K13 @ விமர்சனம்

எஸ் பி சினிமாஸ் சார்பில் எஸ் டி ஷங்கர் மற்றும் சாந்தா பிரியா தயாரிக்க, அருள்நிதி, ஷ்ரத்தா ஸ்ரீநாத், காயத்ரி நடிப்பில் பரத் நீலகண்டன் இயக்கி இருக்கும் படம் K13. படம் ஓகேவா ? இல்லை ஓபியா ? பேசலாம் . 

முன் பின் தெரியாத ஒரு அபார்ட்மெண்டில் ஒரு வீட்டின் ஹாலில், மென்மையாகக் கட்டிப் போடப்பட்டு இருக்கும் ஓர் இளைஞன் ( அருள்நிதி) கட்டுக்களை விடுவித்துக் கொண்டு பார்த்தால், அதே அறையில் கை நரம்பு அறுபட்டு ரத்தம் வடிந்து உறைந்த நிலையில் கிடக்கிறாள் ஓர் இளம்பெண் (ஷ்ரத்தா ஸ்ரீநாத்).

 அவள் யார் ? நாம் ஏன் எப்படி இங்கு வந்தோம் என்று தெரியாமல் விழிக்கும் இளைஞனுக்கு மெல்ல மெல்ல ஞாபகம் வர, பிளாஷ்பேக்!

இருபது வருடம் திரைப்பட இணை இயக்குனராக பணியாற்றி  இயக்குனராக ஆகவே முடியாமல் போன ஒருவருக்கு மகனாக பிறந்து , மேற்படி இளைஞன்இயக்குனராகும் லட்சியத்தோடு ஒரு தயாரிப்பாளரிடம்  கதை சொல்ல, பெரிய பட்ஜெட்  காரணமாக அதை நிராகரிக்கும் கரிசனம் மிக்க அந்த தயாரிப்பாளர் , “குறைந்த பட்ஜெட்டில் ஓரிரு நாளில் நல்ல கதை பண்ணிக்  கொண்டு வா ” என்கிறார் .

அதற்கான வேலையில் அவன் இருக்கும் வேளையில்நண்பர்கள் சிலரின் வற்புறுத்தலின் பேரில் பப்புக்கு போகிறான் நாயகன் . அங்கே அந்த பெண்ணை — அதாவது இப்போது வீட்டில் ரத்த வெள்ளத்தில் கிடக்கும் பெண்ணை சந்திக்கிறான் . 

அந்த பெண் ஓர் எழுத்தாளர் . தன் தோழியின் (காயத்ரி) வாழ்வில் நடந்த — அந்த தோழியின் கணவனுக்கு தெரியாத — தெரிந்தால் அவனால் ஏற்க முடியாத ஒரு சம்பவத்தை வைத்து நாவல் ஒன்றை எழுத, அதை படிப்பதன் மூலம் அது தன் மனைவியின் வாழ்வில் நடந்தது என்பதை ‘ எப்படியோ’ கண்டு பிடிக்கும் கணவன், தன் மனைவியை விட்டுப் பிரிகிறான் . இதனால்  எழுத்தாளரின்  தோழி பாதிக்கப்படுகிறார் .

 அந்த வருத்தத்தில் இருக்கும் எழுத்தாளரும் பப்புக்கு வர , இருவருக்கும் பரிச்சயம் ஏற்படுகிறது . அதைத் தொடர்ந்து இருவரும் எழுத்தாளரின் வீட்டுக்கு வந்த நிலையில், தான் போதையில் மயங்கி விட்டது ஹீரோவுக்கு புரிகிறது . எழுத்தாளர் எப்போதோ இறந்து விட்டார் என்பதும்  உணர்த்தப் படுகிறது .

இந்த நிலையில் வேறொரு வழக்கு விசயமாக அந்த அப்பார்ட்மென்ட்டுக்கு வரும் போலீஸ், இந்த இருவரும் உள்ளே இருக்கிற– ஆனால் வெளியில் இருந்து பார்ப்பதற்கு பூட்டப்பட்ட வீடு போல தெரிகிற — வீட்டுக்குள் கதவை திறந்து  வர முயல்கிறது . 

இயக்குனர் லட்சிய இளைஞன் தப்பினானா ? எழுத்தாளருக்கு நடந்தது என்ன ?  இயக்குனர் லட்சிய இளைஞனின் லட்சியக் கனவு என்ன ஆனது என்பதே இந்த K13. 

இயக்குனர் ஆகும் லட்சிய வெறி, தோல்விகளில் துவளுதல், புதிய கதைக்காக அவஸ்தை,  எதிர்பாராமல் அமைந்த சிக்கலில் பரிதவிப்பு, பதைப்பு என்று கேரக்டரை உள்வாங்கி மிக சிறப்பாக நடித்திருக்கிறார் அருள்நிதி . இந்த நல்ல நடிகனுக்கு இன்னும் நல்ல கதை திரைக்கதைத் தீனி போடுங்கப்பா .

நாயகன் கதாபாத்திரத்தின் பயணத்தில் வந்து போகும் நபர்களாகவே இருக்கும் மற்ற பெரும்பாலான கதாபாத்திரங்களின் பங்களிப்பும் குறை சொல்லும்படியாக இல்லை . எனினும் சில நுண்ணிய உணர்வுகளை ஷ்ரத்தையாக வெளிப்படுத்தும் முகபாவனைகளால் தனித்துத் தெரிகிறார் ஷ்ரத்தா .

கதாநாயகன் கதாபாத்திரம் போலவே வித்தியாசமான கதை திரைக்கதைக்கு மிகவும் மெனக்கெட்டு இருக்கிறார் இயக்குனர் . முதல் பாதியில் நாயகனின் அவஸ்தைக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து விட்டு , இரண்டாம் பகுதியில் சடார் சடார் திருப்பங்களை கொண்டு வருகிறார் .படமாக்கல் மிக சிறப்பு .

சாம் சி எஸ் ஸின் பின்னணி இசை படத்துக்கு பெரும்பலம சேர்க்கிறது . சின்ன சின்ன காட்சிகளில் கூட இசையால் பரபரப்பு ஏற்றுகிறார் சாம் . 

அரவிந்த் சிங்கின் ஒளிப்பதிவில் இருள் ஒளிப்  பயன்பாடு, வண்ண ஆளுமை மிக சிறப்பு . குறிப்பாக பளிச்சென்ற ஈரம் கலந்த வண்ணங்கள் போன்ற ஒளிப்பதிவு படத்துக்கு ஒரு எக்ஸ்ட்ரா திகிலை ஏற்படுத்துகிறது .

 கொடுக்கப்பட்ட  கதை திரைக்கதையை  பரபரப்பான படையலாக கொடுக்க போராடி இருக்கிறார் ரூபன் . எனினும் முதல்பாதியில் நாயகன் கைரேகை பட்ட இடங்களை எல்லாம்  துடைக்கிறார் துடைக்கிறார் துடைத்துக் கொண்டே இருக்கிறார் .

 தனது ரசனை அல்லது எதிர்பார்ப்புக்கு ஏற்ப தான் எழுதும் கதை அல்லது கவிதை வராத போது ஒரு எழுத்தாளர் ,  திரைக்கதை ஆசிரியர் மற்றும் இயக்குனர் எரிச்சல் ஆவதும்அவஸ்தைப் படுவதும் இயல்புதான்.  ” நான் நினைச்சபடி சீன் வரல, நான் செத்துப் போகப் போறேன்” என்று மனைவியிடம் சொன்ன இயக்குனர் கூட உண்டு . (ஆனால் கடைசியில் அவர் ஒரு மாபெரும் உணர்வுக் காவியத்தை படைத்தார் ) ‘ ரைட்டர்ஸ் பிளாக் ‘ எல்லாம் ஒகேதான். ஆனால் கதை எழுதறதுன்னா எனக்கு உயிரு என்று சொல்லும் ஓர் நபர் கதைக்காக அல்லது கதை தருவதற்காக இப்படி எல்லாமா நடந்து கொள்வார் ?

எழுத்தாளர் எழுதிய கதை, தோழியின் வாழ்வில் இருந்து எடுக்கப் பட்டது என்பதை தோழியின் கணவன் எப்படி கண்டு பிடித்தான் என்பதற்கு  ஒரு விஷயம் திரைக்கதையில் சொல்ல வேண்டாமா ? ‘

அவன் எப்படி கண்டு பிடிச்சான்னே தெரியல ‘ என்று எழுத்தாளரின் குரலில் டப்பிங்கில் ஒரு வாக்கியத்தை தூக்கிப் போட்டு விட்டால் 
 போதுமா ?(விஷயம் நாயகிக்கும் அவள் தோழிக்கும் தவிர யாருக்கும் தெரியவே தெரியாது என்று வேறு சொல்கிறார்கள்) சரியான அழுகுணி ஆட்டம் . 

சரி .. அவன் அப்படியே கண்டு பிடித்து விட்டான் என்றே வைத்துக் கொள்வோம் . எழுத்தாளர் என்ன சொல்ல வேண்டும்?. ” போடா டேய்…. அது உன் பொண்டாட்டி வாழ்வில்தான் நடந்தது என்பதற்கு என்ன ஆதாரம்? நீ எப்படி  அப்படி சொல்லப் போச்சு ? அது என் முழு கற்பனை .” என்று அடித்துச் சொல்ல முடியாதா ? அதை விட்டுட்டு சாக்லேட்டை தெரியாமல் எடுத்த அஞ்சு வயசு குழந்தை ”சாரி மிஸ்” சொல்வது போலவா முழிப்பாள் ?

 தோழியும் அவள் கணவனும் பிரிந்து விட்டார்கள் சரி .தோழி 
 என்ன செத்தா போய் விட்டாள்? அப்படி இருக்க தோழியின் இந்த நிலைக்கு ஈடு என்று கதாநாயகி செய்யும்  செயல்பாடுகள் எந்த வகையில் பொருத்தம்? இம்மெச்சூர்த்தனம் . அல்லது அப்படி முடிவெடுக்கும் அளவுக்கு அவள் ஒரு அப்நார்மல் நபர் என்பதையாவது கேரக்டர் எஸ்டாப்ளிஷ்மென்ட்டில் சொல்லணும் ஞாயமாரே!

தோழி செத்து விட்டாள் . பிணத்தை பார்க்க வந்த கணவன் எழுத்தாளர் மீது  வஞ்சம் வைத்து விட்டுப் போனான் . இந்த நிலையில் எழுத்தாளர் செத்துக் கிடந்தாள் என்று ஒரு ரூட் திரைக்கதையில் போட்டு இருந்தாலாவது படத்தில் வரும் முடிவு எதிர்பாராத ஒன்றாக இருந்திருக்கும் . அதுவும் இல்லை .

தவிர  எழுத்தாளரின் செயல்பாடு நாயகனுக்கு செய்யும் உதவியாக மாறும் என்று எப்படி உறுதியாக சொல்ல முடியும்? போலீசில் சிக்கினால் அவன் வாழ்க்கையே முடிந்து விடுமே என்று யோசிக்காத எழுத்தாளர் என்ன எழுத்தாளர் ? அதுவும் மைன்ட் ஷேரிங் எல்லாம் செய்தபின்னர் ?கரிசனம் எல்லாம் வந்து விட்ட நிலையில் ?

வித்தியாசமாக கதை திரைக்கதை சொல்ல வேண்டும் என்று இயக்குனர் நினைத்திருக்கிறார் பாராட்டுக்குரிய விசயம்தான் . ஆனால் அது ஏற்றுக் கொள்ளும்படியாகவும் இருக்க வேண்டும். ( DIFFERENT as well as ACCEPTABLE ). 

இது போன்ற ஒரு சில குறைகளால் தனக்கான எல்லைகளை குறைத்துக் கொண்டு விட்டது  படம்  அதாவது K30 ஆக  இருக்க வேண்டிய படம் K 13 ஆக சுருங்கி விட்டது . 

ஆனாலும் என்ன….. வித்தியாசமான கதைகளை படங்களை விரும்பும் ரசிகர்களுக்கு K13 பிடிக்கும் .

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *