‘ஏகாந்தம்’ இசை வெளியீட்டு விழாவில் மகாத்மா காந்தி, நம்மாழ்வார் மற்றும் கே. பாக்யராஜ்

அன்னை (த் வரவேண்டும்) தமிழ் சினிமாஸ் (திரைப்படக் கூடம் என்று வைத்து இருக்கலாமே ) சார்பில் ஆர்செல் ஆறுமுகம் (ஏர்செல் அல்ல) தயாரித்து இயக்க , 

சென் டிவி ஆறுமுகம், பால்ராஜ் அந்தோணி, ஜெயல்சீலன், மூர்த்தி, அரசு மணி, சென் டி வி மகேந்திரன்,  ஜோதி ஆனந்தன் , ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாகத் தோள்கொடுக்க, 
 
மாபெரும்-  பழம்பெரும் நாடக ஆசிரியர் யதார்த்தம் பொன்னுசாமிப் பிள்ளையின் பேரனும் , நாளைய இயக்குனர்களில் சிறந்த நடிகருக்கான விருது பெற்றவரும் ,
 
இருக்கு ஆனா இல்ல மற்றும் என்னாச்சு ஆகிய படங்களில் நாயகனாக நடித்தவருமான விவாந்த் நாயகனாக நடிக்க, 
 
ஆரண்யம் , கதிர் போன்ற படங்களின் கதாநாயகியும் பல மலையாளப் படங்களில் நடித்தவருமான நீரஜா நாயகியாக நடிக்க , 
 
தென்னவன்,  அனுபமா ஆகியோரின் உடன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ஏகாந்தம் . 
 
 வீணை பாலச்சந்தரின் பேரனும் ரேணிகுண்டா படத்தின் மூலம் இசை அமைப்பாளராகி விக்ரம் பிரபு நடிக்கும் அசுர குரு படம் வரை ,
 
பதினைந்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்திருக்கும் கணேஷ் ராகவேந்திராவின் இசையில் 
 

தேசிய விருது பெற்ற தெலுங்குப் படமான அந்தப்புரம் , தமிழில் நரசிம்மா , தவசி, சகாப்தம் உட்பட ,
 
நாற்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த எஸ்கா பூபதியின் ஒளிப்பதிவில் உருவாகி இருக்கும் படம் இது 
 
இயக்குனர் ஆர்செல் ஆறுமுகம் சென்னை வானொலி நிலையம், ஜெயா டிவி , கலைஞர் டி வி , எஸ் எஸ் மியூசிக், தமிழ்த்திரை போன்ற தொலைக்காட்சிகளில் பணியாற்றியவர் .
 
மிக முக்கியமாக கேப்டன் டிவியின் சமையல் மந்திரம் நிகழ்ச்சியை இயக்கியவரும் இவர்தான் .
 
சினிமாவில் கே.ரங்கராஜ், மனோபாலா ஆகியோரிடம் பணியாற்றியவர் . அரசியல் சார் முதுகலை பட்டதாரி . டாக்டர் பட்டம் பெற்றவர்.
 
ஏகாந்தம் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை கரகாட்டம் மற்றும்  குழிப்பணியாரம், சுக்கு காபி அடங்கிய கிராமிய உணவோடு நடத்தினர் .
 
மகாத்மா காந்தியின் உணவு அடையாளமான அவித்த வேர்க்கடலை , இயக்குனர் கே. பாக்யராஜின் உணவு அடையாளமான, 
 
முருங்கைக்காயால் செய்த சூப் இரண்டும் உணவில் இருந்தன .  (சமையல் மந்திரம் இயக்குனரின் நிகழ்ச்சி அல்லவா ?)
இதற்கான ஏற்பாடுகளை , படத்தை வாங்கி வெளியிடும் Q சினிமாஸ் அஷோக் ரங்கநாதன் மிக சிறப்பாக , ரசித்துச் செய்திருந்தார் . 
 
நிகழ்ச்சிக்கு பாக்யராஜும் வந்திருந்தார் . (மகாத்மா காந்தி ஏன் வரவில்லை என்று கேட்கக் கூடாது !)
 
இவர்களோடு தஞ்சை தமிழ்ப் பித்தன் , இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் அய்யாவுடன் இருந்த செல்வம் அய்யா ஆகியோர் கலந்து கொண்டது சிறப்பு . 
 
மிக முக்கியமாக அந்தக் கால அற்புத பாணியில் படத்தின் பாடல்களை பாட்டுப் புத்தகமாக அச்சிட்டு, 
 
வந்தோர் கைகளில் தந்தோர் செயலை என்ன சொல்லிப் பாராட்ட . அருமை ( அப்படியே புத்தகத்தின் முதல் பக்கத்தில் முன் கதைச் சுருக்கமும் போட்டு இருக்கலாம் )
 
நகரத்தில்தான் நாகரீகம் இருப்பதாக எண்ணி நாகரீகம் தேடி நகரம் விட்டு புலம் பெயரும் மனிதர்கள்  தங்கள் வாழ்வில், 
 
உறவு , பண்பாடு , மனிதநேயம் போன்ற அடையாளங்களை இழக்கும் நிலைமைக்குத்  தள்ளப் படுகிறார்கள் . 
 
அதை கிராமத்துப் பின்னணியில் சொல்லி, தொடர்ச்சியாக மாநகரம் சார்ந்த வாழ்க்கை முறை இன்னும் பல கிராமத்து மனிதர்களை பயமுறுத்துகிறது என்பதையும் சொல்லும் படமாம் இது 
நிகழ்வில் பாடல்களும் முன்னோட்டமும் திரையிடப்பட்டன . 
 
மண்ணைப் பிரிவதன் சோகத்தை அதுவும் ஒரு பெண்ணுக்கு மண்ணைப் பிரிவதில் உள்ள சோகத்தை சொல்லும் முன்னோட்டம் ,
 
காதல் , ஆடல், பாடல், கலகலப்பு, கண்ணீர் என்று பலவகை கலவையாகவும் இருந்தது . 
 
விவாந்த், நீரஜா, தென்னவன் , அனுபமா ஆகியோர் உற்சாகமாக நடித்து இருப்பது தெரிகிறது . அனுபமா சிலம்பம் சுழற்றி சண்டையும் போடுகிறார் . 
 
பாடல்களில் நாயகன் நாயகி இருவரும் அழகாக வளைய வருகிறார்கள் . குடிகாரப் பாடலும் இருக்கிறது .
 
கணேஷ் ராகவேந்திரா இசை மண் மணத்தோடு பாடலின் சொற்கள் புரிய,  இனிமைக்கு  இசைவாக இருந்தது . 
 
எஸ்கா பூபதியின் ஒளிப்பதிவு மிக அழகு மற்றும் நேர்த்தி . வண்ண மயம் மற்றும் சுத்தம் . 
 
மேடையில் பேசிய தயாரிப்பாளர்கள் டி. சிவா, பி. எல் தேனப்பன், கதிரேசன் ஆகியோர் மேற் சொன்ன விசயங்களை பாராட்டிப் பேசினார்கள் . 
 
தயாரிப்பாளர் ராஜன்  இவற்றை சொன்னதோடு , “இப்போது சிலர் ஆபாச கதைகள் , காட்சிகள் மட்டுமல்லாது, 
ஆபாசப் பெயர்களையும் வைத்துக் கொண்டு படம் எடுக்கிறார்கள் . கேட்டால் இதுதான் ஓடும் என்கிறார்கள் .
 
ஆனால் அப்படி எதுவும் இல்லாமல் , கிராமம் , கலாச்சாரம், தமிழ்ப் பண்பாடு , விவசாயத்தின் அருமை , உறவுகளின் பெருமை இவற்றை சொன்ன, 
 
கடைக்குட்டி சிங்கம் அற்புதமாக ஓடி இருக்கிறது . அறம் ஓடி இருக்கிறது . எனவே உங்கள் வக்கிரங்களை நியாயப்படுத்த மக்களை குறை சொல்லாதீர்கள் ” என்றார் . 
 
அதை ஓட்டிப் பேசிய கே.பாக்யராஜ் தன் பேச்சில் , “கிராமியப் படங்கள் ஓடாது என்று ஒரு தவறான கருத்து இருக்கிறது . அதை கடைக்குட்டி சிங்கம் உடைத்தது .
ஸ்கிரிப்ட் நல்லா இருந்தா எல்லாப் படமும் ஓடும். அதே கிராமியப் படங்களில் நல்ல ஸ்கிரிப்ட் இருந்தால் இன்னும் சிறப்பாக ஓடும் ” என்றார் . 
 
நம்மாழ்வார் அய்யா வழி வந்த செல்வம் அய்யா பேசும்போது, “எதையும் உணவின் மூலம் புரிய வைத்தால் மக்கள் சரியாக புரிந்து கொள்வார்கள் என்பார் நம்மாழ்வார் அய்யா .
 
புரட்சி என்பதை மக்களிடத்தில் சொல்லும்போது கூட , ‘ அம்மா எப்படி தோசையை தலைகீழாக திருப்பிப் போடுகிறாரோ, 
 
அப்படி தலை கீழ் மாற்றங்களை நன்மைக்காக கொண்டு வருவதே புரட்சி என்று சொல்லுங்கள் ‘ என்பார் . 
 
இயற்கை விவசாயம் , ஆரோக்கிய உணவுகள் , இவற்றை சொல்லும் ஒரே திரையுலகம் இந்தியாவிலேயே தமிழ்த் திரையுலகம்தான் .
 
அதற்காக நாம் பெருமைப் படவேண்டும் . இன்னும் நிறைய சொல்ல வேண்டும் ” என்றது நிகழ்ச்சியின் மணிமகுடமாக அமைந்தது . 
 
ஏகாந்தம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து இருக்கிறது இந்த இசை வெளியீட்டு விழா .

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *