ஜூலை காற்றில் @ விமர்சனம்

காவியா என்டர்டைன்மென்ட்ஸ் சார்பில் சரவணன் பழனியப்பன் தயாரிக்க, அனந்தநாக், சதீஷ், அஞ்சு குரியன், சம்யுக்தா மேனன் நடிப்பில் கே சி சுந்தரம் இயக்கி இருக்கும் படம் ஜூலை காற்றில் .  தென்றல் காற்றா ? புழுக்கமா? பேசலாம் .

 விற்பனைப் பிரதிநிதி இளைஞன் ராஜீவ் (அனந்த நாக்)க்கும் இளம்பெண் ஸ்ரேயாவுக்கும் ( அஞ்சு குரியன்) நட்பு ஏற்பட்டு அதில் நெருக்கம் ஏற்படுகிறது .ஸ்ரேயா ராஜீவை காதலிக்க ஆரம்பிக்கிறாள் . ராஜீவும் மறுக்கவில்லை .

இரண்டு குடும்பமும்,ஜோடிப் பொருத்தம் சிறப்பு என்று முடிவு செய்து நிச்சயதார்த்தமும் செய்கிறது .

 ஆனால் அதற்குப் பின் அவள் மேல் எனக்கு காதல் வரவில்லை என்று சொல்லி கல்யாணத்தை நிறுத்துகிறான் ராஜீவ் . 

அவனுக்கு ரேவதி ( சம்யுக்தா மேனன்) என்ற புகைப்படக் கலைஞர் மீது காதல் வருகிறது. முன்னரே ஒரு காதலனுடன்  பிரேக்கப் ஆன அவளும் ராஜீவின் காதலை ஏற்கிறாள் .

 சர்வ சாதரணமாக படுக்கையைப் பகிர்ந்து கொள்கிறார்கள். 
அவள் தனது பள்ளிக்கால ஆண் நண்பனான சக புகைப்படக் கலைஞனுடன் தொட்டு அணைத்து பழகுவதை ராஜீவ் விரும்பவில்லை . 

‘ என்னதான்  காதலித்தாலும் எனக்கு என தனிமை நேரங்களை ராஜீவ் தர வேண்டும் . வேலை நேரத்தில் – விசயத்தில் ராஜீவ்  தலையிடக் கூடாது’என்ற ரேவதியின் விருப்பங்களை ராஜீவால் ஜீரணிக்க முடியவில்லை .

 சண்டை .. பிரேக்கப் !

மன அமைதிக்காக கோவாவுக்கு போன ராஜீவ் அங்கே அனிட்டா என்ற , தமிழ் அப்பா –கோவா அம்மாவுக்கு பிறந்த, பெண்ணை சந்திக்கிறான் . இயல்பாக அவள் பழக , ஒரு நிலையில் அவளை செக்சுவலாக தொட முயல்கிறான்.

அவனை புறக்கணிக்கும் அவள் , ”என் காதலன் எனக்கான  தனிமை நேரங்களை தருகிறான்.. என் தொழில் விசயங்களில் தலை இடுவது இல்லை . அவன் என்னை இயல்பாக இருக்க அனுமதிக்கிறான். காரணம் அவன் என்னை நம்புகிறான் . அவனுக்கு துரோகம் செய்ய மாட்டேன் ” என்று சொல்கிறாள் .

 ” சரி .. அப்படி நம்பி அனுப்பும் பெண் ஏமாற்றினால் என்ன செய்வது? ” என்று ராஜீவ் கேட்க , “நீ சுதந்திரம் கொடுத்தும்  உன்னை ஏமாற்றினால் அவள் உனக்கான பெண் அல்ல என்று உணர்ந்து தூக்கிப் போட்டுட்டு போய்டணும் ” என்கிறாள்.

 தான் எப்படி எல்லாம் ரேவதியின் தனித் தன்மையில் குறுக்கிட்டு இருக்கிறோம் ‘என்பதை உணரும் ராஜீவ் மீண்டும் ரேவதியை தேடி வருகிறான் . ஆனாலும்  அவனால் திருந்த முடியவில்லை . 
 அப்புறம் என்ன நடந்தது என்பதே ஜூலை காற்றில்.

 கதையை ஆறு அத்தியாயங்களாக பிரித்து ராஜீவ், ஸ்ரேயா, ரேவதி என்று அவரவர்களின் பார்வையில் கதையை சொல்கிறார் இயக்குனர் சுந்தரம் .

ஒவ்வொரு அத்தியாயத்திலும் வரும் ஆரம்ப , இடைப் பகுதி மற்றும் முடிவுக் காட்சிகளையும் அடுத்த அத்தியாயத்தில் இன்னொருவர் கோணத்தில் சொல்லி அதே நேரம் தேங்கி விடாமல் கதையை நகர்த்தும் திரைக்கதை உத்தி மிக சிறப்பு .

இதில் படத் தொகுப்பாளர் அணு சரணின் படத் தொகுப்பின் பங்கு பாராட்டுக்குரியது.

 படமாக்கல் மிக சிறப்பு .

 ஸ்ரேயாவை புறக்கணித்த ராஜீவ் ரேவதியை காதலித்து பிரேக்கப் ஆகி , மீண்டும் ஸ்ரேயாவுக்கு நூல் விட முயலும்போது அவனை ஸ்ரேயா டீல் செய்யும் காட்சி பெண்மையின் கனிவான கம்பீரம் . அருமை .

கேரளா , இலங்கை பகுதிகளின் இயற்கை அழகை அள்ளித் தருகிறது டிமல் சேவியர் எட்வர்டின் கேமரா.

 ஜோஷுவா ஸ்ரீதரின் பின்னணி இசை சிறப்பு . பாடல் இசை இன்னும் நன்றாக இருந்து இருக்கலாம் .

 அனந்தநாக் இயல்பாக நடிக்கிறார் . சதீஷ் வழக்கம் போல. 
அஞ்சு குரியன், சம்யுக்தா மேனன்  இருவரும் முறையே அழகு கவர்ச்சிப் பதுமைகளாக இருக்கின்றனர் . அதே நேரம் செயற்கையான நடிப்பு .  

“காதலிப்பவரின் மீது நம்பிக்கை வையுங்கள் . அவர்களுக்கு தேவைப்படும் தனிமையை , சுய தன்மையை அனுமதியுங்கள் . சுதந்திரமாக இருக்க விட்டு நேசியுங்கள் .  அப்படி நீங்கள் கொடுக்கும் உரிமையை  உங்களுக்கு துரோகம் செய்ய பயன்படுத்தினால் அது உங்க ஆள் இல்லை . எனவே தூக்கி எறிந்து விட்டுப்போங்கள் ” என்ற விஷயம் நிஜமாகவே அபாரம்.

 ஆனால் அத்தோடு நிறுத்தி இருக்கலாம் .

அதை விட்டு விட்டு ‘அப்படி உரிமை கொடுக்க முடியலையா ? அதனால நொந்து போன  அவ இன்னொருத்தனோட போய்ட்டாளா ? போகட்டும் . நீ அவ ஃபிரண்டோட போ ‘ 

என்று சொல்லி படத்தை முடிப்பதெல்லாம்…. ரொம்ப ஓவர் . 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *