Zee 5 தளத்தில் வெளியாகி இருக்கும் அடுத்த படம் இக்லூ .
ட்ரம் ஸ்டிக் புரடக்சன்ஸ் சார்பில் அருண் தயாரிக்க, அம்ஜத்கான் , அஞ்சு குரியன் , மேத்யூ வர்கீஸ், ஜீவா ரவி , பகவதி பெருமாள் நடிப்பில் பரத் மோகன் இயக்கி இருக்கும் உணர்ச்சிகரமான படம் இக்லூ .
கொடைக்கானலில் இரட்டைப் பெண் குழந்தைகளோடு வாழ்பவன் சிவா ( அம்ஜத்) . அம்மா இல்லாத பிள்ளைகள் . இரண்டில் ஒரு குழந்தைக்கு அம்மா பற்றிய ஏக்கம் பெரிதாக இல்லை . இன்னொரு குழந்தைக்கு அதிகம் .
அம்மா பற்றி கேட்கும்போது எல்லாம் சொல்ல மறுக்கிறான் தகப்பன் . அந்த குழந்தை விபத்தில் சிக்கி கோமா நிலைக்கு போக , ”அவள் அருகில் உட்கார்ந்து நிறைய பேசுங்கள் . அவள் தெரிந்து கொள்ள விரும்பிய விசயங்களை எல்லாம் சொல்லுங்கள் ” என்கிறார் மருத்துவர் .

சொல்கிறான் . ரம்யாவை தான் காதலித்து பெரும் எதிர்ப்புக்கு இடையில் மணந்த கதை , அவளுக்கு வந்த ரத்தப் புற்று நோய் … அப்புறம் நடந்தது என்ன .. எல்லாம் சொல்கிறான் .
ரம்யாவுக்கு அப்போது என்ன ஆச்சு . குழந்தைக்கு இப்போது என்ன ஆச்சு என்பதே இந்த இக்லூ
இக்லூ என்பது எஸ்கிமோக்கள் குடியிருக்கும் வீடு . பெயருக்கேற்ற அமைவான காட்சிகள் படத்தில் சிறப்பாக உண்டு .
இன்று தியேட்டர் ரிலீசில் முட்டி மோதிக் கொண்டு இருக்கும் படங்களை விட அழுத்தமான ஆழமான படம் .
நினைவே ஒரு சங்கீதம் உட்பட பற்பல படங்களை நினைவு படுத்தும் கதைதான் . ஆனால் திரைக்கதையால் அசத்தி , படமாக்களால் அசர வைத்திருக்கிறார் இயக்குனர் பரத் மோகன் . மிகச் சிறந்த இயக்குனராக ஜொலிக்கிறார் .

இக்லூ விஷயம் அவரது சிந்தனை தரத்துக்கு ஒரு சோற்றுப் பருக்கை
குகனின் ஒளிப்பதிவு படத்துக்கு யானை பலம் . காட்சிகளை மனசுக்கு நெருக்கமாகக் கொண்டு வருகிறது.
அரோல் கரோலியின் இசை படத்துக்கு மேலும் கனம் கூட்டுகிறது .கதையின் நுண்ணிய உணர்வுகளை வெளிப்படுத்த இயக்குனருக்கு அப்படி மிக சிறப்பாக உதவி இருக்கிறது.
அஞ்சு குரியன் … அம்பது குரியன் ! அவ்வளவு சிறப்பான நடிப்பு . புற்று நோய் உபாதைகள் , மன குழப்பம் , மாறா குணாதிசயம் ஆகிய மூன்று குழந்தைகளை அவர் நடிப்பால் சுமந்த விதம் அபாரம் . வாழ்த்துக்கள்

அம்ஜத்தின் பேசும் விதம் அவருக்கு ஒரு தனித் தன்மையை தருகிறது . தோற்றப் பொருத்தம் அருமை . சிறப்பு ஆனால் . எக்ஸ்பிரஷன்கள் … கிராம் என்ன விலை என்கிறார் . குறிப்பாக மனைவிக்கு ரத்தப் புற்று நோய் என்று தெரிந்து வெளியே வரும் காட்சி
இரட்டை குட்டிப் பாப்பாக்கள் அசத்தி இருக்கிறார்கள் . அம்மா பற்றி கவலைப் படாத பெண் கடைசியில் அம்மா பற்றி அறிந்ததும் உடைந்து அழும் காட்சியில் நம் கண்கள் குளமாகும் . இந்த இடத்தில் இயக்குனருக்கும் ஒரு ஜே .

இரண்டு பாப்பாக்களுகும் டப்பிங் பேசி இருக்கும் (வேறு) ஒரே பாப்பாவுக்கும் வாழ்த்துப் பூங்கொத்து !)
பகவதி பெருமாளின் குரல் நடிப்பு அருமை
வெப் சீரிஸ் என்றாலே யதார்த்தம் என்ற பெயரில் கணவன் மனைவி இருவரும் நீலப் படம் பார்ப்பது போன்ற காட்சி, அப்புறம் மனைவியே கணவனை குடிக்க சொல்வது போன்ற கண்றாவிகள் எதற்கு ?
இரண்டு குழந்தைகள் நடிப்பால் அசத்தி இருக்கும் இந்தப் படத்தை குழந்தைகள் பார்க்க வேண்டாமா ? ம்ம்ம் ?
அம்மா பற்றி குழந்தை கேட்கும்போது எல்லாம் அப்பா ஏன் சொல்லாமல் மறுக்க வேண்டும்? . விபத்து நடக்கட்டும் என்று காத்திருந்தாரா ?

அவ்வளவு நல்ல, சிவாவின் அக்கா , ரம்யாவின் அம்மா அப்பா எல்லாம் நிகழ் காலத்தில் எங்கே போனார்கள் ?
இப்படி சில குறைகள் .
கிளைமாக்ஸ் பகுதியில் இன்னும் கொஞ்சம் சிரத்தை காட்டி இருக்கலாம் .
எனினும் மன உணர்வுகளுக்கு முக்கியத்துவம் தரும் அற்புதமான கதை, கதா பாத்திரங்களின் மன நிலைகளை விளக்கும் ஆழமான உரையாடல்கள், மிகச் சிறப்பான இயக்கம், அம்பது குரியனின் நடிப்பு இவற்றால் மனசுக்குள் சிம்மாசனம் போட்டு உட்காருகிறது இக்லூ