வைஜயந்தி மூவீஸ் சார்பில் அஸ்வின் தத் தயாரிக்க , கீர்த்தி சுரேஷ், துல்கர் சல்மான், சமந்தா, , விஜய் தேவரகொண்டா நடிப்பில் நாக் அஸ்வின் இயக்கத்தில்,
தெலுங்கில் வந்திருக்கும் மகாநதி படத்தின் தமிழ் வடிவமே நடிகையர் திலகம்.
காலத்தால் மறக்க முடியாத காவிய நடிகை- நடிகையர் திலகம் சாவித்ரியைப் பற்றிய படம். நடிகையர் திலகம் ரசனையின் திலகமா ? பேசலாம் .
விவரம் தெரியாத வயதிலேயே தந்தையை இழந்து , விதவை அம்மாவுடன் பெரியம்மா வீட்டில் அடைக்கலம் ஆகி,
பெத்த நைனா எனப்படும் பெரியப்பாவால் (ராஜேந்திர பிரசாத்) உதாசீனம் செய்யப்பட்டு ,
சிறு வயதிலேயே நடனம் ஆடும் திறமை இருந்ததால் பணத்தாசை பிடித்த பெத்த நைனாவால் வலுக்கட்டாயமாக நாடகங்களில் நடிக்க வைக்கப்பட்டு ,
அப்படி ஒரு நாடக நிகழ்ச்சியில் இந்தி நடிகர் பிரித்வி ராஜ் கபூரால் பாராட்டப்பட்டு, நாகேஸ்வர ராவின் தீவிர ரசிகையாகத் திகழ்ந்து ,
சென்னைக்கு நடிக்க வந்து, ஜெமினி கணேசன் எடுத்த போட்டோவால் தெலுங்குப் படத்தில் நடிக்க வாய்ப்புப் பெற்று,
தெலுங்கு டைரக்டர்களால் நடிக்க லாயக்கு இல்லாத நடிகை என்று சொல்லப்பட்டு , பின்னர் நடித்து, அப்படியே தமிழுக்கும் நடிக்க வந்து ,
சாதாரண தமிழ் மக்களுடன் ஜெமினி பழக வைத்ததன் மூலம் சிறப்பாக தமிழ் கற்று, தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்களுக்கு இணையாக – அட்டகாசமாகத் தமிழ் பேசி
அதே நேரம் தொழில் பொறாமையால் , சக தெலுங்கு நடிகைகளின் கோபத்துக்கு ஆளாகி,
ஜெமினியுடன் பழகி, நீச்சல் பயிற்சி, கார் ஓட்டுதல் , குதிரைப் பந்தயம் மற்றும் இயல்பு நடிப்பில் தன்னை தரக் கூட்டல் செய்து கொண்டு ,
பகையை முறியடித்து , தமிழ் தெலுங்கு சினிமா உலகின் முடி சூடா ராணியாக திகழ்ந்து ,
ஜெமினியை காதலித்து திருமணம் செய்து கொண்டு , அதனால் சொந்தக்காரர்களின் கோபத்துக்கு ஆளாகி,
ஜெமினிக்கு வந்த தாழ்வு மனப்பான்மையால் கருத்து வேறுபாட்டுக்கு ஆளாகி வருந்தி,
ஜெமினியின் அறிவுரைகளையும் மீறி தவறான படங்களை தயாரித்து இயக்கி, நஷடப்பட்டு ,
குடிப்பழக்கத்துக்கு ஆளாகி, சொத்துக்களை இழந்து, வருமான வரித்துறையால் பெரிதும் பாதிக்கப்பட்டு
கோமா நிலையில் பல மாதங்கள் படுத்த படுக்கையாகக் கிடந்து மறைந்த சாவித்திரி….
அதே நேரம் தன் வாழ்வில் எவ்வளவு பெரிய மனிதாபிமானியாக , கொடைக்குணம் உள்ளவராக நல்லவராகத் திகழ்ந்தார் என்பது படத்தின் முக்கிய திரைக்கதை அம்சம்.
சாவித்ரியாக கீர்த்தி சுரேஷ் !
இன்னொரு பக்கம் பிரஜா வாணி என்ற பத்திரிகையில் பணியாற்றும்- 80 களின் மைலாப்பூர் பிராமணப் பெண் மதுரவாணி (சமந்தா) போட்டோகிராபர் ஆண்டனி . (விஜய் தேவரகொண்டா) இடையில் ஒரு சொல்லப் படாத காதல்….
சாவித்திரி பற்றி எதுவுமே தெரியாமல் சாவித்ரி கோமாவில் விழுந்த செய்தியை சுவாரசியம் இல்லாமல் மதுரவாணி எழுதப் போய் , அதில் ஈர்க்கப்பட்டு சாவித்ரி தொடர்பான நபர்களை சந்தித்து இம்ப்ரெஸ் ஆகி,
சாவித்ரியைப் பற்றி அட்டகாசமான கட்டுரை எழுதி,
சாவித்ரியின் வாழ்க்கை மூலம் மனிதாபிமானம், காதல் , துணிச்சல் இவற்றின் அவசியத்தை மதுரவாணி கற்றுக் கொள்வது ஒரு கதைப் போக்கு .
இரண்டும் சேர்ந்த கதைப் பின்னலே, மகாநதி என்கிற நடிகையர் திலகம் .
வாவ் கீர்த்தி சுரேஷ் !
சாவித்ரியாக கூடு விட்டுக் கூடு பாய்ந்திருக்கிறார் .
ஒவ்வொரு அசைவாகவும் பிம்பமாகவும் நம் உள்ளத்தில் காவியமாக நிலைத்து இருக்கும் சாவித்திரியை, எல்லோரும் திருப்தியுறும் அளவுக்கு பிரதிபலிப்பது மிகக் கடினம்
ஆனால் சாவித்திரியை பிரம்மிக்கும் அளவுக்கு தனக்குள் கொண்டு வந்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.
சாவித்ரியாக மாறுவது மட்டும் அல்ல … அந்தக் கால நடிப்பின் பாவனைகளை நடனத்தை , உடல் மொழிகளை இன்று ஒரு நடிகை கொண்டு வருவது சாதாரண விஷயம் இல்லை .
கடும் உழைப்பு மற்றும் திறமையின் மூலம் அதில் அட்டகாசமாக ஜெயித்து இருக்கிறார் கீர்த்தி சுரேஷ் .
சொல்லப் போனால் சில காட்சிகளில் சாவித்ரியாகவே மாறி விட்டார் .
குறிப்பாக கடைசியில் கையில் மதுவோடு உட்கார்ந்தபடி ஜெமினியுடனான காதல் வாழ்வை நினைத்துப் பார்க்கும் காட்சியில் ஒரு TRUCK IN SHOT ல் உட்கார்ந்திருப்பது கீர்த்தி சுரேஷே அல்ல . அச்சு அசல் சாவித்திரி .
இந்தப் படம் கீர்த்தி சுரேஷின் விஸ்வரூபம் !
குடி நோய்க்கு அடிமையான சாவித்திரி ஒரு நிலையில் மது அடிமைகள் மறு வாழ்வு நிலையம் அமைக்க அப்போதே முயன்று உள்ளார் என்ற செய்தி சிலிர்க்க வைக்கிறது .
நாக் அஸ்வினின் இயக்கம் , படமாக்கல் , கதாபாத்திரத் தேர்வுகள் அருமை !
டேனி சஞ்சேஷ் லோபேஷின் ஒளிப்பதிவு , மிக்கி ஜே மேயரின் இசை, கோத்த கிரி வெங்கடேஸ்வர ராவின் எடிட்டிங் யாவும் அருமை . அருமை அருமை .
தோட்டாதரணியின் மேற்பார்வையில் அவினாஷ் கொல்லாவின் கலை இயக்கம் சிறப்பு.
கௌரங், அர்ச்சனா ராவ், இந்திராக்ஷி பட்டாநாயக் ஆகியோரின் ஆடை வடிவமைப்பும் நேர்த்தி .
ஒரு மினி, ஜெமினி கணேசனாக துல்கர் சல்மான் . ஜெமினி கணேசனை கண் முன் நிறுத்தவில்லை என்றாலும் உணர வைக்கிறார். சபாஷ் .
சாவித்ரியின்சிறு வயது தோழியாக வரும் ஷாலினி பாண்டே , சமந்தா , விஜய் தேவர கொண்டா ஆகியோரும் சிறப்பாக செய்துள்ளார்கள்
வசனம் அருமை (தெலுங்கில் சாய் மாதவ் புர்ரா , தமிழில் மதன் கார்க்கி)
உதாரணம் …
” உன் அளவுக்கு நான் வேற யாரையும் காதலிக்கலன்னாலும், நான் பொம்பள விசயத்தில் வீக் னு அப்பவே உனக்கு தெரியாதா ? ஏதோ இப்போ தான் தெரிஞ்ச மாதிரி பேசற ?”
“அப்போ நான் சாவித்திரி; இப்போ சாவித்திரி கணேசன்”
தயாரிப்பாளர் (நாகி ரெட்டி )சக்ர பாணியாக பிரகாஷ் ராஜ் , நாகேஸ்வர ராவ் ஆக வரும் நாக சைதன்யா , எஸ் வி ரெங்காராவ் ஆக வரும் மோகன்பாபு ,
மற்றும் எல் வி பிரசாத், என் டி ராமராவ் இவர்களுக்கான நடிகர் தேர்வுகள் அருமை . மெனக்கெட்டு உருவாக்கி இருக்கிறார்கள்
(சரி ,, நடிகையர் திலகம் படத்தில் நடிகர் திலகமாக யார் ? மக்கள் திலகமாக யார் ? பீம்சிங் ஆக யார் ? கே எஸ் கோபால கிருஷ்ணன் ஆக யார் ? என்று,
ஆவலோடு கேட்கிறீர்களா ? ஹா ஹா ஹா … அங்கதான் வச்சு செஞ்சுட்டானுங்க … பேசுவோம் )
சித்தார்த் சிவசாமியின் திரைக்கதைதான் ஓர வஞ்சனையின் உச்சம் .
இது தெலுங்குக்காக எடுக்கப்பட்ட படம் . ஏதோ ஓரிரு காட்சியில் துல்கர் தமிழ் பேசி நடித்து இருந்தால் கூட,
தமிழ் தெலுங்கு இரண்டுக்கும் திட்டமிட்டு எடுக்கப்பட்ட படம் போல தெரியவில்லை.
எனவே சாவித்ரியின் தமிழ் சினிமா சாதனைகளை பற்றி நிறைய எதிர்பார்க்க முடியாது என்பது நமக்குப் புரியாமல் இல்லை .
ஆனால் வரலாறு என்று வந்தால் உண்மையை மட்டுமாவது சரியாக சொல்ல வேண்டும் அல்லவா ? அந்த நேர்மை இந்தப் படைப்பாளிகளுக்கு இல்லை என்பதுதான் அநியாயம்
தெலுங்கு சினிமா இயக்குனர்கள் வசனகர்த்தாக்களை எல்லாம் பெரிய மேதைகள் என்று கூவிக் கூவி சிலிர்க்கும் படம் ,
தமிழ் சினிமா இயக்குனர்கள் மற்றும் படைப்பாளிகளை எல்லாம் (குறிப்பாக ஆரூர்தாஸ் ) பித்துக் குளிகள்போல சித்தரிக்கிறது.
சாவித்ரிக்கு அரூர்தாஸ் கொடுத்த தமிழ்க் கொடை எவ்வளவு ! ஆனால் அவரது பாத்திரத்தில் மனோபாலாவைப் போட்டு கிண்டல் அடிக்கிறார்கள் .
தேவதாஸ் படம் பெரிய பிஸ்தாவாகவே இருக்கட்டும் . அதற்காக மனம் போல மாங்கல்யம் பட ஷூட்டிங் என்ன அப்படி கோமாளிக் கூத்தாகவா நடந்தது ? சாவித்ரியின் தெலுங்குப் படங்களை எல்லாம் விலாவாரியாக காட்டுகிறார்கள்.
ஆனால் பாசமலர் படத்தை மட்டும்,
சாவித்திரி அழும் ஒரே ஷாட்டில் காட்டி முடித்து விடுகிறார்கள் . அதில் சிவாஜி வரும் ஒரு ஷாட் கூட இல்லை .
பாசமலர் படத்தில் வரும் சாவித்திரி அழும் ஷாட்டில் உள்ளது போல கீர்த்தி சுரேஷ் தோன்றும் ஷாட்டில் சிவாஜியின் ஆளுயர குளோசப் ஓவியம் ஒன்று வைத்து உள்ளார்கள் .
மற்ற காட்சிகளில் எல்லாம் அருமையாக இருக்கும் கலை இயக்கம் அந்த சிவாஜியின் ஓவியத்தை மட்டும்,
கடமைக்கு ஏனோதானோ என்று முட்டைக் கண்களுடன் சிவாஜியை வரைந்து வைத்துள்ளார்கள்.
“இல்ல .. இல்ல.. இது சாவித்திரியின் சினிமா சாதனைகள் பற்றிய படம் இல்லை . காதல் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய படம் .
எனவே சிவாஜி படத்தில் இடம் பெறவில்லை. ” என்று யாராவது நொண்டி சமாதானம் செய்தால் , நல்லா வந்துரும் வாயில ….
சாவித்ரிக்கு குழந்தை பிறந்த போது ஜெமினி சென்னையில் இல்லை . முதன் முதலில் மருத்துவமனைக்கு குழந்தைக்காக பரிசுப் பொருட்களை வாங்கிக் கொண்டு ஓடியது சிவாஜி!
அது மட்டும் … தெலுங்கில் ஓடிய ஒரு படத்தை தமிழில் சிவாஜியை வைத்து பிராப்தம் என்ற பெயரில் எடுத்ததால் ஏற்பட்ட நஷ்டமும்,
வியட்நாம் வீடு படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ததால் எடுத்த நஷ்டமும் சாவித்ரியை பாதித்ததை மட்டும் திரும்ப திரும்ப சொல்கிறார்கள் .
பிராப்தம் படம் தோற்றுப் போனதை விளக்கமாக, சிவாஜி போஸ்டரில் இருந்து மாலை சரிவது போல காட்டவும் ,
சிவாஜி நடித்த மூணு படம் வரிசையா பிளாப் என்று வக்கணையாக வசனம் வைக்கவும் முடியும் .
ஆனால் பிராப்தம் படத்தை சாவித்திரி டைரக்ட் செய்ததை மட்டும் காட்டுவார்கள் . அதில் அதில் கூட சிவாஜி நடிப்பது போல ஒரு ஷாட் கூட இல்லை .
நடிகையர் திலகம் என்ற பெயர் மட்டும் வேணும் . ஆனால் நடிகர் திலகம் படத்தில் வேண்டாம் என்றால்,….என்னத்தச் சொல்ல….
அதை விடுங்க .
சீன மொழியில் எடுத்தால் கூட என்ன ? பீம்சிங், கே எஸ் கோபால கிருஷ்ணன் . ஏ பி நாகராஜன் பெயர்களே சொல்லப் படாமல் சாவித்ரி பற்றிய ஒரு படமா ? அடப்பாவிகளா !
அவ்வளவு ஏன் ? சாவித்ரி நடிப்பில் உச்சம் தொட்ட படம் என்று உலகமே ஒப்புக் கொண்ட நவராத்திரி படத்தின் பேரே ஒரு டயலாக்கில் மட்டும் வருகிறது . அதுவும் இங்கிலிபீஸில்!
வசனத்தில் கூட நாகேஸ்வரராவ் , ராமராவ் , சிவாஜி கணேசன் என்ற ஆர்டரில்தான் பிரகாஷ் ராஜ் வசனம் பேசுகிறார்.
சாவித்ரியின் பெரியப்பாவாக நடித்திருக்கும் ராஜேந்திர பிரசாத்தின் பேச்சு மற்றும் தொனிகளில் தமிழர்களின் மீதான கிண்டல் போக்கு திட்டமிட்டு காட்டப் படுகிறது .
உதாரணமாக அந்த ஆமா …ஓ மா …ஏமா ….
வசனம் எழுதியவர் அவ்வளவு தமிழ் உணர்வாளர் போல . கொடுமை .
தமிழிலும் தெலுங்கிலும் ஒரே மெட்டில் வந்து புகழ் பெற்ற இனிய பாடல்களை போடும்போது தெலுங்குப் பதிப்பில் தெலுங்கு பாடல்களை போடணும் .
தமிழப் படத்தில் தமிழ் பாடல்களைதானே போடணும் . ஆனா ,தமிழ்ப் படத்திலும் தெலுங்குப் பாடல்களை போடுவது எல்லாம் என்ன மனநிலை என்றே தெரியவில்லை .
மாயாபஜார் படத்தில் வரும் கல்யாண சமையல் சாதம் பாடலை கூட தமிழ்ப் பதிப்பில் தெலுங்கில் போடுவோருக்கு கண்டிப்பாக தேவை மன நல சிகிச்சை !
சாவித்ரியின் தெலுங்கு உறவினர்களும் ஆந்திர நண்பர்களும் சக தெலுங்கு நடிகைகளும் அவருக்கு செய்த பெரிய துரோகங்கள் சதிகளை எல்லாம்,
பட்டும் படாமல் சொல்லி விட்டு , தமிழ் நாட்டில் நடந்த விசயங்களை எல்லாம் விலாவாரியாக சொல்கிறார்கள் .
அதே நேரத்தில் தமிழ் நாட்டில் சாவித்ரியை ஏமாற்றியவர்களும் பெரிதும் தெலுங்குக்காரர்கள்தான் என்பதை மட்டும் ஊத்தி மூடுகிறார்கள் .
ஆரம்பத்தில் சாவித்திரி ஒழுங்காக வசனம் பேசாதபோது கிண்டல் செய்யும் பெண்களை எல்லாம் பக்கா தமிழ்ப் பெண்களாக காட்டுகிறார்கள் .
அலோ.. அறிவாளிகளே !. அப்படி ஒரு சம்பவம் நடந்து இருந்தால் அப்படி கிண்டல் செய்வதும் தெலுங்கு, கன்னட அல்லது மலையாளப் பெண்களாகத்தான் இருப்பாங்க .
அப்போது எல்லாம் தமிழ்ப் பெண்கள் சினிமா பார்ப்பதே அபூர்வம் .
ஜெமினி கணசேன் சாவித்திரி காதல் விவகாரத்தில் காதல் மோதல் ஈகோ , ஜெமினியின் சபலம், எல்லாம் ஒகே .
ஆனால் சாவித்ரிக்கு குடிக்கக் கற்றுக் கொடுத்ததே ஜெமினி என்பது எல்லாம் … தெரிலடா சாமி .
சாவித்திரிக்கு இன்கம் டாக்ஸ் ரெய்டு வரக் காரணம் ஜெமினியின் அலட்சியம் என்று சொல்லத் தெரிகிறது
ஆனால் போதையின் உச்சத்தில் ஜெமினி மீது உள்ள கோபத்தில் சாவித்திரி ஒரு வீட்டை விற்க முயல ,
அதை இன்னொருவரை வாங்குவது போல வாங்கச் செய்து சாவித்ரிக்கே ஜெமனி திருப்பிக் கொடுத்ததையும் அதையும் சாவித்திரி விற்றதையும் சொல்லாமல் விட்டது ஏனோ ?
சாவித்திரி என்றும் என்றென்றும் நம் நேசத்துக்குரிய மாபெரும் காவிய நடிகை . கலை தேவதை ! அதில் எந்த நொடியிலும் மாற்றுக் கருத்து இல்லை .
ஆனால் ஜெமினியை பொம்பள பொறுக்கி என்று நேரடியாக குற்றம் சாட்டும் படம் சந்திரபாபு என்ற பெயரைக் கூட சொல்லாதது ஏன் ?
ஆந்திராவில் நடந்த யானை மீது ஊர்வல சம்பவத்தில் ஜெமினியை புறக்கணித்து விட்டு சாவித்திரி மேலே போனதால் ஜெமினி அவமானப் படுத்தப்பட்டார் .
இது பற்றி ஜெமினி நேரடியாகப் பேசி இருக்கிறார் . ஆனால் ஏதோ சாவித்திரி தெரியாமல் போனது போல படம் சொல்வது படைப்பின் நேர்மை அல்ல.
மொத்தத்தில்,
நடிகையர் திலகம்….. தெலுங்கு சாவித்திரி
மகுடம் சூடும் கலைஞர்
————————————-
கீர்த்தி சுரேஷ்