விஷால் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் விஷால் தயாரித்துக் கதாநாயகனாக நடிக்க, ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா, ரோபோ சங்கர், கே ஆர் விஜயா நடிப்பில் எம் எஸ் ஆனந்தன் எழுதி இயக்கி இருக்கும் படம் சக்ரா. சுழலுதா இல்லை சுழலில் தள்ளுதா ? பேசுவோம் .
நகரில் முதியவர்கள் மட்டும் வாழும் வசதியான வீடுகளைக் குறி வைத்து பணம் நகை என்று கோடிக் கணக்கில் கொள்ளையடிக்கிறது ஒரு கும்பல்.
வழக்கை விசாரிக்கிறார் பெண் போலீஸ் அதிகாரி காயத்ரி ( ஷ்ரத்தா ஸ்ரீநாத்).
கொள்ளையடிக்கப்பட்ட வீடுகளில், முன்னாள் அசோக சக்ரா விருது பெற்ற – மறைந்த ராணுவ வீரரின் குடும்பமும் ஒன்று .

வீட்டில் இருந்த வயதான மூதாட்டியை (கே ஆர் விஜயா) தாக்கிக் கொள்ளையடிக்கும் கும்பல் , மறைந்த ராணுவ வீரர் வாங்கிய அசோக சக்ரா விருதையும் கொள்ளையடித்துக் கொண்டு போகிறது .
பணம் நகை போனதை விட விருது போனதை அந்தக் குடும்பம் பெரும் இழப்பாகக் கருத, அதை மீட்க ராணுவத்தில் இருந்து வருகிறார் , பேரனும் இளம் ராணுவ வீரருமான சுபாஷ் சந்திர போஸ் ( விஷால்) .
அவரும் காயத்ரியும் எதிர்பாராமல் பிரேக் அப் ஆன ஒரு காதல் ஜோடி .
காயத்ரியோடு அவரும் சேர்ந்து குற்றவாளிகளைத் தேட ,

வெகு ஜனம் அறியாத பல வகைகளில் குற்றவாளிகள் எப்படி செயல்பட்டு வயதான பணக்காரர்களின் வீடுகளைக் கண்
டு பிடித்துக் கொள்ளையடிக்கிறார்கள் என்பதை பார்ப்போர் அதிரும்படியும் விழிப்புணர்வு ஏற்படும்படியும் சொல்லி இருக்கிறார் இயக்குனர் எம் எஸ் ஆனந்தன்.
ஆரம்பத்தில் கொஞ்சம் சுணங்கி அப்புறம் விறுவிறுப்பாகப் போகிற படம் இடைவேளையில் எதிர்பாராத திருப்பம் தருகிறது . மீண்டும் வேகம் எடுத்து கமர்ஷியல் கதகளியாக முடிகிறது .
ஆனால் இதை விட அபாரமாக இருக்கிறது இயக்குனரின் சமூக அரசியல் பார்வையும் சிறப்பான வசனங்களும் !

கோபப் பட வேண்டிய இடத்தில் கோபப் படாமல் தன்னை விட எளிய மனிதர்களின் மீது கோபப்படும் தனி மனித அல்ப மனோபாவம், தற்கால ஆளும் அரசியலின் சுயநலம், ஆன் லைனில் பொருட்களை வாங்கும் பழக்கத்தால் குற்றவாளிகளின் பார்வையில் சிக்கி ஆபத்துக்கு ஆளாவது உள்ளிட்ட பல விசயங்களை கருத்தான வசனங்களால் சொல்கிறார் எம் எஸ் ஆனந்தன். சபாஷ் .
உதாரணமாக ”இப்போ எல்லாம் இல்லீகல்தான் நியூ நார்மல் ஆயிடுச்சி ”என்ற வசனம் …!
ஜஸ்ட் டயல் போன்ற ஒரு நிறுவனத்தைப் பயன்படுத்துவதால் வரும் ஆபத்துகளை படம் சொல்லும்போது வியர்க்கிறது நமக்கு . அருமை

முதன் முதலில் அடி வாங்கும் முதியவரின் தோற்ற மாதிரியும் அவர் அடி வாங்கும் இடமும் இயக்குனரின் லகலக குறும்பு .
கேரக்டருக்கு மிகப் பொருத்தமாக சிறப்பாக நடித்தும் வழக்கம் போல் அதிரடியாக அடித்தும் உள்ளார் விஷால். சண்டையும் போடுகிற பெண் போலீஸ் கேரக்டரில் கவனம் கவர்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத் .
ஆனால் தனது அட்டகாசமான நடிப்பால் அசத்தி இருக்கிறார் ரெஜினா . கண்களை அகல விரித்து கூர்மையும் காட்டி ”பயந்துட்டியா…” என்கிறாரே.. அபாரம்.

கே ஆர் விஜயா பாந்தம்.
குடிகார அப்பா– கொடுமைக்கார சித்தி பிளாஷ்பேக்கும் சின்ன வயசு லீலாவாக நடித்திருக்கும் சிறுமியின் நடிப்பும் அடேங்கப்பா ரகம் !
சோதிக்கிறார் ரோபோ சங்கர்.
சிறப்பான ஒளிப்பதிவால் காட்சிகளுக்கு பலம் சேர்க்கிறார் பால சுப்பிரமணியெம் .
அசத்தலான பின்னணி இசையால் காட்சிகளுக்கு தரக் கூட்டல் செய்கிறார் யுவன் சங்கர் ராஜா .
சண்டைக் காட்சிகளில் அசத்துகிறார் அனல் அரசு ( அது என்ன ANL ARASU என்று டைட்டிலில் பெயர்? நியூமராலஜியா?)
சில இடங்களில் தறிகெட்டுப் போயிருக்கும் அதே நேரம், பெரும்பாலும் சிறப்பாக அமைந்திருக்கிறது ஒலித் தொகுப்பு.

டைட்டில் உத்தி அருமை .
முதியவர்கள் வீட்டில் கொள்ளைகள் நடப்பதையும் முதியவர்கள் போனில் பேசுவதையும் காவல்துறையில் அந்த போன்களை எதிர்கொள்வதையும் மீண்டும் மீண்டும் தொடர்ந்து ஆரம்பத்தில் பத்து நிமிடம் காட்டுகிறார்கள் . நீளம் குறைத்திருக்கக் கூடாதா நியாயமாரே?
அதிலும் ஒரு காவலருக்கு மலையாள வாசனையோடு பின்னணி குரல் கொடுத்திருக்கும் ஒருவர் கடுப்பேற்றுகிறார் மை லார்டு !
சின்ன வயசு லீலாவின் பிளாஷ் பேக் சொல்லும் சம்பவங்களுக்கும், பின்னால் வளர்ந்த பிறகு அவர் செய்யும் செயல்களுக்கும் என்ன சம்மந்தம்? ‘அது’க்கு எதுக்கு ‘இது’?

வளர்ந்த லீலாவுக்கு ஆரம்பத்தில் கொடுக்கப்பட்டு இருக்கும் பில்டப் இன்னும் தீவிரமான காட்சிகளை கேட்கிறது . ஆனால் படத்தில் அது போதவில்லை.
கடைசியில் அந்த கேரக்டரை ஹீரோயிசத்துக்காக நையாண்டி செய்யாமல் இன்னும் சீரியசாகக் கையாண்டு இருக்கலாம்.
இவற்றோடு திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் சிரத்தை எடுத்து இருந்தால் படம் இன்னும் சிறப்பாக வந்திருக்கும்.
சக்ரா… விர்ர்ரர்ர்ர்ர்.. !