ஜானி @ விமர்சனம்

ஸ்டார் மூவி மேக்கர்ஸ் சார்பில் நடிகர் தியாகராஜன் தயாரித்து திரைக்கதை வசனம் எழுத,

ஸ்ரீராம் ராகவன் கதையில் பிரஷாந்த், சஞ்சிதா ஷெட்டி ,பிரபு,  ஆனந்தராஜ், தேவதர்ஷினி நடிப்பில்

ப. வெற்றி செல்வன் இயக்கி இருக்கும் படம் ஜானி .  படம் எப்படி ? பேசலாம் . 

ஐந்து நண்பர்கள் ( பிரஷாந்த், பிரபு, ஆனந்தராஜ் , அஷுதோஷ் ரானா, ஆத்மா ) . சூதாட்ட கிளப் நடத்துவது ..
 
ஐந்து பெரும் சேர்ந்து பணம் போட்டு போதைப் பொருள் வாங்கி கைமாற்றி லாபம் பார்த்து , லாபத்தை பிரித்துக் கொள்வது என்று குற்ற வேலைகள் செய்பவர்கள் . 
 
கொடுக்க முடியாத கடனுக்கு ஒரு பெண்ணை ( சஞ்சிதா) கடத்தி வந்து ஐவரில் ஒருவன்  (அசுதோஷ்) வைத்திருக்க ,
 
அந்த பெண்ணுக்கும் ஐவரில் இளைஞனுக்கும் ( பிரஷாந்த்)  காதல்.
இன்னொரு பார்ட்னருக்கு ( ஆனந்த ராஜ்) சொந்தமான இடத்தில்தான் அவர்களின் க்ளப் இயங்குகிறது .
 
அவனுக்கும் , பியூட்டி பார்லர் நடத்தும் அவன் மனைவிக்கும் (தேவதர்ஷினி ), இந்த சூதாட்ட தொழில் விசயத்தில் சச்சரவு . 
 
கேரளா இன்ஸ்பெக்டர் ஒருவர் (சாயாஜி ஷிண்டே) ஐந்து கோடி மதிப்புள்ள போதைப் பொருளை பிடித்து அதை அரசாங்கத்துக்கு அனுப்பாமல்
 
இந்த ஐவரில் தலைவனும்  தனது நண்பனுமான ஒருவனுக்கு ( பிரபு)  இரண்டரை கோடிக்கு விற்பனை செய்ய சம்மதிக்கிறான் . 
 
பார்ட்னர்கள் ஐவரும் ஆளுக்கு ஐம்பது லட்சம் போடுகிறார்கள் . 
 
இதற்கிடையில் கொடுக்க முடியாத கடனுக்கு கொண்டு  வரப்பட்ட பெண்ணை , கொண்டு வந்த அந்த பார்ட்னர்,
 
தன்னுடைய   மனைவி என்று சொல்வதோடு ஆசைக்கு இணங்க சொல்லி வற்புறுத்துகிறான்.
 
எனவே அவள் காதலனிடம் ‘இந்த குரூப்பில் இருந்து வெளியே வா . எங்கேயாவது ஓடிப்போகலாம்’ என்று சொல்கிறாள் 
 
இன்ஸ்பெக்டருக்கு போக இருக்கிற இரண்டரை கோடியை கடத்திக் கொண்டு, காதலியோடு கனடா  போய்விட திட்டமிடுகிறான் காதலன் ( பிரசாந்த்) 
 
அந்த முயற்சியில் பார்ட்னர் ஒருவரையே ஒரு விபத்தாக கொன்று விடுகிறான் . 
 
அப்போது அவன் செய்யும் சில தவறுகளால் அடுத்தடுத்த பார்ட்னர்களுக்கு விஷயம் தெரிய வர ,
 
ஒவ்வொருவரையும் அவன் எதிர்கொள்ள , கடைசியில் நடந்தது என்ன ? காதல் ஜோடி கனடா பறந்ததா? 
 
இந்த குற்ற தொழில் பார்ட்னர்களின் அப்பாவி உறவுகள் என்ன ஆயின என்பதே ஜானி 
 
2007 ஆம் ஆண்டு இந்தியில் வெளிவந்து பின்னர் மலையாளம் மற்றும் தெலுங்கிலும் ரீமேக் ஆன ஜானி கட்டார் என்ற இந்திப் படத்தின் தமிழ் ரீமேக் கே இந்த ஜானி . 
 
கே. பாக்யராஜ் எழுதி இயக்கிய  திரில்லர் படமான விடியும் வரை காத்திரு படத்தின் காட்சிகளையும் ,
 
ரஜினி காந்த் நடிப்பில் மகேந்திரன் இயக்கிய ஜானி படத்தின் காட்சியையும் பொருத்தமாக பயன்படுத்தியது அடடே .. அழகு !
திரைக்கதையில் நிறைய திருப்பங்கள் .அதில் பல ரசிக்க வைக்கின்றன . குறிப்பாக ஐவரில் தலைவன் ,
 
தான் ரயில்வே ஸ்டேஷன் போனது காதலனுக்கு எப்படி தெரியும் என்று சந்தேகப்பட்டு  குற்றவாளியை கண்டு பிடிப்பது .
 
மிக அட்டகாசமான மேக்கிங்கில் அசத்தி இருக்கிறார் இயக்குனர் வெற்றிச் செல்வன் 
 
 தான் சிக்கிக் கொள்வது போல பிரஷாந்த் கனவு காணும் காட்சியை பிரசாந்த் படுத்திருக்கும் கட்டிலைக் காட்டி ,
 
கட் செய்யப்படாத ஒரே ஷாட்டில் உணர்த்துவது உட்பட பல இடங்கள் அபாரம் . 
 
காதலனும் காதலியும் கட்டிலில் இருக்க,  திடீரென உடம்பில் சிகரட்டால் சுடப்பட, ஒருவேளை காதலன் சைக்கோவோ என்று யோசிக்க வைத்து,
 
பின்னர் அது வேறு ஒரு முதுகு , கைதியின் முதுகு , சுடுவது இன்ஸ்பெக்டர் என்று உணர்த்துவது …
 
இது போன்ற சிறு சிறு கிம்மிக்ஸ்களிலும் கவர்கிறார் இயக்குனர் வெற்றிச் செல்வன் . சபாஷ் 
 
பன்னீர் செல்வத்தின் ஒளிப்பதிவு சிறப்பு . 
 
அக்ஷன் காட்சிகளில் அசத்துகிறார் பிரஷாந்த் .(ஸ்டான்ட் மாஸ்டருக்கும் வாழ்த்துகள்)
 
கவர்ச்சிக்கு மூக்கு விடைக்க சஞ்சிதா ஷெட்டி ( அவர் மூக்குதான்) 
 
பிரபு கம்பீரம் . 
 
அப்பாவியாக ஆனந்தராஜ் கலகல . தேவ தர்ஷினி செண்டிமெண்டுக்கு ! கலைராணியும் . 
 
அசுதோஷ் கண்களை உருட்டி மிரட்டுகிறார் . 
 
இரண்டாம் பாதியில்  திருப்பங்கள் என்ற பெயரில் என்னன்னவோ சொல்கிறார்கள் .
 
அதில் ஏகப்பட்ட லாஜிக் லகலகக்கள் !  சில பல சினிமாத்தனங்கள்.
 
விறுவிறுப்பான படம் . 
 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *