நாய்கள் ஜாக்கிரதை @ விமர்சனம்

naaygal 2

நாதாம்பாள் பிலிம் பேக்டரி சார்பில் நடிகர் சத்யராஜ் அவரது மனைவி திருமதி மகேஸ்வரி சத்யராஜ் இருவரும் தயாரிக்க, சிபிராஜ், அருந்ததி, பாலாஜி , மயில்சாமி ஆகியோர் நடிக்க, சக்தி சவுந்திராஜன் இயக்கி இருக்கும் படம் நாய்கள் ஜாக்கிரதை.

பாய்ச்சல் எப்படி ? பார்க்கலாம் .

லடாக் பகுதியில் இந்திய ராணுவப் படையில் இருக்கும் ஒரு பயிற்சி நாய்,  தனது எஜமான அதிகாரியின் உயிரை பள்ளத்தில் விழுந்து மரிப்பதில் இருந்து காக்கிறது . ஆனால் அந்த அதிகாரி தீவிரவாதிகளின் துப்பாக்கிக் குண்டுகளுக்கு பலியாக,  நாய் ஒடுங்கிப் போகிறது .

கோவையில் இளம்பெண்களைக் கடத்தி பணம் பறிப்பது சைக்கோத்தனமாக கொலை செய்வது உள்ளிட்ட செயல்களை செய்யும் கொடூரனை பிடிக்கும் முயற்சியில் காலில் குண்டு பாய்ந்து மருத்துவ விடுப்பில் இருக்கிறார் போலீஸ் அதிகாரி சிபிராஜ் .

ஒரு நிலையில் அந்த நாயும் சிபிராஜும் பழக வேண்டிய சூழல் ஏற்படுகிறது . அப்போதுதான் இருவருக்கும் துப்பாக்கிக் குண்டு சத்தத்துக்கு பயந்து நடுங்கும் ஃபோபியா இருப்பது சிபிக்கு தெரிய வருகிறது .

எனினும் தங்கள் பயத்தை இருவரும் சேர்ந்து வெல்கிறார்கள்.

பழைய பகையின் உச்சத்தில் வில்லன் சிபிராஜின் கர்ப்பவதி மனைவியையும் கடத்துகிறான் . எங்கே என்று கண்டு பிடிக்க முடியாத இடத்தில் அவளை சவப்பெட்டியில் வைத்து உயிரோடு புதைத்து அந்த சவப்பெட்டிக்குள் ஒரு வெப் கேமரா பொருத்தி, அதன் மூலம் சவப்பெட்டிக்குள் அவள் அணு அணுவாக சாவதை இன்டர்நெட் மூலம் சிபிராஜை பார்க்க வைக்கிறான் வில்லன் .

எட்டு மணி நேரத்துக்குள் மனைவியின்  உயிர் போய் விடும் என்ற நிலையில் சிபிராஜும் அந்த நாயும் அருந்ததியைக் காப்பாற்றினார்களா ? இல்லை சிபியும் அதே போல் சவப்பெட்டிக்குள் வில்லனால் மாட்டிக் கொண்டாரா? இருவரையும தன் உயிரைக் கொடுத்தாவது நாய் காப்பாற்றியதா? என்பதுதான் நாய்கள் ஜாக்கிரதை .

naaigal-jaakirathai

சிபி உட்பட படத்தில் போலீஸ் அதிகாரிகளாக வரும் நபர்கள் யாரும் நடிக்கவில்லை. அந்த கதாபாத்திரத்துக்காக செய்து வைத்தது போலவே இருக்கிறார்கள் . அட்டகாசம் . தூள் . சூப்பர் .

அந்த சவப்பெட்டி ஐடியா சில்லிட வைக்கிறது, காமெடி பாலாஜி நிதானமான வில்லத்தனத்தில் கவர்கிறார்

படத்தின் ஷாட்கள் மற்றும் ஒளிப்பதிவு அருமையாக இருக்கிறது .

நாயைப் பற்றிய ஒரு பாடலில் மயக்கினாய்,  ஆக்கினாய் , மாறினாய், ஆகினாய் , இயக்கினாய் என்றே எல்லா வரிகளும் முடிவது அழகு .

தான் சொல்ல வந்த விஷயத்தை அழகாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் .

ஆனால் சொன்ன விஷயம் போதுமா? அதுதான் முக்கியக் கேள்வி .

naaygal 1

படத்தின் பெயர் நாய்கள் ஜாக்கிரதை . டைட்டிலில் நாயின் பெயரை போட்டு அப்புறம்தான் சிபிராஜின் பெயரையே போடுகிறார்கள் . அப்படி இருக்கையில் திரைக்கதை நாயின் சாகசங்கள்,  ஹீரோயிசம் , புத்திசாலித்தமான உத்திகள் எல்லாம் எப்படி இருக்க வேண்டும். இதுவரை நாம் தமிழ் சினிமாவில் பார்த்த மிருகங்கள் சம்மந்தப்பட்ட படங்களில் நாய்கள் என்ன செய்யுமோ அதைத்தான் இந்த நாயும் செய்கிறது . அப்புறம் எதுக்கு இவ்வளவு  பில்ட் அப் ?

போலீஸ் நாய்கள் பற்றி நிறைய விசயங்களை கேட்டு படித்து பேசி விசாரித்து அறிந்து அவற்றின் உச்சகட்ட பலம் மற்றும் சிறப்புகளையும் எடுத்து அதையெல்லாம்  பொருத்தும்படியான ஒரு திரைக்கதை அமைத்து மேக்கிங்கிலும் சும்மா நாய் மிரட்டு பேய்  மிரட்டு மிரட்டி இருக்க வேண்டாமா? ஒளிப்பதிவு டோன் , விசாலமான ஷாட்கள் தவிர தேவர் பிலிம்ஸ் நாய்களுக்கும் இந்த நாய்க்கும் என்ன பெரிதாக வித்தியாசம் இருக்கிறது ? நத்திங்!

மனோபாலா ஒரு சிறுவனை மாமா என்று அழைப்பதும் அவன் மனோபாலாவை மச்சான் என்று அழைப்பதுமான ஒரு ஏரியா ஆரம்பித்த போது என்னமோ காமெடி டிராக்கில் கலக்கப் போகிறார்கள் என்று பார்த்தால்… அதும் ரெண்டே காட்சியில் புஸ்வானமானது.

சிறுவர்கள் படம் பார்க்க வர வாய்ப்புள்ள இந்தப் படத்தில் சிபிராஜ் மீது நாய் படுத்து இருப்பதை பார்த்து ஒரு பெண் தப்பாகப் பேசும் காட்சிகளை தவிர்த்து இருக்கலாம் .

கடைசியில் டாகி ஸ்டைல் (doggy style) என்ற வார்த்தையை வைத்து ஒரு பாட்டே போட்டு இருப்பதும்… அடப்பாவிகளா என்று சொல்ல வைக்கிறது.

மொத்தத்தில் …

நாய்கள் ஜாக்கிரதை …பலவீனமான பவ்….!  பவ்….!

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →