இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு @ விமர்சனம்

நீலம் புரடக்ஷன்ஸ் சார்பில் இயக்குனர் ரஞ்சித் தயாரிக்க, தினேஷ், ஆனந்தி, முனீஸ்காந்த் , ரிதிவிகா நடிப்பில் அறிமுக இயக்குனர் அதியன் ஆதிரை இயக்கி இருக்கும் படம் இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு. அதிரடி குண்டா ? இல்லை புஸ்வாணமா ? பார்க்கலாம் . 

உலகப் போர்களின் போது இரு தரப்பிலும் நின்று அடித்துக் கொண்ட வல்லரசு நாடுகள் அந்தப் போர்களில் தங்களின் அதிகாரத்துக்கு கீழ் இருந்த நாடுகளின்  மக்களையும் ராணுவம் என்ற பெயரில் களம் இறக்கிக் கொன்று குவித்ததோடு, 
பயங்கர குண்டு போன்ற ஆயுதங்களை வைத்திருக்கும்  கிடங்குகளாகவும் அந்த அடிமை நாடுகளைப் பயன்படுத்தின .

போர்கள் நிறுத்தம் , அடிமைப் பட்ட நாடுகளின் விடுதலை போன்ற சூழல்களில் அந்த குண்டுகளை அந்தந்த நாடுகளிலேயே விட்டு விட்டுப் போயின . பிரிட்டனின் ஆதிக்கத்தில் இருந்து , நேச நாட்டுப் படைகள் சார்பாக இப்படி போரில் பயன்படுத்தப்பட்டநாடுகளில்  இந்தியாவும்  ஒன்று . 

அப்படி இந்தியாவில் கை  விடப்பட்ட குண்டுகளை அழிக்க ராணுவம் மற்றும் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு பல்லாயிரம் கோடிக்கு டெண்டர் தரப்பட்டது . 
ஆனால் அந்த ஊழல் நிறுவனம் , பணத்தை பாக்கெட்டில் போட்டுக் கொண்டு , குண்டுகளை அழிக்காமல் கொண்டு போய் வங்காள விரிகுடாவில் ஆழ்கடலில் கொட்டியது . 

அப்படி கொட்டப்பட்ட குண்டுகள், அலையேற்றம்,  நீரோட்டம், சுனாமி,  போன்ற காரணங்களால்  கரை ஒதுங்கிக் கொண்டு இருக்கின்றன . அவற்றின் விபரீதம் புரியாமல் அவற்றில் உள்ள இரும்பு மற்றும் தாமிரத்துக்கு ஆசைப் பட்டு காயலான் கடைகளில் அவை  போடப்பட, ஒரு நிலையில் உடைக்கப் படும்போதோ வெல்டிங் வைக்கப் படும்போதோ வெடித்து பல பேரைக் காவு வாங்கிக் கொண்டிருப்பது இன்னும் நடக்கிறது . 

அண்மையில் மதுராந்தகம் அருகில் அப்படி ஒரு சம்பவம் நடந்தது செய்திகளில் வந்தது நினைவில் இருக்கலாம் . 

இந்த விபரீதத்தை  அடிப்படையாக வைத்து வந்திருக்கும் படம் இது.

சொந்தமாக லாரி  வாங்கி ஓட்டுவதை லட்சியமாக கொண்ட காயலான் கடை  தொழிலாளி ( அட்டகத்தி தினேஷ்) சாதிய அடுக்கில் சற்றே உயர் சாதிப் பெண்ணோடு (ஆனந்தி) . கடை முதலாளி ( மாரிமுத்து ) . முதலாளியிடம் போட்டுக்கொடுக்கும் வேலையை செய்தே முன்னேற முயலும் நபர் ( முனீஸ் காந்த் )

மாமல்லபுரத்தில் கரை ஒதுங்கி போலீஸ் ஸ்டேஷன் வந்த  ஒரு குண்டு , திருடப்பட்டு இந்த காயலான் கடைக்கு வருகிறது . 

அந்த குண்டை ஆதாரப் பூர்வமாக நிரூபித்து , இதுவரை இப்படி வெடி விபத்தில் சிக்கியவர்களுக்கு நிவாரணம் வாங்கித் தர முயலும் பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் ( ரித்விகா) . அதை தடுக்க முயலும் ஊழல் நிறுவன நபர் ( ஜான் விஜய் ) .
இந்த சூழலில் குண்டு ஒரு நிலையில் நாயகன் தலையில் சுமத்தப்பட,  அப்புறம் என்ன நடந்தது என்பதே படம் . 

சிறப்பான கதை எழுதி , அருமையான திரைக்கதை அமைத்து,  அர்த்தமுள்ள வசனங்கள் , சிறப்பான இயக்கம் , பொருத்தமான படமாக்கல் என்று , கொண்டாடப் பட வேண்டிய ஒரு படத்தை கொடுத்திருக்கிறார் அறிமுக இயக்குனர் அதியன் ஆதிரை .   சிவப்புக் கம்பள வரவேற்பு ! 

காயலான் கடைக்குள் நடக்கும் வாழ்வியலை,  அரசியலை , வலியை , உழைப்பை அற்புதமாக  பதிவு செய்து இருக்கிறார்கள் . நாமும் அந்த கடைக்குள் இருக்கிறோம் .   

வலி குறித்த வளமான வசனம் ஒன்று உங்கள் இதயங்களை ஈரமாக்கும் . சபாஷ் அதியன் ஆதிரை .

மிக சிறப்பாக கதாபாத்திரத்துக்குள் இறங்கி நடித்திருக்கிறார் தினேஷ் .  மற்றவர்களும் ! அவ்வளவு சிறப்பாக வேலை வாங்கி இருக்கிறார் இயக்குனர் . 
சில காட்சிகளில்  தினேஷ் பேசுவதே புரியவில்லை . இன்னும் கொஞ்சம் சிரத்தை எடுத்து இருக்கலாம் . யதார்த்தம் வேண்டும்தான் . ஆனால் விசயமும் முக்கியம் இல்லையா ?

ராமலிங்கத்தின் கலை இயக்கம் அபாரம் . 

இதுவரை தமிழ சினிமா பதிவு செய்யாத வெகுஜன கிராமிய மக்களின் கார்த்திக்கை தீப மாவுலி சுற்றலை இயக்குனர் பதிவு செய்த விதம் சிலிர்ப்பானது  . அந்தக் காட்சிகளிலும் , இரவு நேர லாரி பயண காட்சிகளிலும்  காயலான் கடையை உணர வைப்பதிலும் விழிகளை விரிய வைக்கிறது கிஷோர் குமாரின் ஒளிப்பதிவு . 

தென் மா இசையில் திருவிழா பாடல் அருமை . பின்னணி இசை சிறப்பு . செல்வாவின் படத் தொகுப்பும் சிறப்பு . ஸ்டன்னர் சாமின் சண்டைக் காட்சிகள் அதிர அடிக்கிறது . 

கிராமிய கூத்துக் கலையை பதிவு செய்தமைக்கு பாராட்டுக்கள் . 

கதை காமெடி என்று எதன்  பெயரிலும் சிறுதெய்வ வழிபாடுகளை அதன் தொடர்புகளை கேலி செய்வது  ஏற்புடையது அல்ல . 

போர் பற்றி பேசும் ஒரு தமிழ்ப் படத்தில்  ஈழப் போரை  நம் இன அழிப்பை நேரடியாக அழுத்தமாக பதிவு செய்யாமைக்கு கடும் கண்டனங்கள் . 

இடைவேளைக்கு முன்வு வரும் பாட்டை ஒரே சரணத்தோடு நிறுத்திக் கொள்வது நல்லது . 

இப்படி ஓரிரு குறைகள் இருந்தாலும் கூட , 

ஒரு பயங்கர  வெடிகுண்டு பற்றிய படத்தில் , அந்த குண்டுக்கு என்ன ஆனது என்று கதையைக் கொண்டு போய் அரைத்த மாவையே அரைக்காமல் , கடைசியில் வேறொரு அவசிய அத்தியாவசிய சிந்தனையை உயர்த்திப் பிடிக்கிறார்கள் பாருங்கள் . கரைந்து கலங்குகிறது மனசு 

அங்கே  வெளிப்படும் கம்பீரமான கருத்தியலில்,  

ஒரு காவியமாக வெடிக்கிறது இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு . 

மகுடம் சூடும் கலைஞர்கள் 

**************************************

அதியன் ஆதிரை, ‘ தயாரிப்பாளர்’  ரஞ்சித், தினேஷ், கிஷோர்குமார், தென்மா , ராமலிங்கம்  

 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *