எம் ஆர் பிக்சர்ஸ் சார்பில் எல். பத்மநாபா தயாரிக்க, பிரபு, ராகுல் விஜய், பிரியா வத்லாமணி , மதுபாலா நடிப்பில் ஹரி சந்தோஷ் இயக்கி இருக்கும் படம் .
புகழ்பெற்ற ஆடிட்டராக இருக்கும் தனது பால்ய கால நண்பனின் அலுவலகத்தில் பியூனாக இருக்கிறார் திருக் குமரன் (பிரபு). மனைவி (மதுபாலா) பிரசவ வலியோடு மருத்துவ மனையில் இருக்க , ஆண் குழந்தை பிறந்த செய்தி வந்த சந்தோஷத்தில் திருக்குமரன் செய்யும் ஒரு சிறு பிழைக்கு, கடுமையாக கண்டிக்கும் முதலாளி நண்பர் , திருக்குமரனை மட்டுமல்லாது பிறந்திருக்கும் குழந்தையையும் அவமானமாகப் பேச,
பிறந்திருக்கும் மகனை பெரிய ஆடிட்டராக்குவேன் என்று நண்பரிடம் சவால் விட்டு வெளியேறுகிறார் திருக்குமரன் .
ஆனால் வளர்ந்து படிக்கப் போகும் மகனோ கல்லூரியில் ஒழுங்காகப் படிக்காமல் நல்லா படிக்கும் மாணவனின் மார்க்கை தன் மார்க் என்று கூறி, பெற்றோரை ஏமாற்றுகிறான் . தவிர சக மாணவியை (பிரியா வத்லாமணி) காதலிக்கிறான் . அந்த காதலியோ, திருக்குமாரனின் ஆடிட்டர் நண்பரின் மகள் .
ஒரு நிலையில் மகன் ஏமாற்றுவது தெரிந்து பிரச்னை பெரிதாக , “படிச்சவனுக்கு தான் படிக்கிற கஷ்டம் தெரியும் . உன்னை மாதிரி படிக்காதவனுக்கு எப்படி தெரியும்?” என்று மகனே திருக்குமாரனை அவமானப்படுத்த ,
பொங்கி எழுகிறார் திருக் குமரன் . அவர் கல்லூரிக்கு போய் படிப்பது என்றும் மகன் வேலைக்கு போய் படிப்பது என்றும் முடிவாகிறது .
நடந்தது என்ன என்பதே இந்தப் படம் .
2017 ஆம் ஆண்டு கன்னடத்தில் இயக்கிய படத்தை அப்படியே தமிழுக்கு(ம் பிரபுவுக்கு பதிலாக ராஜேந்திர பிரசாத்தை வைத்து தெலுங்குக்கும்) கொண்டு வந்திருக்கிறார் ஹரி சந்தோஷ்.
படத்தின் கதை அபாரமானது . அற்புதமானது .
‘கண் மூடித்தனமாக படி படி என்று பிள்ளைகளை அழுத்துவதில் பலன் இல்லை . படித்துப் பார்த்தால்தான் தெரியும்’ என்ற உண்மையை பெற்றோர்களுக்கும் , ‘நம்மைப் படிக்க வைக்க பெற்றோர்கள் எங்கே எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறார்கள்’ என்பதை பிள்ளைகளும் உணர வேண்டும் என்ற அவசியமான விஷயத்தை சொல்லும் படம் . அதற்காக சபாஷ் சபாஷ் சபாஷ்.!
பிரச்னை என்னவென்றால் முதல் பாதி ரொம்ப நாடகத்தனமாக சுவாரசியம் இல்லாமல் பயணிக்கிறது .
பால்யகால நண்பனை ஒரு பிரபல ஆடிட்டர் பியூனாகத்தான் வைத்துக் கொள்வாரா என்ன ?
பிரபுவைத் தவிர பலரும் செயற்கையான நடிப்பு . மதுபாலா ஒரு மாதிரி உதறி உதறிப் பேசுகிறார் நடிக்கிறார் . மிக செயற்கையான நடிப்பு.
ஆனால் இரண்டாம் பகுதியில் பிரபு காலேஜ் போக ஆரம்பித்த பிறகு படம் சுவாரஸ்யமாகிறது . நெகிழ்வான, அர்த்தமுள்ள காட்சிகள், வசனங்கள் வருகின்றன .
அப்போதும் படத்தை தாங்கிப் பிடிப்பது பிரபுதான் .
குரு பிரசாத் ராயின் ஒளிப்பதிவு பரவாயில்லை . குதுப் ஈ கிருபாவின் இசையும் கேரி, பவன் ஆகியோரின் படத் தொகுப்பும் இன்னும் சிறப்பாக இருந்திருக்க வேண்டும் .
இன்னும் சிறப்பான முன்பகுதி , நல்ல காட்சிகள் , இயற்கையான நடிப்பு எல்லாம் இருந்திருந்தால் காலேஜ் குமார் ‘டிஸ்டிங்ஷன்’ வாங்கி இருப்பான் .