இப்படை வெல்லும் @ விமர்சனம்

லைகா புரடக்ஷன்ஸ் தயாரிப்பில் உதயநிதி, மஞ்சிமா மோகன், சூரி, ராதிகா, டேனியல் பாலாஜி, ஆர் கே சுரேஷ் நடிப்பில், 

 கதை திரைக்கதை வசனம் எழுதி நடித்து கவுரவ் இயக்கி இருக்கும் படம் இப்படை வெல்லும் . படம் ரசிகர்களின் மனதை வெல்லுமா ? பார்க்கலாம் . 

இந்தியாவெங்கும் பொது மக்கள் கூடும் இடங்களில் குண்டுகளை வெடிக்கச் செய்து அப்பாவி மக்களை கொல்லும் தீவிரவாத இயக்கத்தின், 
 
முக்கிய நபரான சோட்டா (டேனியல் பாலாஜி) உத்திரப் பிரதேச சிறையில் இருந்து குண்டு வெடிப்பு நிகழ்த்தி தப்பிக்கிறான் . 
 
அடுத்து அவன் நாக்பூரிலும் ஹைதராபாத்திலும் தலா ஒரு வெடிகுண்டை  வெடிக்கச் செய்ய , பாதுகாப்புப் படையின் கவனம் அங்கே குவிகிறது .
 
ஆனால் அவனது நிஜமான நோக்கம் சென்னையில் பல இடங்களில் குண்டுகளை வெடிக்க வைப்பதே . 
 
பஸ் டிரைவரான அப்பா இறந்த நிலையில் அம்மா (ராதிகா) அந்த வேலைக்குக் கஷ்டப்பட்டுப் போய் குடும்பத்தைக் காப்பாற்ற,
 
படித்து முன்னேறி ஐ டி கம்பெனியில் 75000 சம்பளத்தில் வேலைக்கு இருக்கும் இளைஞன் மதுசூதனன் ( உதயநிதி) .
 
சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற அம்மாவின் ஆசைப்படி லோன் வாங்கி வீடு கட்டும் நிலையில், 
 
65000 ரூபாய் பணத்தை வீட்டுக் கடனுக்கான மாதாந்திர தொகையாக கட்டுபவன் . 
 
எதிரிகளை வீழ்த்த உடல்பலம் முக்கியம் இல்லை மூளை பலமே முக்கியம் என்ற கருத்து  உள்ளவன் . அந்த எண்ணத்தை செயல்படுத்தி  வெற்றியும் பெறுபவன் . 
 
மதுவுக்கும் பார்கவி என்ற பெண்ணுக்கும் (மஞ்சிமா மோகன்) காதல் . அது அவளது அண்ணனும் அடாவடி அசிஸ்டன்ட் கமிஷனருமான, 
 
தீனா செபாஸ்டியனுக்கு பிடிக்கவில்லை . காதலைப் பிரிக்கவும் மதுசூதனனை பிரித்து மேயவும் சமயம் பார்த்துக் காத்து இருக்கிறார்  தீனா 
 
இதனால் அண்ணனுக்கு தெரியாமல் பதிவுத் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கிறது காதல் ஜோடி . 
 
கர்ப்பிணி மனைவியை  (ஊடகவியலாளர் ரோகிணி) ஊரில் விட்டு விட்டு சென்னையில் தங்கிப் பணிபுரிகிற  கீழ் நடுத்தர வர்க்க நபர் குழந்தை வேலு (சூரி) 
 
சென்னைக்கு வந்த சோட்டாவுக்கு குழந்தை வேலு , ஆள் யார் என்று தெரியாமலே தனது இருசக்கர வாகனத்தில் லிஃப்ட் கொடுக்கிறான் . 
 
அடுத்து சோட்டா,  மதுசூதனன் ஓட்டி வரும் காரில் மோதி விபத்தாக அவனை யார் என்று தெரியாமலே மருத்துவமனையில் சேர்க்கிறான் மதுசூதனன் . 
 
இந்த நிலையில் சோட்டா சென்னை வந்திருப்பதை அறிந்த போலீஸ் . கண்காணிப்புக் கேமரா காட்சிகளின் அடிப்படையில், 
 
குழந்தை வேலுவையும் மதுசூதனனையும்  சோட்டாவின் ஆட்கள் என்று எண்ணி கைது செய்து விசாரணை நடத்துகிறது . 
 
மது – பார்கவி கல்யாணம் நின்று போகிறது . 
 
எனினும் தங்கையின் திருமணத் திட்டம் அறிந்த அசிஸ்டன்ட் கமிஷனர் மதுசூதனனை சோட்டாவின் ஆள் என்று, 
 
எல்லோரையும் நம்ப வைத்து அவனை என்கவுண்டர் என்ற பெயரில் தீர்த்துக்கட்ட திட்டமிட்டு செயல்படுகிறார் .
 
சோட்டா தன் திட்டப்படி சென்னையில் தாம்பரம் , அடையாறு, கோயம்பேடு , பூந்தமல்லி பேருந்து நிலையங்களில், 
 
ஒரு குறிப்பிட்ட தினத்தில் நேரத்தில் குண்டுகளை வெடிக்க வைக்க முடிவு செய்து ஆட்களையும் அனுப்புகிறான் . 
 
மதுவைக் கொல்லும் கமிஷனரின் திட்டம் நிறைவேறியதா ? குழந்தை வேலுவின் கர்ப்பிணி மனைவிக்கு என்ன ஆச்சு ? மது , குழந்தை வேலு நிலைமை என்ன ஆனது ?
 
மது – பார்கவி காதல் என்ன ஆனது ? சோட்டா வைத்த குண்டு வெடித்ததா இல்லையா ? ஆம் எனில் நடந்தது என்ன ? இல்லை எனில் நிகழ்ந்தது என்ன என்பதே இப்படை வெல்லும் . 
 
படத்தின் துவக்கத்தில் வரும் சோட்டா ராஜன் காட்சிகளே அசத்தல் ஆரம்பம் . படமாக்கல் அபாரம் . செல்போன் , சமூக வலை தளம் என்று, 
 
எதுவுமே இல்லாத சோட்டாவின் சிறை அறைக்கு வெடிகுண்டுப் பொருட்கள் போவதும் அவற்றை அவன் பதுக்கும் இடமும் ,
 
அங்கேயே குண்டு தயாரித்து வெடிக்க வைத்து தப்பிக்கும் ஐடியாவும் செம திரில் . 
 
இந்தக் கதைக்குள் மதுசூதன் – பார்கவி காதல், மது சூதனன் மற்றும் அவன் அம்மாவுக்கு இடையிலான பாசம் , அந்த பெண்மணியின் வாழ்வியல் நோக்கம்…
 
ஒரு விதவை குடும்பத் தலைவியின் வைராக்கியம், தங்கையின் காதலை அசிஸ்டன்ட் கமிஷனர் வெறுப்பது,
 
குழந்தை வேலுவுக்கும் கர்ப்பிணி மனைவிக்கும் இடையேயான செண்டிமெண்ட் போன்ற பகுதிகள் உறுத்தாமல் அழகாக இணைக்கப்படுகின்றன . சபாஷ் . 
 
தீவிரவாதிகள் பயன்படுத்தும் அந்த ஜி மெயில் மின்னஞ்சல் பெயர் , கிளைமாக்சில் கண்டு பிடிக்கப்படும் ‘ பாஸ் வேர்ட்’ போன்ற உத்திகள் ”அட…..!” போட வைக்கின்றன 
 
மெயில் அனுப்பாமல் draft இல் மட்டும் வைத்து மெயில் ஐடி மற்றும் பாஸ் வேர்டைக் கொடுத்து, 
 
பார்த்துக் கொள்ளச் செய்யும் உத்தி விதிர்விதிர்க்க வைக்கிறது . (நாமளே ஐடியா கொடுத்ததா வந்துடப் படாது. )நாயகனின் மூளைக்கு வேலை குணத்தை விளக்கும் அந்த ரெஸ்டாரன்ட் சர்வர் காட்சி சூப்பர் . 
 
தனக்கு பிரச்னை வரும்போது நாயகனின் தப்பிக்கும் உத்திக்கான மன ஓட்டத்தை வரைகலையில் காட்சிப் படுத்திய விதம் , வெல்டன் . 
 
இப்படி படம் முழுக்க இனிய ஆச்சர்யங்கள் நிறைய ! 
 
முதல் நாற்பது நிமிஷம் அட்டகாசமாகப் போகும் படம் , மஃப்டியில் வரும் போலீசை கந்து வட்டிக்க்காரனின் ஆட்கள் என்று எண்ணி, 
 
மதுசூதனனும் குழந்தை வேலுவும் ஓடும் காட்சியில் சுருதி குறைகிறது . 
 
அடுத்து வரும் காட்சிகள் சற்று ரிலாக்ஸ் செய்தாலும் திரைக்கதை  திக்குவதை மறுப்பதற்கு இல்லை . அதுவும்  பாம் பெயரில் வரும் காமெடி எல்லாம் தேவையா ?
 
இப்படி கொஞ்ச நேரம் தடுமாறும் படம் பின்னர் இரண்டாம் பகுதியில் மீண்டும் சுதாரித்துக் கொண்டு சூடு பிடித்துப் பறக்கிறது . 
 
சிறப்பான படமாக்கலை செய்து இருக்கிறார் இயக்குனர் கவுரவ் .
 
ரிச்சர்டு நாதனின் ஒளிப்பதிவில் ஒட்டு மொத்த படமும் ஜொலிக்கிறது . அவருடைய ஒளிப்பதிவில், 
 
மஞ்சிமா மோகன் கிளாமராகக் கூட தெரிகிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன் . 
 
இமானின் இசையில் பாடல்கள் இனிமை . பின்னணி இசை இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம் .
 
பிரவீனின் அட்டகாசமான படத் தொகுப்பில் நாலு கால் பாய்ச்சலில் பாய்கிறது படம் . அவரது பங்களிப்பு ,
 
சரியாக இல்லாமல் போயிருந்தால் படத்தின் இடைப்பகுதியில் சேதாரம் அதிகம் ஆகி இருக்கும் 
 
வழக்கம்போல எளிமையாக இயல்பாக நடித்துக் கவர்கிறார் உதயநிதி . நடனத்தில் இன்னும் ஒரு படி முன்னேற்றம் .
 
இன்னும் சில ஆண்டுகளுக்காவது இந்த சகஜமான பக்கத்து வீட்டுப் பையன் இமேஜை விட்டு விடாதீர்கள் உதய். நடிப்பில் இப்போதைக்கு அதுதான் உங்கள் பெரும்பலம். 
 
தோன்றும் ஒவ்வொரு பிரேமிலும் மிரட்டுகிறார் டேனியல் பாலாஜி . சூப்பர் . சிறையில் குண்டு வெடிப்புப் பார்சலை பிரித்து எடுத்து ஒரு சிரிப்பு சிரிக்கிறாரே . அம்மாடியோ ! 
 
மஞ்சிமா மோகன் கேரக்டருக்கு பொருத்தமாக வந்து போகிறார் .  அதுக்காக காதலனிடம் ” நான் உன்ன தெரியாம சந்தேகப்பட்டு என் அண்ணன் கிட்ட மாட்டி விட்டுட்டேன் .
 
என்ன மன்னிச்சுக்க ” என்பதை கூட ‘இன்னிக்கு என்னமோ புதன்கிழமை ‘ என்பது போல இப்படி சர்வ சாதரணமாதான் சொல்வீங்களா ஆத்தா ?
 
ராதிகா ஜஸ்ட் லைக் தட் சிறப்பாக நடித்து விட்டுப் போகிறார் . சூரி காமெடி சீரியஸ் இரண்டையும் குழப்பி அடிக்கிறார் . எஸ்.. குழப்பி !
 
ஒரு சில காட்சிகள் என்றாலும் குழந்தை வேலுவின் மனைவியாக நடித்து இருக்கும் ரோகினி  நடிப்பில் கவனிக்க வைக்கிறார் . வளர வாழ்த்துகள் !  
 
பார்கவி என்பது அழகான பெயர்னு வேண்ணா சொல்லிக்கங்க . அது உங்க விருப்பம். ஆனா அது தமிழ்ப் பெயர் இல்லை இயக்குனரே !
 
ஹீரோவின் காதலி மொழு மொழுன்னு வெள்ளையா இருக்கட்டும் . அதுகூட உங்க விருப்பம்.
 
ஆனா தீவிரவாதிக்கு உதவற பொண்ணுன்னா கருப்பா முகப்பருவோடதான் இருக்கணுமா? இந்த ஊருக்கு இதுதான் நியாயமா கவுரவ்?
 
அம்மா மீது மகனின் மரியாதை , கடைசியில் அசிஸ்டன்ட் கமிஷ்னருக்கும் மது நல்லது செய்வது போன்ற உறவு மதிப்புக்கூட்டல் காட்சிகள் பாந்தம் .
 
இன்டர்வெல் இடம் மிரட்டல் ! 
 
குண்டு வெடிப்புத் திட்டம் தொடர்பான காட்சிகளை இன்னும் அழுத்தமாக சொல்லி பதட்டம் கூட்டி இருக்கலாம் . 
 
அப்பார்ட்மென்ட் தொடர்பான காட்சிகளில் இன்னும் விறுவிறுப்பு ஏற்றி இருக்கலாம். ஏனெனில் இடைவேளைக் காட்சியில் ஏற்படும் பதட்டத்துக்கு இந்த பகுதி போதுமான தீனி போடவில்லை.
 
அபார்ட்மென்ட் குழந்தைகள் குறும்பாக பெல் அடிக்கும் விசயத்தைக் கூட குற்றவாளியை கண்டு பிடிக்க பயன்படுத்திக் கொண்ட விதம் அருமை .
 
 திரைக்கதையில் எந்த ஒரு கதாபாத்திரமும் கதைப் போக்கும் வீணடிக்கப்படவில்லை . தொக்கி நிற்கவில்லை என்பதை மனப்பூர்வமாகப் பாராட்ட வேண்டிய அம்சம் 
 
குண்டு வைக்கப் போகும் நான்கு தீவிரவாதிகளையும் ஒரே இடத்தில் கொண்டு வரும் காட்சி மாஸ்டர் மைன்ட் அபாரம்! 
 
இயக்குனர் அக்கறையோடு திரைக்கதை அமைத்து இருப்பது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது . 
 
மேக்கிங்கிலும் நன்றாக இருக்கும் ஒரு படம் அதை விடவும் திரைக்கதையில் ஒரு படி மேலாக இருப்பதுதானே ஒரு வணிகமயமான வெற்றிப் படத்துக்கான தங்க இலக்கணம் . 
 
எனவே , 
 
இப்படை வெல்லும் ….. வெற்றி நிச்சயம் !
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *