எல்கேஜி @ விமர்சனம்

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பாக ஐசரி கணேஷ் தயாரிக்க , ஆர் ஜே பாலாஜி கதாநாயகனாக நடித்து நண்பர்களோடு சேர்ந்து கதை திரைக்கதை வசனம் எழுத பிரியா ஆனந்த், சிவாஜி ராம் குமார், ஜே கே ரித்தீஷ், மயில்சாமி ,நாஞ்சில் சம்பத் நடிப்பில் பிரபு என்பவர் இயக்கி இருக்கும் படம் எல்கேஜி. அட்மிஷன் போடலாமா ? பேசலாம்.

முப்பது வருடம் அரசியலில் இருந்தும் உருப்படாமல் போன ஒருவருக்கு (நாஞ்சில் சம்பத்) மகனாக பிறந்து,  எப்படியாவது அரசியலில் கோடி கோடியாக சம்பாதிக்க வேண்டும் என்ற வெறியோடு கவுன்சிலர் பதவி வரை  வந்திருக்கும் இளைஞன் லால்குடி கருப்பையா காந்தி . சுருக்கமாக எல் கே ஜி ( ஆர் ஜே பாலாஜி )

தமிழக முதல்வராக இருக்கும் மூத்த அரசியல்வாதி ஒருவர் இறந்த நிலையில் முதல்வர் பதவி அதுவரை இடைக்கால முதல்வராக இருந்த போஜப்பனுக்கு ( சிவாஜி ராம் குமார் ) போகிறது . 
ஆனால் அவரது அரசியல் எதிரியும்,  ஏரியாவில் செல்வாக்கு பெற்றவருமான ராமராஜ் பாண்டியன் (ஜே கே ரித்தீஷ்) அந்த பதவிக்கு குறி வைக்கிறார் .

ராமராஜ் பாண்டியன் தொகுதியில் இடைத் தேர்தல் வர , அதில் வென்று போஜப்பனைக் கவிழ்த்து முதல்வர் ஆவது அவர் எண்ணம். 
இந்த நிலையில் சில அர்த்தமில்லாத பரபரப்பான போராட்டங்கள் மூலம் எல் கே ஜி பரபர பிரபலம் அடைய, அவனை இடைத் தேர்தலில் நிறுத்தி ஜெயிக்க வைத்து ராமராஜ் பாண்டியனை தடுத்து  தன் பதவியை தக்க வைத்துக் கொள்ள போஜப்பன் முடிவு செய்து எல் கே ஜி யை வேட்பாளர் ஆக்குகிறார் .

 தன் பதவி வெறிக்கு சரியான வாய்ப்பு இதுதான் என்று எல்கே ஜி நினைக்க, ராமராஜ் பாண்டியனுக்கு இருக்கும் மக்கள் ஆதரவு பிரம்மிக்க வைக்கிறது .

 எனவே பாரதிய ஜனதாவின் அமித்ஷா பாணியில்,  தேர்தலில் வெல்ல மக்கள் மத்தியில் திடீரென செல்வாக்கை மக்களையே ஏமாற்றி உருவாக்கித் தரும் கார்ப்பரேட் கம்பெனியை நாடுகிறார் . 
அதன் தலைமை அதிகாரி ( பிரியா  ஆனந்த் )   மீம் கிரியேட்டர்கள் , சமூக வலை தளங்கள் , தந்திரமான திட்டங்கள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் உருவாக்கித் தருகிறார் . 

ராமராஜ் பாண்டியனும் பணம் கொடுக்க அவனுக்கும் உதவி எல் கே ஜியை வீழ்த்துவது போல நடிக்கிறார் . ஆனால் எல் கே ஜிக்கு உதவுகிறார் . வென்றது யார் ? நடந்தது என்ன என்பதே இந்த எல் கே ஜி .

சமகால அரசியல் நிகழ்வுகளில் இருந்து காட்சிகளை அமைத்து இருக்கிறார் பாலாஜி . 

ஒரு கவுன்சிலரின் பவர் என்ன என்று சொல்லும் காட்சி அருமை . 
சாதனை செய்தால் தமிழனை இந்தியன் என்பீர்கள் , மீனவனாகி அடி வாங்கினால் மட்டும் தமிழ் மீனவன் என்பீர்களா என்று வடக்கத்தி காட்சி ஊடகங்களை அவர் சாடும் காட்சியும் அபாரம் . அருமை .

 தமிழ்த்தாய் வாழ்த்தை சிறப்பாக பாடும் சிறுமி மூலம் அவர் வெளிப்படுத்தும் உணர்வும் பாராட்டுக்குரியது . 
இப்படி சில காட்சிகள் பாராட்டுக்குரியன .

 ஆனால் … 

கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள் .. ”நக்குற நாய்க்கு செக்கு எது சிவலிங்கம் எதுன்னு தெரியவா போகுது ?”என்று . அந்தக் கதைதான் இந்தப் படத்திலும்.

 உலகளாவிய விளையாட்டுப் போட்டிகள் நடக்கும் சமயத்தில் பாதிக்கப்படும் இன மற்றும் பகுதி மக்கள் அந்த போட்டிக்கு எதிராக போராடுவதோ அல்லது போட்டி அரங்கில் தங்கள் எதிர்ப்பை தெரிவிப்பதோ உலகம் எங்கும் வழக்கமான ஒன்றுதான் . 
அந்த வகையில்தான் நதி நீர் பிரச்னையின்போது கிரிக்கெட் போட்டிக்கு எதிராக சென்னையில் போராட்டம் நடந்தது . 
ஆனால் அதற்கு எதிராக வைக்கப்பட்ட–  ” கிரிக்கெட்டை நிறுத்தினால் தண்ணி வந்துடுமா ?” என்ற   கூமுட்டைத் தனமான மங்குனிக் கேள்வியையே இந்தப் படத்திலும் பாலாஜி கேட்கிறார் .

 கூடங்குளம் , மீத்தேன் , ஸ்டெரிலைட் பிரச்னைகளின் போது உலகெங்கும் வாழும் தமிழர்கள் தமிழகத்துக்கு ஆதரவாகவும் அராஜக அரசுகளுக்கு எதிராகவும் தங்கள் நாடுகளில் இருந்து போராடியது அற்புதமான விஷயம் . அதையே ஒரு காட்சியில் நக்கல்  செய்கிறார் பாலாஜி .

 பிக் பாஸ் ஜூலியை எல்லாம் மக்களே மறந்தாச்சு . ஆனால் அவரை கிண்டல் பண்ணுகிற ஜோலியை மட்டும் இன்னும் பாலாஜி விடவில்லை . இந்தப் படத்திலும் இருக்கிறது .

ஜல்லிக்கட்டு போராட்டத்தையும் ஒரு காட்சியில் அவர் கிண்டல் செய்கிறார் .

 போஜப்பன் வேட்பாளராக அறிவித்த உடன் பாய்ந்து ஓடிப் போய் காலில் விழும் காட்சி  உட்பட ஓரிரு காட்சிகளில் நடிப்பில் சபாஷ் வாங்குகிறார் பாலாஜி . ஆனால் ஓவராக கத்துவதுதான் ஆக்டிங் என்று அவரிடம் யாரோ தவறாக சொல்லி இருக்கிறார்கள் .

பிரியா ஆனந்த், மயில்சாமி ,  ஜே கே ரித்தீஷ் எல்லாம் ஜஸ்ட் பேசி விட்டுப் போகிறார்கள் . சிவாஜி ராம் குமார் இயல்பாக நடிக்கிறார் .
இந்தப் படத்துக்கு எதற்கு நாஞ்சில் சம்பத் ? அல்லது அவருக்கு எதற்கு இந்தப் படம்  ?

போஜப்பன் கேரக்டர் மூலம் துணை முதல்வர்  பன்னீர் செல்வத்தை போட்டுத் தாக்கி  இருக்கிறார்கள். ஆனால் எடப்பாடியை நேரடியாக உணரும் படி எந்த கேரக்டரும் இல்லை .

ரித்தீஷ் நடித்து இருக்கும் ராமராஜ் பாண்டியன் கேரக்டரை உங்கள் வசதிக்கு யாரோடு வேண்டுமானாலும் ஒப்பிடலாம் . அல்லது ஒப்பிடாமலும் போலாம் . அந்த அளவுக்கு வழ வழா கொழா . 
ஆரம்ப பில்டப்பில் அந்த கதாபாத்திரத்தை மாடு முன்பு பாட்டு பாடும் ராமராஜன் என்கிறார்கள் . அப்புறம் காமராஜர் பெயரை சொல்லி எல்லாம் வசனம் வைக்கிறார்கள் . 

யாருக்கு பயம் ? ஏன் இந்த பசப்பல் ?

காமராஜரை தோற்கடித்தது நியாயமும் இல்லை . அதனால் அந்த வேட்பாளர் பெரிய ஆளும் இல்லை . அப்புறம் அரசியலில் அவரை சொந்தக் கட்சி ஆட்களே வளர்த்து விடவும் இல்லை . ஆனால் காமராஜரை தோற்கடித்த காரணத்தாலேயே வரலாற்றில் இடம்பெற்ற அவர் பெயர் விருதுநகர் சீனிவாசன் என்பது பலருக்கும் தெரியும் .

 தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது உட்கார்ந்திருந்த சங்கராச்சாரி விஜயேந்திரன், பெண்களைப் பார்த்து வழியும் கவர்னர் என்று ஜஸ்ட் லைக் தட் ஒரு பேலன்சுக்காக காட்டி இருந்தாலும் பி ஜே பி யை சீண்டாமல்  கவனமாக கதை சொல்லி இருக்கிறார் பாலாஜி . 
(சந்தான பாரதிக்கு அமித்ஷா லுக் கொடுக்கப்பட்டு இருந்தாலும்  அவரது கேரக்டரில் பி ஜே பி சாயல் சுத்தமாக இல்லை) 
பி ஜே பி யையும் சாடி இருக்கிறேன் என்று  சும்மாவாச்சும் காட்டிக் கொள்ளவே இவை எல்லாம் !

இது எல்லாவற்றையும் விட கொடுமை … 

‘மீம் கிரியேட்டர்கள் சமூக வலை தளங்கள் இனி யார் ஜெயிக்க வேண்டும் என்பதை கார்ப்பரேட் கம்பெனிகளே முடிவு செய்யும் . பணம் உள்ளவன் அவர்களிடம் பணம் கொடுத்தால் அவன் ஜெயித்து விடலாம்’ என்ற தற்போதைய நடப்பை கதையாக சொல்ல வந்தவர், அது முறியடிக்கப்படும் அல்லது முறியடிக்கப்பட வேண்டும் என்று சொல்லி படத்தை முடித்து இருந்தால் இந்தப் படத்துக்கு அர்த்தம் இருக்கும் . 

ஆனால் அந்த கார்பரேட் கம்பெனிகளை தவிர்க்கவே முடியாது. இனி பணம் உள்ளவன்தான் ஜெயிப்பான்  என்று சொல்வதற்கு ஒரு படம் எதுக்கு . ?

படத்தின் நாயகன் கடைசிவரை அயோக்கியனாகவே இருக்கிறான் . அதனாலேயே ஜெயிக்கிறான் .

‘அடுத்து வரும் தலைமுறைகளையும் அரசியல்வாதிகள் ஏமாத்தத்தான் செய்வாங்க. மக்களின் தவறுகளையும் அதுக்கு பயன்படுத்திக்குவாங்க.இது மாறாது. நல்லவங்க ஆட்சிக்கு வரவே முடியாது ” என்று சொல்லும் ஒரு படத்தின் நோக்கம்தான் என்ன ?

எல் கே ஜி ……. டி ப்ரோமோஷன் !

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *