இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் @ விமர்சனம்

மாதவ் மீடியா தயாரிப்பில் ஹரீஷ் கல்யான் , ஷில்பா மஞ்சுநாத் , ம க ப ஆனந்த் , பால சரவணன் , நடிப்பில் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கி இருக்கும் படம் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் . இஸ்பேட்  குத்துதா ? இல்லை இதயம் ஈர்க்குதா? பேசுவோம்.

 முரட்டு சுபாவம், அதீத கோபம் கொண்ட இளைஞன் கவுதம் ( ஹரிஷ் கல்யான்) . நண்பர்கள் குமார்( ம க பா ஆனந்த்) கர்ணா (பால சரவணன்).

 மேற்கத்திய தாக்கத்தில் வளரும்  வட இந்தியக் குடும்பத்துப் பெண் தாரா ( ஷில்பா மஞ்சுநாத்). அவளது உறவின இளைஞன் ரோஹித்( ஆதித்யா).

ஒரு பார்ட்டியில் தாரா காரணமாக கவுதமுக்கும் ரோஹித்துக்கும், அப்படியே  கவுதமுக்கும் தாராவுக்கும் இடையே மோதல் .
கவுதமுக்கும் ரோஹித்துக்குமான மோதல் அப்படியே தொடர , கவுதமுக்கும் தாராவுக்குமான மோதல் காதல் ஆகிறது . தாராவின் காதலை கவுதமும் ஏற்கிறான் . 

கவுதமின் கோபத்துக்கு காரணம் அவனது அம்மா  அவனது சின்ன வயசிலேயே அவனையும் அவன் அப்பாவையும் புறக்கணித்து விட்டு வேறொருவரை திருமணம் செய்து கொண்டதே என விளக்கப்படுகிறது .

 ரோஹித்தை கவுதம் அடித்த வழக்கு கோர்ட்டுக்கு வர, சாட்சி  சொல்ல வந்த தாரா கவுதமை காட்டிக் கொடுக்காமல் காப்பாற்றுகிறாள் . காதல் இறுகுகிறது . அதே நேரம் ரோஹித்துக்கும் தாராவுக்கும்  திருமணம் நிச்சயம் ஆகிறது .

 தங்கள் காதலை ‘நேரம் காலம் பார்த்துதான் அப்பா அம்மாவிடம் சொல்ல முடியும் அவசரப் படாதே’ என்று தாரா சொல்ல, உடனே பதிவுத் திருமணத்துக்கு கவுதம் வற்புறுத்துகிறான் . தாரா மறுக்க ,  காதலர்களுக்கும் சண்டை வருகிறது .

 அதீத பொறுமையை எதிர்பார்க்கும் தாரா, கொஞ்சம் கூட பொறுமை இல்லாத கவுதம் என்ற இந்த இரண்டு குணாதிசயங்கள் அடிக்கடி முட்டிக் கொள்ள, ரோஹித் வேறு வம்புக்கு இழுக்க , ஒரு நிலையில் ரோஹித், தாராவின் அப்பா எல்லாரையும் அடிக்கிறான் கவுதம் . 
பிரச்னை வெடிக்கிறது.வெறுத்துப் போகும் தாரா விலகிப் போகிறாள் .

 கவுதமின் அம்மா இன்னொரு திருமணம் செய்து கொண்டதற்கு  கவுதமின் அப்பாவின் மோசமான நடத்தைகளே காரணம் என்பது விளக்கப் படுகிறது.

பிரிவைத் தாள முடியாமல் தாரா மீண்டும்  தேடி வர, அதற்குள் தாராவுக்கு எதிராக,  தான் எடுத்து இருக்கும் முடிவுகளால் குற்ற உணர்ச்சிக்கு ஆளாகி விட்ட கவுதம் , ‘உன்னை ஏற்கும் தகுதி எனக்கு இல்லை . போய்  விடு’ என்கிறான் . அப்புறம் என்ன நடந்தது என்பதே இந்த இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்.

 இளமை , ரௌத்திரம் நிறைந்த காதல் கதை . 

அழுத்தம் பிடித்த இரண்டு நபர்களுக்குள் எப்படி காதல் வரும் என்பதை இன்ச் பை இன்ச் ஆக நகர்த்தி இயக்குனர் ரஞ்சித் சொல்லி இருக்கும் விதம் அபாரம் . நம்மை அறியாமலே நம் மனசு அடிமை ஆகிறது .

 ஆரம்பத்தில் கவுதம் யாரையாவது  அடிப்பதை கண்டு பயப்படும் தாரா ஒரு நிலையில் அவன் அடிக்கப் போவதை நினைத்து உற்சாகம் ஆவதெல்லாம் சரியா லாஜிக்கா என்பதை மீறி  மிக ரசனையான சினிமா காட்சி . 

எல்லோரையும் தன் பெயரான குமாரு என்ற பெயரிலேயே  ம க ப ஆனந்த் சொல்வது ரசிக்க வைக்கிறது . ஆனால் இதை இன்னும் அழுத்தமாக காமெடியாக பயன்படுத்தி இருக்கலாம்.

 நிறுத்தி நிதானமாக அழுத்தமாக காட்சிகளை எடுத்து இருக்கும் விதம் ரசிக்க வைக்கிறது .  டைரக்ஷனில் ஸ்கோர் செய்கிறார் ரஞ்சித் ஜெயக்கொடி.

காதலின் வலிகளை கருவிகளாலும் சத்தங்களாலும் இசையாக்கி ரசிக்க வைக்கிறார் சாம் சி எஸ் . பாடல்கள் இன்னும் நன்றாக இருந்திருக்கலாம் .

 லடாக் பள்ளத்தாக்குப் பகுதிகளை அழகாக காட்சிப் படுத்தியதோடு படம் முழுக்கவே காட்சியின் உணர்வுகளுக்கு வலு சேர்க்கும் வகையில் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார் ஒளிப்பதிவாளர் கவின் ராஜ் . 

நாயகனின் கேரக்டரை சரியாக உணர்த்த,  துப்பறிவாளன் தினேஷின் சண்டைக் காட்சிகள் பெரும் பலமாக இருக்கின்றன . வாழ்த்துகள்  

ஆனந்தின் ஒலிக் கலவை மிக சிறப்பு . துல்லிய ஒலிகள்  காட்சிகளை யதார்த்தப்படுத்துகின்றன .

 குண்டுக் கண்களில் ஒளி, முகம் முழுக்க கோபம், உடம்பு முழுக்க அவசரம் , அவ்வப்போது அறை சிரிப்பு என்று கவுதம் கேரக்டரில் அசத்தி இருக்கிறார் ஹரிஷ் கல்யான் . . இளமை அழகு இரண்டும் இருக்கிறது . காட்சிகளுக்கு ஏற்ப நுணுக்கமான முக பாவனைகளுக்கு பழகினால் பெரிய உயரங்களை தொடலாம் தம்பி . வாழ்த்துகள் .

 ஷில்பா மஞ்சுநாத்… கேரக்டருக்கு ஒகே . ஆனால் ஓவர் மேக்கப் , நடை உடை பாவனைகளில் அதிக பட்ச மேற்கத்தியத்தனம் மற்றும் செயற்கைத்தனம், மேக்கப் கலைந்து விடுமோ என்ற பயத்திலேயே இருப்பது போன்ற முக பாவனைகள்… ஏன் ?

 எல்லா காட்சிகளிலும் ஏதோ மாடலிங் ஷோவுக்கு வர்ணனை செய்ய வந்தவர் போலவே நிற்கிறார் ஷில்ப்.

முதல் சந்திப்பிலேயே கீழ்த்தரமாக அருவருப்பாக பேசுபவன் மேல் எப்படி ஒரு பெண்ணுக்கு காதல் வரும் ?

ஆபத்து சமயத்தில் மகளை விட்டு விட்டு ஓடுபவனுக்கு  பெண்ணை கல்யாணம் செய்து தர தாராவின் அம்மா அப்பா துடிப்பது ஏன் ?

கணவன் சரி இல்லை என்பதால் இன்னொரு திருமணம் செய்து கொள்ளும் அம்மா , கூடவே சின்னஞ்சிறு வயசு மகனையும் அழைத்துக் கொண்டு போக வேண்டியதுதானே ?அதை செய்யாமல் விட்டு விட்டுப் போன அவள் நல்ல அம்மா என்றால் எப்படி ?

 அப்படி போன பின்னும் அவ்வப்போது கவுதம் தூங்கும் போது வந்து பார்த்து விட்டுப் போவார்.அதற்கு அவனது அப்பா அனுமதி கொடுப்பார் ஆனால் அவரது கொடுமை காரணமாகத்தான் அம்மா வேறொரு கல்யாணம் செய்து கொண்டார் என்பது என்ன லாஜிக் ?

இப்படியாக வலுவில்லாத திரைக்கதையின் சோம்பேறித்தனம் காரணமாக பல கேரக்டர் அசாசினேசன்கள்.

இது போன்ற கதைகளில் கம்மியான காட்சிகளிலேயே வந்தாலும் உப காதாபாத்திரங்களின் உயிர்ப்பும் ஆளுமையும் இயல்பும் ரொம்ப முக்கியம்.

 ஆனால் கவுதம் , தாரா , ம க ப கதாபாத்திரம் தவிர மற்ற எல்லா கதாபாத்திரங்களுமே  பயோ வேஸ்ட் போலவே இருக்கிறார்கள் . 
தான் செய்த தவறை நேரடியாக ஒப்பனாக தாராவிடம் ஒத்துக் கொள்ளும் நேர்மை இல்லாத கவுதம், ஒரு நிலையில் ரொம்ப யோக்கியன் போல அந்த சப் வே காட்சியில்  மருகுவது பலே போங்கு.

இதுதான் கிளைமாக்ஸ் என்றால் அந்த காட்சியில் எதுக்கு அவ்வளவு நீண்ட ஆலாபனைகள் ?

கடைசிப் பகுதிகள் அதீத நீளம் மற்றும் மகா குழப்பம் . 

எனினும் படம் இளமைப் படையல். 

மொத்தத்தில்,

 இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் …. ஒரிஜினல் ரம்மிதான் கடைசிவரை சேரவே இல்லை 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *