இரும்புத் திரை @ விமர்சனம்

விஷால் பிலிம் பேக்டரி சார்பில் நடிகர் விஷால் தயாரிக்க, விஷால், சமந்தா, அர்ஜுன் , டெல்லி கணேஷ் , காளி வெங்கட், ரோபோ சங்கர் நடிப்பில், 

பி எஸ் மித்திரன் எழுதி இயக்கி இருக்கும் படம் இரும்புத் திரை . 

ஜெமினியின் தயாரிப்பில் சிவாஜி  வைஜயந்தி மாலா நடிக்க எஸ் எஸ் வாசன் அவர்கள் தயாரித்து இயக்கி, 
 

1960 ஆம் ஆண்டு வந்த இரும்புத் திரை படம் ஒரு மாபெரும் வெற்றிக் காவியம் . 

 

சரி, இந்த 2018 இரும்புத் திரையில்   ரசிகர்களுக்கு சுவாரஸ்யமானகாட்சிகள் இருக்கிறதா ? பார்க்கலாம் .

தனியார் வங்கியின்  கடன் தொல்லையால் இறந்த ஒருவனின் மனைவியை மரியாதை இன்றி பேசி அவமானப் படுத்தும் ஒரு கடன் வசூலிக்கும் நபரை,  
கோபக்கார –  ராணுவ மேஜரான கதிரவன் ( விஷால் )  அடித்துத் துவைக்கிறார். 
 
அது போலீஸ் கிரிமினல் கேஸ் ஆகி ராணுவ மையத்துக்குப் புகாராக வருகிறது . 
 
இது போன்ற சில சம்பவங்களால் கதிரவனுக்கு மன நிலைத் தகுதிச் சான்றிதழ் இருந்தால்தான் ,
 
வேலையில் தொடர முடியும் என்று முடிவு செய்யும் ராணுவ அலுவலகம் , கதிரவனை மன நல மருத்துவர் ரதி தேவியிடம் (சமந்தா) அனுப்புகிறது . 
 
கதிரவன் ரதிதேவியிடமும் கோபப்பட , பொறுமையாகக் கையாளும் ரதிதேவி கதிரவனின் கோபத்துக்கான காரணத்தைக் கண்டு பிடிக்கிறார் .
 
நோயாளி அம்மா , எதற்கெடுத்தாலும் கடன் வாங்கி விட்டு ஓடி ஒளியும் அப்பா (டெல்லி கணேஷ்)  ,
 
ஒரு தங்கை இவர்களுடன் வாழ்ந்த சிறுவயது கதிரவனுக்கு வாழ்க்கை நரகமாக இருந்திருக்கிறது . 
 
கடன் வாங்கி விட்டு வீட்டுக்குள் வந்து ஒளிந்து கொள்ளும் அப்பா , கடன்காரர்களை எதிர்கொள்ளும் அம்மா, 
 
அதனால் உணரும் அவமானம் இவற்றால் நொந்து போகும் கதிரவன்,  அம்மா இறந்த பின்னர் 
 
படித்து வளர்ந்து வேலைக்கு வந்து , மாதம் ஐயாயிரம் ரூபாயை  ஊரில் உள்ள அப்பாவுக்கும் தங்கைக்கும் அனுப்புவதோடு நின்று விடுகிறான் . 
 
ஆக, சிறு வயது சம்பவங்களே  கதிரவனின் கோபத்துக்கு காரணம் என்று உணரும் ரதி தேவி , குடும்பத்தோடு பழகினால் சரியாகும் என்று, 
 
கோபத்தைக் கட்டுப்படுத்தும் பயிற்சிகளையும்  கொடுத்து ஊருக்கு  அனுப்பி வைக்கிறார் . 
 
ஊருக்கு வரும் கதிரவனிடம், அவனது  தங்கை ஒட்டாமல் இருக்கிறாள் . தான் அனுப்பும் பணத்தையும் மீறி அவர்கள் கஷ்டப் படுவது புரிகிறது . 
 
அதே நேரம் , அவளும் ஓர் இளைஞனும் காதலிப்பதும், கல்யாணத்துக்கு மாப்பிள்ளையின் குடும்பம் வரதட்சனை கேட்பதும், 
 
அதோடு சேர்த்து கல்யாணத்துக்கு பத்து லட்சம்  தேவைபடுவதும்  தெரிகிறது . 
 
நிலத்தை விற்று நான்கு லட்சம் கிடைத்த நிலையில் , மீதி ஆறு லட்சம் கடன்  வாங்க அப்பாவுடன் சென்னை வருகிறான் . 
 
ராணுவ வீரனுக்கு கடன் தர. அரசு வங்கிகள் மறுக்கின்றன. சொத்து அடமானப் பாதுகாப்பு இல்லாமல் கடன்  தர முடியாது என்று தனியார் வங்கிகளும் சேர்ந்தே சொல்கின்றன . 
 
அப்போது அவர்களை தொடர்பு கொள்ளும் ஒரு கடன்ஏஜன்ட் ,  உரிமை இல்லாத சொத்தை உரிமையானது என்று போலி சர்டிபிகேட் ரெடி செய்து ;  கடன் வாங்க வழி சொல்கிறான் . 
 
தவணையை ஒழுங்காக கடைசிவரை கட்டி விட்டால் பிரச்னை வராது . கட்டாவிட்டால் அடுத்தவர் சொத்தை காட்டி கடன்  வாங்கியதற்காக, 
 
ஜெயிலுக்கு போக வேண்டி வரும் என்கிறான் . ஆறு லட்ச ரூபாய்க்கு பத்து பர்சன்ட் கமிஷன் கேட்கிறான் . 
 
கதிரவன் பொய் சொல்லி கடன்  வாங்க மறுக்க, அப்பா வற்புறுத், ஒரு நிலையில் சம்மதித்து ,  வாங்குகிறான் . 
 
பணம் வருகிறது . கமிஷன் போக மீதப் அப்பாவின் அக்கவுண்டில் விழுகிறது . அவர் ஏ டி  எம் மில் பணம் எடுக்க டெபிட் கார்டும் வாங்குகிறார் .
ஒரு முறை மட்டும்  சில ஆயிரம் அவர் எடுக்கிறார் . 
 
அடுத்த நாள் பணம் எடுக்கப் போனால் அக்கவுண்டில் பணமே இல்லை அஞ்சே கால் லட்சமும் காலி ! 
 
பேங்குக்கு போனால் மொத்த பணமும்  கதிரவனின் அப்பாவே எடுத்தததாக வங்கி சொல்கிறது .
 
ஆனால் பணம் எடுத்தால் செல்போனில் வரும் மெசேஜும் கதிரவன் அப்பாவுக்கு வர வில்லை . 
 
ரதி தேவிக்கு தெரிந்த போலீஸ் அதிகாரியிடம் உதவி கேட்கப் போனால் அடுத்தவர் சொத்தை காட்டி கடன் வாங்கிய குற்றத்துக்கு, 
 
கதிரவனைதான் கைது செய்யணும் என்கிறார் . தவிர மாசாமாசம் தவணை கட்டவில்லை என்றால் ஜெயிலுக்குப் போவதை தடுக்க முடியாது என்கிறார் . தனது அறிவு , ரதியின் ஆலோசனை , ராணுவ நண்பர்களின் உதவி இவற்றின் மூலம் பிரச்னையின் நூலிழையைப் பிடித்து முன்னேறும் கதிரவன், 
 
கம்பியூட்டர் வித்தையில் புலியும் , பக்கா கிரிமினலுமான சத்திய மூர்த்தி என்பவன்  (அர்ஜுன்) ஒயிட் டெவில் என்ற பெயரில், 
 
தனி மனிதன் பற்றிய அத்தனை விவரங்கள் மற்றும் தேவைகளை டெக்னாலஜி மூலம் அறிந்து கொண்டு , 
 
அவர்களில் கடன்  தேவைப் படுவோருக்கு வலை விரித்து , சொத்து பாதுகாப்பு இல்லாதவர்களுக்கு போலியாக ஏற்பாடு செய்து கொடுத்து கடன் வாங்கிக் கொடுத்து ,
 
பணத்தையும் திருடி , அவர்களை கடனில் சிக்க வைத்து , கட்ட முடியாத நிலையில் தற்கொலை செய்து கொள்ள வைத்து ….. 
இப்படி கோடி கோடியாக சொத்து சேர்த்து வைத்து இருப்பது தெரிகிறது . 
 
அதுமட்டுமல்லாது , மத்திய தகவல் தொடர்பு அமைச்சரின் அக்கவுண்டில் உள்ள பணத்தை அவர் கண் முன்னாடியே லட்சம் லட்சமாக எடுத்துக் காட்டி அவரை பயமுறுத்தி ,
 
அதன் மூலம் , இந்தியாவில் ஆதார் கார்டு வாங்கி இருக்கும் அனைவரின் விவரங்களையும் பெற்று , 
 
அதில் லோன் வாங்க விரும்புபவர்களில் சொத்து பாதுகாப்பு காட்ட முடியாதவர்களுக்கு போலி சொத்து அடமானம் ஏற்பாடு செய்து கடன்  வாங்கிக் கொடுத்து,
 
அவர்களின் பணத்தை எல்லாம் திருட திட்டமிடுவதும் தெரிய வர , 
 
இது மட்டும் நடந்தால் பல லட்சம் இந்தியர்கள் தற்கொலை செய்து கொள்ளும் கொடூரம் நடக்கும்   என்ற நிலையில் 
 
அப்புறம் என்ன நடந்தது என்பதே இந்த இரும்புத் திரை . 
 
சபாஷ் பி எஸ் மித்ரன் !
 
                                 பி எஸ் மித்ரன்

இப்படி ஒரு சமூக அக்கறை மிக்க படம் பார்த்து ரொம்ப ரொம்ப நாள் ஆச்சு . அதையும் முதல் படமாகவே கொடுத்து இருப்பதில் மிக உயர்ந்து நிற்கிறார் மித்ரன். அருமை . பெருமை . சிறப்பு . 

 
பேஸ் புக்கில் நாம் தரும் விவரங்கள் , பல்வேறு முக நூல் செயலிகளில் நாம் விளையாடும் முன்பு முக நூல் நம்  விவரங்களை பெற நாம் அனுமதிப்பதால் திரட்டப்படும் விவரங்கள், 
 
ஸ்மார்ட் போன்களில் ஒவ்வொரு செயலியை பயன்படுத்தும் முன்பும் நமது அனைத்து எண்களை விவரங்களை பெற நாம் தரும் அனுமதி, 
 
ஆங்காங்கே அதிர்ஷ்டக் குலுக்கல்களில் நாம் தரும் நமது பெயர் வயது முகவரி போன் நம்பர் மற்றும் பல விவரங்கள், இவற்றின் மூலம் சேகரிக்கப் படும் விவரங்கள்…. 
 
இவற்றை ஒரு டேட்டா ஒரு ரூபாய் என்று காசு கொடுத்து வாங்கும் நபர்கள், 
 
திரட்டப்படும் அந்த நபர்களில் இருந்து லோன் தேவைப்படுவோர் கண்டு பிடிக்கப் படுவது , 
 
முறைப்படி லோன் வாங்க முயன்று , லோன் மறுக்கப்படும் நபர்கள் பற்றிய விவரங்களை அந்த வங்கியில் உள்ள ஆட்கள் மூலமே பெறுவது … 
 
பிறகு ஏஜண்டை அனுப்புவது , போலி சொத்து அடமானம் ஏற்பாடு செய்வது , லோன் வாங்கித் தருவது ,
 
கடன் வாங்கியவரின் வங்கிக் கணக்கில் பணம் விழுந்த பிறகு, அந்த அக்கவுண்டை ஹேக் செய்து பணத்தை படிப்படியாக மொத்தமாக தூக்குவது , 
 
பணம் எடுக்கும்போது நம் செல்போனுக்கு வங்கி அனுப்பும் பணம் எடுக்கப்பட்ட மெசேஜ் கூட நம் மொபைல் போனுக்கு வராமல் செய்யும் கம்பியூட்டர் வித்தை என்று… 
நாட்டில் கொஞ்ச பேருக்கு மட்டும் நடந்து வருகிற கொடுமையை , ஆனால் யாருக்கு வேண்டுமானாலும் நடக்க வாய்ப்புள்ள கொடுமையை ,
 
எல்லா தரப்பு மக்களுக்கும் புரியும் படி சிறப்பாக , அதே நேரம் சுவாரஸ்யமாக , பரபரபரப்பாக , விறுவிறுப்பாக ,
 
சுறுசுறுப்பாக சொல்லும்  வகையில் ஓங்கி உயர்ந்து நிற்கிறது மித்ரனின் அதி அற்புதமாக திரைக்கதை . அபாரம் !
 
விமானத்தில் இருந்து இறங்கியதும் நாம் தூக்கி எறியும் போர்டிங் பாஸ் ஐ பொறுக்கி எடுத்து அதில் உள்ள QRL CODE ஐ ஸ்கேன் செய்தால், 
 
நம் வரலாறே  கிடைத்து விடும் என்று படத்தில் சொல்லும்போது , ஆடித்தான் போகிறோம் !
 
நமக்குத் தெரியாமலே  நாம் யாருடன் வேண்டுமானாலும் பேசும் போனை ரிக்கார்டு செய்யலாம்  என்பது மட்டுமல்ல… 
நம் ஸ்மார்ட் போனின் கேமராவை ஆன் செய்து படம் பிடிக்கலாம்  என்ற விஷயங்கள் வெகு ஜனத்தை அதிர வைக்கும் என்பதில் ஐயமில்லை .
 
குறிப்பாக Y2K பிரச்னைக்குப் பிறகு குப்பைக்குப் போன ‘ஹார்ட் டிஸ்க்’குகளை சமூக விரோதிகள் பயன்படுத்துவது பற்றிய தகவல் எல்லாம் பலரும் அறியாத ஒன்று 
 
கடன் தருவதன் மூலம் நடக்கும் கொடுமையை சொல்ல வரும் படத்தில் கடன் வாங்குவதின் அவலத்தை சொல்ல ஒரு கேரக்டர் வேண்டும் .
 
அதுதான் டெல்லிகணேஷ் கதாபாத்திரம் . அந்த அளவில் அதை நிறுத்தினால் கூட போதும் . 
ஆனால் அவர் அப்படி கடன் வாங்கியதற்கு ஓர் அவசியமான காரணத்தை சொல்லும்  விதம்  அருமை . அதன் மூலம் போலி சொத்து அடமான விசயத்துக்கு ஒத்துக் கொள்கிறவர்களின் பின்னால் இருக்கும் வேறு வழியில்லாத்தன்மையை பூடகமாக வெளிப்படுத்தும் திரைக்கதை உத்தி  அழகு . 
 
அதே நேரம் ஊர்ப் புறத்தில் கடன் கொடுக்கும் நபர்களின் மனிதாபிமானத்தையும்,  இப்போது கூப்பிட்டு கூப்பிட்டு கெஞ்சிக் கடன் கொடுத்து விட்டு, 
 
அப்புறம் கட்ட முடியாத சூழ்நிலையை உருவாக்கி கோரமுகம் காட்டும்  இந்த தனியார் வங்கிக்கடன் தருபவர்களின் அரக்க குணத்தையும் காட்டும் விதம்,  கிளாஸ் !
 
சமந்தாவின் கதாபாத்திரமும் மிக சிறப்பாகப் படைக்கப்பட்டுள்ளது . 
 
உறவுகளின் மேன்மை , சமூக விழிப்புணர்ச்சி, அழகியல் , வணிக ரீதியிலான ஜன ரஞ்சகம் , நகைச்சுவை இப்படி எல்லா வகையில் கால் பாவி நிற்கிறது திரைக்கதை . அருமை அருமை 
மேக்கிங் மற்றும் படமாக்கலிலும் அசத்தி இருக்கிறார் மித்ரன். மிக சிறப்பான டைரக்ஷன் மற்றும் டீட்டெய்லிங்!
 
பொன் . பார்த்திபனின்  வசனங்கள்  மிகப் பிரம்மாதம் . 
 
“நம்மள எரிச்சல் மூட்டுபவர்கள் மற்றும் கோபப் படுத்துபவர்களை ஒரு விவரம் இல்லாத குழந்தை போல பார்த்தால் போதும் . நமக்கு கோபம் வராது சிரிப்புதான் வரும்” என்ற வசனம் ஒரு சோறு பதம் .! 
 
யுவன் சங்கர் ராஜாவின் பாடல்கள் ஒகே . பின்னணி இசை அபாரம், 
 
ஜார்ஜ் வில்லியம்சின் ஒளிப்பதிவு  படம் நிகழும் களத்தை நம்பகத்தனமைக்கு மிக நெருக்கமாக கொண்டு வருகிறது . 
 
இவ்வளவு விவரணைகள் , விவரங்கள் அடங்கிய திரைக்கதை கொண்ட படத்தை  தொங்க விடாமல் கொண்டு போவதில் ரூபனின் படத் தொகுப்புக்கு பெரும் பங்கு உண்டு . விஷுவல் எபெக்ட்டும் அசத்துகிறது 
 
மேஜராக, கோபக்கார மனிதனாக , பாசமுள்ள அண்ணனாக,  நேசிக்கும் பெண் முன்னே உருகும் குழந்தையாக,   
 
அப்பாவின் பேச்சைக் கேட்டு  தவறான முறையில் லோன் வாங்கி விட்டு வருந்தும் மிடில் கிளாஸ் மனிதனாக, ஒயிட் டெவிலின் செயல்களால் பதறும் கவுரமான நபராக ,
 
கடைசியில் ஒயிட் டெவில் முன்பு விஸ்வரூபம் எடுக்கும் நாயகனாக பின்னிப் பெடல் எடுத்து இருக்கிறார் விஷால் . 
 
இது வரைக்குமான விஷாலின் மாஸ்டர் பீஸ் இந்தப் படம் . 
 
இதுவரை பல படங்களில் கிராமத்து மனிதனாக விஷால் நிற்பார் . இதில்தான் கிராமத்து நபராக மாறி இருக்கிறார் . 
 
ஆரம்பத்தில் மிலிட்டரி ஆட்களிடம் அடி வாங்கும் காட்சி உட்பட சில  காட்சிகளில்  – ஹீரோயிசம் பார்க்காமல் நடித்து இருப்பதும் அழகு . 
 
சமந்தா அழகு தேவதையாக வலம் வருகிறார் . அவரது பளீர் சிரிப்பு சில படங்களில் தேவை இல்லாமல் தோன்றும் . ஆனால் இந்த கேரக்டருக்கு ஏகப் பொருத்தம் . 
 
வில்லனாக அர்ஜுன் மிக சிறப்பாக நடித்துள்ளார் . எனினும் அந்த கேரக்டர் இன்னும் பெரிதாக எதிர்பார்க்கிறது. இன்னும் சிறப்பான நடிகரை ! 
 
அவர் பழைய ஆக்ஷன் கிங் என்பதற்காக கடைசியில் கட்டி உருளும் அந்த ஃபைட் எல்லாம் ஓவர் . அந்த சண்டையையும்  வேறு மாதிரி மாடர்னாக அமைத்து இருக்கலாம் 
 
டெல்லி கணேஷ் சிறப்பு . ரோபோ சங்கர்  ஆங்காங்கே சிரிக்க வைக்கிறார் . 
 
யார் அந்த தங்கச்சி . தமிழை அப்படி கடிச்சு கடிச்சு பேசிக் கொண்டு ? ஒரு வேளை வாயில சுளுக்கோ ?
 
விஷாலை வெளிநாடு போய் வாழ ஆசைப்படுவதாக  சில காட்சிகளில் காட்டுகிறீர்களே.. அதன் காரண காரியம் என்ன மித்ரன்? அதை பாதியில் அம்போ என்று விட்டதும் ஏன் ?
 
ஏதோ ஒரு முக்கிய விசயத்தை கண்டுபிடிக்க அவர் அப்படி நடிக்கிறாரோ என்று பார்த்தால் அதுவும் இல்லை . 
 
அந்த விசயத்தை ஏதோ ஒரு வகையில் மெயின் திரைக்க்கதையோடு சேர்த்து இருக்கலாமே . 
 
அதே போல அயோக்கியனான  வில்லன் பாரதியார் பாட்டை சொல்லி தனது கேரக்டரை விளக்குவது எல்லாம் நியாயமா ஞாயமாரே ?

தங்கையை லவ் பண்ணும் பையனின் அம்மா வரதட்சணையாக பணம் கேட்டால், அந்த மாப்பிள்ளையிடம் 
 
“வரதட்சனை கேட்கறதுதான் உங்க லவ் வாடா ?”என்று ஒரு வார்த்தை கூட கேட்காமல் , அப்படியே கதிரவன் ஏற்றுக் கொள்வது என்ன ஹீரோயிசமோ ?
 
இப்படி ஒரு சமூக  விழிப்புணர்ச்சி மேட்சில் அப்படி ஒரு நோபால் எதுக்கு ?
 
ஆனாலும் என்ன ?
 
டிஜிட்டல் இந்தியா , எலக்ட்ரானிக் மணி, ஆன் லைன் பரி வர்த்தனை கோளாறுகள் , ஆதார் கார்டு அலங்கோலங்கள் ,
 
எந்த சின்னத்துக்கு ஓட்டுப் போட்டாலும் ஒரே சின்னத்தில் விழும்படி ஓட்டு எந்திரத்தில் செய்யும் தில்லு முல்லுகள் என்று மோடி அரசின் அவலங்களை, 
 
 மறைமுகமாகவும் நேரிடயாக வசனம் மூலமாகவும் சில்லு சில்லாக தகர்க்கும் கம்பீரம் .. அடடா அடடா ! என்ன சொல்லிப் பாராட்ட ! 
 
அதே நேரம் காசுக்கு ஓட்டுப் போடும் மக்களின் குணம், காரியம் ஆக வேண்டும் என்றால் எதற்கும் தயாராக இருக்கும் அவர்களின் மன நிலை என்று அதையும் படம் கண்டிக்கத் தவறவில்லை. 
 
இந்தப் படத்தைப் பார்ப்போருக்கு ஸ்மார்ட் போன், முக நூல் உள்ளிட்ட சோஷியல் மீடியாக்களை எப்படி பயன்படுத்துவது என்ற விழிப்புணர்ச்சி வரும் . 
 
அதன் மூலம் பெரும் பிரச்னைகளில் இருந்து அவர்கள் தனைகளை காத்துக் கொள்ளும் வாய்ப்பு மையம் . 
 
படம் முடிந்து வெளியே வந்த போது, பேசாமல் ஸ்மார்ட் போனை தூக்கி எறிந்து விட்டு நோக்கியா 1100 வாங்கிக் கொண்டு நிம்மதியாக வாழலாமா என்று ஒரு நொடியாவது தோன்றும் . 
 
அதுதான் இந்தப் படத்தின் இமாலய வெற்றி 
 
இரும்புத் திரை…  தங்கத் திரை; வைரத் திரை !
 
மகுடம் சூடும் கலைஞர்கள் 
——————————————
பி எஸ் மித்ரன், விஷால், சமந்தா, யுவன் சங்கர் ராஜா 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *