இருவர் ஒன்றானால் @ விமர்சனம்

iru 2
ரமணா ஆர்ட்ஸ் சார்பில் ஏ.எம்.சம்பத் குமார் தயாரிக்க, பி.ஆர்.பிரபு , கிருத்திகா மாலினி இணையராக நடிக்க, ஜி.அன்பு  இயக்கி இருக்கும் படம் இருவர் ஒன்றானால் . ரசிகர்கள் படத்தோடு ஒன்றுவார்களா? பார்க்கலாம் .

யதார்த்தமான இயல்பான தனித்தன்மை வாய்ந்த இளைஞனான கௌசிக் (பி.ஆர். பிரபு)கின் கல்லூரி வாழ்வில் பல பெண்கள் தங்கள் காதலை சொல்கிறார்கள். பள்ளியில் ஒன்றாக படித்து கல்லூரிக்கும் ஒன்றாக வந்த தியா (தீக்ஷிதா), தோழியாக பழகி பிறகு காதலை சொன்ன ஷைலூ (ஷைலேந்தரி),  ஹோம்லியாக காதலை சொன்ன லக்ஷ்மி (கிருத்திகா மேனன் )….

இப்படி பல பெண்கள் அடுத்தடுத்து காதலைச் சொல்லியும் , அவர்கள் மேல் காதல் உணர்வு வராமல் , நான் உங்க கிட்ட ஃபிரண்டாதான் பழகினேன் ” என்று சொல்லிவிடுகிறான் கௌசிக் .

” நீ இல்லாட்டினா செத்துப் போவேன் . உன்னைத் தவிர யாரோடும் வாழ முடியாது” என்று சொல்லி வைத்தது போல ஒரே மாதிரி சத்தியம் செய்த அந்தப் பெண்கள் எல்லோருமே,  அடுத்த சில மாதங்களிலேயே வேறு காதலனை தேடிக் கொள்கிறார்கள். அந்த காதலர்கள் எல்லாருமே கௌசிக்கின் சக நண்பர்களே. இப்படியாக காதலை மறுத்தாலும் அந்தப் பெண்களுடன் நட்பாகவே பழகுகிறான் கௌசிக்

இந்த நிலையில் ஓவியா (கிருத்திகா மாலினி) என்ற பெண்ணைப் பார்த்ததும்,  கண்ட உடன் காதல் வருகிறது கௌசிக்கிற்கு.

 ஒவியாவிடம் பலரும் காதலை சொல்லி அவள் காதலை மறுத்ததால் தற்கொலை செய்து கொள்ள முயன்று,  .. இப்படி பலபேரைப் பார்த்தவள் ஓவியா .

ஓவியாவை தனது காதலி என்று சொல்லி கௌசிக் குதூகலிக்க, அங்கு வரும் ஓவியா அவனை திட்டி அவமானப்படுத்தி விட்டுப் போகிறாள் . அவனது பழைய காதலிகள் எல்லாம் அதை பார்த்துப் பதைக்கிறார்கள். ஒரு நிமிடம் துவளும் கௌசிக் அடுத்த நொடி மீண்டு, அதன்  விடாமல் அவளை பின் தொடர்கிறான். அவள் கொடாக்கண்டியாக இருக்க இவன் விடாக் கண்டனாக இருக்கிறான் .

திடீரென அவன் வராமல் போக , அவன் கண்ணில் படாதது ஓவியாவை ஏங்க வைக்கிறது . தனக்குள் காதல் மலர்ந்ததை அவள் உணர்ந்த தருணத்தில் அவளை விரைவில் காதலுக்கு சம்மதிக்க வைக்கும் வழி என்ற பெயரில் , அவளது தோழி ஷ்ரவ்யா (ஷ்ரவ்யா) நடத்தும் ஒரு நாடகத்துக்கு கௌசிக் உடன்பட , அதன் விளைவாக ஓவியா தற்கொலை செய்து கொள்ளப் போவதாக சொல்லி விட்டுப் போய்விட, அவளை தேடி எல்லோரும் அலைய , கடைசியில் ஓவியாவுக்கு என்ன ஆனது என்பதே இந்த இருவர் ஒன்றானால்.

iru 1

கௌசிக்கை காதலிக்கும் ஒவ்வொரு பெண்ணுமே ”நீ இல்லா விட்டால் செத்துப்,போவேன்” என்பதும் அடுத்த கொஞ்ச நாளில் கௌசிக்கின் நண்பர்களில் ஒருவனையே தேர்ந்தெடுத்து காதலிப்பது அதை கௌசிக் கேஷுவலாக டீல் செய்வதும் செம கியூட் .

மொத்தப் படத்திலும் 35 வயதுக்கு மேற்பட்ட ஆட்கள் மூன்றே பேர் தலைக்கு இரண்டு ஷாட்களில் மட்டுமே வருகிறார்கள். அந்த அளவுக்கு படம் முழுக்க இளமை, ஆபாசம் இல்லாத கவர்ச்சி, வண்ண மயம் என்று நிரம்பி வழிகிறது.

படத்தில் வரும் எல்லா  பெண்களுமே ஒரு யதார்த்தமான யூத் படத்துக்கான கதாநாயகி ரேஞ்சுக்கு இருக்கிறார்கள் . உலகம் முழுக்க வெள்ளைத் தோல்கள் மட்டுமே உலவுகின்றன.

iru 3

“ஒருத்தன லவ் பண்ற பொண்ணுக்கு அவன் கிடைக்காம போய்ட்டா ,தன்னை லவ் பண்ற வேற ஒருத்தனை செலக்ட் பண்ணி லவ் பண்ண ஆரம்பிச்சுடுவா . ஆனா பையனுங்க ஒரு பொண்ணை லவ் பண்ண ஆரம்பிச்சிட்டா அவளைத் தவிர யாரையும் யோசிக்க மாட்டாங்க”  என்ற வசனம் விவாதத்துக்கு உரிய விஷயம் என்றாலும், இந்தப் படத்துக்கான சிச்சுவேஷனில்  கேட்கும்போது ரசிக்க வைக்கிறது

வசன நகைச்சுவைகளும் காட்சி நகைச்சுவைகளும் பல இடங்களில் புண் சிரிப்பையும் சில இடங்களில் பெரும் சிரிப்பையும் வரவைக்கின்றன .

குமார் ஸ்ரீதரின் ஒளிப்பதிவு கண்ணுக்கு குளிர்ச்சி . ஃபிரேம்களும் சிறப்பு . குரு கிருஷ்ணனின் இசையில் பாடல் வரிகள் புரிவதே பெரும்  சுகமாக இருக்கிறது.

அதிகத் திருப்பங்கள் இல்லாத இரண்டாம் பகுதி . ஆனால் படமாக்கிய விதத்தில் கவனம் கவர்கிறார் இயக்குனர்.

iru 4

பி.ஆர் . பிரபுவுக்கு நடிப்பு இயல்பாக வருகிறது . பக்கத்து வீட்டுப் பையனிடம் கேட்பது போன்ற அவர் குரல் அவருக்கு பலம். நன்றாக நடனம் ஆடுகிறார் . ஒரு பாடலின் பல்லவிக்கு நின்ற இடத்தில் இருந்தே முகம் மற்றும் கைகளை அசைத்து ஆடுவது அழகு .

கிருத்திகா மாலியின் முகத்தில் தெரியும் ஒரு இன்னசண்ட் கோபம் இந்த கேரக்டருக்கு மிகப் பொருத்தமாக இருக்கிறது (நிஜ வாழ்வில் கிருத்திகா பிரபுவை கல்யாணம் செய்து கொண்டு செட்டில் ஆகி விட்டதால் ..இதுக்கு மேல பாராட்டி என்ன பண்ணப் போறோம்?)

ஓவியாவின் தோழியாக வரும் ஷ்ரவ்யா செம கேஷுவல் . ஹாய் மச்சி என்று செல்லமாக கூப்பிடத் தோணும் அளவுக்கு ஸ்கோர் செய்கிறார்.

காதல் காட்சிகளை மிக சிறப்பாக எடுத்து இருப்பவர்கள் நகைச்சுவைக் காட்சிகளை விட்டேத்தியாக எடுத்து இருக்கிறார்கள் , அதுவே சிரிக்கும்படி இருக்கிறது . இன்னும் சிறப்பாக எடுத்து இருந்தால் தியேட்டர் லகலக ஆகி இருக்கும் .

அதே போல இரண்டாம் பகுதியில் பல சுவையான ஏரியாக்களை அநியாயமாக மிஸ் செய்து விட்டுப் போகிறது திரைக்கதை . பெரிய பரபரபை ஏற்படுத்தத் தவறும் கிளைமாக்ஸ் ஏரியா படு வீக் .

ஆனாலும் ஒரு சுகமான காதல் படம் பார்த்த திருப்தியை தருகிறதே .. அங்கே நிக்குது படம் !

மொத்தத்தில்

இருவர் ஒன்றானால்…….. இளமை என்றாகும் !

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →