நெஞ்சில் துணிவிருந்தால் @ விமர்சனம்

அன்னை பிலிம் பேக்டரி சார்பில் ஆன்டனி தயாரிக்க, சந்தீப், விக்ராந்த், மெஹ்ரீன், ஷாதிகா , சூரி,  அப்புக்குட்டி நடிப்பில், 

சுசீந்திரன் இயக்கி இருக்கும் படம் நெஞ்சில் துணிவிருந்தால் . ரசிக்க விஷயம் இருக்கா? பார்க்கலாம் . 

காசுக்காக கொலை செய்யச் சொல்லி தன்னிடம் பணத்தோடு வரும் நபர்களை , கொலை செய்யச் சொல்லப்படும் ஆட்களிடமே காட்டிக் கொடுத்து, 
 
இருதரப்பிடமும் பணம் பெற்று இருதரப்பையும் மிரட்டி சொத்துக்களை எழுதி வாங்குவதோடு , 
 
தான் யாரை குறி வைக்கிறோம் என்பதை யாரும் யூகிக்கா வண்ணம் வேறொருவருக்கு குறிவைப்பது போல போக்குக் காட்டி ,
 
குறி வைத்த நபரை தீர்த்துக் கட்டி,  சந்தேகம் வராதபடி கொலை செய்வதிலும் வல்லவன் துரைப் பாண்டி . (ஹரீஷ் உத்தமன்) 
 
 குமார் (சந்தீப் ) மகேஷ் ( விக்ராந்த்), ரமேஷ் (சூரி) சீனு (அப்புக்குட்டி) நால்வரும்  சமையல் கலைத் தொழில் செய்யும்  நண்பர்கள் . 
 
குமாருக்கும் ஜனனி என்ற பெண்ணுக்கும் (மெஹ்ரீன்) காதல் . 
 
குமாரின் தங்கையும் எம் பி பி எஸ் டாக்டருமான அனுராதாவுக்கும் (ஷாதிகா) மகேஷுக்கும் காதல் . ஆனால் அது குமாருக்கும் அவனது அம்மாவுக்கும் (துளசி) தெரியாது . 
முன்பே தன் மகள் மீது ஈடுபாடு காட்டியவன் என்ற வகையில் குமாரின் அம்மாவுக்கு மகேஷைப் பிடிக்காது . 
 
‘நண்பனின் தங்கையை காதலிப்பது நட்புக்கு நல்லதல்ல’ என்று மகேஷ் சொன்னாலும் அவனை வற்புறுத்திக் காதலிக்க வைக்கும் அனுராதா ,
 
‘தகுந்த சமயம் பார்த்து காதலை நானே வீட்டில் சொல்கிறேன்’ என்று சொல்லி மகேஷின் வாயை அடைக்கிறாள் (அட, வார்த்தையால்தாங்க) . 
 
ஒரு பிரச்னையில் துரைப்பாண்டியின் ஆட்களுக்கும் மகேஷுக்கும் சண்டை வர , துரைப்பாண்டியின் கோபம் மகேஷ் மீது எழுகிறது 
 
முறையற்று கட்டிடம் கட்டி ஏமாற்றும் கட்டுமான  நிறுவன உரிமையாளர் ஒருவருக்கும் மகேஷுக்கும் ஒரு பிரச்னை இருக்கிறது . 
 
அதைப் பயன்படுத்தி கட்டுமான நிறுவனத்தை,  தன் ஆட்களை வைத்து அடித்து உடைக்கும் துரைப்பாண்டி,  அந்தப் பழியை மகேஷ் மீது போட்டு மகேஷை கொன்று, 
 
அந்தப் பழியை கட்டுமான நிறுவனரின் மேல் போட்டு… தன் உத்தியின் படி  தன் மீது சந்தேகம் வராமல் அமைய , திட்டமிடுகிறான்  . 
 
குமாருக்கு தெரியாமல் மகேஷ் அனுராதாவை தினம் இரு சக்கரவாகனத்தில் அழைத்து வரும் வழியில் மகேஷை கொல்ல   நாள் குறிக்கிறான் 
 
அந்த தினம் பார்த்து அண்ணன் குமார் அனுராதாவை அழைத்து வர ,  கத்தியால் சொருக வந்து விலகிப் போகிறது துரைப்பாண்டியின் அடியாள் குழு . 
 
அதே  நேரம் மகேஷ்-  அனுராதா காதல் தெரிந்து குமாரின் அம்மா கொந்தளிக்க ,  மகேஷை காப்பாற்றி வைத்து இருக்கும் குமாரால் அம்மாவை சமாளிக்க முடியவில்லை . 
 
கட்டுமான நிறுவனத்தை அடித்து உடைத்து கலாட்டா செய்தது மகேஷ்தான் என்று குமாரே சொல்ல , மகேஷ் கைது  செய்யப்படுகிறான் . 
 
குமாரின் தங்கையும் மற்ற நண்பர்களும் அதிர்கிறார்கள் . 
 
மகேஷை,  குமார் போலீசிடம் சிக்க  வைத்தது தங்கையை காதலித்த காரணத்துக்காகத்தானா?
 
மகேஷை துரைப்பாண்டி கொல்ல முயல்வது  ஏன் ? 
 
அல்லது துரைப்பாண்டி மகேஷை கொல்ல முயல்வது நிஜமாகவே மகேஷ் மீது கோபத்தில்தானா? அவன் குறி மகேஷ்தானா ?
 
இல்லை அது  திசை திருப்பும் உத்தி எனில் துரைப்பாண்டி நிஜமாகவே குறிவைப்பது யாரை ?
மேலே இதுவரை  சொல்லப்பட்ட நட்பு, காதல் , பகை , சதி, துரோகம் , அக்கிரமம் இதெல்லாம் என்ன ஆச்சு ?
 
அதற்கு காரணமான கதை என்ன என்பதே இந்த நெஞ்சில் துணிவிருந்தால் . 
 
படத்தில் நம் கவனத்தை முதலில் கவர்பவர் இசை அமைப்பாளர் இமான் . தயாரிப்பாளரின் பெயர் டைட்டிலில் வரும்போதே அவர் போடும் பின்னணி இசை ,
 
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது . படம் முழுக்க பின்னணி இசை மிகச் சிறப்பு . ரயில் ஆராரோ , பாடல் காதல் தாலாட்டு .
 
எச்சச்ச பாடல் தரை லோக்கல்  . எச்சச்ச பாடலில் பெண்களைக் கொண்டாடி வைரமுத்து எழுதி இருக்கும் வரிகளும்  கருத்தில் நிறைகிறது . 
 
வில்லன் கேரக்டரை மிக அட்டகாசமாக வடிவமைத்து அசத்தி இருக்கிறார் இயக்குனர் சுசீந்திரன் . தன்னிடம் கொலை செய்யச் சொல்லி காசோடு வருபவனையே கதற வைப்பது ,
 
ஒருவருக்கு குறி வைப்பது போல போக்குக் காட்டி வேறொருவரை தீர்க்கும் அந்த உத்தியும் சுசீந்திரனின் திரைக்கதைச் சிறப்பு . 
 
காதல் காட்சிகளில் அழகும் வண்ண மயமுமாக , பரபரப்புக் காட்சிகளில் இருளும் ஒளியுமாக ,
 
மிக அற்புதமாக உழைத்து இருக்கிறது லக்ஷ்மணனின் ஒளிப்பதிவு . சபாஷ் லக்ஷ்மன் . அபாரம் !
 
ஆரம்பத்தில் வரும் கட்டிப்பிடி உத்தியை அப்படியே கிளைமாக்ஸ் வரை கொண்டு போவது ஓல்டு ஸ்டைல் என்றாலும் கோல்டு ஸ்டைல் . 
 
தோற்றம் , நடிப்பு , குரல் நடிப்பு ஆகியவற்றில் அசத்தி இருக்கிறார் ஹரீஷ் உத்தமன், 
 
மிக இயல்பாக நடிக்கிறார் சந்தீப் . விக்ராந்தும் ஒகே . 
 
ரொம்ப நேரம் கொக்கி போட்டு தூக்கிப் பிடித்து,  அப்புறம் இறக்கி விட்டது மாதிரியான மேலுதட்டோடு, 
 
வெளுவெளுவென்று இருக்கிறார் மெஹ்ரீன் . உடல் மொழி  சும்மா அலசுகிறது .
 
ஷாதிகா இயல்பாக பேசிவிட்டுப் போகிறார் .  சூரி,  அப்புக்குட்டி ஆகியோரும் இருக்கிறார்கள் .
 
குமாரின் அம்மா இந்த அளவுக்கு வெறுக்கும் அளவுக்கு  பெரிதான காரணம்   திரைக்கதையில் இல்லாதபோது ,
 
  துளசி நடிப்பில் கொஞ்சம்  அடக்கியே வாசித்து இருக்கலாம் .  
 
அன்பறிவ் அமைத்து இருக்கும் சண்டைக் காட்சிகள் தெறிக்கின்றன . ஃபைட் சவுண்டுகள் சூப்பர் 
 
துரைப்பாண்டி குறி வைப்பது மகேஷுக்கு என்ற உண்மை குமாருக்கு புரியும்போது,  கூடவே வரும் காதலி அனுராதாவுக்கு கொஞ்சம் கூட புரியாதது ஆச்சர்யம் .
 
மருத்துவப் படிப்பு தொடர்பான முறைகேடு , அதற்கான  பண அதிகார பலம் , அதனால் விளையும் கொலைகள் என்று, 
 
ஒரு விசயத்தை திரைக்கதையில் முக்கியமாக வைத்து இருக்கிறார் சுசீந்திரன். 
 
தப்பில்லை . ஆனால் அதை ஜஸ்ட் லைக் தட் வசனத்தில் சொல்லி விட்டுப் போயிருக்கக் கூடாது . 
 
முறைகேடு செய்பவர்கள் எப்படிப்பட்ட மோசமானவர்கள் தகுதியற்றவர்கள்  என்பதையும் , பாதிக்கப் படுபவர் எந்த அளவு தகுதியானவர் என்பதையும், 
 
காட்சிகளில் அழுத்தமாக சொல்லி இருக்க வேண்டும் . 
 
அதே போல வில்லன் குற்றங்கள் செய்ய பயன்படுத்தும் அது போன்ற — சொல்லப் போனால் அதை விட சிறப்பான உத்திகளோடு, 
 
கடைசியில் வில்லனை ஹீரோ அண்ட் கோ ஒரு வழி பண்ணி இருக்க வேண்டும் . அதை விடுத்து இப்படி சாதாரண கிளைமாக்சும் , முடிவுக்கு வராத முடிவும ஏனோ ?
 
மருத்துவப் படிப்புக்கான முறைகேடு என்பதை ஹைலைட்டாக நினைத்து சுசீந்திரன் படத்தை எடுத்து இருக்கிறார் . 
 
ஆனால் அதை விட , ‘உன்னிடம் பணம் இருக்கிறது என்பதற்காகவோ அல்லது நியாயமான எதிரிகளை  அழிக்கவோ அல்லது பேராசைகளை நிறைவேற்றவோ
 
கொலை செய்வபர்களின் துணையை நாடாதே . அது உனக்கே ஆபத்தாக முடியலாம் என்ற விசயம்தான் தூக்கலாக இருக்கிறது .
 
(இதையே கூட இன்னும் திரைக்கதையில் ஹைலைட் செய்து இருக்கலாமோ ?)  அது மருத்துவ படிப்புக்கான முறைகேடு என்ற விஷயத்தை விட நன்றாக இருக்கிறது . 
 
அந்த வகையில் நெஞ்சில் துணிவிருந்தால் பாராட்டப்பட வேண்டிய படம். 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *