நட்பே துணை @ விமர்சனம்

அவ்னி மூவீஸ் சார்பாக சுந்தர் சி மற்றும் குஷ்பூ சுந்தர் தயாரிக்க, ஹிப் ஹாப் ஆதி, அனகா, கரு பழனியப்பன், ஹரீஷ் உத்தமன், குமாரவேல் எரும சாணி விஜயகுமார் நடிப்பில் ஸ்ரீகாந்த் வாஸ் ஆர் பி மற்றும் தேவேஷ் ஜெயச்சந்திரன் கதை திரைக்கதை வசனத்தில் பார்த்திபன் தேசிங்கு இயக்கி இருக்கும் படம் நட்பே துணை . வெற்றியே துணை என்று ஆகுமா? பேசலாம் .

 நாடு சுதந்திரம் வாங்குவதற்கு முன்பு வெள்ளைக்காரனுக்கு கீழ் இந்தியா இருந்தது போல , பிரஞ்சுக்காரர்களுக்கு கீழே இருந்த இன்றைய இந்தியாவின் சில பகுதிகளில் ஒன்று பாண்டிச்சேரி . 
 1954 இல் தான் பாண்டிச்சேரி பிரஞ்சுகாரர்களிடம் இருந்து விடுபட்டது. பிறகு அதற்கும் கெட்ட நேரம் வந்து இந்தியாவுடன் இணைக்கப்பட்டது . 

அப்படி தன்னிடம் அடிமைப் பட்டு கிடக்கும் நாடுகளில் மண்ணின் மைந்தர்கள் கேட்கும் சில கோரிக்கைகளை நிறைவேற்ற போட்டிகள் நடத்தி அதையும் கேளிக்கையாக்கி , மண்ணின் மைந்தர்கள் வென்றால் அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் பழக்கம் ஆங்கிலேய பிரஞ்சு அரசுகளுக்கு உண்டு . ( ஏ ஆர் ரகுமான் அசத்திய ஆமீர் கானின் லகான் படம் நினைவுக்கு வருகிறதா ).

அப்படி பிரஞ்சு ஆதிக்கத்திடம்  பாண்டிச்சேரி மாநிலப் பகுதிகள் இருந்த காலத்தில் , ஒரு ஹாக்கி விளையாட்டு மைதானம் பிரஞ்சுக்காரர்கள் வசம் போவதை தடுக்க , ஹாக்கி விளையாடி வென்று மைதானத்தை தக்க வைத்துக் கொண்ட அரங்க நாதன் என்பவர் பெயரால் இன்றும் விளங்கும் அந்த மைதானம் இப்போதும் பல ஹாக்கி வீரர்களை உருவாக்கி வருகிறது . 

இந்த நிலையில் அந்த இடத்தை , நிலத்தை நச்சாக்கும் ஒரு பேக்டரிக்கு விற்க திட்டமிடுகிறார்  விளையாட்டுத் துறை அமைச்சர் ( கரு . பழனியப்பன்) . அதற்கு வசதியாக அந்த கிரவுண்ட் மூலம் தகுதியான வீரர்கள் யாரும் இப்போது உருவாவது இல்லை என்பதை நிரூபிக்க , அங்கு  ஹாக்கி பயிலுபவர்களில் திறமைசாளிகளைக் கூட தேர்ந்தெடுக்காமல் கெடுக்கிறார் .

 இது கண்டு கொந்தளிக்கிறார் ஒரு நியாயமான கோச் ( ஹரீஷ் உத்தமன்) 

 அங்கே ஹாக்கி பயிலும் ஓர் இளம் பெண்  ( அனகா)
பிரஞ்சு கற்றுக் கொண்டு பிரான்சில் போய் செட்டில் ஆக வேண்டும் என்ற கனவுகள் உள்ள எப்போதும் வாயை கோணிக் கொண்டு  திறந்து வைத்து வெள்ளந்தியாக சிரிக்கும் இளைஞன் ஒருவன் ( ஹிப் ஹாப் ஆதி ) அந்த பெண்ணால் கவரப்படுகிறான் . 

அவளைப் பார்க்க கிரவுண்டுக்கு போகிறான் . 

அங்கே அவளை அநியாயமாக ஒருவன் தேர்ந்தெடுக்காமல் தள்ளி வைக்க, அவளுக்கு உதவியாக இளைஞன் களம் இறங்க, மொத்த பிரச்னைகளும் என்ன ஆனது ? தீர்வு எப்படி வந்தது ? என்பதே இந்த நட்பே துணை .

 மக்கள் நலன் பாராமல் , சுற்றுச சூழல் பற்றிக் கவலைப் படாமல் அந்நிய முதலாளிகளுக்கு  நம் மண்ணை கமிஷன்  நக்கிக் கொண்டு காவு கொடுக்கும் அரசியல்வாதிகள், 

வரலாறும் வந்த பாதையும் தெரியாமல் முட்டாள் கூட்டமாக வாழும் மனப் பான்மை .. 

விளையாட்டு என்பது வியாபாரத்தின் படுக்கை அறைகளில் கிடக்கும் விலைமகள் போல ஆகி விட்ட அவலம் ,

 கிரிக்கெட் தவிர மற்ற விளையாட்டுகள் நம் நாட்டில்  நலிந்து கிடக்கும் கொடுமை , 

பெண்கள் கபடியில் வென்ற நமது அணி ஷேர் ஆட்டோவில் வீட்டுக்கு சென்ற அவலம் .. அந்த அளவுக்கு அவர்களை கண்டுகொள்ள ஆளே இல்லாத பெருங்கொடுமை .. 

இவற்றை எல்லாம் சொல்லும் படம் . 

பாட்டும் மிகை நடிப்பும் நாடகத்தனமான பாவனைகளுமாக வருகிறார் ஆதி . இன்னும் கொஞ்சம யதார்த்தமாக நடித்து இருக்கலாம் . 
ரம்யா நம்பீசனை உடைத்து ஊற்றி அதில் சஞ்சனா செட்டியை கலந்தது  போல இருக்கும் அனகா  ஹாக்கி வீராங்கனைக்கு ஏற்ற உடல் தோற்றம் , உற்சாக நடிப்பு என்று கர்ம சிரத்தையாய் பணியாற்றி இருக்கிறார் .

கரு பழனியப்பன் சிறப்பாக பேசுகிறார் . ஆங்காங்கே டைமிங்கில் நகைச்சுவை  வெடி வெடித்து ஜமாய்க்கிறது 
உதாரணமாக 
“ஏங்க..  ரெண்டு பவுன் நெக்லஸ் வாங்கறதா சொன்னேனே.. அதை எட்டு பவுனா வாங்கிக்கலாம்னு இருக்கேன் “
”தாராளமா வாங்கிக்க … நாம என்ன காசா கொடுக்கப் போறோம் “
— கரு. பழனியப்பனின் டைமிங் மற்றும மாடுலேஷனில் வரும் இந்த  வசனத்துக்கு வெடிச் சிரிப்பில் அதிர்கிறது தியேட்டர் . 

தன் கேரக்டருக்கு தானே கடைசி காட்சியை  பழனி எழுதிக் கொண்டார் போல . 
“ஓட்டு போட காசு வாங்கினா அப்புறம் உங்களுக்கு காசு கொடுக்க நாங்க ஊழல் செய்யத்தான் செய்வோம் ” என்று நியாயம் பேசிக் கொண்டு போகிறார் . 

மக்கள் காசு வாங்கறதுக்கு முன்னாடி எல்லா அரசியல்வாதிகளும் சத்திய சந்தர்களாக இருந்தார்களாக்கும். 

“நாடு சுதந்திரம அடைந்து இத்தனை ஆண்டுகளாக மக்களை பஞ்சப் பராரிகளாக ஆக்கி, அப்புறம் இலவசம் மூலம் பிச்சைக்காரனாக ஆக்கி , அவன் கையில் காசை கொடுத்து ஆசை காட்டி அயோக்கியன் ஆக்கியது உங்களை மாதிரி அரசியல்வாதிகள் .  நல்லவன் எங்களை திட்டட்டும் . ஆனா உங்களை மாதிரி புறம் போக்குகளுக்கு எங்களை திட்டும் யோக்கியதை இல்லை”  என்று பதிலுக்கு ஹீரோ சொல்லணும் .

கரு. பழனியப்பன் இந்தப் படத்தின் இயக்குனராகவோ அல்லது ஹீரோவாகவோ இருந்தால் இப்படிதான் இந்த கிளைமாக்சை முடித்து இருப்பார் . என்ன செய்ய ? இந்தப் படத்தில் அவர் வில்லன்தானே .

 அரவிந்த் சிங்கின் ஒளிப்பதிவில் குறைகளும் கொண்டாடவும் பெரிதாக ஏதும் இல்லை . 

ஹிப் ஹாப் ஆதியின் இசையில் வெரைட்டி இருந்திருக்கலாம் . 
விட்டேத்தியாக தெரியும் நாயகன் உண்மையில் யார் என்ற திருப்பம் அபாரம். ஆனால் அதற்கு முன் ரொம்ப நேரம் பல காட்சிகளும் விட்டேத்தியாக !
நம்ம எடிட்டிங்குக்கு என்னதான் ஆச்சு ?

நாயகன் உண்மையில் யார் என்பது கோச் உட்பட யாருக்கும் தெரியவில்லை என்ற காட்சியில் லாஜிக் லகலக .

 படம் துவங்கிய நாலாவது காட்சியிலேயே முழு படமும் புரிந்து விடுவது ஒரு சுமை . (எனில் திரைக்கதை எவ்வளவு வித்தியாசமாக இருந்திருக்க வேண்டும் ?) வேறு மாதிரி திரைக்கதையை துவக்கி இருக்கலாம் . அரங்கநாதன் வரலாற்றை இன்னும் அழுத்தமாக சொல்லி இருக்கலாம் . போட்டியை இன்னும் புரஃபஷனலாக காட்டி இருக்கலாம் . 

வெள்ளைக்காரனிடம் இருந்த அதே நிலைக்கு இந்த அரசியல் கொள்ளைக்காரர்களாலும் நாம் போய்க் கொண்டு இருக்கிறோம் என்பதை சொல்ல முயன்று இருக்கிறர்கள் . ஆனால் அதை சரியாக சொல்லவில்லை .

ஜாதி மத வெறி வேறு . மொழி வழி இனப்பற்று என்பது வேறு . ஆனால் அவற்றோடு இதையும் கலக்கும் அயோக்கியத்தனம் இப்பொது பல படங்களிலும் அரைவேக்காட்டுத்தனமாக கலக்கும் வஞ்சகம் இப்போது பல தமிழ்ப் படங்களிலும் வருகிறது . 
ஒரு வாதத்துக்கு எல்லாம் ஒன்று வைத்துக் கொண்டாலும் மொழி இனத்தின் பெயரால் அடுத்த இனத்தவனை சுட்டும் வெற்றியும் அடித்தும் கொல்கிற மற்ற மாநில மொழிப் படங்களில் போய் சொல்லுங்க 

இங்க தமிழினப்பற்று இல்லாததே அழிவுகளுக்கு எல்லாம் காரணம் . அந்த பற்று உள்ள கொஞ்ச பேரையும் கெடுக்காதீங்க . 

இப்படி….  குறைகள் இல்லாமல் இல்லை.  

எனினும் ஆரம்பத்தில் சொன்ன காரணங்களால் கவனம்  பெறுகிறது படம் 
நட்பே துணை …. இளைஞர்களும் விளையாட்டு ஆர்வலர்களுமே துணை 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *