“கபாலி படத்தை நாங்களும் திரையிடுவோம் “

 

kabali 1திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவரும்  கோயம்பேடு  ரோகினி காம்ப்ளக்ஸ் உட்பட  பல திரையரங்குகளை நடத்துபவருமான பன்னீர் செல்வம்  மீது,

 கலைப்புலி எஸ் தாணு உள்ளிட்ட தயாரிப்பாளர்கள்  நேரடியாகக்  குற்றம் சாட்டுவது புதிய விஷயம் இல்லை. 

ஆனால் இதுவரை பன்னீருக்கு எதிராக முணுமுணுத்துக் கொண்டு இருந்த சக திரையரங்கு உரிமையாளர்களே,  இப்போது மைக் பிடித்துக் குரல் கொடுக்கும் அளவுக்கு  முன்னேறி இருக்கிறார்கள் .
கலைப்புலி எஸ் தாணு தயாரித்த தெறி படத்தை செங்கல்பட்டு ஏரியாவில்  திரையிடமாட்டோம் என்று,  பன்னீர் செல்வம் தலைமையிலான திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அறிவித்தது . 
அதற்குக் காரணம்,  தெறி பட  விநியோகம் உள்ளிட்ட பல்வேறு விசயங்களில் தாணுவுக்கும்  பன்னீர் செல்வத்துக்கும் இருந்த பழைய பிரச்னைகள் . 
செங்கல்பட்டு ஏரியா தவிர தமிழகம் எங்கும்  வெளியான தெறி ரசிகர்களைக் கவர,
‘நமக்கு வர வேண்டிய வருமானம்  போச்சே’ என்று வருந்திய  செங்கல்பட்டு ஏரியா திரையரங்கு உரிமையாளர்கள் சிலர், பன்னீர்  செல்வம் விதித்த  தடையை மீறி படத்தை வெளியிட்டனர் . 
அப்படி வெளியிட்ட திரையரங்குகளில் மல்டி பிளக்ஸ் திரையரங்குகளும் தனித்   திரையரங்குகளும் அடங்கும் .
kabali 2
இவற்றில் மல்டி பிளக்ஸ் திரையரங்கு உரிமையாளர்கள் பெரும்புள்ளிகள் என்பதால், அவர்களை பகைத்துக் கொள்ளாமல்,  
ஐந்து தனித் திரையங்கு உரிமையாளர்கள் மீது மட்டும் வன்மம் பாராட்டும் பன்னீர் செல்வம் , அந்த திரையரங்குகளுக்கு யாரும் படம் தராமல் தடுத்து விட்டதால், 
அந்த திரையரங்குகளை பாழாகிக்  கொண்டு இருக்கின்றனர் என்பது,…
 அடையாறு கணபதி ராம் திரையரங்கு உரிமையாளர் , சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரையரங்கு உரிமையாளர் சங்கப் பிரதி நிதிகள்  ஸ்ரீதர் மற்றும் சத்திய சீலன் உள்ளிட்ட பலரின் குற்றச் சாட்டு . 
இது குறித்து கூட்டாக பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர்கள் . 
“வெளியாகும் திரைப்படங்கள் ஒரு வாரத்துக்கு மேல் ஓடுவதில்லை என்பதால் அரசு அனுமதிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதல் காட்சிகள் , கூடுதல்  கட்டணம் , வசூலிக்கும் குற்றத்தை ,
மேற்படி பன்னீர் செல்வமும் அவருடன் இருக்கும் மற்ற சில  தியேட்டர் உரிமையாளர்களும் செய்கின்றனர் . 
அது போதாது என்று மேலும் மேலும் லாபம் சம்பாதிப்பதற்காக தங்கள் பக்கத்தில் உள்ள மற்ற திரையரங்குகளுக்குப்   படம் தர விடாமல் செய்து  ,
kabali 3
அந்தத் திரையரங்குகள் தரவேண்டிய தொகையையும் தாங்களே கொடுத்து,
தங்கள்  திரையரங்குகளில் மட்டுமே படம் பார்க்கும்படி  செய்து,  அந்த மற்ற தியேட்டர்களை நொடித்துப் போகச் செய்கின்றனர் . 
அந்த தியேட்டர் உரிமையாளர்களால் திரையரங்கை  நடத்த முடியாத நிலையை ஏற்படுத்தி விட்டு,  பின்னர் இவர்களே அந்த திரையரங்கை அடிமாட்டு விலைக்கு லீசுக்கு எடுத்துக் கொள்கின்றனர் . 
இதனால் நேர்மையான தியேட்டர்  உரிமையாளர்கள் இயல்பாக தொழில் செய்ய முடியவில்லை” என்பது இவர்கள் வைக்கும் முதல் குற்றச் சாட்டு . 
இப்படி சட்டவிரோதமான செயல்கள் செய்யும் நபர்கள் ஒரு கூட்டணி அமைத்துக் கொண்டு ,
தங்கள்  சொல்லை மீறி,  எல்லா திரையங்குகளுக்கும் படம் கொடுக்கும் தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்குத்  தடை போட்டு,
அவர்கள் வெளியிடும் படங்களை திரையிட விடாமலும் , அவர்கள் தரும் படங்களை திரையிடும் திரையரங்குகளுக்கு அடுத்த கட்டமாக படம் கிடைக்காமலும்  செய்து,
 திரைத் தொழிலை அழிக்கிறார்கள் என்பது அடுத்த குற்றச் சாட்டு 
kabali 4
திரைப்படம் வெளியிட்ட வகையில் கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டு விட்டது என்று பொய்யாகச் சொல்லி, 
அந்த நஷ்டத்தை சம்மந்தப்பட்ட நடிகர். தயாரிப்பாளர் , விநியோகஸ்தர் திருப்பித் தராவிட்டால், அவர்களது அடுத்த படங்களை திரையிட மாட்டோம்  என்று மிரட்டி , 
இடைத் தரகர்கள் மூலமாக , கோடிக் கணக்கில் பணத்தை அநியாயமாகப் பிடுங்கி  இவர்கள் தின்று கொழுக்கிறார்கள்  என்றும் ,
இதற்காக,  நஷ்டம் காணாத திரையரங்கு உரிமையாளர்களிடமும் அவர்களுக்கும் பணம் வாங்கித் தருவதாக ஆசை காட்டி இழுத்துப் போடுகின்றார்கள் என்றும்,  இவர்கள் குற்றம்  சாட்டுகின்றனர் 
“இந்த வகையில் ரஜினி உட்பட பலரிடமும் வாங்கிய பணததில் இருபது சதவீதம் வரை நோகாமல் கமிஷனாக எடுத்துக் கொண்டு மீதிப் பணத்தையே பிரித்துத் தருகிறார்கள் .
இப்படி கோடிக் கணக்கில் பணம் பெறப்பட்டும் லிங்கா படப் பிரச்னை இன்னும் தீரவில்லை”
 என்பதை சுட்டிக் காட்டும் இவர்கள் 
“அஞ்சான் படம் சம்மந்தமாக லிங்கு சாமி, பாயும்புலி பட விசயத்தில் சிவா, கணிதன் மற்றும் லிங்கா பட விவகாரத்தில் கலைப்புலி எஸ் தாணு ஆகியோரிடம்,
 kabali 5
தனிப்பட்ட முறையில் பன்னீர் செல்வம் பணம் பெற்றுக் கொண்டு இருக்கிறார் . 
தனது செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சில திரையரங்குகளுக்கு படம் கிடைக்காமல் செய்து அவர்களையும கட்டுப்பாட்டில் கொண்டு வந்து , 
செங்கல்பட்டு ஏரியாவுக்கான எல்லா படங்களின் உரிமையையும் அடிமாட்டு  விலைக்கு தயாரிப்பாளர்களிடம் இருந்து வாங்க பினாமிகளை தயார் செய்து உள்ளனர்.
செங்கல்பட்டு ஏரியாவை அடுத்து சேலம் ஏரியாவையும் கெடுக்கும் வேலையில் பன்னீர் செல்வம் இறங்கியுள்ளார்  ” என்கின்றனர் .
இதற்கெல்லாம் தீர்வு ?
“தயாரிப்பாளர்கள் , விநியோகஸ்தர்கள் , திரையரங்கு உரிமையாளர்கள் சம்மந்தப்பட்ட பிரச்னைகளை தீர்க்க 19.10.1994 அன்று முதல்வர் ஜெயலலிதா அமைத்த குழு அப்போது பல பிரச்னைகளை தீர்த்தது .
அப்போது போடப்பட்ட அரசு ஆணை Ms.No.260- ன் படி எல்லா பிரச்னைகளையும் தீர்த்தால்தான் நிலைமை சீராகும் ” என்கிறார்கள்.
சரி, இப்போது இது பற்றி இவர்கள் பேசக் காரணம் ?
kabali 6
கலைப்புலி எஸ் தாணு தயாரித்த தெறி பட சமயத்தில் வெடித்த பிரச்னை இது . இப்போது அடுத்து அவர் தயாரிப்பில் ரஜினி நடித்த கபாலி திரைக்கு வரவிருக்கிறது .
லிங்கா படத்தின் கொடுக்கல் கொடுக்கல் வாங்கல் மிரட்டல் சுருட்டல் விவகாரமும் முடியாமல் இருக்கிறது .
எனவே கபாலி வரும் சமயத்தில் இந்த பிரச்னை மேலும் விஸ்வரூபம் எடுக்கும் . கட்டப் பஞ்சாயத்துகள் , தியேட்டர் புறக்கணிப்புகள் , நஷ்டக் கணக்கு  காட்டும் திட்டங்கள் உருவாகும்எ
என்பது இவர்கள் கணிப்பு . எனவேதான் இந்த அரசு ஆணை கோரிக்கை . 
“ஒரு வேளை பன்னீர் செல்வம் கபாலி விசயத்தில் பிரச்னை செய்தால் அவர்களை மீறி நீங்கள் படத்தை திரையிடத் தயாரா?” என்று கேட்டால் ,
கண்டிப்பாக  கபாலி படத்தை நாங்களும் திரையிடுவோம் ” என்கின்றனர்.
சிறப்பு !

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →