news & gallery : 70 ஆம் ஆண்டில் ஏவி எம் நிறுவனம்

avm

2014 அக்டோபர் 14 …இன்றைய– இந்த–  தினத்தில் எழுபதாம் ஆண்டுக்குள் நுழைகிறது பாரம்பரியம் மிக்க ஏவிஎம் புரடக்ஷன்ஸ் நிறுவனம். இந்த அறுபத்தொன்பது ஆண்டு வரலாற்றுப் பயணத்தை திரும்பிப் பார்க்கும் விதமாக அவர்கள் தயாரித்த பல படங்களின் புகைப்படங்கள் உங்களுக்காக அணிவகுக்கின்றன .

புகைப்படங்களுக்கு கீழே ஏ வி எம் நிறுவனத்தின் சிறப்புகள் பற்றிய கட்டுரையும் இருக்கிறது

7

Picture 1 of 65

ஏ வி எம் நிறுவனத்தின்  நிறுவனரான திரு ஏ வி மெய்யப்பன் 1934 ஆம் ஆண்டு முதலே திரைப்படத் துறையில் இருந்தாலும் இன்றைய சாந்தோம் பகுதி மற்றும் மைலாப்பூரில் 60, தெற்குத் தெரு என்ற முகவரியில் அவர் ஏ வி எம் நிறுவனத்தை  துவங்கியது 1945 ஆண்டு அக்டோபர் 14 ஆம் தேதிதான்.

சென்னையில் இயங்க ஆரம்பித்த ஏ வி எம் ஸ்டுடியோ மின்சாரத் தேவை காரணமாக காரைக்குடிக்கு மாற்றப்பட்டு அங்கே செயல்பட்டு,  நாம் இருவர் படத்தை தயாரித்து 14.01.1947- ல் வெளியிட்டார் மெய்யப்பன். இந்தப் படத்தில் முதன் முதலாக பாரதியார்  பாடல்கள் உரிமை பெற்று பயன்படுத்தியதோடு , பின்னர் அவற்றை நாட்டுடமையாகவும் ஆக்கினார். 1948 ஆண்டு வேதாள உலகத்தை வெளியிட்டு விட்டு ஸ்டுடியோவை சென்னைக்கு கொண்டு வந்தார்.

1948 ஆம் ஆண்டு முதல் இன்றுவரை சென்னை ஏ வி எம் ஸ்டுடியோ நிறுவனம் காலமாற்றங்களுக்கு ஏற்ப தன்னையும் புதுப்பித்துக் கொண்டு தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் , இந்தி, பெங்காலி , சிங்களம் ஆகிய மொழிகளில் 175 படங்களுக்கு மேல் தயாரித்து உள்ளது. இவற்றுள் நாம் இருவர் , வேதாள உலகம், சபாபதி , ஸ்ரீவள்ளி ,  வாழ்க்கை (3 மொழிகள்) ஆகிய படங்களை மெய்யப்பனே இயக்கி இருந்தார் . இவர் தயாரித்த பக்த பிரகலாதா படம் தமிழ், தெலுங்கு , கன்னடம்,  இந்தி ஆகிய மொழிகளில் எடுக்கப்பட்டது

ஏவி எம் நிறுவனம் தயாரித்த ஹம்பஞ்சி ஏக் டால்கே என்ற இந்திப்படம் 1957 ஆம் ஆண்டு சிறந்த குழந்தைகள் படத்துக்கான பிரதமரின் தங்க மெடலைப் பெற்று,  நேருவால் பாராட்டப்பட்டது . ராஜ் கபூர் நர்கீஸ் நடித்த சோரி சோரி சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை ஷங்கர் ஜெய்கிஷனுக்கு பெற்றுத் தந்தது.  அந்த நாள் , பாவ மன்னிப்பு, தெய்வப்பிறவி , சர்வர் சுந்தரம் ஆகிய படங்கள் சிறந்த படத்துக்கான மத்திய அரசின் சான்றிதழ் பெற்றன

அன்னை , நானும் ஒரு பெண் , குழந்தையும் தெய்வமும் , ராமு ஆகிய படங்கள் சிறந்த படங்களுக்கான மத்திய அரசின் வெள்ளிப்பதக்கம் பெற்றன. நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 125 ஆவது படமான உயர்ந்த மனிதனுக்கு தமிழக அரசின் சிறந்த படத்துக்கான விருது கிடைத்தது மட்டுமின்றி ”பால் போலவே..” பாடலுக்காக சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருதை பி.சுசீலாவுக்கு பெற்றுத் தந்தது.

சம்சாரம் அது மின்சாரம் சிறந்த ஜனரஞ்சக படத்துக்கான மத்திய அரசின் தங்கப் பதக்கம் பெற்றது.  மின்சாரக் கனவு படம் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை ஏ ஆர் ரகுமானுக்கும் , சிறந்த பின்னணிப் பாடகிக்கான விருதை சித்ராவுக்கும் சிறந்த  நடன இயக்குனருக்கான விருதை பிரபு தேவாவுக்கும் பெற்றுத் தந்தது.

இப்படி விருதுகள் ஒரு பக்கம் இருக்க… பல தொழில் நுட்ப விஷயங்களுக்கும் முன்னோடியாக இருந்துள்ளது ஏ வி எம் நிறுவனம்.

பின்னணி பாடுவது (play back singing), பின்னணிக் குரல் பேசுவது (dubbing) போன்றவற்றை இந்தியத் திரையுலகில் அறிமுகப்படுத்தியதும் இந்த நிறுவனம்தான் . 1937 ஆம் ஆண்டு ஏ வி எம் தயாரித்த  நந்தகுமார் படத்தில் பின்னணி பாடிய லலிதா வெங்கட் ராமன்தான் இந்தியாவின் முதல் பின்னணிப் பாடகி.  1938 கன்னடத்தில் இருந்து தமிழுக்கு மொழி மாற்றப்பட்ட ஹரிச்சந்திரா படமே இந்தியாவின் முதல் டப்பிங் படம்.

நேஷனல் பிக்சர்ஸ் பெருமாள் முதலியாரோடு சேர்ந்து நடிகர் திலகம் சிவாஜி கணேசனை பராசக்தி படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகம் செய்தது ஏ வி எம் தான் .

சிவாஜி கணேசன் மட்டுமல்லாது எஸ் எஸ் ராஜேந்திரன் (பராசக்தி),  டி ஆர் மகாலிங்கம் (நந்தகுமார் — ஸ்ரீவள்ளி) கலைஞானி  கமல்ஹாசன் (களத்தூர் கண்ணம்மா) , வைஜயந்தி மாலா (வாழ்க்கை), சிவகுமார் (காக்கும் கரங்கள்), ஓர் இரவு (நாகேஸ்வரராவ்), வி.கே.ராமசாமி (பராசக்தி), விஜயகுமாரி மற்றும் ராஜ கோபால் (குலதெய்வம்) ஏ வி எம் ராஜன் , புஷ்பலதா , கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் (பேடர கண்ணப்பா) பண்டரி பாய்,  மைனாவதி முதலிய நடிக நடிகையரையும்…..

ஏ டி கிருஷ்ணசாமி, எம் வி ராமன், ப.நீலகண்டன் , கே .சங்கர் , திரு .பீம்சிங், ஏ.சி.திருலோகச்சந்தர், எஸ் பி முத்துராமன் , ராம.நாராயணன், ராஜ சேகர் போன்ற இயக்குனர்களையும் திரையுலகில் அறிமுகம் செய்து வைத்தது ஏ வி எம் நிறுவனமே . 

1980களில் சின்னத்திரை தொடர்கள் புகழ்  பெறத் துவங்கியபோது அதிலும் இறங்கிய ஏ வி எம் நிறுவனம்  தூர்தர்ஷனில் ஒரு மனிதனின் கதை, ஒரு பெண்ணின் கதை , சன் தொலைக் காட்சியில் சொந்தம்,  வாழ்க்கை, நம்பிக்கை , சொர்க்கம்,   நிம்மதி உங்கள் சாய்ஸ், மங்கையர் சாய்ஸ் ,  ஜெயா தொலைக்காட்சியில் மனதில் உறுதி வேண்டும் , ராஜ் தொலைக்காட்சியில் சவாலே சமாளி, கலைஞர் தொலைக்காட்சியில் வைர நெஞ்சம் , உறவுக்கு கை கொடுப்போம், மங்கையர் உலகம் , வைராக்கியம் ஆகிய தொடர்களை தந்தது . இப்போது மோகினி என்ற தொடர் சுமார் 1400 எபிசோடுகளை தாண்டி வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருகிறது.

ஓர் இரவு படத்தில் அறிஞர் அண்ணா, பரசாக்தியில் கலைஞர் கருணாநிதி, அன்பே வா படத்தில் எம் ஜிஆர் , மேஜர் சந்திரகாந்த், அநாதை ஆனந்தன் , எங்க மாமா ஆகிய  படங்களில் ஜெயலலிதா,  பூகைலாஸ் , ராமு ,சிட்டி செல்லுலு, சங்கம் , பக்தி மகிமா ஆகிய படங்களில் என் டி  ராமராவ்……  இப்படி ஐந்து முதல்வர்கள் பணியாற்றிய ஒரே சினிமா நிறுவனம் ஏ வி எம் நிறுவனம்தான்.

இந்தியில் ராஜ்கபூர், சுனில்தத் , அசோக்குமார், நர்கீஸ், மீனாகுமாரி,தர்மேந்திரா , ஜிதேந்திரா, தெலுங்கில் நாகேஸ்வரராவ் , கிருஷ்ணா, சிரஞ்சீவி ஆகியோர் நடித்த படங்களை தயாரித்த இந்த நிறுவனம் ரஜினிக்கு முரட்டுக்காளை முதல் சிவாஜி 3டி வரை , கமல்ஹாசனுக்கு சகலகலாவல்லவன் முதல் பேர் சொல்லும் பிள்ளை வரை பல படங்களை தொடர்ந்து தயாரித்ததோடு அஜீத்,  சூர்யா நடித்த படங்களையும் தயாரித்துள்ளது .

சினிமாவின் அடுத்த வாகனம் இணையம்தான் என்பதை உணர்ந்து இணையத்துக்கு என்றே, ‘இதுவும் கடந்து போகும்’ என்ற டெலிபிலிம் ஒன்றையும் எடுத்து வெளியிட்டது.

சிவாஜி அவரது மகன் பிரபு, சிவகுமார் அவரது மகன் சூர்யா , குமாரி ருக்மணி, அவரது மகள் லட்சுமி அவரது மகள் ஐஸ்வர்யா என்று தலைமுறைகளாகத் தொடரும் நடிகர்களை வைத்து படம் தயாரித்து இருக்கும் ஏ வி எம் நிறுவனத்தை உருவாக்கி வளர்த்த  ஏ வி மெய்யப்பனின்  தொண்டினை பாராட்டி மத்திய அரசு 2006 ஆம் ஆண்டு தபால்தலை வெளியிட்டது . தென்னிந்திய வர்த்தக சபை சிலை நிறுவியது.

ஏ வி எம் நிறுவனம் இன்று எழுபதாவது ஆண்டி அடியெடுத்து வைத்து, தனது கலைப் பயணத்தை நான்காவது தலைமுறையிலும் தொடர்கிறது .

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →