கடைக்குட்டி சிங்கம் @ விமர்சனம்

2D என்டர்டைன்மென்ட் சார்பில் நடிகர் சூர்யா தயாரிக்க, கார்த்தி, சாயீஷா, சத்யராஜ், சூரி, பிரியா பவானி ஷங்கர், அர்த்தனா, பானு பிரியா , விஜி சந்திரசேகர் உட்பட ,

ஏராளமான நடிக நடிகையர் நடிக்க, கதை திரைக்கதை வசனம் எழுதி பாண்டிராஜ் இயக்கி இருக்கும் படம் கடைக்குட்டி சிங்கம் . 

ஆண் மகனுக்கு ஆசைப்படும் பெருநாழி ரணசிங்கத்துக்கு (சத்யராஜ்) , முதல் மனைவி  வானவன் மாதேவி  ( விஜி சந்திரசேகர்) மூலம், 

நான்கு பெண் பிள்ளைகளே பிறந்த நிலையில், ஆண் குழந்தைக்காக ரணசிங்கம் அடுத்த கல்யாணத்துக்கு ஆசைப்பட , தன் தங்கை பஞ்சவன் மாதேவியையே (பானு பிரியா) கட்டி வைக்கிறார்  வானவன்  மாதேவி . அவருக்கும் ஒரு பெண் குழந்தையே – அதுவும் பேச்சு மாற்றுத் திறனாளியாகப் பிறக்கிறது .

எனவே மூன்றாவதாக தில்லைநாயகத்தின் (பொன் வண்ணன் ) தங்கையை  (செந்தி மீனா) பெண் பார்க்கப் போயிருந்த வேளையில் ,
 
மூத்த மனைவி மீண்டும் கர்ப்பமாகி இருக்கும் செய்தி வர , பாதியிலேயே அங்கிருந்து திரும்புகிறார் ரண சிங்கம் . 
 
பிறக்கிறது ஒரு ஆண் பிள்ளை . அதே நேரம் மூத்த அக்கா மங்கம்மா ராணியும் கர்ப்பமாக பிறக்கிறது ஆண் பிள்ளை . 
 
ரணசிங்கத்தின் மகன் பெருநாழி குணசிங்கம் ( கார்த்தி) , மங்கமாவின் மகன் சிவகாமியின் செல்வன் ( சூரி )
 
மூத்த மகள் மங்கம்மாவின் கணவர் தாமரை மணாளனும்  (சரவணன் ), அடுத்த மகள் வேலு நாச்சியாள் ராணி(தீபா )யின் கணவர், 
 
மல்லிகை மணாளனும் (மாரிமுத்து) அண்ணன் தம்பிகள். ஆனால் சொத்துப் பிரச்னையில் தீராப்பகை .
 
ஒருவர் முகத்தில் ஒருவர் விழிக்க மாட்டார்கள் . தவிர மல்லிகை மணாளன் – வேலு நாச்சி தம்பதிக்கு குழந்தை இல்லை . 
மூன்றாவது மகள் சம்யுக்தா ராணியின் (யுவராணி) கணவர் மாணிக்கம் (இளவரசு) . இந்தத் தம்பதியின் மகள் பூம்பொழில் செல்லம்மா (பிரியா பவானி சங்கர் )  .
 
பூம்பொழில் செல்லம்மாவுக்கு குணசிங்கத்தை திருமணம் செய்து கொள்ள ஆசை . அவளது பெற்றோருக்கும் அந்த சம்மந்தத்துக்கு ஆசை . 
 
நான்காவது மகள் பத்மாவதி ராணி (இந்துமதி மணிகண்டன்) கணவர் அதியமான் நெடுங்கிள்ளி (ஸ்ரீமன்) . மகளாக ஒரு சிறுமி . 
 
பெரியவர் ரண சிங்கத்தின் இரண்டாவது மனைவிக்குப் பிறந்த மாற்றுத் திறனாளி மகள் ஜான்சி ராணி (ஜீவிதா கிருஷ்ணன்) ஒரு பெண் குழந்தையை பெற்ற நிலையில், குடிகாரக் கணவன் மறைவில்  அவள் விதவையாகிவிட அவளது மகளான ஆண்டாள் பிரியதர்ஷினிக்கும்  (அர்த்தனா ), 
 
நாயகன் குண சிங்கத்தை திருமணம் செய்து கொள்ள ஆசை . அவளது அம்மா. அம்மாயி அனைவர்க்கும் அது நடக்க வேண்டும் என்பதே ஆசை . 
 
இரண்டு பெண்களில் தம்பிக்கு எந்த பெண்ணை கட்டித்தருவது என்று , அக்காக்கள் மற்றும் மாமாக்கள் , அம்மாயிகள் இரண்டு அணி அமைத்து செயல்பட, 
 
குண சிங்கத்துக்கும் , தில்லைநாயகம் மகள் கண்ணுக்கினியாள் என்ற பெண்ணுக்கும் காதல் வருகிறது .
 
அதாவது ரண சிங்கம் மூன்றாவது கல்யாணத்துக்குப் பெண் பார்க்கப் போய் , பாதியிலேயே திரும்பி வந்த பெண்ணின் (செந்தி குமாரி), 
 
அண்ணனான தில்லை நாயகத்தின் மகள் கண்ணுக்கினியாள் ! இது அக்காக்களுக்கு தெரிய வர , ஆரம்பிக்கிறது அதகள ரணகளம் !
 
இது தவிர கண்ணுக் கினியாளின் தாய்மாமன் ஒருவன் ஜாதிச் சங்கத்தில் முக்கிய  பதவிக்கு வர எண்ணி  ஜாதி வெறி பிடித்து, 
 
பூம்பொழில் செல்லம்மாவிடம் வம்பு செய்ய , அவனை குண சிங்கம் அடிக்க , அவர்களுக்குள் மூழ்கிறது பெரும்பகை !
அரசியல்வாதி ஒருவர் (ஜான் விஜய் ) தன் சுய நலத்துக்காக இன்னொரு பக்கம் களம் இறங்குகிறார் . 
 
இந்த எல்லா கதாபாத்திரங்களும் தங்கள் குண இயல்புகளோடு செயல்பட , அது குண சிங்கத்தை எப்படி பாதிக்கிறது .. அப்புறம் நடப்பது என்ன  என்பதை 
 
உறவு பாசம் , கலாச்சாரம் , செண்டிமெண்ட் இவற்றின் அடிப்படையில் கமர்ஷியல் கலந்து சொல்லும் அக்மார்க் குடும்பப் படம்தான் கடைக்குட்டி சிங்கம் . 
 
இத்தனை கதாபாத்திரங்களை வைத்துக் கொண்டு , பெரும்பாலும் எந்த கதாபாத்திரத்தையும் பெரிதாக டம்மி ஆக்கி விடாமல், 
எல்லா கதாபத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து அமைக்கப்பட்டு இருக்கும் திரைக்கதையிலேயே வியக்க வைக்கிறார் இயக்குனர் பாண்டிராஜ் . 
 
வசனம் , படமாக்கல், இயக்கம் எதிலும் சோடை போகவில்லை படம் .
 
இது போதாது என்று விவசாயியின் பெருமை , இயற்கை விவசாயத்தின் அருமை , நம்மாழ்வார் பெருமை ,  காளை மாடுகளை உறவாக நினைத்து வளர்க்கும், 
 
நம்ம விவசாய வாழ்வியல் , மாடுகளின் மரணம் மனிதர்களின் மரணத்துக்கு இணையாக உணரப்படும் மாண்பு , உறவுகளின் பலம் , விட்டுக் கொடுத்தலின் சிறப்பு,
 
செய்முறைகளை சிறப்பாக செய்ய வேண்டிய குணம் , ஆண் பெண் நட்பு, ஆணவக் கொலை எதிர்ப்பு ,தமிழ் உணர்வு, தாய் மாமன் உறவு  என்று பல மட்டங்களில் விஸ்வரூபம் எடுத்துள்ளது படம் . 
 
விவசாயம் பற்றி கல்லூரியில் கார்த்தி பேசும் காட்சி கவிதை . 
 
கவுரத் தோற்றத்தில் வரும் சூர்யாவிடம் கார்த்தி காளைகளை   தன் தம்பிகள் என்று சொல்லி அறிமுகப்படுத்துவது அருமை 
 
சபாஷ் பாண்டிராஜ் . 
 
ஒவ்வொரு அக்கா மற்றும் மாமாவுக்கும் வித்தியாச வித்தியாசமான குணாதிசயம் பிடித்த விதமும் சிறப்பு . (உதாரணம் சாமியாடும் பெரிய அக்கா )
நீண்ட நாளைக்குப் பிறகு தமழ் சினிமாவில் கண் நிறைய ஒரு மாட்டு வண்டிப் பந்தயம் ! அதை வேல்ராஜின் ஒளிப்பதிவு உதவியோடு மிகச் சிறப்பாக படமாக்கி இருக்கிறார் பாண்டிராஜ் 
 
அது தவிர நிறைய கதாபாத்திரங்கள் ஒரே பிரேமில் இயங்கும் காட்சிகள் கூட பார்ப்பதற்கு கசகசப்பாக தெரியாத அளவுக்கு சிறப்பாக ஒளிப்பதிவு செய்துள்ளார் வேல்ராஜ் . குறிப்பாக , இளவரசு மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு சாக முயலும் காட்சி . 
 
இமான் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம் . திலீப் சுப்பராயனின் சண்டைக்காட்சிகள் அதிரடி . 
குணசிங்கமாக ரசித்து ருசித்து நடித்துள்ளார் கார்த்தி. அசத்தல் . இது கார்த்திக்கு ஒரு மறக்க முடியாத கதாபாத்திரமாக இருக்கும் .  போகிற போக்கில் பாத்திரத்துக்கு உயிர் கொடுக்கிறார் சத்தியராஜ் . 
 
பொருந்தாத தோற்றம் என்றாலும் நடிப்பால் பொருத்திக் கொள்கிறார் சாயிஷா . பிரியா பவானி சங்கர், அர்த்தனா இருவரும் சிறப்பு . 
 
சூரி கிடைத்த கேப்பில் கிடா வெட்டி அங்காங்கே சிரிக்க வைக்கிறார் 
 
ஸ்ரீமன், ஜான் விஜய் போன்ற ஒரு சிலரின் வழக்கமான நடிப்பை தவிர மற்ற எல்லோருமே சிறப்பான பங்களிப்பை நடிப்பில் கொடுத்துள்ளனர் . நடிகர்களின் நடிப்பு, இயக்குனரின் இயக்கம், ஒளிப்பதிவாளரின் ஒளிப்பதிவு மூன்றும் சேர்ந்து சில காட்சிகள் மிக யதார்த்தமாக அமைந்து , நாம் பார்ப்பது சினிமா அல்ல; நிஜத்தில் நடக்கும் சம்பவம் என்ற உணர்வை ஏற்படுத்துகின்றன. கிரேட் . 
 
வில்லனுக்கு ஆர் கே சுரேஷின் குரல் கம்பீரம் சேர்க்கிறது .
 
எல்லா மாமாக்களிடமும் பணிவாக பேசும் குண சிங்கம் பிள்ளையில்லாத இரண்டாவது அக்காவின் கணவரிடம் மட்டும் கொஞ்சம் உரிமையாக சத்தம் போட்டு பேசுகிறான் . 
 
என்னடா என்று பார்த்தால் , கிளைமாக்சில் அதற்கு ஓர் உணர்வுப் பூர்வமான காரணம் சொல்கிறார் இயக்குனர் . சபாஷ் . இப்படி நினைத்து ரசிக்க  சில காட்சிகள் . 
அக்கா மகள்களை கல்யாணம் செய்து கொள்ளாததற்கு குண சிங்கம் சொல்லும் காரணம் சரி என்றாலும்  (அதைத்தான் படத்தில் மிக முக்கிய விஷயமாக வைத்துள்ளார் பாண்டிராஜ் ),
 
வெகு ஜன வாழ்வில் அக்கா மகள்களை திருமணம் செய்து கொண்டுள்ளவர்களை அது தர்ம சங்கடப்படுத்தும் . 
 
சில விஷயங்கள் வாழ்வின் அங்கமாகி விட்ட பின்பு அதை ஆராய்ச்சி செய்யக் கூடாது . ஆடு கோழி பலியிட, தடைச் சட்டம் போட்டு விட்டு தப்பிக்க முடிகிற ஊர் இல்லை இது . 
 
“உங்க மேல எல்லாம் பாசம் வச்சேன் . ஆனா அவளை காதலிச்சுட்டேன் .பாசத்துக்கு ஆயிரம் உறவு இருக்கலாம். ஆனால் காதலிச்ச பிறகு கல்யாணம்தானே உறவு” என்ற ரீதியில், 
கிளைமாக்சில் குணசிங்கம் பேசி இருக்கலாமோ ? இன்னும் நல்லா இருந்து இருக்குமோ ? என்ன சொல்றீங்க பாண்டிராஜ் ?
 
அதே போல அந்த கோவில் லோக்கேஷன்லையே படம் முடிஞ்சு இருக்கலாமோ .. தேவைன்னா அங்கேயே சண்டையும் வச்சு ?
 
அதை விட்டு , வில்லன் மாமன் மகன்களை கடத்த , பாலத்துக்கு வந்து வைக்கோல் போர் பரப்பி .. தேவையா ?( எனினும் அதற்குள்ளும் கூட ”விவசாயி யாரும் இருந்தா என் பக்கம் வந்துருங்க .
 
நான் விவசாயியை அடிக்க மாட்டேன்” என்று குணசிங்கம் சொல்வது  சூப்பர்.  ஒரு கேரக்டரை கடைசிவரை மெயின்டைன் பண்ணுவது என்பது இதுதான்  )
அடிப்படைக் கதையில் எல்லோரும் ஏற்றுக் கொள்ளும்படியான புதுமை என்று எதுவும் இல்லாவிட்டாலும், 
 
மனித உணர்வுகளுக்கும் தமிழ் இனப் பெருமைக்கும் கவுரவம் சேர்க்கும்  திரைக்கதை வசனம், மற்றும்  ஒளிப்பதிவு,  இயக்கம் , நடிப்பு இவற்றால் மனம் கவர்கிறது படம் . 
 
கடைக்குட்டி சிங்கம் .. கனிவோடு ஒரு கர்ஜனை !
 
மகுடம் சூடும் கலைஞர்கள் 
——————————————
பாண்டிராஜ், கார்த்தி, சத்யராஜ், வேல்ராஜ் , தயாரிப்பாளர் சூர்யா 
 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *