இரிடியம் @ விமர்சனம்

iridiyam 2

குவாடரா மூவீஸ் சார்பில் தாழை எம் சரவணன் தயாரிக்க, மோகன் குமார், விஜய் ஆதிக் , ஆருஷி,  யோகி பாபு,  மதுமிதா ஆகியோர் நடிப்பில் ஷாய் முகுந்தன் எழுதி இயக்கி இருக்கும் படம்  இரிடியம் .

இதயம் தொடுமா இரிடியம் ? பார்க்கலாம்.

சதுரங்க வேட்டை படத்தின் மூலம் அண்மையில் பரபரப்பாக பேசப்பட்ட வார்த்தை இரிடியம் .

கோவில் கோபுரங்களில் இடி விழுந்தால் அது சாமி சிலையை தாக்கக் கூடாது என்பதற்காக கோபுரங்களில் வைக்கப்பட்ட இரிடியம் என்ற விலை உயந்த உலோகம்….. அது அரிசியை தன்னை நோக்கி இழுக்கும் சக்தி வாய்ந்தது (ரைஸ் புல்லிங்) என்ற மூட நம்பிக்கை , அதை வைத்து நடக்கும் ஏமாற்று வேலைகளை அந்தப் படம் சொன்னது .

இந்த இரிடியம் படத்தின் கதை அதை இன்னும் விரிவாகவும் சுவாரஸ்யமாகவும் சொல்கிறது .

உதாரணமாக ஒரு கோவில் கோபுரத்தில் உள்ள இரிடியத்தை எடுக்க வேண்டும் என்று சமூக விரோதிகள் முடிவு செய்து விட்டால் அந்த கோவிலுக்குள் பன்றியை வெட்டிப் போட்டு அந்தக் கோவிலையே சக்தியற்ற கோவில் என்று அறிவிக்க செய்து கோவிலை மூட வைத்து அந்த கோபுர இரிடியத்தை திருடுவார்கள்…

கோவில் கோபுரங்கள் மட்டும் அல்லாது கிழக்கிந்தியக் கம்பெனி காலத்து பத்திரங்களிலும் இந்த இரிடியம் உண்டு … 

இப்படி பல கதைகளை ரசிக்கும்படி சொல்கிறது இந்தப் படம் .

iridiyam 5

இரிடியம் பிசினசில் ஈடுபடும் நபர்களை வேட்டையாடி பணம் பறிக்கும் வேலை செய்கிற — பார்வையாலே பலரையும் வசியம் செய்து தான் விரும்பும் வேலையை செய்ய வைக்கிற – நோக்கு வர்மம் தெரிந்த ஒரு மனோவசிய அயோக்கியன் (ஏழாம் அறிவு பட வில்லன் போல !), அவனை கைது செய்யப் போராடும் ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி (நாயகன் மோகன் குமார் ) ….  இது ஒரு கதை .

வெளிநாட்டுக்குப் போய் படிக்க ஆசைப்படும் ஒரு இளம்பெண் (நாயகி ஆருஷி ) , அவளை காதலிக்கும் ஒரு இளைஞன் (விஜய் ஆதிக் ) இவர்களின் சீரியஸ் காதல் ஒரு பக்கம் …..

அந்த காதலனின் நண்பன் (யோகி பாபு ) அவனை காதலிக்கும் ஒரு ஜிங்கிடி (மதுமிதா ) இவர்களின் நகைச்சுவை அடிப்படையிலான காதல் மறுபக்கம் ….

இந்த மூன்றையும் ஒன்றோடு ஒன்று பிணைத்து திரைக்கதை அமைத்து …

கடைசியில் போலீஸ் உட்பட யாராக இருந்தாலும் நோக்கு வர்மம் தெரிந்த ஆளை வெல்ல வேண்டும் என்றால் நெற்றியில் மஞ்சள் , விபூதி , குங்குமம் வைத்துக் கொண்டு கறுப்புக் கண்ணாடி போட்டுக் கொண்டு போக வேண்டும் என்று சொல்லி..

இப்படி பொருத்தமும் சுவாரஸ்யமும் சேர்ந்த சம்பவங்களை சொல்லி முடிகிறது படம் .

மோகன் குமார் போலீஸ் வேடத்துக்கு தோற்றப் பொருத்தத்துடன் இருக்கிறார் . ஆருஷி அழகாக இருக்கிறார் . விஜய் ஆதிக் ஒகே ரகம் .

iridiyam 1

யோகி பாபு பல இடங்களில் வாய் விட்டு சிரிக்க வைக்கிறார் .மதுமிதா வழக்கம் போல கலக்குகிறார் . பாவா லட்சுமணனும்  நகைச்சுவையில் ஸ்கோர் செய்கிறார் . 

கதாநாயகியின் அம்மா என்று சிலுக்கு ஸ்மிதா போட்டோவை மாட்டி வைப்பது , விஜயலட்சுமி என்ற சில்க்கின் சொந்தப் பெயரை காமெடிக்கு பயன்படுத்துவது .. பொண்ணு பார்க்க வரும் மாப்பிள்ளையின் காமெடி என்று சின்னச் சின்ன கேரக்டர்கள் மூலமாகவும் காமெடி சேர்த்து இருக்கிறார் இயக்குனர் ஷாய் முகுந்தன்.

நோக்கு வர்மம் கற்ற வில்லனாக வருபவரும் மிரட்டுகிறார் . மெஸ்மரிசக் காட்சிகள் நன்றாக இருக்கின்றன .

கோபாலின் பின்னணி இசை ஒகே ராகம்! (எழுத்துப் பிழை அல்ல !)

iridiyam 4காடுகள் சம்மந்தப்பட்ட  காட்சிகளில் கவனிக்க வைக்கிறார் ஒளிபதிவாளர் கோபி சபாபதி .

திரைக்கதை , படமாக்கல் உட்பட சகல விசயங்களிலும் இன்னும் கொஞ்சம் மெனக்கட்டு இருந்தால் படம் பட்டையைக் கிளப்பி இருக்கும் .

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →