கடாரம் கொண்டான் @ விமர்சனம்

ராஜ் கமல் இன்டநேஷனல் பிலிம்ஸ் தயாரிப்பில் விக்ரம் , அக்ஷரா ஹாசன், அபு ஹசன் நடிப்பில் தூங்காவனம் ராஜேஷ் எம் செல்வா இயக்கி இருக்கும் படம் . 

மலேசியாவின் புகழ் பெற்ற இரட்டைக் கோபுரத்தின் மையத்தில் உள்ள ஓர் அலுவலகத்தின் கண்ணாடி சுவரை உடைத்துக் கொண்டு குதிக்கிறார்,  அண்டர் கவர் ஆபரேஷன் அதிகாரி அப்புறம் சீக்ரெட் ஏஜென்ட் என்று பல வேலை பார்த்த கே கே எனப்படும் கார்த்திகேயன் ( விக்ரம்)
 
அவரை இருவர் துரத்த , ஒரு விபத்தில் சிக்கி அடிபட்டு மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார் . போலீஸ் காவல். 
 
அந்த மருத்துவ மனையில் அண்மையில் வேலைக்கு சேர்ந்த ஒரு தமிழ் நாட்டு இளைஞன் ( அபு) . பெற்றோர் சம்மதமின்றி திருமணம் செய்து கொண்ட அவனது காதல் மனைவி ( அக்ஷரா)  சூல் கொண்டு இருக்கிறார். எப்போது வேண்டுமானாலும் குழந்தை பிறக்கலாம் என்ற சூழல் . 
 
கார்த்திகேயனை மீட்க விரும்பும் அவரது ஆள் ஒருவன் , அந்த சூல் கொண்ட பெண்ணை கடத்தி வைத்துக் கொண்டு , ”கார்த்திகேயனை எப்படியாவது வெளியே கொண்டு வா உன் மனைவியை விட்டு விடுகிறேன்” என்கிறான்  காதல்  இளைஞனிடம் !
 
காவல் துறையில் ஒரு கொடூர ஆண் அதிகாரிக்கும் நியாயமான பெண் அதிகாரிக்கும் இடையில் பனிப்போர் . 
 
கார்த்திகேயனை அந்த இளைஞன் வெளியே கொண்டு வர முயல, அப்புறம் என்ன நடந்தது ? கார்த்திகேயனுக்கு என்ன பிரச்னை? கடத்தப்பட்ட பெண் என்ன  ஆனாள்? இவை எல்லாம் யாருக்காக யாரால் எதற்காக என்பதே இந்த கடாரம் கொண்டான் . 
 
கடாரம் கொண்டான் என்பது ராஜேந்திர சோழனின் பட்டப் பெயர் . கடாரம் என்பது மலேசியாவின் பழைய பெயர் . சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மலேசியாவை வென்ற காரணத்தால் ராஜேந்திர சோழனுக்கு வந்த பட்டப் பெயர் அது . ( கங்கை கொண்டான் என்ற இன்னொரு பட்டப் பெயரும் அவனுக்கு உண்டு )
 
அந்த பெயரை வைத்துக் கொண்டு பிரெஞ்சில் வந்த பாயின்ட் பிளாங்க் படத்தை மறு உருவாக்கம் செய்து இருக்கிறார் ராஜேஷ் எம் செல்வா .
 
மேக்கிங்கில் சிறப்பாக செய்து இருக்கிறார் . 
 
மலேசிய இரட்டை கோபுரத்தை ஒரே ஷாட்டில் அணு அணுவாக அணுகி சட்டென்று அதில் இருந்து விக்ரம் குதிக்கும் காட்சி மேக்கிங் சிறப்புக்கு உதாரணம். 
 
விக்ரம் அசத்தலாக நடித்துள்ளார் . சின்னச் சின்ன அசைவுகள் பார்வைகள் அந்த உடல் மொழிகள் அபாரம் . ஆனால் நடிப்பில் சற்றே கமல்ஹாசன் பாணி தெரிகிறது .
 
பெரிய கண்கள் , குறுகுறு சிரிப்பு , குழந்தைத்தனமான முகம் , முயன்று தமிழை சரியாக பேசும் சிரத்தை என்று அக்ஷரா கவர்கிறார் . 
 
அபு ஹாசன் ஒகே . 
 
ஜிப்ரனின் இசை , ஸ்ரீனிவாஸ் குதாவின் ஒளிப்பதிவு , பிரவீன் கே எல் எடிட்டிங் , ஆகியவை சிறப்பு . 
 
திரைக்கதை இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம் . 
 
என்னதான் கலவரம் என்றாலும் மலேசிய கமிஷனர் ஆபீசுக்குள் அப்படியா தி நகர் ரங்கநாதன்  தெரு  போல கூட்டம் அம்மும் ? 
 
தமிழ் சப் டைட்டில்களில் ‘ஐயோக்கியன் ‘ ,  ‘பன்னலாம்’ , ‘காட்டிலாம்’  என்று ஏகப்பட்ட பிழைகள் . நியாயமா ?
 
கடாரம் கொண்டான் …. அதிரடி ஆக்ஷன் அதகளம்! 
 
 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *