காப்பான் @ விமர்சனம்

லைகா புரடக்ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரிக்க, சூர்யா, சாயீஷா , சமுத்திரக்கனி, மோகன்லால் , ஆர்யா நடிப்பில் பட்டுக்கோட்டை பிரபாகரின்   வசனத்தில் , அவரோடு சேர்ந்து  கதை திரைக்கதை எழுதி கே வி ஆனந்த் இயக்கி இருக்கும் படம் காப்பான் .

 தஞ்சாவூரில் இயற்கை விவசாயம் செய்கிற கதிரவன் ( சூர்யா) , போலீஸ் மற்றும் ராணுவத்தைச்  சேர்ந்தவர்களை விட உயிரைத் துச்சமாக மதித்துப் பணி செய்யும் — வி வி ஐ பிக்களுக்கு பாதுகாப்புத் தரும் – எஸ் பி ஜி பணியில் , தன் திறமை காரணமாக , 

நண்பனும் எஸ் பி ஜி உயர் அதிகாரியுமான ஒருவரால் ( சமுத்திரக்கனி ) சேர்க்கப்படுகிறார் . 

பாகிஸ்தான் தீவிரவாதிகளால் உயிராபத்தி இருக்கிற பிரதமரை ( மோகன்லால் ) காக்கும் பணியில் ஈடுபடுத்தப்படுகிறார் . பிரதமர் மகனோடு ( ஆர்யா) நட்பு கிடைகிறது . பிரதமர்  அலுவலக அதிகாரியின்  (சாயீஷா) காதல் கிடைக்கிறது . 
எதிர்பாராத ஓர் இழப்பு சூழலில் பிரதமரின் மகன் பிரதமர் ஆகிறார் .

ஒரு பக்கம் பாகிஸ்தானின் இந்திய எதிர்ப்பு இன்னொரு பக்கம் இந்திய அரசு  காவிரி டெல்டா பகுதியில் மண்ணுக்கு  கீழே உள்ள தோரியம் என்ற  அணுப் பொருளுக்காக ( மீத்தேன் என்பதற்கான சினிமா மாற்று ) விவசாயத்தை அழிக்க முயல்கிறது . 

அம்பானி , அதானி போன்ற ஒரு தொழில் அதிபர் ,  அதற்காக ஒரு விஷப் பூச்சியை உருவாக்கி பயிர்கள் எல்லாம் வளரும்போதே வளர விடாமல் அழித்து  பஞ்சத்தை வர வைத்து (காவிரி நதி நீரை தடுத்துன்னு உண்மையை சொன்னா சென்சார் விடாதே… ) நிலங்களை வாங்கி , போராடும் விவசாயிகளை அடித்து நொறுக்கி,  விவசாயத்தை அழிக்க முயல்கிறார். 

விவசாயியும் பிரதமரின் பாது’காப்பான்’ ஆகவும் இருக்கிற கதிரவன் பிரதமரை காப்பாற்றினாரா? தன் தாய் நிலமான தஞ்சை டெல்டா பகுதியை காப்பாற்றினாரா? இரண்டையும் காப்பாற்றினாரா ? என்பதே காப்பான் .

 மீத்தேன் , கெயில், போன்ற திட்டங்களால் எவனுக்கோ அடுப்பெரிக்க  ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக விவசாயம் நடக்கும் தஞ்சை டெல்டா பகுதியை திட்டமிட்டு அழிக்க முயன்ற காங்கிரஸ் அரசு , இன்று அதை பல மடங்கு வேகமாக முடுக்கி மக்களை ஒடுக்கி சர்வாதிகாரமாக காவிரி டெல்டாவை அழித்து வரும் பி ஜே பி அரசு..  இரண்டையும்  தோலுரித்துக் காட்டி இருக்கிறார் கே வி ஆனந்த் . 

அம்பானி அதானி இவர்களின் ஒட்டுமொத்த வடிவமாக ஒரு தொழில் அதிபரை காட்ட முடிகிறது . ஆனால் மோடியை அப்படியே சொல்ல முடியாதே . எனவே அவரை ஒரு ஊரை காப்பாற்ற ஒரு மனிதனை அழிக்கலாம் என்ற மனு தர்மத்தை ஆதரிக்கிற  –  அதுதான் மனுஷ தர்மம் என்று சொல்கிற – நபராக காட்டி , அதன் மூலம் ‘புரிய’ வைக்கிறார்கள். 

திடீர் திடீர் என்று பாதுகாப்பு விதிகளை மீறி பாதுகாப்பு அதிகாரிகளுக்கு டென்ஷன் கொடுத்தமுன்னாள்  ராஜீவ் காந்தி போன்ற கதாபாத்திரத்தில் ஆர்யா . 
இப்படி நிஜ அரசியலை உணர்ந்து ரசிக்க பல காட்சிகள் கொட்டிக் கிடப்பது படத்தின் ஸ்பெஷல் .

 கதிரவன் கதாபாத்திரத்தில் ஆர்கானிக் விவசாயத்துக்கும் அப்பாற்பட்ட இயற்கை விவசாயியாகவும் இன்னொரு பக்கம் பாதுகாப்பு அதிகாரியாகவும் மிகப் பிரம்மாதமாக நிறைந்து வழிகிறார் சூர்யா . தோற்றப் பொருத்தம் , உடல் மொழிகள் , நடிப்பு மட்டுமல்லாது , சூர்யாவுக்கு இருக்கும்  இயல்பான இமேஜ் பொருத்தமும் படத்துக்கு வலு சேர்க்கிறது .

பொதுவாக அரசியல் நிகழ்வுகளை  வெளியே இருந்து பார்ப்பது எல்லோருக்கும் சகஜம் . ஆனால் ஒரு பிரதமரின் வீட்டுக்குள் அல்லது அலுவலகத்தில் இருந்து பார்ப்பது வேறு .

 அது போன்ற காட்சிகள் இந்தப் படத்தின் கோல்டன் ஏரியா .

 குறிப்பாக இந்திய ராணுவ  வீரர்களை கொடூரமாக கழுத்தறுத்து பாகிஸ்தான் தீவிரவாதிகள் கொன்ற நிலையில்  பாகிஸ்தான்  தூதரை அழைத்து பிரதமர் கண்டிக்கும் காட்சி , பிரதமரும் அவரது அரசியல் எதிரியான எதிர்க்கட்சித் தலைவரும் சகஜமாக நக்கலாக பேசிக் கொள்ளும் காட்சிகள், மோடி போன்றவர்கள் ஆட்சியில் அம்பானி அதானி போன்ற தொழில் அதிபர்கள் பிரதமரின் அலுவலகம் மற்றும் வீடுவரை எப்படி ஆளுமை செலுத்துவார்கள் என்பது போன்ற காட்சிகள் … சப்பாஷ் ரைட்டர்ஸ் கே வி ஆனந்த் , பட்டுக் கோட்டை பிரபாகர் .

வழக்கம் போல … எப்போதும் போல ….   புஷ்டியான திரைக்கதை அடர்த்தியான அடுத்தடுத்த காட்சிகள் , ஆங்காங்கே கமர்ஷியல் கல கல பளபள, , அட்டகாசமான படமாக்கல் , அர்த்தமுள்ள டைரக்ஷன் என்று   சினிமா சிலம்பம் ஆடியிருக்கிறார் கே வி ஆனந்த்.

படம் முழுக்க உறுத்தாத துருத்தாத வசனங்கள் ஆழமாகவும் அர்த்தமாகவும் சீற்றமாகவும்  இருக்க,  அதே நேரம் ஆங்காங்கே இயல்பான காமெடி தூறலும் போடுகிறது பட்டுக் கோட்டை பிரபாகரின் பண்பட்ட வசனங்கள் . ( அதே நேரம் டெல்டாவில் தோரியம் எடுப்பதை அநியாயமாக நியாயப்படுத்தி தொழில் அதிபர் பேசும்போது பதிலுக்கு சூர்யா பேசும் வசனங்கள் ஆளுமையாக இல்லாமல் பர்சனல் உணர்வாக மட்டும் சுருங்கியது ஏன் ?)

மனைவியோடு பூஜை அறையில் சாமி கும்பிட்டுவிட்டு நெற்றியில் பொட்டோடு நகரும் பிரதமர் அடுத்த சில நொடிகளில் அரசுப் பிரதானிகளை சந்திக்க வேண்டிய  சூழலில் நெற்றிப் பொட்டை அழித்துக் கொண்டு வருவார் .

இதில் மோடியை இன்ஸ்பிரேஷனாக கொண்டு  உருவாக்கப்பட்டு இருக்கும் பாத்திரத்தின் மூலம் மோடிக்கே பாடம் எடுத்து இருக்கிறார்கள் கே வி ஆனந்தும் பிரபாகரும் . மேலும்  சில பாடங்களும் உண்டு . படம் பார்க்கும்போது புரிந்து கொள்வீர்கள் 

ஏழு  நாடுகளோடு ஒன்றாக சேர்ந்து சதி செய்து இந்தியாவும் ஈழத்தில் தமிழ் இனத்தை ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி அழித்த கொடுமையை , மிச்ச ஆயுதங்களை சூர்யா பாதுகாப்பாக யாருக்கும் பாதிப்பு இன்றி  அழிக்கும் காட்சியின் மூலம்  சாடும்  நேர்மை,  கே வி ஆனந்துக்கு இருக்கிறது . சிறப்பு . 

சமுத்திரக்கனி கதாபாத்திரம்  எப்படி முடியும் என்பது முன்பே புரிந்து விடுகிற விசயம்தான் என்றாலும் யாரால் என்பதில்  அட… ஓர் அடடே ட்விஸ்ட் !

எம் எஸ் பிரபு மற்றும்  அபிநந்தன் ராமானுஜத்தின்  ஒளிப்பதிவு காஷ்மீர் முதல் தஞ்சாவூர் கரட்டுக்காடு வரை ஒவ்வொரு சூழலுக்கும் ரசிகனை ஒன்றிப் போக வைப்பதிலும் அழகியல் வெளிப்பாட்டிலும் சிறப்பாக செயல்பட்டு இருக்கின்றன . சிஜி காட்சிகளும் ரயில் முதல் பூச்சி வரை, பெரிதாக  உறுத்தாத நேர்த்தி .

 ஹாரீஸ் ஜெயராஜின்  இசை இன்னும் சிறப்பாக இருந்து இருக்கலாம் . காஷ்மீரில் குழநதைகள்  பாடும் பாடலின் வரிகள் சிறப்பு . 

சின்னதும் பெரிதுமாக அடுத்தடுத்து நிறைய காட்சிகள் கொண்ட படம் பரபரப்பாகப் போவதில்  ஆண்டனியின் எடிட்டிங் பெரும்பலம் தருகிறது .ஆபத்தான விஷப் பூச்சி வரும் ரயிலை ஹீரோ குண்டு வைத்து தகர்க்க,  பறக்கும் பூச்சிகளை நெருப்பு விழுங்க … கடைசி ஒரு பூச்சியை நெருப்பு தொடும் முன் அந்த ஷாட்டை கட் பண்ணி , அதை வைத்து ஒரு நொடி வித்தியாசத்தில் ஒரு புதிய கதைக்கான லீட் கொடுத்து இருக்கும்   விதம்  வியந்து பாராட்ட வைக்கிறது . கிரேட்.

பொதுவாக இது போன்ற காட்சிகளை படத்தின் கடைசி ஷாட் ஆக வைப்பார்கள் . ஆனால் அதை ஜக்ஸ்ட் லைக் தட் ஒரு பரபரப்பான ஆக்ஷன் காட்சிக்குள் தெளித்து விட்டுப் போகிற அளவு திரட்சியான படம் இது . 

“பாகிஸ்தான் அரசை எதிர்ப்பது வேறு . அதற்காக அந்த நாட்டு மக்களின் விவசாயத்தை அழிக்க விஷப் பூச்சியை அனுப்புவது என்னடா நியாயம் ? அந்த மக்கள் என்ன பாவம் பண்ணாங்க . ” என்று தொழில் அதிபரிடம் பிரதமர் மோகன்லால் கேட்கும் கேள்வி….. முக்கிய தவறுகளை மறைக்க மதவெறியை பயன்படுத்தும் அயோக்கியர்களுக்கான செருப்படி !

தனது நடிப்பால் ஒரு நிஜ பிரதமரையே உணர வைக்கிறார் மோகன்லால் . அபாரம்.

ஆயீஷா காதல் கவர்ச்சி மற்றும் பாட்டுக்கு .அப்பாவி இளம் பிரதமர் பாத்திரத்தை ரசித்து  செய்து இருக்கிறார் ஆர்யா . 
சமுத்திரக்கனி நேர்த்தி .  தொழில் அதிபராக வரும் பொம்மன் இரானி , தீவிரவாதியாக வரும் சிராக் ஜானி இருவரும் அசத்தல் .பொதுவாகவே பாத்திரங்களுக்கான நடிகர் தேர்வு சிறப்பாக இருக்கிறது . 

இரண்டாம் பாதியில் திடீர் என வரும் கிளப் சாங் ஒட்டவில்லை . படத்தின் முக்கியப் பிரச்னையாக வரும் சீரியசான கதைப் போக்குக்குள் படம் போகும்வரை எப்படி வேண்டுமானாலும் விளையாடலாம். அந்த ஏரியாவுக்குள் நுழைந்த பிறகு அதை பிரேக் பண்ணி இது போல வம்படி பாடல்கள் வருவது  சுமையாகவே மாறும் . 

அதுபோல மனிதக் கழிவு உரம் பற்றிய காட்சி தவறில்லை . அதை சொன்ன விதம் முகம் சுளிப்பு. 

தஞ்சை விவசாயிகளின் சோகம் பற்றிய காட்சிகளை இன்னும் கொஞ்சம் அழுத்தமாகவே சொல்லி இருக்கலாம் .

 இப்படி புறக்கணிக்கத்தக்க ஓரிரு குறைகளே கொண்ட இந்தப் படம் கமர்ஷியல் கருத்தியல் இரண்டிலும் ஜொலிக்கிறது . 

அம்பானி அதானி போன்ற  போன்ற  முதலாளிகளுக்கு பிரதமர் போன்ற அரசுத் தலைவர்கள் அதிக இடம் கொடுத்தால் , ஒரு நாள் அந்த பிரதமரையே பண வெறிக்காக கொல்ல அவர்கள் தயங்கமாட்டார்கள் என்று இந்தப் படம் பாடம் சொல்கிறது . 

யாருக்கு ? இன்றைய பிரதமர் மோடிக்கு . 

ஆம்.. இது ரசிகனுக்குப் படம் .மோடிக்குப் பாடம் !

காப்பான் ….. வெற்றியால் உலகளப்பான். 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *