைப் பசேல் என படர்ந்து கிடக்கிறது கருமையிலும் மனம் செம்மையான மக்களின் வாழ்வியல் !
புலேந்திரன் பெயின்ட் அடிக்கப் போகும் இடத்தை ஏதோ ஒரு கட்டிடமாகக் கூட காட்டி இருக்கலாம் .
 
ஆனால் வீட்டு மனைகள் விளைநிலம் ஆகும் இடத்தை அதற்குப் பயன்படுத்தி அதன் மூலம் விவசாயத்தின் அழிவையும் சொல்லும் விதம் அபாரம் . 
 
ஒரு படம் ஓடும் நேரத்தின் ஒவ்வொரு நொடியையும்  பயனுள்ள வகையில் பயன்படுத்துவது எப்படி என்பதற்கு உதாரணம் . 
 
குழந்தை தன்சிகாவை தேடிப் போகும் சுமதி தண்ணீர் தாகத்தில் மயங்கி விழப் போகிறாரோ என்பதே,
 
பெரும் பதைபதைப்பாக இருக்கும் சூழலில் அங்கு இருந்து மெயின் கதைக்கு படத்தை திருப்பும் அந்த , செய் நேர்த்தியை என்ன சொல்லி வியக்க !
 
இப்படி கதையும் திரைக்கதையும் இயக்கமும் பிரம்மாதமாக இருக்கிறது என்றால் அதற்கு இணையாக, 
 
சீறி எழுந்து சிலம்பம் ஆடுகிறது… தமிழ் சினிமாவில் கொஞ்ச நாளாகவே கோமா நிலைக்குப் போயிருந்த, வசனம் !
 
என்றைக்கு  பாட்டிலில் அடைக்கப்பட்டு, தண்ணீர் வியாபாரப் பொருள் ஆனதோ அன்றே நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டு நிலம் வறண்டது ; கடல்புரங்கள் எல்லாம் உப்பு நீர் ஆனது
 
— என்பதை உணர்த்தும் “தண்ணீர்ப் பஞ்சத்துக்கு பின்னாடி பெரிய அரசியல் பொருளாதார சதி இருக்கு …” என்ற வசனத்தின் ஆழம் … 
 
“இங்க பச்சையா தெரியற இலை கூட கையில் எடுத்துக் கசக்குனா வறண்டு போய் பொலபொலன்னு உதிரும் ” என்ற வசனத்துக்குப் பின்னால் உள்ள தீவிரம் , 
 
“எங்களுக்கு நல்லது பண்ணு தாயி .. நாங்க கும்பிடுற ஏழு கன்னிமார்ல உன்னையும் சேர்த்து வச்சு கும்பிடுறோம் ” என்ற வசனம் சொல்லும் மண்ணின் அடையாளம் மற்றும் நெகிழ்வு 
 
“பல ஆயிரம் கோடி செலவு பண்ணி ராக்கெட் விடுற நம்மாள ஆழ்குழாய்க் கிணற்றுல விழுந்த குழந்தையை காப்பாற்ற, 
 
சில ஆயிரம் ரூபாய்ல ஒரு கருவி செய்ய முடியல இல்ல ?”  என்ற கேள்வியின் தீவிரம் , 
 
“உங்க கிட்ட கயிறைத் தவிர எதுவுமே இல்லியா ?” என்ற கேள்வியின் அலறல் .
 
”பிரச்னை தீர அதிகாரிகள் கிட்ட வர்ற மக்கள் , அதிகாரத்தை மட்டும் ஓட்டு மூலமா அரசியல்வாதிங்க கிட்ட கொடுத்துடறாங்க “என்ற வசனத்தில் உரைக்கும் யதார்த்தம் …. 
 
”டெல்லியில் ஒரு நிர்பயாவுக்கு நடந்த கொடுமைக்கு நாடே பொங்குச்சு . ஆனா நம்ம கிராமங்கள்ல பலருக்கும் நடக்கும் அநியாயங்கள் வெளியே தெரிவதே இல்ல.
 
ஒரு அநியாயம் பொது கவனத்துக்கு வரணும்னா அது எங்க நடக்குது என்பதும ஒரு முக்கிய விசயமா இருக்கு . ” என்ற வசனத்தில் உள்ள அவலம் …. 
 
பாராட்ட வார்த்தைகளே இல்லை . அருமை கோபி நைனார் !
 
கலெக்டருக்கு மதிவதனி , பெயிண்டருக்கு புலேந்திரன் போன்ற பெயர்களின் மூலம் வெளிப்படுத்தி இருக்கும் இன உணர்வுக்குப் போற்றுதல்கள் !
 
நினைத்தால் அஜித் விஜய்யுடன் ஜோடி போட்டு கோடிக்கணக்காக சம்பாதிக்க முடியும் என்றபோதும் , இப்படி ஒரு படம் உருவாக காரணமாக இருந்து, 
 
அட்டகாசமாக கம்பீரமாக நடித்துள்ள நயன்தாரா  ஓங்கி உயர்ந்து நிற்கிறார் .  பெண் கலெக்டர் என்ற கதாபாத்திரத்துக்கும், 
 
தன் பொருத்தமான நடிப்பால் பெருமை சேர்த்து இருக்கிறார் .
 
கம்பீரமும் நம்பிக்கையாக செயல்பட்டு கடைசியில் கண்ணீரில் கரையும்  விதம், அர்த்தமுள்ள வசனங்களை உணர்ந்து உச்சரித்து இருக்கும் விதம் ….
 
அசத்தி இருக்கிறார் நயன்தாரா . பல ஹீரோக்களுக்கு கூட இல்லாத ஹீரோயிசம் ! வாழ்த்துகள் .
 
நயன்தாராவுக்கு இணையான இன்னொரு ஆச்சர்யம் புலேந்திரனாக நடித்துள்ள ராம்ஸ் !
 
இதுவரை பல படங்களில் உருட்டு விழியும் கர கர குரலுமாக வீறாப்பான வில்லத்தனம் பண்ணிக் கொண்டிருந்த ராம்ஸ், 
 
இந்த படத்தில் ஒரே உந்தலில் பல காத தூரம் தாவி உயர்ந்து இருக்கிறார் .  
 
தோற்றம் , நடை உடை பாவனை , பிள்ளையின்  திறமை அறிந்தும் விருப்பத்தை நிறைவேற்ற முடியாத வேதனையில்  தன்னைத் தானே நொந்து கொள்வது ,
 
பாசத்தைக் கூட கோபத்தின் வழியே கொண்டாடுவது , மனைவி சமைக்கும் மீன் வறுவலை சாப்பிடப் போகிற உற்சாகத்தில் பிள்ளைகளோடு  கட்டி உருள்வது ,
                                                                                                                                                   ராம்ஸ்

குழந்தை குழியில் விழுந்தது முதல் கொண்டு அடுத்து நடக்கும் நிகழ்வுகளில் சுக்கல் சுக்கலாவது …

 — என்று  அந்த கேரக்டராகவே வாழ்ந்து இருக்கிறார் . வெல்டன் ராம்ஸ் . கோல்டன் வெல்டன்! 
 
அவருக்கு ஈடு கொடுத்து பிரம்மாதப்படுத்தி இருக்கிறார் சுமதியாக வரும் சுனு லக்ஷ்மி . ராம்ஸ் க்கு சொன்ன பல வார்த்தைகள் இவருக்கும் பொருந்தும்.
 
ஆழ்துளையில் விழுந்த குழந்தையாக நடித்திருக்கும் தன்ஷிகா.. அந்த மேக்கப் , பொசிஷன் என்று மிகக் கஷ்டமான சூழலிலும், 
 
இயக்குனர் சொன்ன விஷயத்தை அப்படியே உள்வாங்கி  நடித்து அசத்தி இருக்கும்  அந்தக் குழந்தை வியக்க வைக்கிறாள் . 
 
அவளது அண்ணனாக வரும் ரமேஷ் , கதையின் இரண்டாம் பாகத்தில் ஒரு முக்கியக் காட்சியில் நடித்து இருக்கும் விதம், 
 
நாம் பார்ப்பது சினிமா அல்ல என்ற உணர்வை ஏற்படுத்துகிறது . 
 
வானில் பறக்கும் பறவைக் கூட்டத்தின் நிழலை மண்ணில் காட்டி  விழிகளை விரிய வைக்கிறது  ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவு.
 
ஈர்ப்பான பாடல் இசை  ,  உணர்வுக்கு மதிப்புக் கூட்டல் செய்யும்  பின்னணி இசை என்று பெரும்  பலம் கொடுத்து இருக்கிறார் ஜிப்ரான் 
 
 லால்குடி இளையராஜாவின் கலை இயக்கம் அபாரம் . 
 
திரைக்கதையிலேயே சுயமான தொகுப்பு இருக்கிறது என்பது காட்சி அமைப்பிலேயே தெரிகிறது .
 
பேசவே மலைப்பான சம்பவத்தை படமாக ஆக்கி இருப்பதில் ஆக்ஷன் இயக்குநர் பீட்டர் ஹெயினின் பங்களிப்பு முக்கியமான ஒன்று .
 
ராஜுவின் ஒப்பனை (குறிப்பாக தன்ஷிகா ) ரவியின் உடைத் தேர்வு  (குறிப்பாக ராம்ஸ் , நயன்தாரா ) இரண்டும் அருமை . 
 
ஒரு விமர்சனத்தால் இந்தப் படத்தின் சிறப்பை முழுமையாக சொல்லி விடமுடியாது
 
பார்த்தால் மட்டுமே இந்தப் படத்தை முழுமையாக உணர முடியும் . 
ஒரே வாக்கியத்தில் சொல்ல வேண்டுமானால் ஒவ்வொருவரும் குடும்பத்தோடு பார்க்க வேண்டிய படம் இது .
 
அது அந்தக் குடும்பத்துக்கே — நம்ம நிர்வாக சிஸ்டத்தைப் புரிந்து கொள்ள– பயனுள்ள விஷயம் . 
 
மொத்தத்தில் ….
அறம் .. சமூக அக்கறை மறம். !
 
மகுடம் சூடும் கலைஞர்கள் 
——————————————-
கோபி நைனார், நயன்தாரா , ராம்ஸ் , சுனு லட்சுமி , தன்ஷிகா, ரமேஷ், ஓம் பிரகாஷ், ஜிப்ரான், லால்குடி இளையராஜா, பீட்டர் ஹெயின் , ராஜு, ரவி 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *