மான்ஸ்டர் @ விமர்சனம்

பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ் சார்பில் எஸ் ஆர் பிரகாஷ் பாபு, எஸ் ஆர் பிரபு, கோபிநாத், தங்க பிரபாகரன் ஆகியோர் தயாரிக்க, எஸ் ஜே சூர்யா, பிரியா பவானி ஷங்கர் , கருணாகரன் நடிப்பில், சங்கர் தாசோடு இணைந்து எழுதி, (ஒரு நாள் கூத்து படத்தை இயக்கிய)  நெல்சன் வெங்கடேசன் இயக்கி இருக்கும் படம் மான்ஸ்டர் . இந்த மான்ஸ்டர் மாஸ்டரா ? இல்லையா ? பேசலாம் .

 வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் என்று பாடிய வள்ளலாரின்  ஆன்மீகத்தில் சிறுவயது முதலே ஈடுபாடு கொண்டு  வாழும் மின்சார வாரிய பொறியாளரை  ( எஸ் ஜே சூர்யா) , அவரது சுமாரான தோற்றம் காரணமாக , பெண் பார்க்கப் போன இடத்தில் புறக்கணிக்கிறாள் ஒரு  பெண் ( பிரியா பவானி ஷங்கர் ) . பெண்ணின் பெற்றோர் பொறியாளருக்கு சொந்த வீடு இல்லாததை காரணம் காட்டுகின்றனர் . 

எனவே சொந்த வீடு வாங்க முடிவு செய்யும் பொறியாளர் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு ஒன்றை வாங்குகிறார் . முன்பு அங்கு  குடியிருந்த ஒரு வைரக் கடத்தல்காரன், போலீஸ் தேடும் வேளையில் ,

ரஸ்க் பாக்கெட்டில் வைக்கப்பட்ட வைரங்களை அந்த வீட்டிலேயே மின்சார ஜங்க்ஷன் பாக்ஸில்  வைத்து ஸ்க்ரூ போட்டு விட்டுப்  விட்டுப் போய் விட, அந்த வீட்டைதான் விலைக்கு வாங்குகிறார் பொறியாளர் . 

சொந்த சமையல் . 

வீட்டுக்குள் நுழைந்த எலி ஒன்று எல்லாவற்றையும் கடித்து நிறைய சேதம் ஏற்படுத்துகிறது .  வள்ளலார் அன்பு வழியில் வாழும் பொறியாளருக்கு  எலியை கொல்ல  மனமில்லாததால் பிடித்து  வெளியே விட்டு விட்டு வருகிறார் . ஆனால் எலி மீண்டும் அதே வீட்டுக்கு வருகிறது .

இந்த நிலையில் புறக்கணித்த பெண்ணும் பொறியாளரின் நல்ல குணம் அறிந்து கல்யாணத்துக்கு சம்மதிக்கிறாள். வருங்கால  மனைவியின் ஆசைப்படி அஞ்சு லட்ச ரூபாய் சோபா ஒன்றை பொறியாளர்  வாங்கிப் போட, அதற்கும் பங்கம்! இந்த நேரத்தில் வைரம் வைத்து விட்டுப் போன கடத்தல்காரனும் வர , அப்புறம் என்ன நடந்தது? எலியை பொறியாளர் என்ன செய்தார் என்பதே  இந்த மான்ஸ்டர் . 

படத்தின் முதல் பலம் இடை பலம் கடைசி பலம் பெரும்பலம் இந்த வித்தியாசமான கதை . 

எலியைக் கொல்வது என்பது எல்லோரும் செய்கிற சாதாரண விஷயம் . லட்ச லட்சமாக நஷ்டம் ஏற்படுத்தும் எலியைக் கொள்ள நாயகன் இவ்வளவு தயங்குவதற்கு மிக பொருத்தமாக, நாயகனை, உலகின் உயரிய ஆன்மீகமான வள்ளலார் ஆன்மீகத்தை எடுத்துக் கொண்டு,  அவன்  வள்ளலார் பக்தன் என்று சொல்கிறார்களே … அதுதான் இந்தப் படத்தின் ஜீவன் . இதயத் துடிப்பு . ரத்த ஓட்டம்  எல்லாமே.  அதைத் தவிர  வேறு என்ன சொல்லி இருந்தாலும் எடுபட்டிருக்காது.

படத்தின் கிளைமாக்ஸ் ஏற்றுக் கொள்ளப்படுகிறது என்றால் அதற்கு காரணம் வள்ளலார் வள்ளலார் வள்ளலார் . (ஆனால் வள்ளலார் ஆன்மிகம் அன்புப் பூர்வமானது  மட்டுமல்ல .. அறிவுப் பூர்வமானது கூட .  காக்கை பருந்து கழுகு பற்றி யோசித்து இருக்க வேண்டாமா ?)
கதாபாத்திரத்தை உணர்ந்து தன் வழக்கமான பாணியில் இருந்து வேறுபட்டு தன்மையாக நடித்துள்ளார் எஸ் ஜே சூர்யா.   . பிரியா பவனி ஷங்கர் கேரக்டருக்கு பொருத்தம் . நண்பனாக லேசாக புன்னகைக்க வைக்கிறார் கருணாகரன் . 

கோகுல் பினாயின்  ஒளிப்பதிவில் ஒரு எளிமை . ஈர்க்கிறது . 

ஜஸ்டின் பிரபாகரன் இசையில் எலிகள் போல குழந்தைகள் வேடமிட்டு ஆடும் பாடல் இனிமை . அந்த பாடலில் இயக்குனர் , ஒளிப்பதிவாளர் , நடன இயக்குனர், பிள்ளைகள் என அனைவரும் ஸ்கோர் செய்கிறார்கள் . அருமை . 

படத்தின் பலவீனம் திரைக்கதை . வைரக் கடத்தல்காரன் பற்றி ஆரம்பமே  சொல்லி இரண்டாம் பகுதியை யூகிக்க வைத்து விட்டார்கள் . அந்த விசயத்தையே இரண்டாம் பாதியில் பிளாஷ்பேக் ஆக  அறிமுகம் செய்து இருக்கலாம்.

 அடுத்து அடுத்து ஒவ்வொரு பொருளும் வரும்போது எலி கடிக்கும் என்பது புரிகிறது . அட்சரம் பிசகாமல் அப்படியே நடக்கிறது . (அதுக்கு அப்புறமும் … தொடருது ) சோபாவையும்  எலி கடித்தது என்று சொல்லவும் வேண்டுமா ? கேஸ் சிலிண்டர் டியூபை எலி கடித்து அதன் மூலம் சோபா பங்கம் என்றும் போயிருக்கக் கூடாதோ ?

தானியங்களை நெருப்பில் போடுவதை விட இல்லாதோர்க்கு தானம் செய்யலாம் . உண்மைதான் . ஆனால்  வள்ளலார் பயிரைக் கண்டுதான் வாடினார் . விளைந்து காய்ந்த தானியங்களை கண்டு அல்ல இயக்குனரே . ஏனெனில்  பயிர்களுக்கு உயிர் உண்டு . தானியங்களுக்கு உயிர் இல்லை என்பது வள்ளலாருக்கு தெரியும் .

படம் முடியும் போது மனம் கசிந்து உருகுகிறது என்றால் அதற்கு காரணம் நாயகனின் குணாதிசயம் . அதற்குக் காரணம் வள்ளலார் ஆன்மிகம் .சினிமா மூலம் ஆபாசக் குப்பைகளும் வன்முறை நச்சுக்களும்  அதிகம் பரப்பப்படும் சூழலில் வள்ளலாரை சினிமாவுக்குள் கொண்டு வந்ததற்காக  இந்த படக்குழுவுக்கு வாழ்த்துப் பூங்கொத்து.

அருட்பெருஞ்சோதி தனிப் பெருங்கருணை.

 மான்ஸ்டர் …. மன மணம்!

மகுடம் சூடும் கலைஞர்கள்:-

கதாசிரியர்கள் நெல்சன் வெங்கடேசன் , சங்கர் தாஸ் 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *