மெர்க்குரி @ விமர்சனம்

ஸ்டோன் பெஞ்ச் பிரைவேட் லிமிடெட்  மற்றும் பென் மூவீஸ்     சார்பில் கார்த்திகேயன் சந்தானம்  மற்றும் ஜெயந்திலால் காடா தயாரிக்க ,

பிரபு தேவா , சனத், இந்துஜா , தீபக் பரமேஷ், அனீஸ் பத்மன், ஷஷாங்க் புருஷோத்தமன் நடிப்பில் ,

கார்த்திக் சுப்புராஜ் எழுதி இயக்கி இருக்கும் படம் மெர்க்குரி .  மனம் கரைக்குமா இந்த மெர்க்குரி ? பார்க்கலாம் . 

கொடைக்கானல் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட பாதரசக் கசிவின் காரணமாக சுற்று வட்டார மக்கள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டு ,
 
அதன் விளைவாக பல , பார்வை , செவி மற்றும் பேச்சு மாற்றுத் திறனாளி குழந்தைகள் பிறந்தன . அந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து கதை திரைக்கதை அமைந்த படம் இது . 
 
அப்படி பாதிக்கப்பட்ட பலரும் வளர்ந்து இளைஞர்களாக உள்ள நிலையில் கதை துவங்குகிறது . 
 
செவி , பேச்சு மாற்றுத் திறனாளியான வசதியான  இளைஞர்கள் நால்வர் ( சனத்,தீபக் பரமேஷ், அனீஸ் பத்மன், ஷஷாங்க் புருஷோத்தமன்).
 
அதே பாதிப்புகளுக்கு ஆளான  ஓர் இளம்பெண் (இந்துஜா)  . அதில் ஓர் இளைஞனுக்கும் அந்த இளம்பெண்ணுக்கும் காதல் 
 
ஒரு பயணத்தில் இரவில் அந்த  பெண் கார் ஓட்டுகையில் அவள் காதலன் காரின் முன் விளக்குகளை அணைத்து விளையாட ,
அதனால் நடக்கும் எதிர்பாராத விபத்தில் ஒரு நபர்(பிரபு தேவா) அடித்துத் தூக்கி எறியப்படுகிறார் 
 
அந்த நபரின் மூக்கில் கை வைத்துப் பார்க்கும் நிலையில் மூச்சு வராது இருக்க , அந்த உடலை  காட்டுக்குள்  ஒரு பள்ளத்தில் வீசி எறிந்துவிட்டு வீட்டுக்கு வந்து பார்த்தால் ,
 
அவர்களில் ஒருவனின் ஐ போட் காணமல் போயிருக்கிறது .
 
(காது கேட்காத நிலையிலும் சத்தமாக இசையை வைத்து ஆடுவது அவர்கள் பழக்கம் . அதனால் ஒரு பிரச்னை வந்து வீட்டுக்கு போலீசும் வந்து இருக்கிறது .
 
ஐ போடின் பின்னால் இருக்கும் சிம்பனி இசை மேதை பீத்தோவன்  படம் மூலமாக,  அது  மேற்சொன்ன பையனின்  ஐ போட்தான் என்பது போலீசுக்கும் தெரியும் )
 
எனவே அதன் மூலம் மாட்டிக் கொள்ள வாய்ப்பு இருப்பதால் அதை மீண்டும் எடுத்து வர உடலை  தூக்கி எறிந்த இடம் வரை தேடிச் செல்கின்றனர். ஐ போட் கிடைக்கிறது . ஆனால் உடல் காணவில்லை . இந்த நிலையில் உடன் இருக்கும்  இளம்பெண் கடத்தப்படுகிறாள் . 
 
சம்மந்தப்பட்ட — பாழடைந்த மெர்க்குரி கசிந்த ஃபேக்டரியில்  அவள்  அடைக்கப்பட்டு இருக்கிறாள் .
 
விபத்தில் செத்தவனின் உருவம் அங்கே இருக்கிறது . இளம்பெண்ணை தேடி ஃபேக்டரி உள்ளே செல்லும் ஒவ்வொருவரையும் அது கொடூரமாக தாக்குகிறது. 
 
அந்த உருவம் சாகாத மனிதனா ? இல்லை ஆவியா ? மாட்டிக் கொண்டவர்களில் யாரும் கொல்லப்பட்டார்களா ?
 
  ஆம், எனில் யாரும் தப்பினார்களா ? ஆம் எனில் எப்படி ? இல்லை எனில் நடந்தது என்ன ?
 
இவர்கள் உண்மையில் ஒருவருக்கு ஒருவர் எதிரிகளா ?  இல்லை எனில் உண்மை எதிரி யார் ? ,
அது குறித்த விழிப்புணர்ச்சி அவர்களுக்கு இருந்ததா ? பிறகாவது  கிடைத்ததா  என்பதே மெர்க்குரி . 
 
வசனமே இல்லாத மவுனப் படம் இது .
 
சினிமா உருவான ஆரம்ப காலத்தில் வசனம் ஒலிப்பதிவு செய்யும் தொழில் நுட்பம் வளராத காரணத்தால்,
 
கதாபாத்திரங்கள் பேசும் இடங்களில் அந்த வசனம் திரையில் வாக்கியங்களாக காட்டப்பட்டன . 
 
பின்னாளில் வசனப் படங்கள் வந்த பின்பு அப்படி வசன வாக்கியங்களை காட்ட வேண்டிய அவசியம் இல்லாமல் போனது . 
 
எனவே இந்த நிலையில் ஒரு மவுனப் படம் வந்தால் அது பேசவேண்டிய தேவையே இல்லாத மவுனப் படமாக இருப்பதுதான் கம்பீரம் . கமல் நடித்த பேசும் படம் போல . 
ஆனால் இந்தப் படத்தில் பேசிக் கொள்ள வேண்டிய சந்தர்ப்பம் வரும்போது கூட
 
(வேலைக்காரப் பெரியவர் – போலீஸ்காரர்கள் சந்திக்கும்  காட்சி ) வம்படியாக பேசாமல் இருக்கின்றனர் . 
 
அதே போல அந்தக் கால பாணியில் கதாபாத்திரங்கள் சைகையால் பேசிக் கொள்ளும் போது வசன வாக்கியங்கள் இடம் பெறுகின்றன . 
 
என்றாலும் , இது மவுனப் படமாக இருக்க வேண்டிய அடிப்படை நியாயத்தை,  
 
கதாபாத்திரங்களின் உடல்  குறைபாடு மூலம் வெளிப்படுத்தும் விதத்தில் பாராட்டுப் பெறுகிறார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் . 
 
அதுவும் பிரபு தேவா கதாபாத்திரத்துக்கும் அந்த நியாயம் இருக்கிறது என்பது வெளிப்படும் இடம் திகிலில் மேலும்  ஜிலீர் . சபாஷ் . 
 

அட்டகாசமான பிரேம்கள் , ஷாட்கள் (குறிப்பாக 180 டிகிரிக்கு கீழ் இருந்து மேலாக கேமரா உயர்ந்து அரை வட்டம் அடித்து மறு பக்கத்தில் கீழே இறங்கும் அந்த ஷாட் ) ,
 
சிறப்பான இயக்கம் ,  கதையை கடைசியில் கனமாக சொல்லும் விதம் , அதன் மூலம்  யார் எதிரி என்பதை சரியாக உணர வேண்டும் என்று  சமூகத்துக்கு கொடுக்கும் விழிப்புணர்ச்சி, 
 
இவற்றின் மூலம்  ஓர் அற்புதமான இயக்குனராக மீண்டும் ஒரு முறை ஜொலிக்கிறார் கார்த்திக் சுப்புராஜ் . மனம் நிறைந்த பாராட்டுகள் . 
 
திருவின் ஒளிப்பதிவு படத்துக்கு மிக சிறப்பான தரக்  கூட்டல் செய்கிறது .
 
இரவு நேர மலைப்பாங்கான பகுதி காட்சிகள் எல்லாம் ஓர் அடர்த்தியான மர்மம் பூசிக் கிடப்பது போல அற்புதமான ஒளிப்பதிவு . 
 
படத்தின் முதல் பலம் ஒளிப்பதிவு  என்றால், சந்தோஷ் நாராயணின் பின்னாடி இசை  நான் மட்டும் மட்டமா என ஒளிப்பதிவோடு அட்டகாசமாக போட்டி போடுகிறது . 
இன்றைய நிலையில் ஒரு மவுனப் படத்துக்கு நல்ல பின்னணி என்பது ஆக்சிஜன் போல .
 
அந்த வகையில் மிக  ஆரோகியமான ஆக்சிஜன் கொடுத்து இருக்கிறார் சந்தோஷ் நாராயணன் 
 
பராமரிப்பில்லாத பேக்டரி உருவாக்கத்தில் அசத்துகிறார் கலை இயக்குனர் சதீஷ் குமார் . 
 
வில்லன் கம் ஹீரோவாக இதுவரை செய்யாத வகையான கதாபாத்திரத்தில் சிறப்பாக பங்களிப்பு செய்துள்ளார் பிரபுதேவா.
 
பார்வை , முகபாவனை அலசல் நடை எல்லாம் அபாரம் 
 
பிரபு தேவா கதாபாத்திரத்தை விட முக்கியக் கதாபாத்திரத்தில்  சிறப்பாக நடித்து இருக்கிறார்  இந்துஜா.
 
முகத்தை இறுக்கி வளைத்து நெளித்து முக பாவனைகள் கொடுக்கிறார் . வாழ்த்துகள் 
 
சனத், , தீபக் பரமேஷ், அனீஸ் பத்மன், ஷஷாங்க் புருஷோத்தமன் ஆகியோரும் பொருத்தமாக இருக்கிறார்கள் . நடிக்கிறார்கள் . 
 
கடைசி அரைமணி நேரம்  படம் பார்ப்பவர்களே பேச மறந்து கனமான மனதோடு மவுனிக்கும் அளவுக்கு படம் உயர்கிறது .
 
அதற்கான முன்னேற்பாடாகவே படத்தின் மற்ற பகுதிகள் இருக்கின்றன . 
 
 மோதிக் கொள்ளும் இளைஞர்கள் மற்றும் பிரபு தேவா தரப்பில் யார் மீதும் சிறு தவறு கூட இல்லை என்று காட்சி இருந்தால் படம் கடைசியாக சொல்லும், 
 
சரியான எதிரியை அறிதல் குறித்த அந்த அறிவுரைக்கு இன்னும் கனம் சேர்ந்து இருக்கும் .
 
ஆனால் கார் ஓட்டுகையில் இரவில் லைட்டை அணைத்து அணைத்து விளையாடுவது குற்றம் அல்லவா ?விபத்துக்கு காரணம் அவர்கள் எல்லோரும் மாற்றுத் திறனாளிகள் என்பதே மட்ட்ட்டுமே  என்று காட்சி அமைத்து இருந்தால்,
 
  அந்த அறிவுரை இன்னும் சிறப்பாக வெளிப்பட்டு இருக்கும் . 
 
கார்பரேட் கம்பெனிகள்  பூமியை  அழித்து சாப்பிடுவதை , CORPORATE EARTH என்ற நிறுவனத்தின் பெயரில் உள்ள   CORPOR என்பதை  நீக்கி   ATE EARTH என்று காட்டி, 
 
அடுத்து  ATE  என்பதை நீக்கி கடைசியில்  EARTH என்பதை மட்டும் காட்டி புரிய வைக்கிறார் கார்த்திக் சுப்புராஜ் . சிறப்பு . 
 
அதையே கடைசியில்  EARTH என்பதை நீக்கி  ATE  என்பதை மட்டும் வைத்து  EARTH ஐ சாப்பிட்டு விட்டார்கள்  என்று  சொல்லி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்து இருக்கும் . சிறு சிறு குறைகள் , மேம்படுத்தும் வாய்ப்புகளை ஒரு சில இடங்களில்  தவற விட்டு இருப்பது போன்றவற்றை  மறுப்பதற்கு இல்லை . ஆனாலும் அது பெரிய குறையாக இல்லை என்பதே படத்தின் சிறப்பு 
 
சரியான எதிரியை விட்டு விட்டு பாதிக்கப் படுபவர்கள் ஒருவரை அடித்துக் கொள்வது மடமை என்று படம் சொல்லும்  அந்த அபாரமான அறிவுரை , 
 
இன்றைய அரசியல் சமூக சூழலில்  மிக முக்கியமான ஒன்று . 
 
அந்த அற்புதமான  மெசேஜ், கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு எதிரான குரல் , நெகிழ்வில் ஆட்படுத்தும் இரண்டாம் பகுதி , மிகச் சிறப்பான இயக்கம்
 
மற்றும் பிற பல தொழில் நுட்பங்களின் சிறப்பு , முக்கிய நடிக நடிகையரின் சிறப்பான பங்களிப்பு இவற்றால் மனம் நெகிழ்ந்த  பாராட்டுப் பெறுகிறது மெர்க்குரி 
 
மொத்தத்தில் மெர்க்குரி … ஜொலிப்பு !

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *