ஜீனியஸ் @ விமர்சனம்

சுதேசிவுட் பிலிம்ஸ் சார்பில் ரோஷன் தயாரித்துக் கதாநாயகனாக நடிக்க, பிரியா லால், ஆடுகளம் நரேன், மீரா கிருஷ்ணன்,சிங்கம் புலி,

சிறுவர்கள் ஆதித்யா , யோகேஷ் ஆகியோரின் உடன் நடிப்பில் சுசீந்திரன் எழுதி இயக்கி இருக்கும் படம் ஜீனியஸ் . ரசிகன் அப்படிச் சொல்வானா ? பார்க்கலாம் . 

ஐ டி நிறுவனத்தில் பணி புரியும் இளைஞன் தினேஷ் குமார் (ரோஷன்), சாலையோரக் கடை ஒன்றில் தேநீர் அருந்திய நிலையில் ,
 
பர்ஸ் எடுத்து வர மறந்திருப்பதையும் ,காரை எங்கே நிறுத்தினோம்  என்பதையும் மறந்து விட்டதை உணர்ந்தும், 
 
தேநீருக்கு காசு கேட்ட கடைக்காரரிடம் உச்சஸ்தாயில் கத்தி சண்டை போட்டு, ஆட்டோ ஏறி , எங்கே போகிறோம் என்று தெரியாமல் சுற்றி,
 
மீண்டும் கார் இருக்குமிடம் வந்து , அப்புறம் டிராபிக் போலீசிடம் சண்டை போட்டு , கைதாகி , போலீஸ் ஸ்டேஷனுக்கும் போய், 
 
அங்கும் போலீசாரையும்  டார்ச்சர் செய்திருக்கும் நிலையில்….பதறி அடித்துக் கொண்டு ஓடி வரும் அவனது பெற்றோரான, 
 
 ராம மூர்த்தி (ஆடுகளம் நரேன்) – ஜெயா (மீரா கிருஷ்ணன்) தம்பதியால் மீட்கப்பட்டு ,
மனோதத்துவ மருத்துவரிடம் சிகிச்சைக்கு ஆட்படுகிறான் . 
 
ஆழ்நிலை உறக்கத்தில் ஆழ்த்தி அவனிடம் பேசுகிறார் மருத்துவர்(ஜெயப்பிரகாஷ்) . கதை விரிகிறது 
 
சிறுவயதில் பள்ளியில் முதல் மதிப்பெண் வாங்கும் மாணவனாக இருந்தும் , அது பற்றி கண்டு கொள்ளாத அப்பா ,
 
ஒரு நாள் பள்ளி ஆண்டுவிழாவுக்கு தம்பதி சமேதராக வருகிறார் . அங்கே எல்லா போட்டிகளிலும் மகன் முதல் மதிப்பெண் வாங்க ,
 
பள்ளி நிர்வாகம் தந்தையை மேடை ஏற்றிப் பாராட்ட , அந்த பாராட்டில் போதை ஏறுகிறது அப்பாவுக்கு . 
 
மகனை  எல்லா வகுப்புகளிலும் எல்லா பாடத்திலும் முதல் மதிப்பெண் வாங்க வைக்க முடிவெடுக்கிறார் . 
 
கிராமத்துக்கு போய் தாத்தா பாட்டியின் அன்பில் நனைந்து பசங்களோடு விளையாடி, தோப்பில் மாங்காய் பறித்து,
 
ஆற்றில் குதித்து நீந்தி, தாத்தாவோடு மீன் பிடிக்கும் சந்தோஷத்துக்கு முற்றுப் புள்ளி விழுகிறது தினேஷ்குமாருக்கு  . 
எந்நேரமும் படிப்பு டியூஷன் என்று பாடச் சுமை  ஏறுகிறது . 
 
சக மாணவி பிரிஸ்கிலாவுடன் நட்பாகப் பழக, அதை காதல் என்று எண்ணி பலரும் கிண்டல் செய்தாலும் அதை புறக்கணித்து இருவரும் படிப்பில் கவனம் செலுத்திய நிலையில் , 
 
தினேஷ் குமாரை விட பிரிஸ்கிலா ஒரு மதிப்பெண் அதிகம் பெற்று வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்றதை பொறுத்துக் கொள்ளாத அவனது அப்பா,
 
அவளது வீடு தேடிப் போய் சண்டை போட்டு , பிரிஸ்கிலா தன் மகனை மயக்கி கெடுத்துவிட்டதாக சத்தம் போட, அவளது குடும்பமே வேறு ஊருக்குப் போய் விடுகிறது . 
 
பேரனை படிப்பு என்ற பெயரில் மகன் கொடுமைப் படுத்துவதை தாத்தா கண்டிக்க , அவரையே அவமானப்படுத்தி அனுப்பி விடுகிறார் அப்பா 
 
ஒருவழியாக அப்பாவின் ஆசைப் படி எல்லாம் படித்து முதல் இடம் பெற்று பிரபல ஐ டி கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தால்…..
 
அங்கே இரண்டு வாரத்தில் முடிக்க வேண்டிய வேலையை ஒருவாரத்தில் முடிக்க வற்புறுத்தி,
 
தூங்காமல்  , பல் விளக்காமல் இருபத்தி நான்கு மணி நேரமும் வேலை செய்யப் பணித்து  கசக்கி பிழிகிறான் முதலாளி . 
விளைவு ? மைன்ட் பிளாக் எனப்படும் மூளைச் செயலிழப்பு மற்றும்   ஸ்கீசாபினியா என்ற நோயால்  தினேஷ் குமார் பாதிக்கப்பட்டு இருப்பதை கண்டு பிடிக்கிறார் மருத்துவர். 
 
நிலைமை இப்படியே போனால் விபரீதம் ஆகும் என்று உணர்த்தி மருந்து மாத்திரையும் கொடுக்கிறார் . 
 
இன்னொரு பக்கம் திருமணம் செய்து வைத்தால் சரியாகும் என்று எண்ணி பெண் பார்க்க, ஒவ்வொரு பெண் பார்க்கும் நிகழ்விலும்  கத்தி கலாட்டா செய்து நிறுத்தி விடுகிறான் தினேஷ் . 
 
இந்த நிலையில் ஒரு இடத்துக்கு தினேஷ் குமாரை அழைத்துச் செல்கிறான் அப்பாவின் நண்பனான கனக வேலு. (சிங்கம் புலி)
 
ஒரு மோசமான தாதாவால்  சம்மந்தப்பட்ட தினேஷ் குமாரோடு ‘ பழகும்’ ஜாஸ்மினோடு   (பிரியா லால் ) தினேஷுக்கு காதல் வருகிறது . 
 
அவளை கல்யாணம் செய்து கொள்ள அவன் விரும்ப, பெற்றோர் மறுக்க, இன்னொரு பக்கம்  தாதா கோர முகம் காட்டத் துவங்க அப்புறம் நடந்தது என்ன என்பதே இந்த ஜீனியஸ் . 
“புத்தகங்களே ! எங்கள் குழந்தைகளை கிழித்து விடாதீர்கள் ” என்ற – கவிக்கோ அப்துல் ரகுமானின் – வரிகளுக்கு மதிப்புக் கூட்டும் விதமாக  படத்தின் கதை திரைக் கதையை அமைத்து இயக்கி இருக்கிறார் சுசீந்திரன். 
சிறுவயதில் அப்பாவின் ‘உதவியோடு’ புத்தகங்களால் கிழிக்கப்பட்டு பின் பணி செய்யும் இடத்தில் முதலாளியின் ‘உதவியோடு’ கணிப் பொறியால் உடைக்கப்பட்ட ,
 
தினேஷ் குமார் என்ற மனிதம், தினசரி வாழ்வில்  படும் பாட்டை மனம் பதைக்கும் படி – மனதில் தைக்கும்படி சொல்கிறார் சுசீந்திரன் . 
 
அந்த வகையில் இது இந்த காலகட்டத்துக்கு தேவைப் படும் படமாக ஆகிறது . 
 
இன்று கல்வியும் தனியார் நிறுவனங்களின்  வேலை பளுவும்  எத்தனையோ தினேஷ் குமார்களை கொல்லாமல் கொன்று கொண்டிருக்கும் நிலையில் , 
 
இந்தியாவின் மனித வளத்துக்கே எப்போது வேண்டுமானாலும் மைன்ட் பிளாக் ஏற்படலாம் என்ற உண்மை புரிந்து படத்தைப் பார்த்தால், ,
 
படத்தில் தினேஷ்குமாருக்கு மைன்ட் பிளாக் ஆகும் காட்சி நம்மை  நடுங்க வைப்பதோடு நாளைய சமுதாயத்துக்கான எச்சரிக்கை மணியாகவும் இருக்கிறது 
 
சபாஷ் . 
 
இன்னொரு பக்கம் தனது அற்புதமான படமாக்கலால், நாம் தொலைத்துக் கொண்டு இருக்கும் கிராம வாழ்வுக்காக நம்மை ஏங்க வைக்கிறார் இயக்குனர் சுசீந்திரன். 
அந்தக் காட்சிகளில் இயக்குனருக்கு யானை பலம் கொடுக்கிறார் ஒளிப்பதிவாளர் குருதேவ் . அற்புதமான ஒளிப்பதிவு .
 
படம் முழுக்கவே ஒளிப்பதிவாளரின் இந்த தோள்கொடுத்தல் துணை நிற்கிறது . அருமை 
 
கிராமத்துக் காட்சிகள் , நகரத்துக் காட்சிகள் என்று வேறுபடுத்திக் காட்டி இருப்பதோடு படம் முழுக்கவே இசையால் உணர்வு கூட்டி இருக்கிறார்  யுவன்சங்கர் ராஜா . 
 
வைரமுத்துவின் வரிகளில்” நீங்களும் ஊரும் நினைப்பது போலே … ”பாடல்,  மொழியிலும் ஒலியிலும் இனிமையாய் மயக்குகிறது .
 
  ”சிலு சிலு ..”வும் அப்படியே ஜிலு ஜிலு . ”விளையாடு மகனே விளையாடு…. ” மந்திரம் போல ஒலிக்கிறது 
 
திரைக்கதைக்கு உள்ளடங்கிய வசனத்தை பொருத்தமாக  எழுதி இருக்கும் அதே நேரம் “அவன சாதரணமா நினைக்காதே .. டீக்கடை வச்சிருக்கான் .
 
பின்னாடி ஃபாரின் டிரிப்பா போனாலும் போவான் ” என்று நேக்காக அரசியல் வெடி கொளுத்தவும் தவறவில்லை, படத்தின் வசனகர்த்தாவான இயக்குனர் அமுதேஷ்வர் . சூப்பர் 
படத்தை பரபரப்பாக கொண்டு போவதில் தியாகுவின் படத் தொகுப்பு சிறப்பாக பணியாற்றி இருக்கிறது . அதிலும் முதல் பாகம் ஆசம் அட்டகாசம் .
 
ஆனந்தனின் கலை இயக்கம்  வெகு இயல்பு . 
 
தினேஷ்குமார் கதாபாத்திரத்தில் உணர்ந்து ரசித்து மிக சிறப்பாக நடித்துள்ளார் தயாரிப்பாளரும் நாயகனுமான ரோஷன் . முதல் படம் போலவே தெரியவில்லை .
 
அவ்வளவு இயல்பான நடிப்பு . குறிப்பாக,  தலை குனிந்து கழுத்தை ஆட்டி கை விரல்களை அலைந்து கொண்டு தனக்கும் பேசிக் கொள்ளும் காட்சிகள் மிக சிறப்பு . 
 
அன்னியோன்யமான அவரது குரலும் மனசுக்கு நெருக்கமாகிறது.. 
 
நல்ல கதை திரைக்கதைகளை கண்டெடுத்து நடித்தால்  தனக்கென ஒரு நாற்காலியை (அட, சினிமாவில்தாங்க! ) உருவாக்கிக் கொள்ள  முடியும்.
 
வாழ்த்துகள்! பாராட்டுகள்! வரவேற்பு !வருக வருக !
 
பிரிஸ்கிலாவாக நடித்து இருப்பவர் ஜஸ்ட் லைக் தட் நடித்து விட்டுப் போக, ஜாஸ்மினாக நடித்து இருக்கும் பிரியா லால், 
 
தனது குணாதிசயச் செறிவுள்ள முகம் மற்றும்  நடிப்பால் மணக்கிறார் 
ஆடுகளம் நரேன், மீரா கிருஷ்ணன் மிக சிறப்பான பங்களிப்பு .சிங்கம் புலி ஒகே 
 
சிங்கமுத்து , தாடி பாலாஜி ஈரோடு மகேஷ் சம்மந்தப்பட்ட காமெடி காட்சி இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம் . 
 
எது வாழ்வு என்ற தவறான புரிதலால் மனச் சுமை கூட்டிக் கொள்ளுதல் அல்லது அப்படி ஆக்கப்படுதல் என்பது பொதுவான பிரச்னை .
 
ஆனால் நாயகன்  அழைத்துச் செல்லப்படும் இடம்தான்  அதற்கு தீர்வு என்பது ( என்னதான் எலைட் ஆக சொல்லி இருந்தாலும் ..
 
நர்ஸ் .. சிகிச்சை என்று சமாளித்தாலும் …) எந்த விதத்தில் நியாயம் ?
 
“சரி ..  பணிச் சுமையால் பாதிக்கப்படும் பெண்களும் இதே போல இறங்கினால் என்ன ஆகும்?” என்று சரியாகக் கேட்கிறார் ஒரு நியாயமான பெண்மணி . 
 
அதுவும் பள்ளிப் பிள்ளைகள் சம்மந்தப்பட்ட கதைப் போக்கும் கொண்ட  ஒரு படத்தில் இது சரியா என்ற  கேள்வியும் வருகிறது . 
 
ஒரு சினிமாவில் பொழுதுபோக்கான ஈர்ப்பான ஜனரஞ்சகமான காட்சிகள் வேண்டும் என்பது உண்மைதான் என்றாலும் , இந்த கதைப் போக்கு ஆபத்தானது . 
மாறாக …. 
 
தன் பையனுக்கு சிகிச்சை , சிறுவயதில் அவன் அனுபவித்த கிராமத்து வாழ்க்கைதான் என்று உணர்ந்து அங்கே கொண்டு போனால்….
 
அங்கே , கிராமம் கிராமமாக இல்லை .அருவியில் தண்ணீர் இல்லை . நதியில் மணல் லாரிதான் ஓடுகிறது . மாங்காய் தோப்பு பிளாட் போடப்பட்டு விட்டது. 
 
விளை நிலம் விலை நிலமாகிக் கிடக்கிறது . 
 
பையனின் வாழ்வுக்கு உயிர்கொடுக்க முதலில் கிராமத்துக்கு உயிர் கொடுக்க வேண்டி இருக்கிறது .
 
அந்த இரண்டையும் அந்த அப்பன் எப்படி சாதித்தான் என்று சொல்லி இருந்தால் படம் இன்னும் பெரும்  விஸ்வரூபம் எடுத்து இருக்கும் . 
 
பிளாட் போட்டு விற்கப்பட்ட ஓர் நிலத்தில்  கற்களையும் ,கலர் கலர்  கொடிகளையும் , ஷாமியானாவையும் பிய்த்துப் பிடுங்கிப் போட்டு விட்டு, 
 
அங்கே தண்ணீர் பாய்ச்சி உழவு உழுவது போல காட்டி அங்கே அந்தக் கடைசி காட்சியை வைத்து அமைத்து இருந்தால் , 
 
படம் பணிச்சுமை கொடுமைக்கு குரல் கொடுப்பது மட்டுமல்லாது கிராமங்களை மீட்கும் பணிக்கும் கரம் கொடுக்கும் இரட்டைக் குழல் துப்பாக்கியாக ஜொலித்து ஒலித்திருக்கும். 
எனினும் இப்போது இருக்கும் அந்த கடைசிக் காட்சியில் மனசில் படரும் ஈரமும், இடைவேளை சமயத்தில் படரும் சோகமும் இந்தப் படத்தின் ஆகப் பெரும் மகுடங்கள் . 
 
படத்தின் பேசுபொருள் இன்றைய அதி முக்கிய விஷயம் என்பது படத்தின் மீதான மரியாதையை அதிகப்படுத்துகிறது,
 
சொல்ல வேண்டிய காலத்தில் சொல்ல வேண்டிய கதையை அழுத்தமாக   சொல்லி இருக்கும் படம் என்பது படத்தின் பெரும் சிறப்பு 
 
ஜீனியஸ் ….. ஹானர்ஸ் !
 
 
 
 
 
 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *