மாவீரன் கிட்டு @ விமர்சனம்

kittu-3

ஆசியன் சினி கம்பைன்ஸ் சார்பில் திருப்பூரைச் சேர்ந்த தொழில் அதிபர் Ice Wear சந்திராசாமி ,  நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் டி என் தாய் சரவணன் மற்றும் ராஜீவன் ஆகியோர் தயாரிக்க, 

விஷ்ணு விஷால், ரா. பார்த்திபன், ஸ்ரீதிவ்யா, சூரி ஆகியோர் நடிப்பில் சுசீந்திரன் கதை திரைக்கதை எழுதி இயக்கி இருக்கும் படம் மாவீரன் கிட்டு .

கிட்டுக்கு கிட்டுமா நற்பெயர் ? பார்க்கலாம் . 

பழனி வட்டாரத்தில் உள்ள ஒரு கிராமம். 1980கள் காலகட்டம் . கீழ் சாதி மேல் சாதி பிரச்னை .

தாழ்த்தப்பட்ட மக்களில் யாரவது இறந்து போனால் அவர்களது பிணத்தை குளத்தின் வழியே குறுக்காக சுமந்து சென்றுதான் புதைக்க வேண்டும். மழை காலத்தில் குளம் நிரம்பி விட்டால்

kittu-1

ஒன்பது மைல் சுற்றிக் கொண்டு சுமந்து செல்ல வேண்டும் . காரணம் ஊருக்குள் உள்ள பொதுப்பாதை வழியே,  தாழ்த்தப்பட்ட மக்கள் நடக்க உயர்சாதி  அனுமதிக்காது .

அப்படி தாழ்த்தப்பட்ட மக்களுக்காக  உழைத்த காளி முத்து அய்யா என்பவர்,  குளம் வழியும் காலத்தில் உயிர் வழிந்து இறந்து போக, கோர்ட்டுக்குப் போய் அனுமதி பெற்று,

 அவரது பிணம் அனாதைப் பிணம் போல பொது வழியே கொண்டு போய் புதைக்கப்படுகிறது . அந்த அளவுக்காவது அனுமதி கிடைக்கக் காரணமான– 

தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த கருப்புச் சட்டைக்கார மனிதன் சின்ன ராசு ( பார்த்திபன்) . அவனது இனத்தைச் சேர்ந்த கல்லூரி இளைஞன் கிருஷ்ணமூர்த்தி  என்கிற கிட்டு ( விஷ்ணு விஷால் ) .

kittu-7

பெரிய மனிதர்களின் ஜாதி வெறி பிள்ளைகள் மனதிலும் இருக்க, கல்லூரி இளைஞர்கள் இளம் பெண்களுக்குள்ளும்  ஜாதி வெறி .

ஆனால் அப்படி ஜாதி வெறி இல்லாத நிஜமான உயர்சாதி மனிதர் ஒருவரின் மகள் நாயகி  (ஸ்ரீதிவ்யா )

கல்லூரியில் ஒரு தாழ்த்தப்பட்ட இன மாணவனுக்கும் உயர்சாதி இனப் பெண்ணுக்கும் வரும் காதலின் கல்யாணம் , மணமகளின் தந்தையே மகளை கொலை செய்வதில் முடிகிறது .

அதன் நீட்சியாக கிட்டுவுக்கும் நாயகிக்கும் காதல் .

அந்தக் காதலுக்கு நாயகியின் அப்பா சம்மதித்தாலும் உயர்ஜாதிக்  கூட்டம் சம்மதிக்கவில்லை .

தாழ்த்தப்பட்ட மக்கள் தாங்கள்  செல்ல வாங்கிய தனியார் பஸ் எரிக்கப்படுகிறது . தாழ்த்தப்பட்ட மக்களின் பல கோரிக்கைகள் நிறைவேற்றப் படவில்லை .

kittu-999

இந்த நிலையில் ஜாதி ஆணவ இன்ஸ்பெக்டர் ஒருவர் கிட்டுவை அடித்துத் துவைத்து அவனது கலெக்டர் கனவைக்  குலைக்க, படுகாயம் அடைந்த கிட்டு , சின்ராசுவால் மறைக்கப் படுகிறான் .

கிட்டுவை இன்ஸ்பெக்டர் கொன்று விட்டதாக சொல்லி போராட்டத்தில் இறங்கி தங்கள் பல நாள் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்ள சின்ராசு திட்டமிட,

கிட்டுவை கண்டு பிடித்து அவன் சாகவில்லை என்று நிரூபித்து போராட்டத்தை பிசுபிசுக்க வைக்க காவல் துறையும் அரசும் முயல , நடந்தது என்ன என்பதே இந்த மாவீரன் கிட்டு .

காலங்கள் மாறினாலும் நவீனம் பெருகி விஞ்ஞானம் வளர்ந்தாலும் ஃபேஸ் புக் , டுவிட்டரிலும் ஜாதி வெறி பேசும் இந்தக் காலகட்டத்துக்கு தேவையான ஒரு கதையை,

kittu-4

சொல்லி இருக்கிறார் இயக்குனர் சுசீந்திரன் . அந்த சமூக அக்கறைக்கு பாராட்டுகள் . அதை பீரியட் படமாக சொன்ன வகையில் ஒரு தனித் தன்மை தெரிகிறது.

கிராமிய வாழ்வில் தாழ்த்தப்பட்ட இன மக்களின் அவலம் , சாதி வெறியின் கோர முகம் , அங்கும் உள்ள நல்லவர்கள் என்று சார்பில்லாத நேரிய பதிவு .

மகளையே தந்தை கொல்லும் காட்சி உட்பட பல இடங்கள் யதார்த்தத்தின் கோர முகத்தை வெளிப்படுத்துகிறது. கிளைமாக்சில் கனம் ஏற்றி அனுப்புகிறார் சுசீந்திரன்.

படத்துக்கு பெரிய பல இமானின் இசை . ரொம்ப நாளைக்கு பிறகு அருமையான ஒரு தீம் மியூசிக் . அது காதல் , சோகம் , ஆக்ஷன் என்று எல்லாவற்றுக்கும் பொருந்தும் விதம் அருமை .

kittu-8

பாடல்களில் காதுக்குள் தேன் ஊற்றுகிறது இமான் — யுகபாரதி கூட்டணி . ”கண்ணடிக்கல.. கை பிடிக்கல…. ” பாடல் , ”இளந்தாரி … ” பாடல்கள்…  ஆகா .. என்ன சுகம் !

இளந்தாரி அதன் உச்சம் . அதை பாடிய பூஜா அவ்வளவு அருமையாக பாடி உள்ளார் . என்ன ஒன்று … ‘ இளந்தாரி  சொல்லு  என்ன வேணும் …  என்பதை இன்னும் கொஞ்சம் தெளிவாகப் பாடி இருக்கலாம் .

இந்தப் படத்தின் மூலம் வசனகர்த்தாவாக அறிமுகம் ஆகி உள்ள யுக பாரதியின் வசனங்களும் அருமை .

”அதிகாரத்துல உள்ளவங்க தப்புன்னு சொல்லல … அதிகாரமே தப்புன்னு சொல்றோம்… ” ,

எல்லா புரட்சிகளும் துரோகத்தால்தான் தோற்று இருக்கிறது . நமக்கும் அந்த நிலையை கொண்டு வராதீங்க … ”

சாதி வெறிக்காக பெத்து வளர்த்த மகளை கொன்னுட்டு எந்த கவுரவத்த காப்பாத்த போறோம் … “

— என்பது போன்ற வசனங்கள் மகுடம் .

kittu-9999

சூர்யாவின் ஒளிப்பதிவு அபாரம் . எங்கே வைத்தாலும்  அழகாகவே இருக்கிற லொக்கேஷன்களில் கூட  நேர்த்தியாக செயல்பட்டு இருக்கிறார் .

கலை இயக்குனர் சேகரின் கலை இயக்கம் பீரியடை கண் முன் நிறுத்துவதில் அபார வெற்றி பெறுகிறது . இந்த நால்வர் கூட்டணி இயக்குனருக்கு பெரும்பலம் .

தனது பட நிறுவனத்தின் பெயரில் கானம் காவியம் காட்சி என்ற நல்ல தமிழ் வார்த்தைகளை  திடம், திரவம் , காற்று வடிவின் மூலம் சொல்லி இருக்கும் தயாரிப்பாளர் சந்திராசாமிக்குப் பாராட்டுகள்

கிட்டுவாக,  வித்தியாச கெட்டப்-  உணர்ந்து நடிக்கும் விதம் என்று அசத்தி இருக்கிறார் விஷ்ணு விஷால் .

சின்ராசு கதாபாத்திரத்தில் அப்படி பொருந்துகிறார் பார்த்திபன் . சிரிப்பில் அவ்வப்போது வெளிப்படும் வில்லத்தனம் மட்டும் கேரக்டருக்கு பொருந்தவில்லை

kittu-99

கதாநாயகியாக ஜொலிக்கிறார் ஸ்ரீ திவ்யா . பாத்திரத்துக்கு ஏற்ற சிரிப்பு , தெறிப்பு நடிப்பு .

தன் மனம் பணத்துக்காக சில நொடிகள் சபலபட்டதை எண்ணி வெளியேறும் காட்சியில் சூரி  வாள் வீசுகிறார் . அந்த காட்சி படைப்பாளிகள் உட்பட அனைவருக்கும் பாராட்டு தரும் காட்சி .

போராட்ட களத்தை சின்ன ராசு உருவாக்கும் விதத்திலும் கிளைமாக்சிலும்  இருக்கும் வித்தியாசம் , படத்தின் அடிப்படை பிரச்னைகளை சொன்ன விதத்திலும் இருந்திருந்தால் படம் இன்னும் பல படி உயர்ந்து இருக்கும் .

அதனால் என்ன …

தொழில் நுட்ப சிறப்புகளோடும் படைப்பு வீரியத்தோடும் ஒரு சமூக அக்கறைக் கதையை கமர்ஷியலாக ரசனையாக கவிதையாக சொன்ன வகையில் ,

மாவீரன் கிட்டு …. முரசு கொட்டு !

 

 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *