குற்றமே தண்டனை @ விமர்சனம்

kutram-2

டான் புரடக்ஷன் மற்றும் டிரைபல் ஆர்ட் புரடக்ஷன்  சார்பில் ஹரிஹர நாகநாதன், முத்து , காளீஸ்வரன் ஆகியோர் தயாரிக்க, 

விதார்த், ஐஸ்வர்யா ராஜேஷ், பூஜா தேவரியா, நாசர், ரகுமான், ஜோக்கர் புகழ் குரு சோம சுந்தரம் ஆகியோர் நடிப்பில் 
காக்காமுட்டை என்ற தங்க  முட்டையை தந்த மணிகண்டன் எழுதி ஒளிப்பதிவு செய்து இயக்கி இருக்கும் படம் குற்றமே தண்டனை . 
 
படம் ரசிகனுக்கு வெகுமதியா ? தண்டனையா ? பார்க்கலாம் . 
kutram
சாதாரண கண்ணால் ஒரு காட்சியை  நாம் பார்ப்பதற்கும் ஒரு புத்தகத்தை சுருட்டி கண்ணருகே வைத்துக் கொண்டு அந்த ஓட்டை வழியே பார்ப்பதற்கும் வித்தியாசம் உள்ளது அல்லவா ?
அப்படி ஒரு கண் குறைபாட்டு  நோய் உண்டு . அந்த  சுருட்டு வைக்கப்பட்ட புத்தகம் வழியே பார்ப்பது போல மட்டுமே கண்ணின்  கரு விழியின் நடுவில் மட்டும்  பார்வை தெரியும் .
மற்ற பக்கவாட்டு மற்றும் சுற்றுப் புறம் எல்லாம்  கருப்பாகப் போய்விடும் . 
அந்த கண் தெரியும்  வட்டத்தின் ஆரமும் குறைந்து கொண்டே போய் ஒரு நிலையில் முழுதாகப் பார்வை போய்விடும் . 
 
kutram-1
இந்த குறைபாட்டுக்கு குடைக் குகை பார்வை (tunnel vision)  என்று பெயர் . அப்படி ஒரு ஒரு குறைபாடு உள்ள இளைஞன்  ஒருவன் (விதார்த்) ஒரு கிரடிட் கார்டு கம்பெனியில் கலெக்ஷன் ஏஜன்ட் ஆகப் பணி புரிகிறான் . 
அங்கே  தொலைபேசி அழைப்பாளராகப் (டெலி காலர் ) பணி புரியும் பெண்ணுக்கு (பூஜா தேவரியா ) அவன் மேல் அதீத அக்கறை . 
கண் குறைபாடு மருத்துவ சிகிச்சைக்காக அவனுக்கு சில லட்சங்கள் தேவைப்படுகிறது . அதை ஈட்ட முடியாத நிலை . 
இளைஞன் குடி இருக்கும்  குறைந்த வருவாய் பிரிவு குடியிருப்பில் எதிர் வீட்டில் வாழ்கிற ஒரு பெண்ணுக்கு (ஐஸ்வர்யா ),
 kutram-6
அவளது கம்பெனி முதலாளி (ரகுமான்) மற்றும் ஒரு பணக்கார இளைஞன் ஆகியோரோடு நெருக்கம் . 
ஒரு  நாள் அந்த பெண்  கொலை செய்யப்படுகிறாள் . அந்த சமயம் தொழில் அதிபர் அந்த வீட்டில் இருப்பதை இளைஞன் பார்க்கிறான் . பயந்து போன தொழில் அதிபர் பெண் கொலை செய்யப்பட்டதை இவனிடம் சொல்லி
” நான்  செய்யவில்லை . ஆனால் என்னை சம்மந்தப்படுத்தி சாட்சி சொல்லாமல் இருந்தால் உனக்கு பணம் தருகிறேன்” என்கிறார் . 
அதன்படி பணக்கார இளைஞனுக்கு எதிராக சாட்சி  சொல்ல முடிவு செய்து ,  சிகிச்சைக்கு தேவையான பணத்தை தொழில் அதிபரிடம்  வாங்கிக் கொண்டு போக ,
kutram 99
அங்கே பணம் போதாமல் போகிறது . மேலும் பணம் கேட்டால்  தொழில் அதிபர் தர மறுக்கிறார்  . 
எனவே மருத்துவத்துக்கான மீதப் பணத்தை பணக்கார  இளைஞனுக்கு ஆதரவாக சாட்சி சொல்லிப பெற முயல்கிறான். இது தெரிந்து தொழில் அதிபர்  அதிர்ச்சி அடைகிறார் . 
இளைஞனின்  வயதான நண்பர் ஒருவருக்கு (நாசர் ) இவனது செயல்பாடுகள் பிடிக்கவில்லை . ஆனால் அவர் ஒன்றும் நல்லவரும் இல்லை . 
இந்த கண்ணா மூச்சி ஆட்டத்தின் முடிவு என்ன என்பதே இந்த குற்றமே தண்டனை . 
காக்கா முட்டைக்குப் பிறகு மீண்டும் ஒரு  வித்தியாசமான் கதைக் களத்தோடு இறங்கி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் – இயக்குனர் மணிகண்டன் . 
 kutram 8
வழக்கமான  சினிமாஸ் கோப் வடிவம் அல்லாது  உலக அளவில் பயன்படுத்தப்படும்  செவ்வக வடிவில் படமாக்கி இருக்கிறார் .
வித்தியாசமான நாயகன் பாத்திரம் அவனுக்கான வித்தியாசமான கண் குறைபாடு ஆகியவற்றில் மணிகண்ட வித்தியாசம் . .
கதாபாத்திரங்களின் தனித் தன்மை அவற்றுக்கு இடையேயான குணாதிசய உரசல் எல்லாம் அபாரம் . 
நிதானமான மேக்கிங்கில் அவ்வளவு ஆழமும் அழுத்தமும் . 
”இனி நீங்க பைக் ஓட்டக் கூடாது ”என்று டாக்டர் சொன்ன அடுத்த ஷாட்டில் விதார்த் பைக் ஒட்டிக் கொண்டு இருப்பார் . 
 kutram-5
வசதி இல்லாத ஏழைகள் உடல் நலத்துக்காக டாக்டர் சொல்லும் அறிவுரையைக் கூட பின்பற்ற முடியாத  அவலத்தை இப்படி சட்டென எளிமையாக
ஆனால்  கனமாகக் காட்டும் வகையில் கவர்கிறது மணிகண்டனின் இயக்கம் . 
அவரது ஒளிப்பதிவும் அப்படி  மனசுக்கு நெருக்கமான  உணர்வை தந்து படத்தை யதார்த்தப்படுத்துகிறது.
இளையராஜாவின் பின்னணி இசை படத்துக்கு  ஆன்ம பலம் சேர்க்கிறது . 
மிக வித்தியாசமான தனது கதாபாத்திரத்தை உணர்ந்து ஒரு சோக கவிதை போல நெகிழ்வூட்டும்படி நடித்து இருக்கிறார் விதார்த். மிகவும்  பண்பட்ட நடிப்பு .  
குடைக் குகை பார்வை (tunnel vision)  குறைபாட்டுக்கான அவரது உடல் மொழிகள் மிக உயர்தரம் . சபாஷ்  விதார்த் . 
kutram-4
கேமராவுக்குள் வித்தியாசமாகத் தெரியும் முகத்தோடு தனது கேரக்டரை ரசித்து நடித்துள்ளார்  பூஜா தேவரியா . ஐஸ்வர்யா  ராஜேஷ்  ஒகே . 
முன்பொரு பேட்டியில் மணிகண்டன் சொன்னது போல போலீஸ் இன்ஸ்பெக்டர் கேரக்டரில் வெகு இயல்பாக நடித்துள்ளார் மாரிமுத்து . நாசர் வழக்கம் போல சிறப்பு . 
எல்லாம் சரிதான் .  ஆனால் மணி கண்டன் காக்கா முட்டை படத்துக்கு முன்பே இந்தப் படத்தைக் கொடுத்து இருந்தால் தப்பில்லை . 
ஆனால் காக்கா   மூலம் கலக்கி எடுத்த மணிகண்டனை எண்ணி  தியேட்டருக்கு வரும் ரசிகனை இந்தப் படம் சமாதனம் செய்யாது . 
kutram-3
காக்க முட்டையில் இருந்த வலு , சமூகப் பார்வை , அதை சொன்ன விதத்தில் இருந்த தீவிரம் , வர்க்கப் பார்வை, நெகிழ்வு …  எதுவும் இல்லாத படம் இது . இது கூட பெரிய பிரச்னை இல்லை . 
எல்லோருமே அயோக்கியர்கள் என்று  சொல்லும்போது அப்புறம் எதுதான் குற்றம் ?எதற்குத்தான் தண்டனை ? எந்த மனம்  உறுத்தும் ? குற்றம் எப்படி தண்டனையாகும் ?
திரைக்கதை போயிருக்கும் பயணம் காரணமாக, நோக்கமே சிதறி விடுகிறது . 
என்ன செய்திருக்கலாம்? 
பெரும் பிரச்னையில் அத்தியாவசியமான பணத் தேவையில் இருக்கும் ஒருவன்,  திட்டமிட்டு எல்லாம் எதுவும் செய்யாமல் , ஒரு குறிப்பிட்ட சமயத்தில் பணத் தேவைக்காக ஒரு குற்றத்தை மறைக்க துணை போய்விடுகிறான்
kutram 9
அதனால் நியாயமான சிலர் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள் . பணத்தின் தேவை தீர்ந்த பிறகு தவறுக்கு துணைன் போனது இளைஞனை உறுத்துகிறது . 
அல்லது அந்த பணமும் இவனுக்கு பயன்படாமல் போக , நல்லவர்களும் பாதிக்கப்பட 
இப்போது அவன் செய்த குற்றமே அவனுக்கு எப்படி தண்டனையாக மாறுகிறது என்று கதை சொல்லி , அதில் சில  சமூக பிரச்னைகளையும் மணிகண்டன் கலந்து இருந்தால்   இந்தப் படமும் இன்னொரு காக்கா முட்டை .
அது இல்லாததால், 
 குற்றமே தண்டனை ….. அடுத்த படத்துக்கு அனுப்புவோம் மணிகண்டனை !

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *