புத்தனின் சிரிப்பு @ விமர்சனம்

Buddhanin Sirippu Movie Stills (14)தி வைப்ரன்ட் மூவீஸ் சார்பில் வெங்கடேஷ் ராஜா வெளியிட, சக்காரியா புரடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் குமார் சக்காரியா தயாரித்து இரண்டாவது கதாநாயகனாகவும் நடிக்க…

அங்காடித் தெரு மகேஷ் , மித்ரா குரியன், சமுத்திரக் கனி ஆகியோர் நடிப்பில் விக்டர் டேவிட்சன் என்பவர் இயக்கி இருக்கும் படம் புத்தனின் சிரிப்பு . புன்சிரிப்பா? வாய்விட்டு சிரிக்கும் சிரிப்பா? பார்க்கலாம் .

அமைச்சர் ஒருவர் முக்கியப் பங்குதாரராக உள்ள ஒரு மல்டிநேஷனல் கம்பெனி மூலம்,  அந்த அமைச்சருக்கு கிடைத்த வருமானத்துக்கு அவர் 2000 கோடி ரூபாய் வருமான வரி கட்ட வேண்டி உள்ளது . அவ்வளவு கட்ட விரும்பாத அந்த அமைச்சர்,  இந்தியாவின் சீனியர் லாயர் ஒருவருக்கு 1000 கோடி ரூபாய் பணத்தைக் கொடுத்து, இன்னொரு ஆயிரம் கோடி கட்டத் தேவை இல்லாதபடி எல்லாவற்றையும் கரெக்ட் செய்து விடுகிறார் .

இந்த ஊழலைக் கண்டு  பிடித்த சி பி ஐ இதைக் கண்டு பிடித்து நிரூபிக்கும் பொறுப்பை சி பி ஐ அதிகாரி வெற்றிமாறனிடம் (சமுத்திரக் கனி) ஒப்படைக்கிறது.

Buddhanin Sirippu Movie Stills (7)

ஆர்கானிக் இயன்முறை விவசாயத்தின்படி காய்கறிகளை விளைவித்து மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று எண்ணும் பட்டதாரி கதிர் (மகேஷ்), அதற்காக லோன் கேட்டு,  வங்கி மேனேஜரிடம் நடையாய் நடக்கிறான். அவனது காதலி ( மித்ரா குரியன்) அவனுக்கு ஆதரவாக இருக்கிறாள் .

குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்க ஓர் எளிய முறையைக் கண்டு பிடித்த எஞ்சினியர் இளைஞன் அருண் (சுரேஷ் சக்காரியா ) அதற்கு அனுமதி கேட்டு சம்மந்தப்பட்ட அரசு அலுவலகங்களுக்கு நடையாய் நடக்கிறான் .

வெற்றி மாறன் உண்மைகளை கண்டு பிடித்தும் அது பற்றிய விவரங்கள் அமைச்சர் கைக்கே போய் விடுகிறது.

பணத்தை திருப்பிக் கட்ட மாட்டேன் என்று சொல்லியே லோன் வாங்கும் கோடீஸ்வரர்களுக்கு எல்லாம் கடனை அள்ளிக் கொடுக்கும்  வங்கிகள்,  விவசாயம் செய்ய விரும்பும் கதிருக்கு  லோன் தர மறுக்கிறது. 

Buddhanin Sirippu Movie Stills (20)
மல்டி நேஷனல் கம்பெனிகளுக்கு எந்த உத்திரவாதமும் கேட்காமல் கடனையும் நிலத்தையும் தடையில்லா மின்சாரத்தையும் சாலை வசதி உட்பட சகல வசதிகளையும் செய்து தரும் வங்கி,  விவசாயம் செய்ய ஆசைப்படும் மண்ணின் மைந்தனிடம்  சொத்து உத்தரவாதம் கேட்கிறது .

குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் புதிய முறைக்கு அனுமதி வழங்கினால், மேல் அதிகாரிகளுக்கு இப்போதைய வழக்கப்படி வந்து கொண்டிருக்கும் கமிஷன் போய் விடும் என்பதால்,  அருணின் திட்டம் மறுக்கப்படுகிறது .

அமைச்சரின் கைக்கூலிகள் சி பி ஐ ஆபீசிலேயே இருக்கும் நிலையில் தன் முயற்சியில் தோற்றுப் போன வெற்றிமாறன் பதவியை ராஜினாமா செய்து விட்டு தமிழ்நாட்டுக்கே வந்து விடுகிறார்.  வங்கி அதிகாரியை தட்டிக் கேட்ட கதிரை , கலாட்டாசெய்ததாக கூறி போலீசில் பிடித்து கொடுக்கிறார் வங்கி மேனேஜர். அவனை போலீசில் இருந்து மீட்டு சென்னைக்கு அழைத்து வருகிறார் வெற்றி மாறன்.

வெற்றி  மாறன் எதோ ஒரு நிறுவனத்தில் வேலைக்கு போகிறார் . கதிர் ஆட்டோ ஓட்டும் வேலை செய்கிறான் . எஞ்சினியர் அருண் சாலை ஓரத்தில் ஹெல்மெட் கர்சீப் கண்ணாடி விற்றுப் பிழைக்க ஆரம்பிக்கிறான் .

Buddhanin Sirippu Movie Stills (15)மூவர் மனதிலும் கனல் எரிய ,

குடித்து விட்டு வருபவர்களை பரிசோதனை செய்கிறோம் என்ற பெயரில் வருவோர் போவோரிடம் பணம் பிடுங்கும் ஒரு குடிகார இன்ஸ்பெக்டர் மற்றும் சில காவலர்கள் ஒரு நாள் ராத்திரி இந்த மூவரிடமும்  மாட்டிக் கொள்கிறார்கள் . அடுத்து என்ன நடந்தது என்பதே இந்தப் படம்.

”உன் சக்திக்கு மீறிய இடத்தில் நீதியை நிலை நாட்ட முடியாது போனாலும் முடிந்த இடத்திலாவது அதற்காகப் போராடு” என்கிறது இந்தப் படம் .

”28 ரூபாய் இருந்தாலே இந்தியாவில் ஒரு மனிதன் மூன்று வேளையும் சாப்பிட்டு விட்டு நிம்மதியாக வாழ முடியும்” என்று அடி முட்டாள்தனமாக பேசிய அறிவில்லா மூடனான– திட்டக் கமிஷன் தலைவர் — மாண்டேக் சிங் அலுவாலியாவை  படத்தில் சும்மா பிரித்து மேய்கிறார்கள் .

இந்தியாவில் லட்சக் கணக்கான மக்கள் உணவு உடை இருப்பிடமின்றி வாழ வழியின்றி கஷ்டப்பட , வறட்டு கவுரவத்திற்காக அண்டை நாடுகளுக்கு ஆயிரம் கோடி இரண்டாயிரம் கோடி என்று அள்ளிக் கொடுத்து அதிலும் கமிஷன் அடிக்கும் அரசியல் அதிகார வர்க்கத்தை அடி பின்னுகிறார்கள் படத்தில். .

Buddhanin Sirippu Movie Stills (11)

தாங்களும் பங்குதாரர்கள் ஆகி கோடி கோடியாக சம்பாதிப்பதற்காக மல்டி நேஷனல் கம்பெனிகளுக்கு அனுமதி தரும் அரசியல்வாதிகள் , அதனால் அழியும் உள்ளூர்த் தொழில்கள் , அதனால் அடிமை வேலைக்குப் போகும் நம் மண்ணின் அறிவாளிகள் , அதனால் இங்கு உருப்பட முடியாது என்று  வெளிநாட்டுக்கு போய் விடும் நம் ஊர் மூளைகள் …. அதனால் நாட்டின் முன்னேற்றம் குட்டிச் சுவராவது….

— என்று ஒரு சில அரசியல்வாதிகளின் சுய நலத்துக்காக நம் நாடே நாசமாகிக்  கொண்டிருப்பதை பேசும் படம் இது .

சமுத்திரக்கனி சம்மந்தப்பட்ட காட்சிகள் தெறிப்பாக இருக்கின்றன .

படத்தை நறுக்கென்று முடித்த விதத்தில் சற்றே தெரிகிறார் இயக்குனர் விக்டர் டேவிட்சன்.

Buddhanin Sirippu Movie Stills (17)

கதாநாயகியின் தந்தை பாத்திரத்தில் மாபெரும் நடிகர் செம்மீன் மதுவை பார்த்தபோது ஒரு சிலிர்ப்பு . எந்தா மது சேட்டன்…!   சுகந்தன்னே?

தலையில் எதோ நூறு  கிலோ மூட்டையை எப்போதும் தூக்கி வைத்துக் கொண்டு இருப்பது போல நொந்து போன நொய்யரிசியாகவே இருக்கிறார் மகேஷ் . ஆர்கானிக் விவசாய இளைஞனின் லட்சியக் கனவையும் துடிப்பையும்  ஒரு நொடி கூட அவரால் நடிப்பில் வெளிப்படுத்த முடியவில்லை .

சுரேஷ் சக்காரியா தமிழ்ப் படத்தில் மலையாளத்தில் பேசிக் கொல்லுகிறார் . ஒரு மலையாளப் படத்தில் ஒரு மலையாளக் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் தமிழ் வாசனையில் மலையாளம் பேசினா உங்க ஊருல ஒத்துக்குவாங்களா சக்கி?.

ஒரு நல்ல விஷயத்தை கதையாக எழுதலாம் . கட்டுரையாக எழுதலாம் . கவிதையாக எழுதலாம். தெருக் கூத்தாக , நாடகமாக , சினிமாவாக எப்படி வேண்டுமானலும் சொல்லலாம். ஆனால் நாம பயன்படுத்தும் மீடியாவை உணர்ந்து அதற்கேற்ப  சொல்லும்போது சிறப்பான பலன் கொடுக்கும் .அப்படி இல்லாதபோது , சொல்லப் படும் விஷயம் பாதிப்புக்கு ஆளாகி,  நல்ல கருத்து  சொன்னாலே ஆபத்து என்ற தவறான பிம்பம் ஏற்பட்டு விடும் .

Buddhanin Sirippu Movie Stills (6)இந்தப் படம் சொல்லும் விஷயங்கள் ஒவ்வொன்றும் மக்களுக்கு சொல்லப்பட வேண்டிய உண்மைகள் . தெரிய  வேண்டிய விவரங்கள்.

மொத்ததில் ….

புத்தனின் சிரிப்பு … அறிவார்ந்த,  உதட்டு நெளிப்பு .

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →