களத்தூர் கிராமம் @ விமர்சனம்

ஏ ஆர் மூவி பாரடைஸ் சார்பில் ஆவுடைத்தாய்  ராமமூர்த்தி தயாரிக்க, கிஷோர்,  யஜ்னா ஷெட்டி , சுலைல்குமார், மிதுன் குமார்,ரஜினி மகாதேவையா,

அஜய் ரத்னம் தீரஜ் ரத்னம் நடிப்பில் சரண் கே அத்வைதன் இயக்கி இருக்கும் படம் களத்தூர் கிராமம் . சுற்றிப் பார்க்க சுகமா இந்த கிராமம் ? பேசுவோம் 

தமிழ்நாடு  ஆந்திர எல்லையில் உள்ள  தமிழக கிராமமான களத்தூர் என்ற – கருவேலங்காடு சூழ் கிராமத்துக்கும் காவல்துறைக்கும் பல  காலமாக ஜென்மப் பகை . 
 
அதன் பின்னணியில்  வழிப்பறி, ஆதிக்க வெறி, ஒரு நட்பு, துரோகம் , தொழில் பகை, ஆந்திர ரவுடிகள் என்று பல விஷயங்கள் ! 
 
இளையராஜா இசை அமைப்பாளராக அறிமுகமான காலத்தில் இளவயது நண்பர்களாக இருந்தவர்கள் கிடாத் திருக்கையும் (கிஷோர்) வீரண்ணனும். (சுலைல் குமார்). 
 
வறுமை காரணமாக வழிப்பறி செய்து பிழைப்பது இவர்கள் வேலை . 
 
அதனால் போலீசுக்கு இந்த ஊர் மக்கள் யாரென்றாலும் ஆகாது . 
 
ஒரு நிலையில் கிடாத்திருக்கை திருட்டுத் தொழிலை விட்டு கரி மூட்டம் போடும் தொழிலில் (மரத்தை துண்டுகளாகி எரிய விட்டு கனலும் நெருப்பை நீர் ஊற்றி அணைத்து, 
 
பல்வேறு அளவில் கரித் துண்டுகளாகவும் கரித் தூளாகவும் ஆக்கி லோடு கணக்கில் விற்பனை செய்யும் தொழில் ) இறங்குகிறான் . 
 
அவனது கரி மூட்டத்தை ஆந்திர மாநில லோக்கல் அரசியல்வாதியான பீமாராவ் என்பவன் அடிமாட்டு விலைக்குக் கேட்க , கிடாத் திருக்கை மறுக்க, வஞ்சம் வைக்கும் பீமாராவ் ,
 
கிடாத்திருக்கையின் வண்டியில் ஆயுதங்களை ஒளித்து வைத்து , போலீசில் மாட்ட வைத்து தனது அரசியல் செல்வாக்கால் ஜெயிலுக்கு அனுப்புகிறான் . 
பலமாதம் ஜெயிலில் இருந்து ஒரு வழியாக கேசை உடைத்து வருகிறான் கிடாத்திருக்கை .  
ஊருக்கு நல்லது நினைக்கும் கிடாத்திருக்கை மீது ஊர் மக்களுக்கு மரியாதை. ஆனால் பெண்கள் விசயத்தில் மோசமான வீரண்ணன் பல பெண்களை சீரழிப்பவன் . 
 
கோயில் பூசாரி மனைவியிடம் தவறாக நடக்க முயன்று அது முடியாத நிலையில் அவரைப் பற்றி தவறாக வீரண்ணன் கதை கட்ட ,
 
ஊர்  கேவலமாகப் பேச, பூசாரி  வந்து வீரண்ணன் பற்றி கிடாத்திருக்கையிடம் சொல்ல 
நண்பன் நல்லவன் என்று நம்பும் கிடாத்திருக்கை அவனுக்கு ஆதரவாகவே பேசி ,
 
பூசாரியின் வேதனைக்கு ஆளாகிறான் . 
 
ஒரு நிலையில் வீரண்ணனுக்கு அவன் பெற்றோர் திருமணம் செய்து வைக்க முயல , யாரும் அவனுக்கு பெண் தராத நிலையில், 
‘கிடாத்திருக்கை சொன்னால் பெண் தருவதாக’ ஒருவர் சொல்ல , பெண் பார்க்க எல்லோரும் போக வீரண்ணனோடு கிடாத்திருக்கை போகிறான் . 
 
வழியில் கிடாத்திருக்கையை சந்திக்கும் ஒரு பெரியவர் தன் மகளை வீட்டு வேலைக்கு என்று அழைத்துப் போன பீமாராவ், 
 
இப்போது அவள் வளர்ந்து பெரியவள் ஆனதும் மும்பை விபச்சார விடுதிக்கு விற்க முயல்வதாக கதறுகிறார் . 
 
பெண்ணைக் காப்பாற்றி விட்டு நிச்சயதார்தத்துக்கு வருவதாக சொல்லி வீரன்ணனை அனுப்பி விட்டு, 
 
பீமாராவ் வீட்டுக்குப் போகும் கிடாத்திருக்கை,  அங்கு பெரியவரின் மகளான செல்வாம்பாளை (யஜ்னா ஷெட்டி )மீட்கிறான் . 
இருவரையும் போலீசும் பீமாராவ் ஆட்களும் துரத்த,  தங்கள் கிராம மலை எல்லைக்கு வருகிறார்கள் . அந்த நேரம் பார்த்து செல்வாம்பாளின் அப்பாவை, 
 
பீமாராவ் கொன்று விட்ட தகவல் வர, தற்கொலைக்கு முயலும் செல்வாம்பாளுக்கு நம்பிக்கை தந்து, 
 
அங்கேயே கோவிலில் தங்கள் ஊர்ப் பூசாரி முன்னிலையில் தாலி  கட்டுகிறான் கிடாத் திருக்கை. 
 
அந்தக் காட்டிலேயே முதலிரவு . 
 
இங்கே வீரண்ணனின் நிச்சயதார்த்தத்துக்கு கிடாத்திருக்கை வராத நிலையில் சண்டை வந்து,  பெண் கொடுப்பதாக சொன்னவரை வீரண்ணன் அடிக்க , கலவரம் ஆகிறது . 
வீரண்ணனிடம் ”இனிமே உனக்கு பெண்ணே கிடைக்காது” என்று அவர் ஊர் ஆட்களே எள்ளி நகையாட ,
 
ஓர் அழகான பெண்ணை திருமணம் செய்து கொண்டுதான் ஊருக்குள் வருவேன் என்று சபதமிட்டு கிளம்பும் , வீரண்ணனும் மலைப் பகுதிக்கு வருகிறான் . 
 
ஆந்திர போலீஸ் மலைப் பகுதியை சுற்றி வளைக்கிறது . 
 
வீரன்ணனை பார்க்கும் கிடாத் திருக்கை  இனி தன்னோடு செல்வாம்பாள் இருந்தால் அவள் உயிருக்கு ஆபத்து என்பதால் வீரண்ணனோடு ஊருக்குள் போகச் சொல்கிறான் .
 
”செல்வாம்பாள் எனக்கு மனைவியான விசயத்தை வெளியே சொன்னால் பீமாராவ் ஆட்களால் அவள் உயிருக்கே ஆபத்து. சொல்லாதே”  என்கிறான் . 
 
கிடாத் திருக்கையை போலீஸ் கைது செய்கிறது . 

செல்வாம்பாளோடு ஊருக்குள் வரும் வீரன்ணனைப் பார்க்கும் ஊர் மக்கள் “சொன்னபடியே வீரண்ணன் ஒரு சூப்பரான பொண்ணை, 

கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்துட்டான் ” என்று வியக்க , அந்த பாராட்டும் செல்வாம்பாளின் அழகும் வீரண்ணனை நட்புத் துரோகம் செய்ய வைக்கிறது . 
 
இவள் என் மனைவி என்று ஊர் முழுக்க சொல்கிறான் வீரண்ணன் 
 
கிடாத் திருக்கை சொன்ன வார்த்தையை மீறி செல்வாம்பாளும் தான் யார் என்பதை சொல்ல முடியாத நிலை . 
 
தவறாக நெருங்க முயலும் வீரண்ணனை விரட்டியபடி, கிடாத்திருக்கையின் வரவுக்காகக் காத்திருக்கும்   செல்வாம்பாள் கர்ப்பமாக இருப்பது தெரிய வருகிறது . 
 
அது வீரண்ணன் குழந்தை என்றே அவனது பெற்றோரும் ஊரும் நம்புகிறது . 
 
சிறையில் இருந்து வெளியே வரும் கிடாத்திருக்கையும் செல்வாம்பாளும் சொல்லும் உண்மைகளை மறுக்கும் ஊர் , இவர்களது ஒழுக்கத்தையே சந்தேகிக்கிறது . 
ஊரை மீறி ஒன்றாக வாழ்கிறார்கள் இருவரும் . 
 
தன்னைக் கொல்ல வரும் வீரண்ணனை  கிடாத் திருக்கை தாக்க,  ஒரு விபத்தாக உயிரிழக்கிறான் வீரண்ணன் . 
 
வீரன்ணனை கொன்றதாகவும் , செல்வாம்பாளின் தந்தையையும் கொன்றதாகவும் இதற்கெல்லாம் செல்வாம்பாளும் உடந்தை என்றும், 
 
பொய் வழக்குப் போட்டு இருவரையும் ஜெயிலில் அடைக்கிறது போலீஸ் .  அங்கே செல்வாம்பாளுக்கு குழந்தை பிறக்கிறது . 
 
அந்தக் குழந்தைக்கு ஜெயில் வாசம் வேண்டாம் என்பதால் வீரண்ணன் பெற்றோரிடம் கொடுத்து வளர்க்கச் சொல்கிறான் கிடாத் திருக்கை. 
ஆனால் கிடாத்திருக்கையும் செல்வாம்பாளும் சேர்ந்து வீரண்ணனுக்கு துரோகம் செய்து விட்டதாக நம்பும் வீரன்ணனின் பெற்றோர், 
அந்த பிள்ளையிடம் ‘ உன் நிஜ அப்பா வீரண்ணன்தான் . அவனை கிடாத்திருக்கை கொண்டு உன் அம்மாவையும் அபகரித்து விட்டான் .
 
உன் அம்மா ஒழுக்கம் கேட்டவள் . எனவே நீ கிடாத் திருக்கையை கொலை செய்ய வேண்டும்’ என்ற வெறியை ஊட்டியே வளர்க்கின்றனர் . 
 
அந்த பிள்ளையான கிட்ணன் பள்ளி மாணவனாக இருக்கும்போது கிடாத் திருக்கையும் செல்வாம்பாளும் ஜெயிலில் இருந்து ரிலீஸ் ஆக,
 
அப்போதே கிடாத் திருக்கையை கொல்ல முயல்கிறான் கிட்ணன் . தன் மகனே தன்னை கொல்ல முயல்வது கண்டு வருந்துகிறான் கிடாத் திருக்கை . 
ஒரு நிலையில் ஊரை விட்டே போகிறான் கிட்ணன்  . 
 
இந்த நிலையில் பீமாரவை ஒருவன் கொன்று விட , அவனை கிடாத் திருக்கை பாராட்ட , அங்கேயே தங்குகிறான் அவன் .
 
தன் மகன் கிட்ணன்தான் அவன் (மிதுன்குமார் ) என்பது வீரண்ணனுக்கும் செல்வாம்பாளுக்குமே தெரியவில்லை . 
 
ஆனால் அவனது சிறுவயது நண்பனுக்கும் பால்யம் முதல் இன்றும் காதலித்து வரும் அன்னலட்சுமிக்கும்  (ரஜினி மகாதேவையா )மட்டும் தெரிகிறது.
 
கிடாத் திருக்கையைக் கொல்ல சரியான சமயம் பார்த்துக் காத்திருக்கிறான் கிட்ணன்  
 
இன்னொரு பக்கம் பீமாராவை கொன்றது கிடாத்திருக்கைதான் என்று எண்ணும் பீமாராவின் மகனும்  கிடாத்திருக்கையைக் கொல்லக் காத்திருக்கிறான் . 
அதே போல  ஊரில் உள்ள மக்களை அநியாயமாக கொடுமைப் படுத்திக் கொன்ற ஒரு இன்ஸ்பெக்டரை கிடாத்திருக்கை கொன்று இருக்க ,
 
அந்த இன்ஸ்பெக்டரின் மகனும் இப்போது போலீஸ் துரை உயர் அதிகாரியாக இருப்பவனுமான தலகாயன் ( தீரஜ் ரத்னம்) என்பவனும், 
 
கிடாத் திருக்கையை கொல்லக் காத்திருக்கிறான் . 
 
களத்தூர் கிராமத்துக்கும் போலீசுக்கும் உள்ள பகைக்குப் பின்னால் இருக்கும்  உண்மைகளைக் கண்டு பிடித்து, 
 
பாதிக்கப்பட்டோருக்கு நீதி வழங்க அமைக்கப் பட்ட விசாரணைக் கமிஷன்  நீதிபதி (அஜய் ரத்னம் ) ஒரு சார்பு இன்றி  நேர்மையாக செயல்படுகிறார் . 
 
இந்த நேரத்தில் கிடாத்திருக்கை கொல்லப் படுகிறார். கொன்றது யார்? ஏன் ? அப்புறம் நடந்தது என்ன என்பதே .. இந்த களத்தூர் கிராமம் !
இவ்வளவு நீளமான நுட்பமான திருப்பங்களும் சாத்தியங்களும்கூடிய இந்தத் திரைக்கதைதான் படத்தின் பெரிய பலம் .
 
பாராட்டுகள்  இயக்குனர் சரண் கே அத்வைதனுக்கு . 
 
எந்த பூச்சும் மேனா மினுக்கித் தனமும் இல்லாத அந்த வறட்சியும் வெம்மையுமான படமாக்கல் படத்துக்கு உயிர் தருகிறது . புஷ்பராஜ் சந்தோஷின் ஒளிப்பதிவும் அருமை !
 
மிக முக்கியமாக இசைஞானி இளையராஜா ….. 
 
ஒரு ஓல சத்தத்தில்  முழு டைட்டிலுக்கும் கொடுத்து இருக்கும் பின்னணி இசை …. இனிமையான அந்த முதல் இரவுப் பாடல்…
 
படம் முழுக்க சிறப்பான பின்னணி இசை என்று படத்துக்குப் பெரும் பலம் சேர்க்கிறார் . 
கிஷோர் உட்பட பலரும் இயல்பான நடிப்பை வழங்கியுள்ளனர் . ஆனால் அவர் செல்வாம்பாள் என்ற பெயரை கடைசிவரை செலவாம்பாள் என்றே உச்சரிப்பது மகா எரிச்சல் . 
அதை கூடவா சரியா சொல்ல மாட்டீங்க கிஷோர் ? ‘அல்லி பன்ணி’ என்ற கன்னட வார்த்தையை   அலலி பன்ணி என்று சொல்வீங்களா?
 
படம் முழுக்க கன்னடமுகங்களும் தெலுங்கு முகங்களுமே அதிகம் ஆக்கிரமித்து இருப்பதால் ஒரு அந்நியத்தன்மை வந்து விடுகிறது .
 
ஒரு முக்கியமான கேரக்டருக்குக் கூடவா தமிழ் நடிகர்கள் கிடைக்கல ? இந்த கொடுமை எல்லாம் தமிழ் சினிமாவில்தாம்பா நடக்கும் . 
 
 
அதே போல எல்லா விசயங்களையும் உடைத்து சொல்லி விட்டு பின்னர் அது எப்படி நடந்தது என்பதை விலாவாரியாக காட்டுவதும் ஒரு குறையே . 
 
இவ்வவளவு நீளமான கதைப் போக்கு உள்ள படத்துக்கு இவ்வளவு மெதுவான நகர்வு ஆகுமா? படம் முக்கிய சமயங்களிலாவது படம் பரபரவென  பறக்க வேண்டாமா ?
 
ஒரு கதைக்கு நல்ல திரைக்கதை அமைக்கப் பட்டால் மட்டும் போதாது . எந்தக் கதைக்கு அது அமைக்கப்பட்டுள்ளது என்பதும் முக்கியம் .
 
இந்தக் கதை இப்போது எந்த வகையில் ரசிகர்களைக் கவரும் விசயமாக இருக்கும் ?
 
நாயகன் படம் வந்து நாலஞ்சு வருடத்துக்குள் வந்திருக்க வேண்டிய கதை அல்லவா இது ?
மொத்தத்தில் களத்தூர் கிராமம் …… சிற்றூர் !

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *