மிஸ்டர் சந்திரமவுலி @ விமர்சனம்

போஃப்டா மீடியா ஒர்க்ஸ் இண்டியா பிரைவேட் லிமிடெட் மற்றும் கிரியேட்டிவ் என்டர்டைனர்ஸ் புரடக்ஷன் சார்பில், 

ஜி. தனஞ்செயன், எஸ். விக்ரம் குமார் , லலிதா தனஞ்செயன் ஆகியோர் தயாரிக்க, 

நவரச நாயகன் கார்த்திக், கவுதம் கார்த்திக், ரெஜினா கசான்ட்ரா, வரலக்ஷ்மி,  சதீஷ் , இயக்குனர்கள் மகேந்திரன் மற்றும் அகத்தியன் , மைம் கோபி, சந்தோஷ் பிரதாப்  நடிப்பில் , 
 
இயக்குனர் திரு எழுதி இயக்கி இருக்கும் படம் மிஸ்டர் சந்திரமவுலி. 
மவுன ராகம் படத்தின் புகழ்பெற்ற  ஒரு காட்சியின் வசனமாக இடம் பெற்ற பெயர் படத்தின் தலைப்பாகி இருக்கிறது .
 
இந்த சந்திர மவுலி சோக ராகமா இல்லை வெற்றி முழக்கமா ? பேசலாம் . 
 
கால் டாக்சி தொழிலில் பல்லாண்டுகளாக முதல் இடத்தில் இருக்கும் கருடா கால்டாக்சி அதிபர் அழகரிடம் (இயக்குனர் மகேந்திரன்) ,
 
கோ கேப் என்ற புதிய கால் டாக்சி நிறுவனத்தின் அதிபரான இளைஞன் ஒருவன் ( சந்தோஷ் பிரதாப்) , “உங்கள் இடத்துக்கு – உயரத்துக்கு வர விரும்புகிறேன்” என்கிறான் .
அழகரை அது எச்சரிக்கை கொள்ள வைக்க, “அவனிடம் கவனமாக இருக்க வேண்டும் ” என்று தன் உதவியாளர் புகழேந்தியிடம் கூறுகிறார் அழகர். 
 
இதை அடுத்து கோ கேப் கால் டாக்சிகளை ஓட்டும் டிரைவர்கள் சிலர் , அடுத்தடுத்து தங்கள் வண்டியில் பயணிக்கும் பயணிகளை கொன்றும் , கொள்ளையடித்தும் ,
 
பாலியல் பலாத்காரம் செய்தும் , விபத்து ஏற்படுத்தியும் , கம்பெனிக்கு பிரச்னையையும் பின்னடைவையும் ஏற்படுத்துகின்றனர் . 
கோ கேப் அதிபர் ஸ்பான்சர் செய்யும் குத்துச் சண்டை வீரன்  ஒருவன் ( கவுதம் கார்த்திக்) , இறந்து போன மனைவிக்கு பிடித்த கார் என்பதால் ,
 
ஒரு பழைய பிரிமியர் பத்மினி காரை இன்னும்  வைத்திருக்கும் அவனது அப்பா (நவரச நாயகன் கார்த்திக்).
 
அவனது நண்பன் ( சதீஷ்). அப்பாவுக்கு ஒரு நண்பர் ( இயக்குனர் அகத்தியன்) . 
 
குத்துச் சண்டை வீரனுக்கும் ஓர் கவர் கவர் கவர்ச்சி இளம்பெண்ணுக்கும் ( ரெஜினா) மோதல் வழிக் காதல் . 
கோ கேப்  டிரைவர்களின் அடுத்த கொடுமையான தாக்குதல்களில் குத்துச் சண்டை வீரனின் குடும்பம் அகஸ்மாத்தாக மாட்டுவதுதான் அடுத்த கதைப் போக்காக இருக்கும் என்று பார்த்தால், 
 
அப்பாவை திட்டமிட்டுக் கொலை செய்கிறான் புகழேந்தி . அதற்குக் காரணம் அப்பாவின் தோழியான பைரவி (வரலஷ்மி)யின் மரணம் .
 
மரணத்துக்கு யார் காரணம்? அது எப்படி குத்துச் சண்டை வீரனின் அப்பாவின் கொலைவரை போனது .
கால் டாக்சி அதிபர்களின் பகைக்கும் இந்த மரணத்துக்கும் தொடர்பு உண்டா ? இல்லையா ?
 
உண்டு எனில் என்ன தொடர்பு ?  விஷயம் குத்துச் சண்டை வீரனுக்கு உண்மைகள் தெரிய வந்ததா இல்லையா ? ஆம் எனில் அப்புறம் நடந்தது என்ன ?
 
– என்பதே இந்த சந்திரமவுலி . 
 
படத்தின் டைட்டிலில் நவரச நாயகன் கார்த்திக் பெயரை முதலில் போட்டதற்கு சீனியாரிட்டி மற்றும் மதிப்பு மட்டுமே காரணம் அல்ல .
 
படம் முழுக்க தனக்கே உரிய பாணியில் வலம் வருகிறார் கார்த்திக் . 
வயசானாலும் அவரது மேனரிசம், பிஹேவியர், குறும்பு, நக்கல் , நையாண்டி எல்லாம் ஒரு விண்டேஜ் தன்மையோடு படம் முழுக்க வியாபிக்கிறது . சாயம் போகாத அதே மேஜிக் . 
 
அப்பாவுடனான கெமிஸ்ட்ரி அச்சு அசலாக செட் ஆகிறது கவுதமுக்கு . அதனாலோ என்னவோ  மிக இயல்பாக ஆனால் அடர்த்தியாக நடித்து உள்ளார் கவுதம் கார்த்திக் .
 
இதுவரைக்குமான அவரது படங்களில் அவரது நடிப்புக்கு இதிலேயே முதல் இடம் (மொத்தத்தில் இன்னும் முன்னேற்றம் வேணும் என்பது வேறு விஷயம் )
சண்டை , காதல், சோகம் எல்லாவற்றிலும் முழு முயற்சி போட்டு இருக்கிறார் கவுதம் . 
 
ராஜாதி ராஜா பாடலில் அப்பாவும் மகனும் சும்மா தெறிக்க விடுகிறார்கள் . செம செம .. ! 
 
முகம் கொஞ்சம் முரண்டு பிடித்தாலும் ஒட்டு மொத்த உடல் வாளிப்பிலும் கவர்ச்சியிலும் கிறங்க வைக்கிறார் ரெஜினா . நடிப்பும் பரவாயில்லை 
 
கிடைத்த காட்சிகளில் சில பல இடங்களில் சிரிக்க வைக்கிறார் சதீஷ் . கார்த்திக்குடனான காம்பினேஷன் இன்னும் கொஞ்சம் ஸ்பெஷல் அவருக்கு . 
கார்த்திக்கின் தோழியாக வரலட்சுமி . ஒகேலட்சுமி . 
 
இயக்குனர் மகேந்திரனின் முக பாவங்களும் , அகத்தியனின் குரல் நடிப்பும் சிறப்பு . மைம் கோபி ஜஸ்ட் லைக் தட் வில்லத்தனம் காட்டுகிறார் . 
 
சந்தோஷ் பிரதாப் நடிப்பில் பெருசாக இல்லாவிட்டலும் சண்டைக் காட்சிகளில் கவனிக்க வைக்கிறார் . 
 
கால் டாக்சி ஏற ஒன்றுக்கு ரெண்டு தடவை யோசிக்க வேண்டிய அளவுக்கு அது தொடர்பான காட்சிகளை அழுத்தமாக அமைத்து படமாக்கலிலும் கவர்கிறார் இயக்குனர் திரு .  
செண்டிமெண்ட் காட்சிகளில் இயக்கம் சிறப்பு . அதே நேரம் காதல் காட்சிகளிலும் ஜிலு ஜிலு இளமை இனிமை . 
 
அதற்கு முக்கிய பலமாக இருந்து இருக்கிறது ரிச்சர்ட் எம் நாதனின் கிறிஸ்டர் கிளியர் வர்ண ஜால ஒளிப்பதிவு .
 
அப்பா இறந்த நிலையில் வீடு முழுக்க ஒளிக் கசிவும், முழு வெளிச்சமும்  இருக்கும்போதும் ,
 
ஓர் இருள் சூழ்ந்த தன்மையை உணர வைக்கிறாரே .. அங்கேயும் பளிச்சிடுகிறார் ரிச்சர்டு .சாம் சி எஸ் சின் பாடல்கள் செம ஹிட் . ராஜாதிராஜா , ஏதோ ஆனேனே பாடல்கள் தேன் இனிமை . அதேநேரம் பின்னணி இசையும் காட்சிகளுக்கு கனம் சேர்க்கிறது 
 
பாக்சிங் உட்பட ஸ்டன்ட் சில்வாவின் அனைத்து ஸ்டன்ட் காட்சிகளும் அசத்தல்.
 
ஜாக்கியின் கலை இயக்கம் காட்சிகளின் அழகை ஜாக்கி போட்டு தூக்குகிறது . விஜய் ரத்தினத்தின் ஒலி வடிவமைப்பும் சிறப்பு . 
 
கார்த்திக் – வரலக்ஷ்மி டிராக்கை லவ் என்றே சொல்லி விட்டுப் போயிருக்கலாம் . எதற்கு அந்த ‘இருக்கு ஆனா இல்லை; இல்லை ஆனா இருக்கு’ கிறுக்கு?
கார்த்திக்கை கூட …ஏய்ய்.. ஏய் .. அது.. வந்து… இன்னும் … கொஞ்சம் .. அடக்கி .. வாசிக்க.. வைத்து ..ஏய்ய்.. ஏய்.. இருக்கலாம். என்ன கரெக்டுதானே ?
 
இது போன்ற படங்களில் கிளைமாக்ஸ் நெருங்கும்போது ஒரு வித்தியாசமான  டுவிஸ்ட் தேவைதான் . ஆனால் அதில் லாஜிக் ரொம்ப முக்கியம் அமைச்சரே !
 
தவறு செய்யும் டிரைவர்கள் முகத்தில் எல்லாம் ஒரு ரெட் லைட் அடிக்குதே . எதுக்காம்?   நான் சிகப்பு மனிதன் ஞாபகமா டைரக்டருக்கு ? 
ஓடாத ஓட்டைக்காரை பின்னால் வந்து தள்ளி விடும்போது அது ஸ்டார்ட் ஆகும்போது புகை அடித்து அவர்கள் உடம்பு கரி பூசிக் கொள்வது ஒகே .
 
ஆனால் – என்னதான் காமெடி என்றாலும் ஒரு காட்சியில் ஐந்து இளைஞர்கள் கார் பக்கத்தில் கூட வராமல், 
 
இருக்கும் இடத்திலேயே கரி பூசி நிற்கிறார்களே, (அதோடு தொடர்ந்து ரியாக்ஷன் வேறு கொடுக்கிறார்கள் ) அது எப்படி ?
இப்படி ஒரு சில ‘அச்சச்சோ’க்கள் இருந்தாலும் , 
 
ஒரு சமூக விஷயம் , குடும்ப செண்டிமெண்ட், அப்பா மகன் பாசம் , ஆண் பெண் எதிர்பார்ப்பில்லா நன்னட்பு, காதல் குறும்பு போன்ற உயிர்ப்பான விசயங்களோடு ,
 
கவர்ச்சி , மசாலா என்று சினிமாத்தனங்களும் சேர்த்து , 
 
ஒரு  ஃபுல் மீல்ஸ் ஆக வந்திருக்கிறது மிஸ்டர் சந்திரமவுலி . 
 
 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *