குருஷேத்திரம் @ விமர்சனம்

துரியோதனனை நாயகனாக்கி ஒரு  மகாபாரதப் படைப்பு வந்தால் எப்படி இருக்கும் ? அந்த வகையில்,கன்னடத்தில் உருவான படத்தின் தமிழ் வடிவம்தான் இந்த குருக்ஷேத்ரா

கன்னட இலக்கியத்தின் ஆளுமையான – பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்ததாக சொல்லப்படும் – அன்றைக்கு முதுவோலை என்ற தமிழ்ப் பெயரோடு இருந்த (பின்னர் அதற்கு முதோல் என்று கன்னடத்தில் பெயர் மாற்றினார்கள்)  ஊரில் பிறந்து வாழ்ந்த,
 
புலவர் ரான்னா எழுதிய  கதாயுதா என்ற நூலை அடிப்படையாகக் கொண்டு,  ஜேகே பாரவி அமைத்திருக்கிற, அசர அடிக்கும் திரைக்கதைதான் படத்தின் ஆன்மா
 
பாண்டவ கவுரவ வம்சங்கள் இரண்டுமே வியாசனுக்கு பிறந்த பிள்ளைகளில் இருந்து உருவானவர்கள் என்று சொல்வதன் மூலம் வியாசர் தன் கதாபாத்திரங்களை தனது மரபில் இருந்து வந்தவர்களாகவே எழுதி  இருப்பது அறியும் போது ஆச்சர்யம் ! படைப்பவன் தானே தகப்பன் . வியாசனின் தில் வியக்க வைக்கிறது.
 
இப்படி ஒரு  நல்ல விஷயத்தை வான்மீகியும்  செய்து இருந்தால் நாட்டில் பல பிரச்னைகளே வந்திருக்காது . கிரேட்
 
அது மட்டுமல்ல பொய் புரட்டு எதையும் சொல்லாமல் மகாபாரத்ததில் இருந்தே உண்மை விசயங்களை எடுத்தே,  நமக்கு இதுவரை நல்லவர்களாக பட்ட பல கதாபாத்திரங்களின் இமேஜ் பிம்பத்தை, ரான்னாவின் உதவியோடு   அடித்து நொறுக்குகிறார் ஜேகே பாரவி
 
கர்ணனை குலச் சிறுமை பேசி ஆச்சார்யார்கள் ஏளனம் செய்யும் காட்சியில் பாண்டு மகாராஜா  , பீஷ்மர் , அஸ்வத்தாமா இப்படி எல்லோருமே தேவதாசி , விலைமகளிர் அல்லது முறையற்ற உறவால் பிறந்தவர்கள் என்று விளக்கும் காட்சி அதிர வைக்கிறது . துரியோதனன் விதவைக்கு பிறந்தவன் . ஆனால் அதையே அவன் இழுக்காக எண்ணுகிறான் என்பதையும் சொல்கிறார்கள் .
 
சகுனி ஏன் துரியோதன் கூடவே இருந்தே குழி பறித்தான் …  பாஞ்சாலியின் சேலையை உருவ துரியோதனன் முடிவு செய்யும் அளவுக்கு பாஞ்சாலி செய்த செயல் என்ன…. என்று  பலரும் அறியாத  விஷயங்கள் மட்டுமல்ல …
 
பீஷ்மர் முறை தவறி அர்ஜுனனை கொல்ல முயன்றது….
 
அதற்காக கண்ணன் வெகுண்டு  பீஷ்மரை  ‘ மவனே .. நான் மட்டும் போரில் இறங்குனேன்னு வையி.. நீ அவ்ளோதான் ” என்ற ரீதியில்  கண்டிப்பது….
 
அபிமன்யுவை  கர்ணன் போர் முறை தவறி  வஞ்சகமாக தாக்குவது …
 
 போர் தோல்விக்கு பிறகு தானே ஜல சமாதி ஆக முடிவு செய்து கடலுக்குள் இறங்கி விட்ட துரியோதனனை பாண்டவர்கள் சீண்டி வம்பிழுத்து மேலே வரவைத்து சண்டையிட்டுக் கொல்வது..
 
என்று மிக அதிகம் பேர் அறியாத  மகாபாரத விசயங்களை எடுத்துக் காட்டிய விதத்தில்–
 
பணத்தை  கொட்டி எடுத்திருக்கும் தயாரிப்பாளர் முனிரத்னாவின் (தமிழ் ஒலிப் பதிப்பு கலைப்புலி எஸ் தாணு ) பிரம்மாண்டத்தைப் போலவே,
 
திரைக்கதையின் பிரம்மாண்டமும்  வியக்க வைக்கிறது .
 
அற்புதமான படமாக்கலில்  பாராட்ட வைக்கிறார் இயக்குனர் நாகன்னா .
 
 
மிரட்டலான சண்டைக் காட்சிகளால் எல்லாரையும் தூக்கிச்  சாப்பிடுகிறார் கனல் கண்ணன் . குறிப்பாக அந்த பஞ்ச பூத சண்டையும் , கடைசியில் துரியோதனனும் பீமனும் மோதும் கதாயுத யுத்தமும் !
 
நாயகன் தர்ஷன் துரியோதனன் கேரக்டருக்கு பொருத்தமாக தோற்றத்தில் இருக்கிறார் . அப்படியே மற்றவர்களும் ! பீமனை அப்படியே கண் முன் கொண்டு வருகிறார் டேனிஷ் அக்தர் சைபி.
 
நடிப்பில் கண்ணனாக வரும் ரவிச்சந்திரன், பாஞ்சாலியாக  வரும் சினேகா, சகுனியாக வரும் சாய் குமார் ஆகியோர் கவனிக்க வைக்கிறார்கள் .
 
 
அபிமன்யூவாக வரும் நிகில் குமார் சண்டை  வேகத்தில் அசத்துகிறார்
 
பீஷ்மராக சும்மாவே உட்கார்ந்து இருக்கிறார் அம்பரீஷ் . ( நடிக்கும்போது உடல் நலக் குறைபாடு ? எனில்  so sorry  )
 
ஆள்காட்டி புறவிரலால் மீசையை மேல் நோக்கி தூக்கி தூக்கி விட்டுக் கொண்டே இருந்தால் போதும் , துரியோதனன் ஆகி விடலாம் என்று முடிவு கட்டி விட்டார் தர்ஷன் . துரியோதனன் என்ற பர்சனாலிட்டியை ஒரு காட்சியில் கூட கொண்டு வர முடியவில்லை அந்த கன்னட சூப்பர் ஸ்டாரால் .
 
பீஷ்மர் அதி ரதனாக நியமித்து அவமானப் படுத்தும் போதும் , பின்னால் மரணப் படுக்கையில் காரணம் சொல்லி நெகிழும்போதும் , அட … அம்மா குந்தியைப் பார்க்கும் போதும் கூட ,  தூக்கக் கலக்கத்தில் நிற்பது போலவே நிற்கிறார் அர்ஜுன்.
 
சிவாஜியை கர்ணனாகவும் அசோகனை துரியோதனனாகவும் பார்த்த கண்கள்,
 
இப்படி அர்ஜுனை கர்ணனாகவும் தர்ஷனை துரியோதனனாகவும் பார்ப்பது என்றால்…..  அதற்கு பதினாலு ஜென்மங்களாவது பாவம் செய்திருக்க வேண்டும்
 
குருசேத்திரம்…. திரைக்கதை , இயக்கம் , சண்டைக் காட்சிகள் , தயாரிப்பு என்ற நான்கு படைகளின் வெற்றி !

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *