கொஞ்சம் கொஞ்சம் @ விமர்சனம்

பெட்டி சி.கே. மற்றும் பி ஆர் மோகன் தயாரிப்பில் 

கோகுல் கிருஷ்ணா , அப்புக்குட்டி, மன்சூர் அலிகான், தவசி, பிரதீப் கோட்டயம் , ஜெயன் செர்தாலா, பிரியா  மோகன், நீனு , ஆகியோர் நடிக்க, 
 
உதய் சங்கரன் என்பவர் இயக்கி இருக்கும் படம் கொஞ்சம் கொஞ்சம் . முழுசா பார்க்க முடியுமா ? பார்க்கலாம் . 
 
கேரளாவில் பழைய பேப்பர் கடை வைத்து இருக்கும் தமிழ் நாட்டு நபர் ஒருவரின் (அப்புக்குட்டி ) கடையில்,
 
 வேலை பார்க்கும் தமிழ் நாட்டு இளைஞன் திரு என்கிற திருநாவுக்கரசு (கோகுல் கிருஷ்ணா) 
 
அவனுக்கும் அந்த ஊரைச் சேர்ந்த மலையாள பெண் குட்டி திவ்யாவுக்கும் (நீனு ) காதல் . 
 
இந்த நிலையில் தமிழ்நாட்டில்  ஊரில்  திருவின்அக்கா திலகவதிக்கு (பிரியா மோகன்) திருமணம் செய்து வைக்க முடிவாகிறது. திரு ஊருக்குப் போகிறான் . 
திருமணம் நிச்சயம் ஆகிறது . 
 
அக்காவின் ஆசைப்படி அவளுக்கு பண்பலை வானொலி வசதியோடு ஒரு செல்  போன் வாங்கித் தருகிறான் திரு . 
 
போனை சார்ஜ் செய்தபடி ஹெட் போன் மூலம் அவள் பாட்டுக் கேட்கையில் செல்போன் வெடித்து  காது இரண்டிலும்  செவிப்பறை கிழிந்து செவித்திறன் இழக்கிறாள் அக்கா . 
 
 திருமணம் நின்று போகிறது . 
 
மழை நாளில் வழுக்கி விழுந்து கல்லில்  தலை அடிபட்டு  விதவை அம்மா இறக்கிறார் .  அக்காவை அழைத்துக் கொண்டு கேரளாவுக்கே வருகிறான் திரு  .  
 
தான் வேலை செய்யும் பழைய பேப்பர் கோடவுனிலேயே  அக்காவுடன் தங்குகிறான் . நண்பர்கள் தாங்களும் அக்காவாக  ஏற்கிறார்கள் .
 
இடைப்பட்ட காலத்தில் காதலி போன இடம் தெரியவில்லை . 
 
அக்காவின் சிகிச்சைக்கு மருத்தவரை  பார்க்க , அவர் காது கேட்கும் கருவிக்கு ஒரு  லட்ச ரூபாய் செலவாகும் என்கிறார் . பணம் இல்லாத நிலை.
 
அந்த நிலையிலும் மருத்துவமனையில் கிடக்கும் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள நகையை எடுத்துத் தருகிறான் திரு  . 
 
நகைக்கு சொந்தக்காரரான ஒரு கல்லூரி பெண் முதல்வர் திருவை பாராட்டி சில ஆயிரங்கள் பரிசு அளிக்கிறார் .
 
அதோடு பதவி ஒய்வு பெறும் தனது பிரிவு உபச்சார விழாவில் திருவை கவுரவிக்க அழைப்பு வைத்து விட்டுப் போகிறார் . 
 
இதற்கிடையே அந்த ஊர் போலீஸ் இன்ஸ்பெக்டரின் மனைவி தனது செல்போனை தொலைக்கிறாள் .
 
திருவையும்  அவனது செவித்திறன் பாதிக்கப்பட்ட அக்காவையும் குற்றவாளி என்று ஸ்டேஷனில் வைத்து அடிக்கிறான்  இன்ஸ்பெக்டர்   .
 
அக்காவின் காலையும் உடைக்கிறான்  . 
 
பிறகு மனைவி போனை கண்டு பிடித்த பிறகும் குற்ற உணர்ச்சி இன்றி தமிழர் மீதான துவேசம் காரணமாக மேலும் அடித்தே அனுப்புகிறான் இன்ஸ்பெக்டர் . 
 
கல்லூரி முதல்வரின் விழாவில் திருவுக்கான விருதை வழங்க அந்த இன்ஸ்பெக்டரே வந்திருக்க , அவன்  கொடுப்பதை வாங்க  மறுக்கிறான் திரு . 
 
இதற்கிடையில் திரு சுயமாக கண்டு பிடித்த — குரல் அறிவிப்போடு எடை சொல்லும் கருவியை —
 
இரண்டாயிரத்துக்கு வாங்கிக் கொண்டு போகிறார் தொழில் அதிபரான கொடுமுடி பாபு (மன்சூர் அலிகான்) .
 
திருவின் காதலியும் இணைகிறாள் . 
 
அக்காவின் காது கேட்கும் கருவி வாங்கத் தேவையான ஒரு லட்ச ரூபாயை முதல் பரிசாக அறிவித்து நடனப் போட்டி ஒன்று நடக்க இருக்க ,
 
அதில் கலந்து கொள்ள பயிற்சி பெறுகிறான் திரு . 
 
ஆனால் அந்தப் போட்டியை நடத்தும் மலையாள அமைப்புக்கு தமிழன் என்றாலே பிடிக்காது .
 
எனவே திட்டமிட்டு திருவை ஆட விடாமல் செய்து , முதல் பரிசை இன்ஸ்பெக்டரின் மகனுக்கு தருகிறார்கள் . 
 
வஞ்சகத்தை தட்டிக் கேட்கும் திருவும் அவன் அக்காவும் அவமானப் படுத்தப்படுகிறார்கள் . இனி எதுவுமே செய்ய முடியாத நிலை . 
 
அக்காவுக்கு செவித்திறன் கருவியை திருவால் வாங்கித்தர முடிந்ததா ? இல்லை எனில்  ஏன் ? ஆம் எனில் எப்படி ? என்பதே இந்த ‘கொஞ்சம் கொஞ்சம்’ 
 
பாசாங்கோ பூச்சோ இல்லாத  மிக எளிமையான படமாக்கல் இந்தப் படத்தின் பெரும்பலம் . அதற்கேற்ற உயிர்ப்பான ஒளிப்பதிவை கொடுத்துள்ளார் நிக்கி கண்ணம்.
 
”உங்க அம்மா அப்பாவுக்கே நான்தான் கல்யாணம் பண்ணி வச்சேன் . உங்களுக்கும் நான்தான் பண்ணி வைப்பேன் ” என்று,
 
 திலகாவிடமும் திருவிடமும் சொல்லி உறவு கொண்டாடும் அந்த – உடன் பிறவா – தாய்மாமன் கேரக்டர் அருமை . 
 
இதுவும் , அப்புகுட்டி கேரக்டரும் திருவின் நண்பர்கள் கேரக்டரும் , அப்புகுட்டியின் நண்பராக வரும் மலையாளியின் கேரக்டரும் ஈர்க்கின்றன . 
 
எல்லா கதாபாத்திரங்களுக்கும் மிகப் பொருத்தமான நடிகர்களை தேர்ந்தெடுத்து வேலை வாங்கிய விதத்தில் கவர்கிறார் இயக்குனர் 
 
அக்கா திலகவதியாக நடித்துள்ள பிரியா மோகன் மிக சிறப்பாக நடித்துள்ளார் . செவித்திறன் பாதிக்கப்பட்டவராக அவரது நடிப்பு அபாரம் .
 
திருவாக நடித்துள்ள கோகுலும் நன்றாக நடித்துள்ளார். 
 
ஆனால் கதை திரைக்கதையில்தான் புதுமையோ இயல்போ பெரிதாக சுவாரஸ்யமோ இல்லை .
 
முப்பது வருடத்துக்கும் முன்பு வந்திருந்தாள் சுமாராகப் போயிருக்க வாய்ப்புள்ள படம் இது . 
அக்காவுக்கு செவித்திறன் பாதிக்கப்பட்ட உடனேயே அம்மா வழுக்கி விழுந்து சாவது …..  தன் காதலனுடன் ஒரு பெண்  நிற்பதாலேயே,
 
 அவள் அவனது அக்கா என்று உணராமல் தப்பாக நினைத்துக் கொண்டு கதாநாயகி பேசாமல் போவது….
 
 
நடன  வாய்ப்பு மறுக்கப்பட திரு,  மழையில் ஆடுவது….. கூடவே வந்து அக்காவும் ஆடுவது ….  இதுஎல்லாம் எந்தக் கால சினிமா ?. 
 
அடிப்படையில் மலையாளியாக இருந்தாலும்,  ‘கேரளாவில் உள்ள பெரும்பாலான மலையாளிகள்,  தமிழர்கள் என்றாலே தேவையற்ற வன்மம் பாராட்டும்,
 
 அரக்கர்களாகவே உள்ளனர்’ என்ற உண்மையை அழுத்தமாக சொன்ன இயக்குனரின் கருத்து நேர்மைக்கு பாராட்டுக்கள் . 
 
கதாநாயகியை விட அக்காவின் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து, இரண்டாம் பகுதியில்,   அதிக காட்சிகள் கொடுத்து ,
 
அக்கா தம்பி பாசத்தை ஏழைக்கேற்ற எள்ளுருண்டையாகவாவது சொல்லி இருப்பதும் பாராட்டுக்குரியது . 
 
கொஞ்சம் கொஞ்சம் ….. தேவை இன்னும் நிறைய நிறைய மெனக்கெடல் 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *