நெருப்புடா @ விமர்சனம்

ஃபர்ஸ்ட் ஆர்ட்டிஸ்ட் சார்பில் விக்ரம் பிரபு , சந்திரா ஆர்ட்ஸ் சார்பில்  இசக்கி  துரை , சினி இன்னோவேஷன்ஸ் சார்பில் ஆர்..கே. அஜய் குமார் ஆகியோர்  தயாரிக்க,

விக்ரம் பிரபு , நிக்கி கல்ராணி , பொன் வண்ணன், நான் கடவுள் ராஜெந்திரன் ஆடுகளம் நரேன் ஆகியோர்   நடிக்க,

  பி.அசோக் குமார் என்ற அறிமுக இயக்குனர்  இயக்கி இருக்கும் படம்  நெருப்புடா.  படம், ரசிப்புடா  என்று சொல்கிற மாதிரி இருக்கா ? பார்க்கலாம் . 

சென்னையின் குறைந்த வருவாய்ப் பிரிவுக் குடியிருப்பு ஒன்றில் வாழும் நண்பர்கள் குரு (விக்ரம் பிரபு) மற்றும் நால்வர் .

குருவின் தந்தை  (பொன்வண்ணன்) கழிவு  நீர்த்  துப்பரவுத் தொழிலாளி . 

சிறுவயதில் நடந்த தீ விபத்து ஒன்றில் தீயணைப்புத் துறையினர் உயிரைப் பணயம் வைத்து செய்யும் சேவையைப் பார்த்த காரணத்தால்,

 நண்பர்கள் அனைவருக்கும் தீயணைப்புத் துறையில் சேர ஆசை . 

வளர்ந்த பிறகு அதற்கான தேர்வு எழுதாத நிலையிலும் வேலைக்குப் போகும் முன்பாகவே தீயணைப்பு வண்டியில் பயணித்து பல உயிர்களை காக்கின்றனர். 

இதனால் தீயணைப்புத் துறை  உயர் அதிகாரி ஒருவருக்கு ( நாகி நீடு ) இவர்களை தேர்வு எழுத வைத்து வேலையில் சேர்த்துக் கொள்ள ஆசை . 

அவருக்கு ஒரு மகள் (நிக்கி கல்ராணி ). அவளுக்கும் குருவுக்கும் காதல் . 

 தேர்வு எழுத நாள் நெருங்கும் வேளையில் இரவில் தனியாக வரும் — நண்பர்களில்  ஒருவனை  , இரண்டு ரவுடிகள் வழிமறித்து வம்பிழுத்து அடிக்கின்றனர் .

பதிலுக்கு இவன் அடித்தவனை தள்ளிவிட போதையில் கீழே விழுந்த ரவுடி தலையில் அடிபட்டு இறக்கிறான் . 

விஷயம் வெளியே தெரிந்து போலீஸ் கேஸ் ஆனால் தேர்வெழுதி வேலைக்குப் போக முடியாது என்பது இவர்கள் பயம் . 

தங்கள் ஏரியா சில்லுண்டி ரவுடி  ஒருவனிடம் (நான் கடவுள் ராஜேந்திரன்) உதவிக்குப் போகின்றனர் . 

அப்போதுதான் தெரிகிறது செத்துப் போன ரவுடி , மிகப் பெரிய தாதாவான புளியந்தோப்பு ரவி  என்பவனின் நெருங்கிய நண்பன் என்பது . 

ஒரு பக்கம் போலீஸ் குறித்த பயம் , இன்னொரு பக்கம் துரத்தும் ரவியின் ஆட்கள் இவர்களிடம் நண்பர்கள் ஐவரும்  சிக்கினார்களா ? தப்பினார்களா ?  

லட்சிய வேலை என்னாச்சு ? காதல் என்னாச்சு ? ரவுடியின் கோபம் என்ன ஆச்சு ? போலீஸ் நடவடிக்கை என்னாச்சு என்பதே இந்த நெருப்புடா . 

சும்மா ஊறுகாய் போலவும் கமல் உட்பட பலரால் கூட (மைக்கேல் மதன காமராஜன் )  இதுவரை காமெடியாக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த —

ஆனால் கமர்ஷியல் சினிமாவுக்கு மிக அருமையாக செட் ஆகும் விஷயம்,  தீயணைப்பு வீரன் என்ற கதாநாயகத்தனம் . 

முதல் படத்திலேயே அதை வைத்து கதை சொல்லி இருக்கும் அறிமுக இயக்குனர் அசோக் குமாருக்கு  ஒரு வார்ம் வெல்கம் !

பற்றி எரியும் குடிசைகளுக்கு இடையே குருவும் நண்பர்களும் முதியவர்கள் , ஊன முற்றவ்ர்கள் , பெண்கள் , குழந்தைகள் ஆகியோரை  காப்பாற்றும் காட்சியும்  

காட்சி அமைப்பும் படமாக்கலும் பதட்டமும் பரபரப்பும் என்று,  முதல் காட்சியிலே முத்திரை பதிக்கிறார் அறிமுக இயக்குனர் அசோக் குமார் .  வாழ்த்துகள் .  

படத்துக்கு  உயிர் கொடுக்கும் அர்த்தமுள்ள பின்னணி இசையால் பிரம்மாதப்படுத்தியுள்ளார் சான் ரோல்டன் . பாடல்களும் சிறப்பு . சபாஷ் சான் ரோல்டன் . 

இயக்குனரின் மேக்கிங் வேலைக்கு   பெரும் பலமாக அமைந்துள்ளது ஆர் டி ராஜசேகரின் ஒளிப்பதிவு . 

“என்னை  எப்படித்தான் கொடுமைப் படுத்தினாலும்  கொன்றாலும்  என் வேலை உயிரைக் காப்பாத்துறதுதான் . பதிலுக்கு இன்னொரு உயிரை எடுப்பது அல்ல “

என்ற குணாதிசயம் கொண்ட குரு கதாபாத்திரத்தில் – இது வரை அவர் அளவில்  அவர் எந்தப்  படத்திலும் நடிக்காத அளவுக்கு,  பெட்டரான நடிப்பை கொடுத்துள்ளார் விக்ரம் பிரபு . 

தொனி ,உணர்வு என்று குரல் நடிப்பிலும் அருமை . பாராட்டுகள் . 

பாசமுள்ள தந்தையாக வந்து சிறப்பான நடிப்பால் நெகிழ வைக்கிறார் பொன்வண்ணன் . பட்டைதீட்டப்பட்ட நடிப்பு . 

எதிர்பாராத திருப்பமாக ஆக்ரோஷமான அதிரடி திருநங்கையாக வந்து அதிர வைத்து அதகளப்படுத்தி அசத்தி  இருக்கிறார் நடிகை சங்கீதா . பிரம்மாதம் . பிரம்மாதம் . 

அவருக்கு பின்னணிக் குரல் கொடுத்த கலைஞருக்கு ஆகா ஓகோ பாராட்டுகள் . சந்திரமுகி கேரக்டருக்குப் பிறகு அப்படி ஒரு மிரள வைக்கும் பெண் குரல்! 

நியாயமே இல்லாத அந்த  திருநங்கை கேரக்டரைக் கூட  நாம் கடைசியில் ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு,

 கிளைமாக்ஸ் காட்சியை அமைத்த வகையிலும் முத்திரை பதிக்கிறார் இயக்குனர் அசோக் குமார் . 

படத்தில் காமெடி என்று எண்ணிக் கொண்டு மொட்டை ராஜேந்திரன் உட்பட  பலரும் பேசும் காட்சிகள்தான்  சோதிக்கின்றன .

அதுவும்  சில சமயம் மிக சீரியசான காட்சிகளில் கூட யாரவது அசட்டுத்தனமான உளறுவதும்,

அது காமெடி என்றால் என்ன விலை என்று கேட்கும் அளவுக்கு இருப்பதும் தவிர்க்கப்பட்டிருக்க  வேண்டியவை .

அதே போல இடைவேளை சமயத்தில்தான்  புளியந்தோப்பு ரவியிடம் குரு  மாட்ட வேண்டும் என்று திரைக்கதையில் டைம் பிக்ஸ் பண்ணிக் கொண்டதால் ,

பல சரியான வாய்ப்புகளை வில்லன் பச்சைப் புள்ளையாட்டம் கோட்டை விடுவதும் சறுக்கலே . 

இப்படி சில குறைகள் இருந்தாலும் தீயணைப்பு வீரன் என்ற ஹீரோ கதாபாத்திரம் , அரவாணியின் மன நிலை , எதிர்பாராத   சில  திருப்பங்கள் ,

விளிம்பு நிலைக்  கதாபாத்திரங்கள்,  சிறப்பான படமாக்கல் , பொருத்தமான இசை , அசத்தலான ஒளிப்பதிவு , நல்ல  நடிப்பு

– ஆகிய தரமான பொருட்களால்  உருவான காரணத்தால் , 

கனகன வென இருக்கிறது,  நெருப்புடா !

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *