இவன் தந்திரன் @ விமர்சனம்

ivan 9

மசாலா பிக்ஸ் நிறுவனத்தின் சார்பில் இயக்குநர் ஆர்.கண்ணன், எம் கே ஆர் பி புரடக்சன்ஸ்  எம்.கே.ராம்பிரசாத்துடன் இணைந்து தயாரிக்க, 

கெளதம் கார்த்திக் நாயகனாக நடிக்க,  பல விருதுகளை வாங்கிய கன்னடப் படமான ‘யூ டர்ன்’  பட நாயகியான ஷ்ரத்தா ஸ்ரீநாத் நாயகியாக நடிக்க,

 இயக்குநர் ஆர்.கண்ணன்  இயக்கியிருக்கும் படம்  இவன் தந்திரன் . ரசிப்பதற்கு இவன் சுந்தரனா ? பார்க்கலாம் 

பொறியியல் படிப்பை பாதியிலேயே கைவிட்டவர்கள்  நாயகனும் (கவுதம் கார்த்திக்) அவனது நண்பனும்  (ஆர்.ஜே.பாலாஜி). 

எனினும்  படிப்பு  பொறியியல் தொழில்  நுட்ப அறிவு கொண்ட அவர்கள்,  சென்னையின் எலெக்ட்ரானிக் பொருட்களின் விற்பனைக்குப் பேர் போன ரிச்சி தெருவில் எலெக்ட்ரானிக்ஸ் கடை வைத்து நடத்கிதுறார்கள். 

அந்தக் கடையில் ஒரு பெண் (ஸ்ரத்தா) லேப்  டாப்  வாங்க, அது வேலை செய்யாத நிலையில் அதை மாற்றித் தரும்படியும்,

ivan 999

இல்லாவிட்டால் கொடுத்த  காசை திருப்பித் தரும்படியும் கேட்டுக் கொண்டேயிருக்கிறாள் அந்தப் பெண் .  தராமல் டிமிக்கி கொடுத்துக் கொண்டேயிருக்கிறார் நாயகன் . லவ்வுக்கு !

இந்த நிலையில்  தமிழக பொறியியல்  கல்லூரிகளில் தரம் மற்றும் வசதிகள் குறைவாக  சொல்லி அனைத்து கல்லூரிகளையும் காலவரையின்றி இழுத்து மூடும்படி உத்தரவிடுகிறார்,

 மத்திய அரசின் கல்வி மற்றும் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சரான தேவராஜ் (சூப்பர் சுப்பராயன் ). 

இப்படியொரு உத்தரவை போட்டுவிட்டு மறைமுகமாக கல்லூரியின் உரிமையாளர்களிடத்தில் கல்லூரிக்கு அனுமதி கொடுக்க லஞ்சம் வாங்கிக் குவிக்கிறார் அவர்  

இதே சூழலில் அமைச்சரின்  வீட்டில் சிசிடிவி கேமிராவை மாட்டும் பணியில் ஈடுபடும் நாயகன்,  அதற்கான தொகையை அமைச்சரின் மைத்துனனிடம் (சில்வா) கேட்கிறான்.  ஏமாற்றுகிறான் மைத்துனன் .

நேரடியாக அமைச்சரிடமே சென்று புகார் சொல்ல , நாயகனையும் நண்பர்களையும் அவமானப்படுத்தியதுடன் அவர்களுடைய பைக்கையும் தூக்கிச்  செல்கிறான் மைத்துனன் 

ivan 99

நாயகி படிக்கும் கல்லூரியில் மாணவர்களிடமிருந்து பெறப்படும் பணம் அமைச்சருக்கு லஞ்சமாக செல்வதை  தான் கண்டுபிடித்த கேமிரா மூலமாக நாயகன் படம் பிடிக்க ,

அந்த வீடியோவில் அமைச்சரின் மைத்துனன் சிக்கிக்  கொள்ள ,  அதை நாயகன்  யூ டியூபில் ஏற்ற , அமைச்சருக்கு பதவி பறி போகிறது.  விசாரணை கமிஷன் அமைக்கப்படுகிறது.

பெரும் கோபம் கொள்ளும் அமைச்சர்  இந்தச் செயலை செய்தது யார் என்பதை கண்டறியும் வேலையில் இறங்க, நாயகனோ  

அமைச்சரின் பெயரை ஒட்டு மொத்தமாக காலி பண்ணும்  வகையில் தினம், தினம் டிஸைன், டிஸைனான மீம்ஸ்களை உருவாக்கி வெளியிட்டுக் கொண்டேயிருக்க, 

இவர்கள் இருவருக்கும் இடையில் நடக்கும் இந்த கண்ணாமூச்சி ஆட்டத்தின் முடிவு என்ன என்பதுதான்  இவன் தந்திரன் 

ivan 1

அரசியல்வாதிகளின் அதிகாரத் துஷ்பிரயோகத்தினால் பாதிக்கப்படும் அப்பாவிகள் கொதித்தெழுந்தால் என்ன நடக்கும் என்பதை  செவிட்டில் அடிக்கிற மாதிரி சொல்லி இருக்கிறார்கள் படத்தில் . 

தனியார் பொறியியல் கல்லூரிகள், மாணவர்களிடத்தில் அரசு நிர்ணயித்திருக்கும் கட்டணத்தை விடவும் அதிமாகவே கட்டணக் கொள்ளையடிக்கும் கொடுமையை…  

கல்லூரிக்குள்  பல தேவையற்ற கட்டுப்பாடுகளை விதித்து  அதை மீறும் மாணவர்களிடத்தில் தண்டத் தொகையை வசூலித்து,

இதன்  மூலமும் பணம் கொள்ளையடிக்கும் அவலத்தை…

அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கும் பணத்தில் கொஞ்சத்தை அரசு அதிகாரிகளுக்கும், அமைச்சர்களுக்கும் தாரை வார்த்துக் கொடுத்து தங்களது சாம்ராஜ்யத்தை காப்பாற்றிக் கொண்டு,

ivan 8

தனியார் கல்லூரி அதிபர்கள் கோடிகளில் காலம்காலமாக கொழிக்கும் அநியாயத்தை காட்சிகளாகவும் வசனமாகவும் வைத்து பிரம்மாதப்படுத்தியுள்ளார் இயக்குனர் கண்ணன் 

 கல்லூரியின் உரிமையாளர் காரை விட்டு இறங்காமலேயே ஒரு பையில் லட்டுவை கொடுத்தனுப்பி எத்தனை லட்டு இருக்கோ..

அத்தனை கோடி லஞ்சம் என்று சொல்லும் காட்சி  , நிஜத்தில் நடக்கும் உண்மைகளில் ஆயிரத்தில் ஒரு  உத்தி. 

இதன் வழியே நாயகன் தனது கதையையும் அமைச்சரிடம் சொல்லி பணத்தைக் கேட்கும்விதம் நல்ல திரைக்கதை உத்தி 

ஐ.டி.யில் வேலை செய்பவர்களுக்கு இருக்கும் குடும்ப, பணிச் சிக்கல்களை பாலாஜி மூலம்  சொல்வது….

அமைச்சருக்குக் கொடுக்க வேண்டிய லஞ்சத்திற்காக கல்லூரி நிர்வாகம் மறைமுகமாக மாணவர்களிடத்தில் சுரண்டுவதையும்,

ivan 7

அதுவும் தேர்வு சமயத்தில் கூடுதல் பணத்தைக் கொடுத்தால்தான் ஹால் டிக்கெட் கொடுப்போம் என்று கல்லூரி அலுவலர் சொல்லும் காட்சி பல வருடங்களாக  நிஜத்தில் நடக்கும்சம்பவங்களின் பிரதிபலிப்பு 

இது ஒரு நிலையில் அப்பாவி  மாணவர்களின் வாழ்க்கைக்கே உலை வைக்கும் அராஜகமாகவும் போகும் என்பதை பளீரென சொல்லி இருக்கிறார் இயக்குனர்  

கிளைமாக்ஸில்  தியேட்டரில் ஓடும் ஜாக்கிசான் படக் காட்சிகளையும் பயன்படுத்தி இருப்பது சூப்பர் .கடைசிக் காட்சிகளின் வீரியம் அபாரம் 

நாயகியின் மீதான காதலை நாயகன் சொல்வதும் அந்த முழு காட்சியும் அழகிய கவிதை 

உண்மையான வீடியோ ஆதாரம் இருந்தும்  “டப்பிங் பண்ணியிருக்காங்க…” என்று அதை திருப்பிப் போடும் காட்சி அண்மையில் நடந்த ஓர் உண்மை அரசியல் நிகழ்வை நினைவு படுத்துவது அசத்தல்.

ரிச்சி தெருவில் கடையில் வேலை செய்யும் ஒரு இளைஞனை அப்படியே அச்சு அசலாக பிரதிபலிக்கிறார் கவுதம் . “வெறும் மூணாங் கிளாஸ் படித்த நீங்க கோடி, கோடியா கொள்ளையடிப்பீங்க..

ivan 2

ஆனால் பி.இ. படிச்சிட்டு நாங்க மட்டும் எவ்ளோ உழைச்சாலும் பத்து, இருபதாயிரம்தான் சம்பளம் வாங்கணுமா..?” என்று ஆக்ரோஷமாய் கேட்கும் கேள்வி,

ஒட்டுமொத்த தமிழ் நாட்டு பொறியியல் மாணவர்களின் குரலாக ஒலிக்கிறது 

உழைத்த பணத்தை திரும்ப வாங்கியே ஆக வேண்டும் என்கிற கொள்கை பிடிப்புள்ள துடிப்பான இளைஞனாக சிறப்பாக நடித்திருக்கிறார் கெளதம். .

இவருக்கு படத்தின் கடைசிவரையிலும் தோள் கொடுத்திருக்கிறார் ஆர்.ஜே.பாலாஜி. “அம்பானியும், ஆட்டக்காரங்களும் கட்டிப் பிடிக்குற மாதிரி..” என்கிற நக்கல்..

 “ஓலா வந்ததால ஆட்டோக்களுக்கு பாதிப்பு வந்திருச்சா.. நீங்க ஒழுங்கா மீட்டர் போட்டிருந்திருக்கலாம்ல..?” என்ற கிண்டல் என்று  அங்காங்கே சமூக விமர்சன வெடிகள் போடுகிறார் பாலாஜி 

நல்ல முக பாவனைகளுடன் கூடிய நடிப்பு, நளின நடனம் .நல்ல நடிப்பு.. என்று தன் பங்குக்கு சிறப்பாக நடித்துள்ளர் ஷ்ரத்தா  

ivan 6

அச்சு அசலாக ஒரு அயோக்கிய அரசியல்வியாதியை கண் முன்னே கொண்டு வந்து காட்டியிருக்கிறார் அமைச்சராக  நடித்திருக்கும்  சூப்பர் சுப்பராயன். 

லஞ்சத்திற்கு அடையாளமாக கொண்டு வரப்படும் லட்டை இவ்ளோதானா என்று விரட்டி, விரட்டி கூடுதலாக்குவதும்...

கல்லூரியில் பணம் கட்ட வசதியில்லாமல் தற்கொலை செய்து கொள்ளும் அந்த இளைஞன், அவர்களது வசதி வாய்ப்பில்லாத பெற்றோர்களான கயல் தேவராஜ் மற்றும் கவுதமியின் கதறல்சி நெகிழ்வு. 

ஒரு காட்சி என்றாலும் லட்டு  கொடுத்து கவர்கிறார்  வெங்கட் . 

பிரசன்னா குமாரின் ஒளிப்பதிவும், செல்வாவின் படத் தொகுப்பும் இயக்குநருக்கு கிடைத்திருக்கும் மிகப் பெரிய பலம். இரவு நேரக் காட்சிகளையும்,

ivan 7

கிளைமாக்ஸ் சண்டை காட்சியையும் ஒரு பிரேம்கூட தொய்வில்லாமல் படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர். சண்டைப் பயிற்சியும் அருமை 

தமனின் இசையில் இரண்டு பாடல்களும்  ஒகே ராகம். டூயட் பாடலின் வரிகள் காதில் விழும் அளவுக்கு இசை அமைத்துள்ளார்  . பின்னணி இசையும் ஒகே 

இன்ஜினீயரிங் கல்லூரிகளில் நடக்கும் கொடுமையை இரண்டே கால் மணி நேரத்தில் பிரித்து மேய்ந்து பிரம்மாதப் படுத்திய வகையில் பலே சொல்ல வைக்கிறது படம் .

மொத்தத்தில் இவன் தந்திரன்… ரசனை மந்திரன் 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *