போகன் @ விமர்சனம்

bogan 3
பிரபு தேவா ஸ்டுடியோஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் டாக்டர் ஐசரி கணேஷ் மற்றும் பிரபுதேவா இருவரும் தயாரிக்க,

ஜெயம்ரவி, அரவிந்த் சாமி, ஹன்சிகா நடிப்பில் , ரோமியோ ஜூலியட் படத்தை இயக்கிய லக்ஷ்மன் கதை திரைக்கதை எழுதி இயக்கி இருக்கும் படம் போகன் . போகன் போகுமா சுவாரஸ்யமா? பார்க்கலாம்.

சுதந்திர இந்தியாவில் மன்னர் மானிய ஒழிப்பு உள்ளிட்ட சில காரணங்களால் ஏழ்மைக்கு வந்த ஓர் அரச பரம்பரையில் பிறந்து, வறுமையில் வாடுபவன்  ஆதித்யா (அரவிந்த் சுவாமி ).

பழனி மலைப் பகுதியில் அகழ்வாராய்ச்சியில் ஈடுபடும் ஒரு பேராசிரியரின் கீழ் பணியாற்றும் அவனுக்கு ஓர் அரிய பொக்கிஷம் கிடைக்கிறது .

boh 5

அதாவது பழனி முருகன் சிலையை சுமார் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நவ பாஷாணத்தில் உருவாக்கிய சித்தர் போகர் எழுதி வைத்த — 
உயிரோடு இருக்கும் மனிதனோடு ஆன்மாவையும் உடலையும் கூடு விட்டுக் கூடு பாய்ந்து மாற்றிக் கொள்ளும்  வித்தை பற்றிய குறிப்பு ஒன்று ஆதித்யா கையில் கிடைக்கிறது .

அதை வைத்து தன்னை பார்க்கும் எந்த ஒரு மனிதர் உடலிலும் தன் ஆன்மாவை செலுத்தும் ஆதித்யா , அதன் மூலம் பல்வேறு இடங்களில் பலநூறு கோடிகளை கொள்ளையடித்து, 

மது மாது வித வித போதை என்று சுக போக வாழ்க்கை வாழ்கிறான் .

bogan 9

ஆதித்யாவின் வித்தையில் மயங்கி  என்ன செய்கிறோம் என்பதே அறியாமல்  பணத்தை கொள்ளையடித்து ஆதித்யாவிடம் கொடுக்கும் அப்பாவிகள் கைது செய்யப்பட்டு தண்டனை அனுபவிக்கின்றனர் .

அசிஸ்டன்ட் கமிஷனர் விக்ரமுக்கு (ஜெயம் ரவி ) மகாலட்சுமியை (ஹன்சிகா ) பெண் பார்த்து பேசி முடித்த நிலையில் , விக்ரமின் தந்தையான பேங்க் மேனேஜர் (நரேன்)  ஆதித்யாவின் மூலம் இயக்கப்பட்டு ,

பலகோடி பணத்தை எடுத்து ஆதித்யாவின் காரில் வைக்கிறார் , என்ன செய்கிறோம் என்பது புரியாமலே ! கண்காணிப்புக் கேமரா மூலம் ஆதாரம் கிடைத்து அப்பா கைது செய்யப்பட, விக்ரம் திருமணம் தடைபடுகிறது .

ஆதித்யாவின் சக்தி அறியாமலே ஆதித்யாதான் குற்றவாளி என்பதை மட்டும் கண்டு பிடிக்கும்  விக்ரம்,  அவனிடம் குடி நண்பனாக நடித்து பணமும் கையுமாக கைது செய்கிறார் .

bogan 8

விசாரணையில் தன்னை அடிக்கும் ஒரு போலீஸ் அதிகாரியை (நாகேந்திர பிரசாத் ), இன்னொரு போலீஸ் அதிகாரியின் (ஜாமி) உடலுக்குள் நுழைந்து கமிஷனர் ஆபீசிலேயே வைத்து குத்திக் கொல்கிறான் ஆதித்யா .

ஏதோ ஒரு வகையில் எல்லாவற்றுக்கும் ஆதித்யாதான் காரணம் என்று அறியும் விக்ரம், ஆதித்யாவை அடிக்க,
ஒரு நிலையில் விக்ரம் உடலுக்குள்ளேயே ஆதித்யா புகுகிறான் .

ஆதித்யாவின் உடலோடு விக்ரம் ஜெயில் கைதியாக இருக்க,  விக்ரமின் உடலோடு அசிஸ்டன்ட் கமிஷனராக வெளியே வரும் ஆதித்யா ஆடிய ஆட்டம் என்ன ? அதன் முடிவு என்ன என்பதே போகன் .

ஏழாம் அறிவு படத்தில்  டாங்லீ மூலம் நாம் பார்த்த நோக்கு வர்மம் போன்ற விசயத்துக்கு , சித்தர் போகர் பெருமானை வைத்து ஒரு அட்டகாசமான புராண டச் கொடுத்து,

bogan 999
அதை சுக போகியான ஒருவனோடு சம்மந்தப்படுத்தி  போகன் என்று பெயரும் வைத்து,  வித்தியாசமான கதை கொடுத்த விதத்தில் கவர்கிறார் இயக்குனர் லக்ஷ்மன் .

ரோமியோ ஜூலியட் படத்தில் விஷுவல் ஜமீன்தாராக இருந்த லக்ஷமன்  இந்தப் படத்தில் விஷுவல் மன்னராக மாறி இருக்கிறார் .

காதல் , ஆக்ஷன், கிளாமர், சஸ்பென்ஸ், திரில் , என்று எல்லா விதத்தையும் அழகாக மிக்ஸ் செய்த விதத்திலும் கவர்கிறார் இயக்குனர் .  சின்னஞ்சிறு குறை கூட சொல்ல முடியாத அந்த முதல் பாதி ஆசம் அட்டகாசம் !

விக்ரமாக மிக சிறப்பாக நடித்துள்ளார் ஜெயம் ரவி. ஆதித்யாவின் ஆன்மா ஏறிய உடலாக அவரது நடை உடை பாவனையும் குரலில் கொண்டு வரும் அரவிந்த்சாமித்தனமும் வியப்பூட்டும் வியாபிப்பு . மாஸ் !

bogan 88

ஆதித்யா கேரக்டர் அரவிந்த சாமிக்கென்றே உருவானதா ? இல்லை அரவிந்த சாமி அந்தக் கேரக்டருக்கு என்றே பிறந்தாரா என்னும் அளவுக்கு அப்படி ஒரு மேட்ச் . கிளாஸ் !

இது இரண்டும் கூட  ஆச்சர்யம் இல்லை . ஆனால் மஹா கேரக்டரில் ஹன்சிகா கொடுத்து இருக்கும் அட்டகாசமான நடிப்பு எதிர்பாராத இன்பத் திகைப்பு . சபாஷ் !

ஜாமி, நாகேந்திர பிரசாத்  அக்ஷரா , நரேன் ஆல் ஈஸ் வெல்! ஆல் ஈஸ் வெல்!! (விக்ரமின் அம்மாவாக நடிப்பவர் தூர்தர்ஷன் டிரமா கணக்காக நடித்துக் குவிக்கிறாரே .. ஏன் ?)

சந்துருவின் வசனங்கள் சுருக்கமாகவும்  பொருத்தமாகவும் அழுத்தமாகவும் உள்ளன

bogan 99

பாடல்களின் மூலம் படத்துக்கு பெரும் பலம் சேர்த்துள்ளார் இமான் . வாராய், போகன் , டமாலு டுமீலு என்று எல்லா பாடல்களும் சிறப்பு என்றாலும்

படத்தின்  நாடித் துடிப்பாக விளங்குகிறது செந்தூரா பாடலும் அந்த மெட்டில் வரும் தீம் மியூசிக்கும் .

மெட்டு,  ஆர்க்கெஸ்ட்ரேஷன் , வரிகள், பாடிய விதம் , ஒளிப்பதிவு , இயக்கம் , படமாக்கப்பட்ட விதம் , ஹீரோ ஹீரோயின் நடிப்பு என்று ,

எல்லா வகையிலும் சிறப்பாக உள்ள செந்தூரா  நிஜமாகவே ஒரு கம்ப்ளீட் சாங் . சபாஷ் சபாஷ் !

ஆரம்பத்தில் இமானின் பின்னணி இசையில் ஓர் அலட்சியம் தெரிந்தாலும் போகப் போக , அசத்துகிறார் .

சவுந்தர்ராஜனின் ஒளிப்பதிவு  பார்வைக்குள் தேன் ஊற்றுகிறது .  அவ்வளவு அழகு .

bogan 6

மிக சிக்கலான இடங்களை ஷார்ப்பான படத் தொகுப்பு மூலம் இலகுவாக கொண்டு போகிறார் எடிட்டர் ஆண்டனி.

திலீப் சுப்பராயனின் சண்டைக் காட்சிகள் பிரம்மிக்க வைக்கின்றன .பொதுவாக மார்க்கெட் போன்ற பொது இடங்களில் நிறைய நபர்களோடு அமையும் சண்டைக் காட்சிகளில் சினிமாத்தனம் சுலபமாக வெளிப்படும் .

ஆனால் அப்படி இல்லாமல் மிக  சிறப்பாக அமைந்துள்ளது அந்த முதல் சண்டைக் காட்சி மற்றும்  படத்தின் அனைத்து ஆக்ஷன் காட்சிகளும் .

மிலனின் கலை இயக்கத்தில் அமைக்கப்பட்ட அரங்குகள்  கதாபாத்திரங்களின் வாழ்நிலையை சிறப்பாக உணர்த்துகின்றன

bok 3

பாடல் வரிகளில் தாமரையும் மதன் கார்க்கியும் மனம் கவர்கிறார்கள் .

டமாலு டுமீலு பாடலின் கடைசியில்  ராஜு சுந்தரத்தின் ‘இது எப்படி இருக்கு’ என்ற கேள்விக்கு அந்த நடனப் பெண்ணின் லேட் ரியாக்ஷன்  நடன இயக்குனரின் கிரியேட்டிவ் குறும்பு . ஹா ஹா ஹா !

ஒரு கொள்ளைக்காரன் திருவள்ளுவர் பற்றி சொல்கிற மாதிரியான வசனம் நியாயமா இயக்குனரே .?

அட்லீஸ்ட் அங்கே ஜெயம் ரவி ” உன்னை மாதிரி அயோக்கியன் எல்லாம் வள்ளுவர் பேரை சொல்லாதீங்க ‘ என்ற ரீதியில்  ஒரு சாதாரண கவுன்ட்டராவது கொடுக்க வேண்டாமா ?
ஆதித்யா உடம்பில் இருக்கும் விக்ரம், போலீஸ்  கமிஷனர் மற்றும் சக போலீஸ் அதிகாரியிடம் தன்னை நிரூபித்தது போலவே,  மகா லட்சுமியிடமும் தன்னை நிரூபிக்கலாமே .

bogan 5

அப்படி செய்யாமல் குண்டடி பட்டு வருவது ஏன் ?

போகர் , ஆன்மா , உடல் மாற்றம் என்று அமைந்த கதையின் நோக்கம் இரண்டாம் பாதியில்  ஹன்சிகாவை காப்பாற்றுவது மட்டும்தானா ?

ஒரு திரைக்கதையின் beam radius போகப் போக அதிகம் ஆவது கமர்ஷியல் படத்துக்கு முக்கியம் அல்லவா ?

விக்ரம் , ஆதித்யா உடல் மாற்ற கண்ணா மூச்சி ஏரியாவை கொஞ்சம் சுருக்கி ஒரு நிலையில் அதை சமூகத்தை நேரிடயாக பாதிக்கும் பரபரப்பான விஷயமாக கொண்டு போயிருக்கக் கூடாதா ?

கடைசியில் அறிவியல் அற்புதமான அந்த ஓலைச் சுவடியை விக்ரம் கடலில் போட்டு என்ன ஆகப் போகிறது ? 

bogan 9999

இப்படி சில கேள்விகள் இரண்டாம் பகுதியில் வந்தாலும்

வித்தியாசமான கதை, விழிகளை விரிய வைக்கும் படமாக்கல், முக்கிய நடிக நடிகையரின் அட்டகாசமான நடிப்பு , மயக்கும் பாடல்கள், அசத்தும் சண்டைக் காட்சிகள் இவற்றால்

பார்ப்பவரின் மனசுக்குள் கூடு விட்டுக் கூடு பாய்வான் இந்த போகன் !

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *