தர்மதுரை @ விமர்சனம்

dharma 1

ஸ்டுடியோ 9 புரடக்ஷன் சார்பில் ஆர் கே சுரேஷ் தயாரிக்க , விஜய் சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ் , சிருஷ்டி டாங்கே நடிப்பில் 

சீனு ராமசாமி இயக்கி  இருக்கும் படம் தர்மதுரை . படம் பாண்டித் துரையா? ஜாக்சன் துரையா? பார்க்கலாம் . 
ஆண்டிப்பட்டி பிரதேசம் அடர் பசுமைக் காட்டுக்குள்  பச்சைச் செடியில் பூத்த வெள்ளை ரோசா மாதிரி ஒரு கிராமம். அங்கே வட்டிக்குப் பணம் கொடுத்து பிழைக்கும் சில சகோதரர்கள் . (அருள்தாஸ் மற்றும் இருவர்)  
அதே வீட்டில் எப்போதும் தண்ணி அடித்துக் கொண்டு ஆங்கிலத்தில் பேசிக் கொண்டு திரியும் ஒரு சகோதரன் தர்மதுரை (விஜய் சேதுபதி ). மற்றும் இந்தப் பிள்ளைகளின் அம்மா (ராதிகா) 
 சகோதரர்கள் செய்யும் தவறுகளை ஊரறியச் சொல்வது முதற் கொண்டு,  தர்மதுரை  செய்யும் சில விஷயங்களால் அவனை  கொல்லவும்  துணிகிறார்கள்.
dharma 2
பதறிப் போகும் அம்மா அவனை தப்பிக்க வைக்க , அப்போது அறியாமல் தர்மதுரை செய்யும் ஒரு செயலால் சகோதரர்களுக்கு பெரும் சிக்கல் ஏற்படுகிறது . 
தர்மதுரை ஆங்கில மருத்துவப் பட்டப் படிப்பு  படித்தவன் என்பதும் ஆனது கல்லூரி வாழ்க்கையும் விரிக்கப்படுகிறது . 
அங்கே  அவனை  காதலிக்கும் ஒரு சக மாணவி (சிருஷ்டி டாங்கே) , அவனோடு ஆழ்ந்த அன்பு  பாராட்டும் இன்னொரு  மாணவி (தமன்னா) ,
அற்புதமான ஆசிரியர்  காமராஜ் (ராஜேஷ்) ஆகியோருடனான அவனது கல்லூரி வாழ்வு  விரிகிறது. 
வீட்டில் இருந்து  தப்பிப் போகும் தர்மதுரை அந்த  தோழிகளை தேடுகிறான் . அன்பான தோழியைக் கண்டடைகிறான் . 
dharma 7
தர்மதுரை  இப்படி  குடிகாரனாகப் போனதற்கான காரணம் அவளிடம் சொல்லும்போது நம்மையும் நெகிழ வைக்கிறது . 
இந்த  நிலையில் தர்மதுரையை சகோதரர்கள் கொலை வெறியோடு துரத்த , அப்புறம் என்ன நடந்தது என்பதே இந்தப் படம் 
– என்று சொல்லி முடிக்க, 
இது வழக்கமான படம் அல்ல . 
வாழ்வியல் சித்திரமாக படத்தை செதுக்கி இருக்கிறார் சீனு ராமசாமி . 
இவ்வளவு  நடிக நடிகையர் இருந்தும் இதை ஒரு இயக்குனரின் படமாக ஆக்கியது பாராட்டுக்குரிய  விஷயம் மட்டுமே . 
dharma 4
ஆனால் அதை அவ்வளவு இயல்பான கவிதையாக படைத்த வகையில் போற்றுதலுக்குரிய படமாகிறது தர்மதுரை . 
ஒரு வார்த்தை கூட வசனம் இல்லாமல் காடு வனங்களைக் கடந்து போகும் ஒரு ஏரியல் ஷாட் மூலம்,  அந்த கிராமத்தின் அந்தகாரத்தை விளக்கும் இடத்திலேயே சீனு ராம ராஜ்ஜியம் துவங்கி விடுகிறது . 
மாட்டுடன் பேசும் மனுஷிகள், பின்னணியில் ஒலிக்கும் பழைய பாடல்கள் , மரண வீட்டு சூழல்கள், கிராமிய மனிதர்களின்  குணாம்சங்கள் , ஏழ்மையின் தன்மானம் , 
அன்பில் சரணாகதி , வலியின் வீரம், இழப்பின் ஆழம் , அமைதியின் உரத்த விளைவு.  மருத்துவப் படிப்பின் மேன்மை, கிராமத்தில் அவர்கள் சேவை செய்ய வேண்டியதன் அவசியம் , தாய்நாட்டுப் பற்று  
இவற்றை எல்லாம் பிரேம்களில் அடக்கிய  விதம் ….
dharma 5
இந்தப் படத்தின் காட்சிகளை சொல்லி விளக்கினால் கூட படம் பார்க்கும்போது ஒரு பரவச அனுபவத்தை இழக்கக் கூடும் .  எனவே  இப்படி மறைமுகமாக சொல்லித்தான் மனதாரப் பாராட்ட முடிகிறது . 
அப்படி ஒரு அற்புத அனுபவம் இந்தப் படம் .  
தர்மதுரையாக  விஜய் சேதுபதி உண்டு உயிர்த்து உற்றறிந்து வாழ்ந்து இருக்கிறார் . ஒவ்வொரு காட்சியிலும் பண்பட்ட நடிப்பு . 
இதுவரை கிடைக்காத ஒரு மிக சிறப்பான கேரக்டரில் ஆனந்த ஆச்சர்யம் தருகிறார் தமன்னா..
அட இந்த சிருஷ்டி டாங்கே … தர்மதுரையின் அறையை தேடிப் போய்  காதல் சொல்லும் காட்சியில் கலக்கி விட்டார் . 
முப்பது ஓவர்  வரை   வெளியே உட்கார்ந்து இருந்து விட்டு அப்புறம் இறங்கி , அட்டகாசமான சிக்சர்கள்  அடித்து வெற்றியை ஈட்டித்தரும் தோனி போல
dharma 3
ஃ பிளாஷ் பேக்கில் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் , காமக்கா பட்டி அன்புச் செல்வியாக சிறப்பான நடிப்பால் நெகிழ்வில் நெக்குருக  வைக்கிறார் 
சீட்டில் உட்கார்ந்து படம் பார்க்கும் நம்மை  இரண்டாவது நிமிடத்திலேயே திரைக்குள் இழுத்து,  கதை மாந்தர்களோடு உலவவிடும் காவிய அனுபவம் தருகிறது சுகுமாரின் ஒளிப்பதிவு . 
மிக அழுத்தமான நிதானமான நகரும் திரைக்கதையை தனது அதி நேர்த்தியான படத் தொகுப்பு மூலம் சுவாரஸ்யபடுத்திக் கொடுத்துள்ளார் , படத் தொகுப்பாளர் காசி விஸ்வநாதன் 
யுவன் ஷங்கர் ராஜாவின் இசை ஆகா ஓகோ இல்லை என்றாலும்,  ஆண்டிப்பட்டி பாட்டு இதயத்துக்குள் சிம்மாசனம் போட்டு உட்காருகிறது . 
dharma 8
”நம்ம நெலமை தெரிஞ்சு(ம்)  தேடி வந்த (நல்ல) மாப்பிள்ளை . (கடைசிவரைக்கும்)  நல்லா  பாத்துக்க ” என்று சொல்லப்படும்போது, 
 சட்டென்று ஐஸ்வர்யா உடைந்து அழுவார் பாருங்கள்.. அங்கே காட்சி அமைப்பில் சிகரம் தொடுகிறார் சீனு ராமசாமி . 
காமராஜரின் மதிய உணவுத் திட்டத்தால் படித்து மருத்துவப் பேராசிரியர் ஆன முனியாண்டி (ராஜேஷ் ) தன் பெயரையே காமராஜ் என்று மாற்றிக் கொள்ளும் விஷயம்  நெகிழ்வின் ஆழம் 
(பின்னர் கண் தெரியாமல் போன காமராஜ் தர்மதுரையிடம் வந்து, அவன்  யாரென்று தெரியாமல் “நீங்க எங்க படிச்சீங்க?’ தம்பி என்று கேட்கும்போது,
 தர்மதுரை ” காமராஜ் யுனிவர்சிட்டி என்று சொன்னால் எப்படி இருந்திருக்கும் சீனு ராமசாமி ?)
dharma 9
மழைக் காட்சியின் பின்னணியில் தூறல் விழுவது தெரிய  , முன்புறத் தரை மழை நீர் தெறிப்பு இல்லாமல் தெரிகிறதே . கவனித்து இருக்கலாம் . 
ஒரு முடிவை நோக்கி படம் போவதற்காக சில காவுகள் வாங்கப்பட்டு இருப்பது போல உணர்வு வருவதை தவிர்த்து இருக்கலாம் . 
இந்தப் படத்தை பத்து நிமிஷம் முன்பும் முடித்து இருக்கலாம் . இன்னும் பத்து நிமிஷம் தொடரவும் செய்யலாம் போலிருக்கிறது என்ற அளவுக்கு படம் முடிவதை தவிர்த்து இருக்கலாம் 
கதை என்று முழுமையாக இல்லாத  நிலையிலும் நல்ல திரைக்கதை மற்றும் இயக்கத்தால் நல்ல நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் துணையோடு  
மனித உணர்வுகளுக்கு மகுடம் சூட்டும் படத்தை கொடுத்து இருக்கிறார் சீனு ராமசாமி . 
dharma 6
ஒரு நோக்குள்ள கதையை எடுத்துக் கொண்டு அதை இப்படி ஒரு காவியமாக கொடுத்து இருந்தால் படம் இன்னும் கூட சிகரம் தொட்டு இருக்கும். 
தர்மதுரை …. மகுடம் சூடுகிறான் . 
மகுடம் சூடும் கலைஞர்கள்
————————————-
சீனு ராமசாமி, விஜய் சேதுபதி, சுகுமார்,  காசி விஸ்வநாதன் , ஐஸ்வர்யா ராஜேஷ் 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *