‘வேலு’ – ‘கருணா’ வாழும் ‘காடு’ எனும் நாடு

தயாரிப்பாளர்கள்
தயாரிப்பாளர்கள்
சக்கரவர்த்தி பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் கொங்கு நாடு மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொருளாளரான கோவை நேரு நகர் நந்து தயாரிக்க விதார்த் சமுத்திரகனி  ஆகியோர் நடிக்க, ஸ்டாலின் ராமலிங்கம் இயக்கி இருக்கும் படம் காடு .
“மனித குலத்துக்கு பெரும் நன்மைகளை செய்யும் காடுகளை அழித்து அங்கு வாழும் பூர்வகுடி மக்களை,  இன்றைய யதார்த்தம் என்ன பாடு படுத்துகிறது என்பதை சொல்லும் படம் இது. இந்த விசயங்களில் அரசின் தரப்பு என்ன ? அந்த காடு வாழ் மக்களின் தரப்பு என்ன? என்ற இரண்டையும் விவாதித்து கடைசியில் நியாயமான தரப்புக்கு ஆதரவு தரும் படமாக இது முடியும் ” என்கிறார் இயக்குனர் ஸ்டாலின் ராமலிங்கம் .

பாடல் வெளியீடு
பாடல் வெளியீடு

படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் சிந்திக்க வைக்கும் ஒரு டிரைலரையும் மூன்று   பாடல்களையும் திரையிட்டார்கள். அநியாயமாக மரம் வெட்டி காட்டை அழிக்கும் வரும் சமூக விரோதிகளையும் அரசு இயந்திரத்தையும் அந்த மக்கள்  எப்படி எதிர்கொள்கிறார்கள்  என்ற ரீதியில் கதை போகும் என்பது டிரைலரை பார்க்கும்போது தெரிகிறது .

டிரைலரில் இடம்பெறும் “நீங்க  பாடப் புஸ்தகத்துல பாக்குற தாவரங்கள் எல்லாம் நிஜமாவே இருக்க வேணாமா?” என்ற விதார்த் பேசும் வசனமும், “காட்டுல இருக்கற மரங்கள் எல்லாம் உன் முன்னோர்களோட ஆன்மா . அதை வெட்ட நினைக்கறவன  நீ வெட்டு ” என்று சமுத்திரக்கனி முழங்குவதும் படத்தின் தீவிரத்தன்மையை விளக்குகிறது .
பத்திரிக்கையாளர் சந்திப்பு
பத்திரிக்கையாளர் சந்திப்பு

அதே நேரம் அழகான இளம் நாயகி சம்ஸ்க்ருதியின் காதல், இசையமைப்பாளர் கே மற்றும்  கவிஞர் யுகபாரதி இணைவில் உருவான மண்வாசனைப் பாடல்கள் , பட்டையைக்  கிளப்பும் சண்டைக் காட்சிகள், தாவிப் பாய்ந்து பாய்ந்து பறந்து செல்லும் மகேந்திரன் ஜெயராஜின் ஒளிப்பதிவு, காசி விஸ்வநாதனின் நறுக்குத் தெறிக்கும் படத் தொகுப்பு போன்றவை முன்னோட்டத்திலேயே கவனம் கவர்ந்து,  படம் பார்க்க வேண்டும் என்ற ஆவலை தூண்டுகின்றன .

பாடலாசிரியர் யுகபாரதி பேசும் போது ” இந்தப் படத்தில் நாயகன் விதார்த் பெயர் வேலு. வில்லன் பெயர் கருணா . இந்தப் பெயர்களே இதில் உள்ள உரிமை அரசியலை சொல்லும் . கதைக்களம்தான் காடு . ஆனால் அந்த உணர்வின் அடித்தளம் ஒரு நாடு தான் ” என்று உருவேற்றினார் .  “வேலுகளும் கருணாக்களும் உலகம் எங்கும் உண்டு . எனக்கு தெரிந்த ஒரு வேலுவையும் கருணாவையும்  நான் சொல்லி இருக்கிறேன் ” என்றார் இயக்குனர் , இதற்கு பதிலாக !
இணை தயாரிப்பாளர் ஷ்யாம் கார்த்திக்
இணை தயாரிப்பாளர் ஷ்யாம் கார்த்திக்

” நான் இதுவரை நடித்த படங்களிலேயே பெரிய பட்ஜெட் படம் இதுதான் ” என்று ஆரம்பித்த விதார்த் ” தயாரிப்பாளர் நந்து அவர்களை முதன் முதலில் சந்தித்த போது  ஒரு தமிழனுக்கே உரிய மாண்போடு அவர் எனக்கு செய்த விருந்தோம்பல் அற்புதமானது . படத்தின் பட்ஜெட் ஒரு நிலையில் திட்டமிட்டதற்கு மேலாக போனபோது கூட, ‘இந்தப் படம் நினத்தது போல வரவேண்டும்’  என்று முடிவு செய்து அவர் பெரும் செலவு செய்தார் .

ஒரு சண்டைக் காட்சிக்கு ஒரு புதிய கருவி வேண்டும் என்று ஸ்டன்ட் மாஸ்டர் கூறியபோது , அது மும்பையில் மட்டுமே இருக்கிறது என்று அறிந்தும் அதை கொண்டு வர செய்து , ஒரு நாள் பயன்படுத்தியதற்கு போக்குவரத்து நாட்களையும் சேர்த்து மூன்று நாள் வாடகை கொடுத்து…அதற்காக  ஒரு நாள் ஷூட்டிங்கையெ  நிறுத்தி… கருவி வந்தபிறகு   ஸ்டன்ட்  மாஸ்டர் ஆசைப்படி காட்சியை எடுக்க வைத்து…. அடடா! இந்த மாதிரி தயாரிப்பாளர் கிடைக்க கொடுத்து வைக்க வேண்டும் ” என்று நந்துவை பாராட்டினார் .

தயாரிப்பாளர் நந்து
தயாரிப்பாளர் நந்து

ஒரு அரசியல்வாதிக்கே உரிய கம்பீரத்தோடு அழுத்தமான குரலில் தூய தமிழில் பிசிறின்றி ஒருமுகப்படுத்தும்படியாக கம்பீர உரையாற்றிய நந்து         ” படம் எடுக்க வேண்டும் என்று முடிவு செய்தபோது வழக்கமாக காதல்,  கல்யாணம் என்று படம் எடுக்க நான் விரும்பவில்லை. சமுதாயத்துக்கு நல்ல விஷயம் சொல்லும் படங்களை வணிகரீதியாகவும் வெற்றி பெறும்படி எடுக்க வேண்டும் என்பதே என் லட்சியம் . அதற்கு ஏற்ப காடுகளின் அழிவு பற்றி ஸ்டாலின் ராமலிங்கம் சொன்ன கதை சிந்திக்க வைத்தது . படத்தின் முடிவில் இந்தப் பிரச்னைக்கு தீர்வாக அரசுக்கே ஆலோசனை சொல்லும்படி அவர் சொல்லி இருக்கும் விஷயம் என்னை மிகவும் கவரவே படமாக தயாரிக்க முடிவு செய்தேன் .

செலவு திட்டமிட்டதை விட அதிகம் ஆகிவிட்டது . ஆனாலும் இந்த நல்ல படத்தை நம் சமூகம் ஆதரிக்கும் என்று நம்பிக்கை இருக்கிறது ” என்று பேசிய விதம் மிக அருமை .
காடு … செழிக்கட்டும் !
 

 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →