ஐ ஆர் 8 @ விமர்சனம்

ஃபிரண்ட்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜே.கே. இண்டர்நேஷனல் தயாரிப்பில் அனீபா, விஷ்வா,  பிந்து ஆர்.வி.தம்பி, ஜெயக்குமார்.T, அப்புக்குட்டி, கராத்தே ராஜா, பாபு, ராஜேஷ், கவிதா, சுப்புராஜ்  நடிப்பில்  என்.பி. இஸ்மாயில்  கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி இருக்கும் படம் ஐ ஆர் 8  . 

பரம்பரை பரம்பரையாக விவசாயம் செய்த ஒரு குடும்பத்துப் பெரியவர் மண்ணையும் உழவையும் அப்படி நேசித்து செய்கிறார் . ஆனால் அரசின் விவசாயத்தை பின்னுக்கு இழுக்கும் கொள்கைகள் அவரை விவசாயம் செய்ய கடன் வாங்க வைக்கிறது . 
 
வங்கியில் கடன் வாங்குவதோடு நிலத்தையே வட்டிக்கு பணம் கொடுப்பவரிடம் அடகு வைக்கிறார் . அநியாய வட்டியால்  வட்டிக்காரர் நெரிக்க, சாகுபடி சரியில்லாத சூழலில் வங்கியும் கடனை கட்டச் சொல்லி நெருக்கடி கொடுக்கிறது. 
 
அந்த ஏரியாவில் அவரது  வயல் காட்டுக் கிணறு வற்றாத கிணறு என்பதால் அதை ஒரு குடி நீர் தயாரிப்பு நிறுவனம் அதை விலைக்கு வாங்க முடிவு செய்து , அந்த நிலத்தை வட்டிக்கு வாங்கி வைத்து இருக்கும் வட்டிக்கடைக்காரர் மூலம் வஞ்சகமாக முயல்கிறது . 
 
விவசாயியின் மருமகன் ஊர்த் தலைவராக ஆக, வட்டிக்கு விடுபவரின் ஆதரவு தேவைப்படுகிறது . எனவே மருமகன் மூலம் வயலை விற்க வைக்க முயல்கிறார் வட்டிக் கடைக்காரர் . 
விவசாயியின் இளைய மகன்  பட்டணத்தில் ஐ டி கம்பெனியில் குறைந்த சம்பளத்துக்கு நிலையற்ற வேலை செய்து கொண்டு விவசாய ஆர்வம் இன்றி இருக்கிறான் . 
 
மூத்த மகன் செயற்கை உரம் பூச்சிக் கொல்லி போட்டு விவசாயம் செய்யலாம் என்கிறான் . 
 
“அது மண்ணையும் மக்களையும் கொல்லும் செயல் ” என்று கூறி, இயற்கை உர விவசாயம் செய்யும் பெரியவர் மறுக்கிறார் . 
 
எல்லோரும் அந்த கண்ணிய விவசாயிக்கு எதிராக இருக்கும் சூழலில் அவர் எடுக்கும்ஒரு  முடிவு என்ன விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதே  இந்த ஐ ஆர் 8
 
குறைந்த நாள் விவசாயம் , அதிக மகசூல், பஞ்சகால பயன்பாடு  என்ற போர்வையில் பாரம்பரிய ஆரோக்கிய விவசாயத்தை அழிக்க களம் இறங்கிய  விசயங்களில் இந்த ஐ ஆர் 8 நெல் ரகமும் ஒன்று . 
 
அதன் பெயரால் விவசாயத்தை ஆதரிக்கும் ஒரு படத்தை அதுவும் ஒரு பாரம்பரிய விவசாயியின் பாட்டை படமாக எடுத்து இருக்கிறார் இயக்குனர் என்.பி. இஸ்மாயில்
 
இன்றைய நிலையில் நாட்டுக்கு மிக அவசியமாக சொல்ல வேண்டிய கதை . வர வேண்டிய படம் . அந்த வகையில் படக் குழுவுக்கு பாராட்டுகள் . 
 
காட்சி மூலம் சொல்ல வேண்டிய பல நல்ல விசயங்களை ஜஸ்ட் லைக் தட் வசனமாகவே பேசுகிறது இந்தப் படம் . எனினும் கூட இதை எல்லாம் இவர்களாவது சொல்கிறார்களே என்று நினைக்கும் போது இவர்களை பாராட்டவே வேண்டும் . 
 
எளிய புது நடிக நடிகையர் உற்சாகமாக நடிக்கிறார்கள் .  இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம் 
 
அப்புக்குட்டி சுப்புராஜ் நகைச்சுவை காட்சிகள் பெரும்பாலும் புன்னகை சில சமயம் வெடிச் சிரிப்பு . 
 
கே வி மணியின் ஒளிப்பதிவு கிராமத்தை உணர வைக்கிறது . வாசுவின் படத் தொகுப்பும் ஒகே .
 
முக்கியக் காட்சிகளில் படமாக்கல் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம். 
 
எனினும் படாடோப பளபள ஆடம்பர அலங்காரப் படங்களுக்கிடையே , அவசியமான விஷயத்தை அவசியமான நேரத்தில் அக்கறையோடு சொல்லி இருக்கும் விதத்தில் ஆதரிக்க வேண்டிய படம்  ஐ ஆர் 8.  
 
 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *