கண்ணே கலைமானே @ விமர்சனம்

ரெட் ஜெயின்ட்மூவீஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் தயாரித்துக் கதாநாயகனாக நடிக்க, தமன்னா , பூ ராம்,வடிவுக்கரசி, வசுந்தரா நடிப்பில் சீனு ராம சாமி கதை திரைக்கதை வசனம் எழுதி  இயக்கி இருக்கும் படம் கண்ணே கலைமானே . கலை மானை ரசிக்க முடியுமா ? பார்க்கலாம்.

 பி எஸ் சி அக்ரி படித்த நிலையில்,  ரசாயன உரங்களால் மண் மலடாவதை சகிக்க முடியாமல் இயற்கை உரங்களை தயாரிக்கும்,  வேலையும் சேவையுமான விஷயத்தை செய்து கொண்டிருக்கும் இளைஞன் கமலக் கண்ணன் ( உதயநிதி ).

மதுரை கிராம வங்கியின் அந்த ஊர்க் கிளைக்கு மேலாளராக வரும் இளம் பெண் பாரதி ( தமன்னா) . வங்கிக் கடன் பெற்று விட்டு கட்டதவர்களை கணக்கு எடுக்கும்போது கமலக் கண்ணன் ஒன்பது முறை  மாட்டு லோன் வாங்கி விட்டு கட்டாமல் இருப்பது பாரதிக்கு தெரிய வருகிறது .

அவன் மீது கோபப்படும் பாரதி நேரடியாக  கள ஆய்வு செய்யும் போதுதான்,  அவன் ஒன்பது ஏழைகளுக்கு மாட்டு லோன் வாங்கிக் கொடுத்து இருப்பதும் அவர்கள் கட்ட முடியாமல் கஷ்டப்படுவதும் தெரிகிறது .

மருத்துவப் படிப்பு படிக்க விரும்பும் ஒரு பெண்ணை பாரதியே கமலக் கண்ணனிடம் அனுப்பி லோன் வாங்க உதவும்படி சொல்கிறாள் .  கமலக் கண்ணன் பாரதி இடையே காதல் வருகிறது . 

சிறு வயதிலேயே தாயை இழந்த கமலக் கண்ணனுக்கு சகலமும் அப்பாவும் ( பூ ராம் ) அப்பத்தாவும்(வடிவுக்கரசி)தான். 
அவர்கள் பேச்சை தட்டாத பிள்ளை கமலக்கண்ணன் . 
 கமலக் கண்ணனுக்கு பாரதி சரிப்பட மாட்டாள் என்ற முடிவு எடுக்கிறார் அப்பத்தா. 

ஒரு நிலையில் கமலக் கண்ணனுக்காக கல்யாணத்துக்கு அரைகுறை மனதோடு ஒப்புக் கொள்கிறார்  . திருமணம் நடக்கிறது. 
 கமலக் கண்ணன் – பாரதி குடும்பம் நடத்தும் முறையிலும் அப்பத்தாவுக்கு திருப்தி இல்லை.

 இந்நிலையில் பாரதிக்கு ஒரு மாபெரும் பின்னடைவு ஏற்பட , இந்த மனிதர்கள் நடந்து கொண்ட விதம் என்ன என்பதே கண்ணே கலைமானே .

 எந்த பாசாங்கும் பூச்சும்  ஜோடனையும் இல்லாத எளிமையான படமாக்கல்  படத்தின் பலம் . எந்த வகையிலும் சினிமாத்தனமோ வணிக சமரசமோ இருக்கக் கூடாது என்பதில் உடும்புப் பிடியாக இருந்து படத்தை எடுத்து இருக்கிறார் சீனு ராமசாமி .

 பரபரப்பு சுறுசுறுப்பு விறுவிறுப்பு என்று எதற்கும் வலிந்து முயலாத கதை சொல்லலே இந்தப் படத்தை ஒரு வாழ்வியல் அனுபவமாக விகசிக்க வைக்கிறது .

ஒரு தன்னடக்கமான எளிமை படம் முழுக்க விரவிக் கிடக்க , அந்த எளிமையே படத்தின் பலமாக ஓங்கி உயர்ந்து நிற்கிறது .

 வார்த்தையிலும் ஆரம்பத்திலும் கடுமை இருந்தாலும் நெருங்கி விட்டால் கைவிட்டு விடாத குணம்  கொண்டு தமிழ் இனக் குழுக்களின் மாண்புக்கு இந்தப் படத்தில் மகுடம் சூட்டி, அதன் மூலம் தானும் மகுடம் சூட்டிக் கொள்கிறார் சீனு ராமசாமி.

 கார் வாங்க எட்டு சதவீத வட்டியில் கடன் . ஆனால் கல்வி கற்க பனிரெண்டு சதவீத வட்டியில் லோன் …
படிக்காத புத்தகத்தில் கேள்வி கேட்டு ஏழை மக்களின்  கல்விக் கனவை கானலாக்கும் நீட் தேர்வு ….


எல்லா பொருளுக்கும் தயாரிப்பவேனே விலை வைக்க , விவசாயி மட்டும் தான் விளைவிக்கும் பொருளுக்கு விலை வைக்க முடியாத அவலம்…  விவசாயிக்கும் பயனின்றி மக்களுக்கும் பயனின்றி இடைத்தரகர்கள் தின்று கொழிக்கும் கொடுமை…

இவற்றுக்கு எதிராக வசன  வாள் எடுத்த வகையிலும் கூடுதலாக ஒளி வீசுகிறார்  சீனு. அந்த இந்திரா காந்தி வசனத்தை கடைசியில் கொண்டு வந்து கோர்த்த விதமும் அழகு.

 அப்பத்தாவுக்கு முன்பு நிலைமையை உணரும் அப்பாவின் கதாபாத்திரம்,   அன்பான கம்பீரம் !

கிராமப் பள்ளிகளில் ஒன்றாகப் படித்த தோழனுக்கும் தோழிக்கும்  இருக்கும் நட்பின் வடிவமாக வரும் முத்து லட்சுமி கதாபாத்திரம்,  வெளியே அதிகம் தெரியாத நிஜம் . ஆனால் வெளியே சொல்ல வேண்டிய நிஜம். அருமை திரைக்கதை ஆசிரியரே !

ஒற்றை வரி நகைச்சுவைகளால் கலகலக்க வைக்கிறார் தீப்பெட்டி கணேசன்.

 ஜலந்தர் வாசனின் ஒளிப்பதிவு கிராமிய சூழலின் ஆன்மா அழகு இவற்றை சரியாகப் பதிவு செய்து இருப்பதோடு காட்சியின் உணர்வுகளுக்கும் வலு சேர்க்கிறது .

 மாலை நேரத்து இருளொளி ( ட்வை லைட் ) சூழலில் மொட்டை மாடியில் தமன்னா நிற்கும் அந்த ஷாட் .. இதுவரை தமிழ் சினிமா கண்டிராத கவிதை.

 படத்தின் எளிமைக்கு தன் பங்கிலும் கடமை  ஆற்றி இருக்கிறார் யுவன் சங்கர் ராஜா . உதாரணமாக படத்தின் ஆரம்பப் பாடலை இன்னும் கூட ஆர்ப்பாட்டமாக – சிறப்பாகவே அமைத்து இருக்கலாம் .  
ஆனால் அதன் மூலம் கூட யதார்த்தக் குறைவு வந்து விடக் கூடாது என்ற கவனம் .( இந்த கவனத்தை எல்லா தொழில் நுட்பக் கலைஞர்களிடம் வாங்கி இருக்கிறார் சீனு ).

தவிர யுவனின் பொருள் பொதிந்த பின்னணி இசையும் படத்தோடு இணைந்து இயைந்து இழைகிறது .

காசி விஸ்வநாதனின் படத் தொகுப்பு ரோஜாச் சாலையில் மல்லிகைத் தேரில் பயணிக்கிற உணர்வை தருகிறது . மென்ன்ன்ன்மை!

மிக எளிமையாக நடித்து இருக்கிறார் உதயநிதி . 
தமன்னா  மிக சிறப்பாக நடித்துள்ளார். எண்ணெய் தேய்த்துக் குளிக்க வைக்கப்படும் காட்சியில் மெல்லிய பாவங்களால் மனம் நிறைக்கிறார் .

 பூ ராம் நுண்மையான சிறந்த நடிப்பு .

 வடிவுக்கரசி தன் பண்பட்ட நடிப்பால் அப்பத்தா கேரக்டருக்கு  தோள் கொடுத்து இருக்கிறார் .  பாரதியைப் பார்த்து விட்டு வீட்டுக்கு வந்த உடன் காரில் இருந்து இறங்கியபடி அவர் காட்டும் முகபாவம் அனுபவத்தின் பிரம்மாண்டம். 

அப்படி ஒரு தோழி இருக்கையில் கமலக் கண்ணன் ஏன் கந்து வட்டிகாரனிடம் கடன் வாங்க வேண்டும் என்ற கேள்வி எழுந்தாலும் அதை கேட்பதற்குள் அடுத்து வரும் காட்சிகள் வாயடைக்க வைக்கின்றன .

 அடிநாதமாக படம் முன்னெடுக்கும் நிற அரசியல்  அபாரமானது 
வாழ்வியல் கவிஞர் கண்ணதாசனின் நினைவாக என்று டைட்டிலில் போடுகிறார் இயக்குனர் . அதை கண்ணே கலைமானே என்ற பெயருக்கு மட்டும்தான் என்று பொருத்திப் பார்க்க  வேண்டுமா?

படத்தில் கொஞ்சம் கண்ணதாசனையும் ‘உலவ’ விட்டிருக்கலாமே . 
மொத்தத்தில் கண்ணே கலைமானே .. அந்தி, பகல் எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம்

 
மகுடம் சூடும் கலைஞர்கள்

சீனு ராமசாமி , ஜலந்தர் வாசன் , காசி விசுவநாதன், வடிவுக்கரசி 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *