மணியார் குடும்பம் @ விமர்சனம்

VU சினிமாஸ் சார்பில் தேன்மொழி தயாரிக்க , உமாபதி ராமையா , மிருதுளா முரளி, தம்பி ராமையா,சமுத்திரக் கனி, ஜெயப் பிரகாஷ் , ராதா ரவி, மொட்டை ராஜேந்திரன் நடிப்பில், 

கதை திரைக்கதை வசனம் பாடல்கள் இசை இயக்கம் என தம்பி ராமையா பல வேலை பார்த்திருக்கும் படம் மணியார் குடும்பம்.

உமாபதி ராமையா தம்பி ராமையாவின் மகன் . மணியார் குடும்பம் மணியான குடும்பமா ? சும்மா மணியாட்டும் குடும்பமா ? பேசலாம் .

ஜமீந்தார் பரம்பரையில் பிறந்து சோம்பேறியாக வாழ்ந்து , தனக்கு சொந்தமான பெரிய பெரிய வீடுகளின் பொருட்கள் , ஜன்னல் கதவு இப்படி, 
 
ஒவ்வொன்றாக விற்றுத் தின்று குடும்பம் நடத்தினாலும்,  குணத்தில் சொக்கத் தங்கம் மணியார் ( தம்பி ராமையா )
 
அவரது மகனும்  (உமாபதி ராமையா ) அவரைப் போலவே . பிளஸ் வெட்டி ஆபீசர் . 
 
மணியாரின் மனைவியின் (ஸ்ரீரஞ்சனி) அண்ணன்  (ஜெயப்பிரகாஷ்) மகளை (மிருதுளா முரளி) , மகனுக்கு பெண் கேட்டு , குடும்பத்தோடு மணியார் போக,
 
”சொந்தமாக பிழைக்க வக்கற்ற உனக்கு பெண் தர முடியாது” என்று சொல்லி விடுகிறார் , பெண்ணின் அப்பா . 
 
என்றாலும் பெண்ணுக்கு மாமன் மகன் மீது காதல் . 
ஒரு காற்றாலை துவங்கி பணம் சம்பாதித்து முன்னேற  நாயகன் முயல்கிறான். 
 
ஊர் மக்களிடம் பொதுப் பங்குகளாக பணம் திரட்டி காற்றாலை அமைக்க நாயகன் திட்டமிடுகிறான் . 
 
இடம் கொடுக்கும் முதிய தம்பதியின் நிலத்தை அபகரிக்க முயலும் ஒரு அடாவடி பேர்வழி (பவன்) எதிரியாகிறான் . 
 
இந்நிலையில் மணியாரும் மகனும் ஒரு கோடி ரூபாய் பணத்தோடு  டாக்சியில் பயணிக்க, அந்தப் பணத்தை டிரைவர் (நான் கடவுள் ராஜேந்திரன்) அபகரித்துக் கொண்டு போய் விடுகிறான் . ‘சோம்பேறி குடும்பம் பணத்தை அபகரித்துக் கொண்டு பொய் சொல்கிறது’ என்று தூற்றும் ஊர் , மகனை மட்டும் விடுவித்து ,
 
மணியார் குடும்பத்தை உள்ளே வைத்து வீட்டைப் பூட்டி விட்டு , பணத்தோடு  மகன் வர அவகாசம் கொடுத்து ,
 
அதுவரை ஊரில் இருந்து தினமும் ஒருவர் மணியார் குடும்பத்துக்கு (மணியார் , அவரது மனைவி மற்றும் வயதான தாய் ) சோறு கொடுக்க முடிவு செய்கிறது . 
 
திட்டித் தீர்த்துக் கொண்டே  தருகிறது 
 
ஒரு நிலையில்  மகனை தேடி மணியார்  தப்பிப் போக , மனைவிக்கும் தாய்க்கும் சாப்பாடு கூட போடாமல் விடுகிறது . 
 
பணம் தேடிப் போன நாயகன் என்ன ஆனான் ? மணியார் என்ன ஆனார் ? பணம் என்ன ஆனது ? படம் பார்க்கும் நாம் என்ன ஆனோம் என்பதே இந்த மணியார் குடும்பம் . 
 
அந்தக் கால கிராமத்துப் பணக்கார வீடுகளில் வீட்டுப் பிராணியாக வளர்க்கப்பட்டு , வளர்ந்த பின் ஒன்றுமே தெரியாமல் அப்பாவியாக வாழ்ந்து ,
 
அதனால் அடுத்த தலைமுறையையும கெடுத்து அவர்களையும் கஷ்டப்படுத்தும் நபர்களின் கேரக்டரில்,  மணியார் ஆக தம்பி ராமையா . 
 
எப்போதும் எல்லோருக்கும் நல்லது நினைப்பதும் , அதன் விளைவுகள் சில சமயம் விபரீதம் ஆகும்போதும்,  தான் பதறாமல் குடும்பத்தினரை சிக்கலில் ஆழ்த்துவதும், 
 
அது பற்றிய தெளிவும் கூட இல்லாமல் இருப்பதும் , எவ்வளவு பெரிய அவமானம் வந்தாலும் அது அவமானம் என்பதே புரியாமல், 
 
இயல்பாக வழக்கமான வேலைகளை செய்வதுமான  வெள்ளந்தி மனிதராக  மணியார் வேடத்தில் அசத்தி இருக்கிறார் தம்பி ராமையா . 
 
இயல்பாக வசனம் பேசுகிறார் அறிமுக நாயகன் உமாபதி. பிரம்மாதமாக நடனம் ஆடுகிறார் . சண்டைக் காட்சிகளில் அசத்துகிறார் . வாழ்த்துகள் . 
 
அதற்கேற்ப மகனின் நானாவித திறமைகளையும் வெளிக்காட்டும் ஷோ ரீல் ஆகவே திரைக்கதை அமைத்து உள்ளார் தம்பி ராமையா .ஜெயப்பிரகாஷ் நல்ல நடிப்பு . 
 
மற்ற எல்லோரும் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பில் முடிந்ததை செய்துள்ளார்கள் . சமுத்திரக் கனி, ராதா ரவி எல்லாம்  கெஸ்ட்ரோல் . ராதாரவி லைட் காமெடி . 
 
தம்பி ராமையாவின் இசை இனிமை . பாடல் வரிகள் மிக மிக அருமை அருமை . 
 
நாயகன் ஊரை விட்டுப் போனால் உடனே மணியார் குடும்பமே சாப்பாட்டுக்கு கஷ்டப் படணும என்றால் அத்தை மகள் என்ன செய்தாள்?
 
ஊர்க் கட்டுப்பட்டால் முடியவில்லை என்றால் பின்னர் மணியார் மட்டும் தப்பிப்பது எப்படி ?
இது போன்ற பல லாஜிக் மீறல்களால் படம் அன்னியப்படுகிறது . 
 
ஒரு காட்சியை சீரியசாக சொல்வதா காமெடியாக சொல்வதா என்பதில் இயக்குனருக்கு ஏகக் குழப்பம் .
 
விளைவு ? பல காட்சிகளில் காமெடி சீரியஸ்னஸ் இரண்டும் கெட்டுப் போகிறது . 
 
அதுவும் பணம் எப்படி எங்கே போனது என்பது பற்றி போகப் போக காட்சிகள் அடிக்கிற லூட்டி எல்லாம் மகா கொடுமை . 
 
”தக்காளி…. பணம் மணியாருக்கு கிடைக்கவே கூடாதுடா !” என்ற கோவமே வருது .கதையில் பழமை இருக்கலாம் . ஆனால் படமாக்கிய விதம் இன்னும் பழசு. 
 
நல்ல மனிதப் பண்புகளை சொல்லும் விதம் , கடைசிவரை உறவுகளை அரவணைக்கும் அந்த மணியார் கதாபாத்திரத்தின் கேரக்டரைசேஷன் மட்டும் மனதில் நிலைக்கும்  அற்புதம் .
 
மொத்தத்தில் மணியார் குடும்பம் … ‘மினி’யார் குடும்பம். 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *