என் பெயர் சூர்யா ; என் வீடு இந்தியா @ விமர்சனம்

கே. நாகபாபு வழங்க , ராமலட்சுமி சினி கிரியேசன்ஸ்  சார்பில் ஸ்ரீஷா ஸ்ரீதர் லகடபாடி தயாரிக்க, அல்லு அர்ஜுன் , அணு இமானுவேல் ஜோடியாக நடிக்க,

சரத்குமார், அர்ஜுன் ,  நதியா , சாய் குமார், சாரு ஹாசன் என்று பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடிக்க, வி வம்சி எழுதி இயக்கி இருக்கும் படம் ‘என் பெயர் சூர்யா  என்  வீடு இந்தியா’ .

தெலுங்கில் வெளி வந்திருக்கும் ‘நான் பேரு சூர்யா . நா இல்லு இந்தியா ‘படத்தின் தமிழ் வடிவம் . 

மிகவும்  கோபக்கார ராணுவ வீரரான சூர்யாவுக்கு ( அல்லு அர்ஜுன் ) இந்திய எல்லையில் நின்று நாட்டைக் காவல் காக்க வேண்டும் என்பது ஆசை .
ஆனால் அவனது அதீத கோபம் காரணமாக ராணுவ உயர் அதிகாரிகள் அவனுக்கு அந்த வாய்ப்பை மறுக்கிறார்கள். சுய கட்டுப்பாடு இல்லாதவன் என்பது அவர்களது குற்றச் சாட்டு.
 
அந்த கோபம் காரணமாக காதலி வர்ஷா ( அனு இமானுவேல்) , அப்பாவும் மனோதத்துவ பேராசிரியருமான அப்பா ராம கிருஷ்ண ராஜூ  ( அர்ஜுன்) ,
 
அம்மா சத்யா ( நதியா) ஆகியோரைப் பிரிந்து இருக்கிறான் சூர்யா . 
 
ஒரு சூழ்நிலையில் தனக்கு வேண்டிய ஓர் அதிகாரி மூலம் பார்டருக்கு போக அவன் ஆசைப்பட , சூர்யா அதற்கு தகுதியானவன் என்று அவன் அப்பாவிடமே கையெழுத்து வாங்கி வர சொல்கிறது ராணுவம். 
அப்பாவை தேடி மகன் போகிறான் . அங்கும் அப்பாவோடு சண்டை வலுக்கிறது . காதலியோடும் சண்டை வருகிறது . நண்பர்கள் ஒரு வழியாக ஆற்றுப் படுத்துகின்றனர் . 
 
 மகன் சூர்யாவுக்கு கிட்டத்தட்ட ஒரு மண்டல நாட்கள் கெடு வைக்கும் அப்பா ராம கிருஷ்ண ராஜு, “அதுவரை அவன் கோபத்தை கட்டுப் படுத்தி அமைதியாக இருந்து விட்டால் கையெழுத்துப் போட்டு பார்டருக்கு போக சான்றிதழ் தருகிறேன்” என்கிறார் . 
 
சூர்யாவும் சவாலை ஏற்கிறான்  
 
சில நாட்கள் எல்லாம் சரியாக போகிறது . அந்த ஊரையே . ம்ஹும் ஏரியாவையே ஆட்டிப் படைக்கும் கல்லா என்ற பெரிய தாதாவின் ( சரத் குமார் ) மகனுக்கும் தனக்கும் ஏற்படும் மோதலில் கூட அமைதி காக்கிறான் சூர்யா . ஆனால் கார்கில் போரில் காலை இழந்த முஸ்தபா (சாய் குமார் ) என்ற தியாகியின் நிலத்தை பிடுங்க கல்லா முயல ,
 
சூர்யா கட்டுப்பாடு காரணமாக அமைதி காக்க , முஸ்தபா  கல்லா ஆட்களால் கொல்லப் படுகிறார்.  அவரது மகன் அன்வர் ( விக்ரம் லகடபாடி ) தீவிரவாதியாகப் போகிறான் . 
 
இன்னொரு பக்கம் சூர்யாவுக்கு அப்பா அம்மா காதலி எல்லோரும் ராசியாகிறார்கள். 
 
கெடு நாட்கள் முடிந்து சூர்யாவுக்கு கையெழுத்துப் போட  பேராசிரியரான அப்பா முடிவு செய்ய , அப்போது சூர்யா எடுக்கும் முடிவு , தீப்பிடிக்க வைக்கிறது . 
 
அப்புறம் நடக்கும் பரபர பட பட சுறு சுறு விறுவிறு மற்றும் நெகிழ்வான சம்பவங்களே இந்த என் பெயர் சூர்யா ; என் வீடு இந்தியா 
அட்டகாசமான ஸ்கிரிப்ட் அதுக்கு ஏத்த நெத்தியடி மேக்கிங் என்று படம் முழுக்க வியாபிக்கிறார் இயக்குனர் வம்சி . 
 
விஜய் பாலாஜியின் வசனம் நாம் பார்ப்பது ஒரு பக்கா ஒரிஜினல் தமிழ்ப் படம என்ற உணர்வை ஏற்படுத்துகிறது . சபாஷ் விஜய் பாலாஜி . 
 
அல்லு அர்ஜுன் மனசை அள்ளும் அர்ஜுன் ! . தோற்றம் , நடிப்பு , சண்டை , நடனம் என்று எல்லாவற்றிலும் அசத்தல் .
 
பாதத்தை கையால் பிடித்து முட்டிகளை பக்கவாட்டில் மடக்கி ஆடும் ஆட்டம், நம்ம  விஜய் லெவல். 
 
கேரக்டருக்காக உயிரை கொடுத்து உழைத்துள்ளார் . கதாநாயகி அனு இம்மானுவேல் கவர்ச்சிக் கோழி . லேசாக நடிக்கவும் வாய்ப்புள்ள கேரக்டர் . குறை ஒன்றும் இல்லை . 
 
தாதா கல்லாவாக அசத்துகிறார் சரத் குமார் . ஆரம்பக் காட்சி அபாரம் . கடைசியில் கிளைமாக்சில் அதையே ஹீரோ செய்தாலும் சரத்தின் கெத்து குறையவில்லை . 
 
மகனின் கோபம் பிடிக்காத ஆனால் பாசம் காட்டும் அப்பாவாக அர்ஜுன் பாந்தம். கொஞ்ச காட்சிகளே என்றாலும் மகனை கொஞ்சும் காட்சியில் கனக்க வைக்கிறார் நதியா . 
 
படத்தின் மிகப் பெரும் பலம் கோச்சா , ரவி வர்மா , பீட்டர் ஹெய்ன், ராம் லக்ஷ்மன் அமைத்து இருக்கும் சண்டைக் காட்சிகள் . யம்மாடி .. அதிரடி ! சண்டை ஸ்டெப்களும் புதுசாக இருக்கின்றன. 
விஷால் சேகரின் இசையில் பின்னணி இசையும் பாடல்களும் அருமை . அதுவும்கடைசியாக வரும்  “ஒத்தையா …” பாடல் வாவ் ! அபாரம் . 
 
மெட்டு, இசைக் கருவிகள் பயன்பாடு, பா. விஜய்யின் அசத்தல் வரிகள், அல்லு அர்ஜுனின் அபாரமான நடனம் , அனு இமானுவேலின் இளமை, நடன அசைவுகள், 
 
கலை இயக்கம் , ஒளிப்பதிவு, படத் தொகுப்பு, ஒலித் தொகுப்பு , வண்ணப் பயன்பாடு என்று சகல வகையிலும் குறையில்லாத பாடல் அது . THE COMNPLETE SONG!  
ராஜீவ் ரவியின் ஒளிப்பதிவு,  ‘நாம் படம் பார்க்கவில்லை . நிஜ களத்தில் இருக்கிறோம்’ என்ற உணர்வை தருகிறது . மனமார்ந்த பாராட்டுகள் !
 
“கேரக்டரை விட்டுட்டு சுயநலத்துக்காக ஜெயிச்சு என்ன பிரயோஜனம் ?”
 
“நாம ஜெயிச்ச நொடி திரும்பிப் பார்க்கும்போது,  வெற்றிக்கான அந்த பயணத்தில் நம்முடைய காலடித்தடம் மட்டுமே இருக்கணும் . வேற எந்த களங்கமும்  இருக்கக் கூடாது “
— என்று படம் சொல்லும்  கருத்து கம்பீரமானது . 
என்ன ஒன்று … காவரி மேலாண்மை வாரியம் , ஹைட்ரோ கார்பன், நீட்,  ஸ்டெரிலைட் என்று, 
 
ஒட்டு மொத்த தமிழகமும் வஞ்சிக்கப்படும் நிலையில் என்னமோபோப்பா  இந்தியா என்ற  உணர்வு நமக்கு  வருவதுதான் பிரச்னை. 
 
மற்றபடி படம் .. பிரமாதம் 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *